Monday, September 25, 2006

(32) முழுமையான சைவ உணவு - சாத்தியமா?

கடல் தாண்டிச் செல்லும் தீவிரமான சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே சாப்பாட்டுக்கு அவஸ்தைப்படுவார்கள் என்பது தவறு.

நேற்று வஜ்ரா ஷங்கரின் வராக் வெள்ளித்தாள் வெஜிடேரியன்? பதிவு சைவ உணவு இனிப்புப் பிரியர்களுக்கு அத்துணை பிரியமான செய்தியாக இல்லாமல் ஆப்புச் செயதியாக வந்திருந்தது.

என் மாதிரி தீவிர சைவ உணவு விரும்பிகளுக்கு.... நிலைமையப் பார்த்தீங்களா?!! கேரண்டியா நான் சைவ உணவுக்காரன்னு சொல்லிடமுடியாத அளவுக்கு ரெடி டூ ஈட் வகை உடனடி உணவு மற்றும் ஜங்க் ஃபுட் (குப்பை!? உணவு) தயாரிக்கும் புட் ப்ராசஸிங் முறைகள் மற்றும் இவ்வகை சைவ உணவுகளில் சுவைக்காகவும், உண்போர் பார்வை ஈர்ப்புக்காகவும் சேர்க்கப்படும் சேர்மானங்களின் சைவத் தன்மை ஆட்சேபகரமானது சைவ/மத நம்பிக்கைகளுக்கு ஆபத்தானதாகவே இருக்கிறது.

என்ன நேற்றுவரை உங்களது ஃபாவரிட் அபிமானமான ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் பானத்தின் அந்தக் கலர் வருவதற்குப் பயன்படும் சேர்மானத்தின் ஸோர்ஸ் ஃபீட்டில்ஸ் என்ற ஒருவகை வண்டுகள் என்ற உண்மை அத்துணை favaour ஆக இல்லை.

பேஸ்ட்ரீஸ் வகை கேக்குகளின் மீதான கண்ணாடி ஜெல் அலங்காரத்திற்கான ஜெலட்டினின் ஸோர்ஸ் மாடுகளின் எலும்பை கொதிக்க வைத்துக் கிடைப்பது!

பீட்ஸாவில் வெகுதியாகப் பயன்படுத்தப்படும் சீஸ் தயாரிக்க பயன்படும் ரென்னட் கன்றுக்குட்டியின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவது. ரென்னட் இல்லாமல் சீஸ் கிடையாது. காட்டேஜ் சீஸ் தவிர்த்து! (நம்மூர் பன்னீர்)

McDonaldsல் கிடைக்கும் "வெஜ் பர்கர்"ல் வைக்கப்படும் வெஜ் ஃபில்லட் கோழி, மாட்டு Filletகள் Deep fry செய்யப்படும் எண்ணையிலேயே செய்யப்படும்!

என்ன தெரியாத இடத்தில் மாட்டித்தவிக்கக்கூடாது என்பதற்காக சிரமம் பார்க்காமல் "I take the pains to carry my own potatoes" பெரும்பாலான சமயங்களில்.

ஆகவே உங்கள் உணவு மூட்டையை நீங்கள் எடுத்துச்செல்வது சாலச் சிறந்தது! நீங்களே சமைத்து உண்பது ஒன்றுதான் சைவ உணவுப்பழக்கத்தை முழுமையாகக் கடைபிடிக்கச் சாலச்சிறந்தது!

சென்ற ஆண்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுத்தாளரும் என் மாதிரியே முழுமையான சைவ உணவுக்காக செல்லும் நாடெங்கிலும் அல்லல் படும் Columnist Vir Sangvi எழுதிய Rude food / The great Vegetarian Scam என்ற இந்தக் கட்டுரை ஏதாவது ஒரு விதத்தில் முழுமையான சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்க்கு உதவும் என்பதாலேயே இப்பதிவு.

ஃபுட் பிராசஸிங் வளர்ந்திருக்கிறது. இதில் பெரும் வருத்தம் இந்தியாவிலேயே பெரும்பான்மை சைவ உணவுப்பழக்கமுள்ள நாட்டிலேயே முழுமையான சைவ உணவு என்று கேரண்டியாய் இந்த ஃபாஸ்ட் ஃபுட் /ஜங்க் ஃபுட் ஐஸ்க்ரீம், சாக்லெட்,கேக், பிஸ்கட்கள் கிடைப்பது அரிது!

முழுமையான சைவ உணவுப்பழக்கம் என்பதுகூட பழமைவாதம் என்றாகியிருக்கிறது! உண்மையில் இது சைவ உணவுப் போர்வையில் மாபெரும் மோசடி!!

என்னமோ போங்க! ஏதோ திருப்தி! நான் பீட்ஸா, வெஜ்பர்கர், இன்ன பிற மோசடி வகைச் சைவ உணவைத் தவிர்க்கிற மாதிரி இதர முழுமையான சைவ உணவுக் காரர்களுக்கு விழிப்புணர்வு வரட்டும்.

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, September 23, 2006

(31) பெரியாரிஸமும் மதசார்பின்மை வெங்காயமும்!

பெரியார்அடியார் காலையில் எழும் போதே மனதில் புதியதாய் ஒளி வீசுவதை உணர்ந்தார்.

நேற்றுவரையில் பெரியார்தாசன் என்றிருந்த தனது பெயரை மாற்றிவிடுவது என்று மனம் இரும்பினும் உறுதியாய்ச் சொன்னது. காரணம் இன்று அதிகாலை தமிழ்த்தாய் நினைவுக்கு வந்து தமிழ்ப்பற்று ஆர்ட்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்க தன் பிழைப்புப் பெயர் பெரியார்தாசன் என்பதிலிருக்கும் "தாசன் "என்பது வந்தேறி பார்ப்பனர்களின் வருண சாஸ்திர ஜாதி விதிப்படி சதி செய்ததால் தன் பகுத்தறிவு கடந்த 45 ஆண்டுகளாகத் தாய்த்தமிழில் எழுதினாலும் அதெல்லாம் 100% அக்மார்க் திராவிடத் தமிழல்ல என்பதை தம் அறியாமை மறைத்துவிட்ட பார்ப்பனக் கயமையை நினைத்து அவரது நெஞ்சம் விம்மியது.

அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கைகள் ஜல்லியடிப்பை முழுநேரப் பிழைப்பாக்கிக்கொண்ட தன் மாதிரி ஒரு அரசியல் திரா'விட'த் தியாகிக்கே இந்நிலையா என்று அவரது தமிழ்க் குருதி கொந்தளித்தது. தன் அருகே இருந்த பார்ப்பனர் அல்லாத பார்ப்பன அடிவருடிகளும் இக்கயமைக்குத் துணைபோனதை எண்ணிய போது இயலாமையில் கண்களில் செம்மொழியாம் தமிழுக்குச் சங்கூதிய நிலையாகிவிடுமோ என்ற கவலையினால் செங்குருதி மானசீகமாய் வழிந்தோடியது.

சரி காலை நேரத்தில் நடைப்பயிற்சியாகச் சென்றால் மனம் அமைதிப்படும் என்பதால் வெளியே கிளம்பினார். ரெண்டாவது தெருவில் எதிரே பெருமாள் கோவில் அர்ச்சகர் வெங்கட் ரமணி தென்பட்டார். நட்போடு என்ன பெரியார்தாசன் ரொம்ப நாள் கழிச்சு காலையில் வாக்கிங்கா? என்றார்.

பெரியாரடியாராக தமிழ்மாற்றம் பெற்ற திராவிடத்தழல் "யோவ் அய்யரே! உம்ம பார்ப்பன வந்தேறி புத்திய காலையிலேயே காட்டிட்டயே அதுவும் எங்கிட்டயே" என அறச்சீற்றம் காட்டினார்.

வெங்கட் ரமணிக்கு தலை சுற்றியது, ஈ.வெ.ரா சதுர்த்தி தான் செப்டம்பர் 17ம்தேதியே முடிஞ்சுடுச்சே, அதுக்கு ரெண்டுநாள் முன்னமே செப்டம்பர் 15ம்தேதியே அண்ணாதுரை சதுர்த்தியும் முடிஞ்சுடுச்சே இன்னிக்கு 23ம்தேதி புரட்டாசி சனிக்கிழமைதானே.

அப்பாவியாய் பெரியார்தாசனனிடம் ' நேத்திக்கு மஹாளய அமாவாசை உங்கவீட்டம்மா கூட குமுதம் ஜோதிடம் புத்தகத்துல பார்த்து மஹாளய அமாவாசையன்னிக்கு இறந்துபோன முன்னோர்க்கு திதி தந்தா நல்லதுன்னு ஏ.எம்.ராஜகோபாலன் சொல்லியிருக்கார்ன்றதாலே உங்கப்பாவுக்கு திதிகூட தந்தாங்களே. உங்களுக்குத் தெரியாதா என்றார்.

பெரியாரடியார் பகுத்தறிவுப் பாசறை கமாண்டோ டிரெய்னிங் வருஷவருஷம் வேப்பேரிலே பெரியார் திடல்ல எடுக்கிற பார்ட்டியாச்சே!! டக்குன்னு கியர் மாற்றினார். நான் என் குடும்பத்தார் நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்று காலையிலேயே பெருமாள் கோவில் வாசல் கல்குவாரி ஆகுமளவுக்கு ஜல்லியடித்தார்.

அர்ச்சகர் வெங்கட் ரமணிக்கு அவர் கவலை. இன்னிக்குப் புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி ஆரம்பிக்கிறது தாயார்க்கு அலங்காரம், தசாவதாரம், கொலுவுக்கு, உற்சவ ஸ்பான்ஸர் பிடிக்கவேண்டும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கைங்கர்யத்தில் பெருமாள், தாயார் கூட தெரியாத அளவுக்கு சிறிதும்- பெரிதுமான தட்டிகளில் கோவிலெங்கும் "காணிக்கையை உண்டியலில் மட்டும் போடவும்" என்று எழுதிவைத்து உலகளந்த பெருமாளுக்கு நைவேத்தியம் படியளப்பதற்குக் கூட சிரமம்.

காலையில் கண்ணில்பட்ட பெரியார்தாசனை கை நழுவிப்போக விட மனமில்லை வெங்கட் ரமணிக்கு. பெரியார்தாசனின் குடும்பமே அரசியல் வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது. திராவிடக்கொள்கைகளில் ஊறியவர்கள் என்றாலும் தாசனின் மனைவி கலையரசி, மகள் பூங்குழலி, பொற்கொடிக்கு உலகளந்த பெருமாள் மீது தனிப்பாசம். கால்,அரை, முழுபரீட்சை எழுதும் முன்பு எல்லாநாளும் வருவார்கள். மற்றபடி சனிக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமை கண்டிப்பாக உண்டு என்பதை வெங்கட் ரமணி பல காலமாய் அறிந்திருந்ததால் புரட்டாசி சனிக்கிழமை கற்பக விருட்சமாக பெரியார்தாசன் தென்பட்டார்.

என்ன காலையிலேயே மேடை நினப்பா, பார்ப்பன, வந்தேறி புத்தி வசவுகளோட வர்றீர் என்றார். பெரியார்தாசன் தனது பெயர் இனி பெரியாரடியார் என்றார். வெங்கட் ரமணி பேஷ இருக்கட்டும் எப்பயும் போல பிழைப்புக்கு உதவ பெருமாள் உதவட்டும் என்றார்.

பெரியாரடியார் நக்கல் கலந்த பெருமை பூரிப்புடன் சொன்னார் " பெருமாளே ரெண் டு ட்யூப் லைட்டில் ஒண்ணு சிமிட்ட பாவமா இருக்கார். எங்க அறங்காவலர் குழு மாசாமாசம் உண்டியலை கரெக்டா திறந்து காபி, டீ, செலவுக்கே காணலை. எந்நேரமும் பெருமாள் பேரைச் சொல்லும் உம்ம பிழைப்பைப் பெருமளை விட்டு நல்லா பார்க்கச் சொல்லும் என நடையைக்கட்ட முயன்றபோது வெங்கட் ரமணி புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி , தசாவதார உற்சவ ஸ்பான்ஸர்ஷிப்க்கு உதவ வேண்டினார்.
பிடிகொடுக்காமல் பெரியாரடியார் வேணும்னா கலையரசிக்கிட்ட கேட்டுப்பாருங்க என்றவாறு நகர்ந்தார்.

மெள்ள விடிய ஆரம்பித்தது. கைக்கடிகாரம் காலை 5.30 காட்டியது.

ரெண்டு தெரு தாண்டி மசூதி தெருவில் அப்துல் அஜீஸை எதிர் கொண்டார். என்னங்க அப்துல் பாய் சவுக்கியமா? என்றார் எங்க சவுக்கியமா இருக்கவிடறாங்க என்றார் அப்துல் அஜீஸ். என்ன விஷயம் என்றார். பள்ளிக்கூடத்துல இனிமே வந்தே(றிகளின்)(மா)தரம்! பாடியே ஆகணுமாமே என்றார்.

அப்துல் பாய் நீங்க கவலையை விடுங்க. கழகக் கூட்டணியோடு நடுவண் அரசு ஆட்சியிலே நீடிக்கும் போது அப்படி ஏதும் நல்லது நடக்காம பாத்துக்க நான் உங்களுக்கு கேரண்டி தர்றேன்.

அப்புறம் அப்துல் பாய் (இன்னொருவாட்டி தமிழ்த்தாய் நினைவில் வந்து பாய் என்ற சொல் நட்பு மொழியில்லை மொழிப்போரே ரயில் வராத நேரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து இந்த இந்தி(ய)மொழிக்காகத்தான் எனப் பெரியாரடியார்க்குச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருக்கவும்)
இன்னிக்கு என்ன விஷேசம் தொழுகைக்குக் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு என்று வினவினார் பெரியார் நேசன்.

இன்னிக்குத்தானே உண்ணா நோன்பு ரம்ஜான் மாதம் ஆரம்பிக்கிறது அதுதான் என்றார் அப்துல் அஜீஸ்.

பெரியார் நேசன் துணுக்குற்றார். இந்து மத நம்மிக்கைக்காக இல்லை என்றாலும் அவர் புரட்டாசி மாசம் இறைச்சி உண்பதில்லை பொதுவாக. அவர் தான் தன் வீட்டினர் மனைவி, துணைவி வீட்டினர் நம்பிக்கைகளில் தலையிடுவதில்லையே. கழுத்தில் போட்டிருந்த உலகமே சுட்டிக்காட்டியும் பெரும் மன உறுதியோடு திராவிட பகுத்தறிவுக் கொள்கைக்காக அணிந்திருக்கும் ஆரஞ்சு வண்ண சால்வையில் முகம் துடைத்து யோசிக்கலானார் பெரியார்தாசன்!

மதநல்லிணக்கத்தினை இத்தனை ஆண்டுப் பொதுவாழ்க்கையில் இந்த ரம்ஜான் நோன்புக்கஞ்சி குடித்துக் கொண்டே தானே இறைவனைத் தொழும் இந்துவைத் திருடன் என்றுரைத்தது!. ஏகாதசி, கார்த்திகைவிரதம் மூடப்பழக்கம் ரம்ஜான் நோன்பு மட்டும்தானே உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது என்று பகன்றது.

என்ன குழப்பம் தன் மதநல்லிணக்கத்தைப் பேணக்கிடைத்த பரம பவித்ரமான
முப்பது மாலை நேரங்கள் இந்த ரமலான் நோன்பு காலத்தில் தானே வரும். இப்போது என்ன செய்வது என்று பதறினார் பெரியாரடியார்.

கைத்தொலைபேசி சிணுங்கியது அழைப்பில் தமது ஆரஞ்சு வண்ணம் ஆக்கம் தரும் என்ற உண்மை வருமுன்னே கணித்த முருகு ஜோதிடர் முக்கண்ணன்.
தொழச்சென்ற தெய்வம் எதிரே வந்ததாக எண்ணி மகிழ்ந்தார் நம் நாயகர் பெரியாரடியார்.

முரசொலியில் உடன்பிறப்புக்கு உன்மையுணர்த்திட கட்டுரை எழுதிட விழைந்தார். கட்டுரைக்குத் தலைப்பிட்டார் பின்வருமாறு:
மீண்டும் பார்ப்பனச் சதி!
ரம்ஜான் நோன்பு மாதம் முதல் தேதியன்று வேண்டுமென்றே புரட்டாசிசனிக்கிழமையையும் வரும்படி தமது வரும்படிக்காக வந்தேறிய பார்ப்பனர்கள் செய்த மாபாதகம்!

இதுவரை இஸ்லாமியர்கள் திராவிடசமூகத்துடன் கொண்டிருந்த மதநல்லிணக்கத்தினை இல்லாமல் ஆக்க முற்றிலும் பகுத்தறிவுக்குச் சம்பந்தம் இல்லாத கோள்சார விதிகளின் படி செய்த கொடுஞ்சதி!

தினமொரு அசைவபிரியாணியோடு மாலை நேர நோன்பு திறக்கும் இப்தார் விருந்துகள் திராவிடர்க்கு கிடைக்கக் கூடாது என்று வேங்கடவனின் திருமலைச் சம்பிரதாய சடங்குகள் மாதமான புரட்டாசியை புனித பிரியாணி தரும் ரம்ஜானோடு உடன் வரச்செய்தது ஆரியமாயை என உணர்வாய் உடன்பிறப்பே!


புரட்டாசியாம் புனிதமாம். சோற்றாலடித்த பிண்டங்களே தமிழின்தமிழ் நான் சொல்வதைக் கேள்! பெயரிலேயே புரட்டை வைத்திருக்கும் ஒருமாதம் தான் புரட்டாசி! குத்திக்கொள் தினமும் அரசியல்திரா'விட'ப் பெத்தடின். அப்போதுதான் தமிழ் தழைக்கும், நான் பிழைப்பேன்!

நேரடியாக இந்துமதம் சார்ந்திடக்கூடாத மதச்சார்பின்மையைக் காப்போம் பிரியாணி மீது சத்தியமாக! அதன் சைட் டிஷ் 'தயிர்'வெங்காயத்தின் + சால்னாவின் மீது கூடுதல் சத்தியமாக!!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, September 12, 2006

(30) மூணாறு - ஹரிஹரன்களின் பார்வையில்

மூணாறு என்ற பெயர் மூன்று ஆறுகள் முதிரப்புழா ஆறு, நல்லதண்ணியாறு, குண்டலா ஆறு சங்கமிக்கிற இடம் என்பதால் காரணப் பெயர்.

மூணாறு அமைந்திருப்பது நம்மூர் போடிக்கு மேலே நேரடி மலையேற்ற ட்ரக்கிங் தூரம் மொத்தமே 30கி.மீ வளைந்து செல்லும் மலைப்பாதை 77 கி.மீ.
போடிமெட்டு வழி அகலப்படுத்தும் பணியால் வாகனப் போக்குவரத்து கம்பம்மெட்டு-நெடுங்கண்டம்-பூப்பாறை-சாந்தன்பாறை-மூணாறு என்று 150 கி.மீ சுற்றி அதிகமான கேரளாவைப் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது.



கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்
கண்ணன் தேவன் ஹில்ஸ் என்பது மிகப் பரந்ததாயிருக்கிறது மாட்டுப்பட்டி டீ எஸ்டேட் , கல்லார் டீ எஸ்டேட், பெரியானைக்கல் எஸ்ட்டெட், எல்லப்பட்டி எஸ்டேட், குண்டுமலை, கன்னிமலை,தேன்மலை, கிரஹாம்ஸ் லேண்ட், நியமகாடு, லெச்சுமி,சின்னானைக்கல், நல்லதண்ணி எஸ்டேட் இன்னும் பல என்று பல தேயிலை எஸ்டேட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

எறவிகுளம் தேசியபூங்கா ராஜா மலையில் வழிந்தோடும் அருவி நீரோடை(தென்னிந்தியாவின் உயரமான் மலைச் சிகரம் ஆனைமுடி 8650அடி)


ஆட்டுக்காடு-புள்ளிவாசல்-சித்ரபுரம் டாடா டீ எஸ்டேட்டுக்குள்

மூணாறில் பெரிய தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் டாடா டீ, ஹாரிஸன் மலையாளம் லிட்., என்ற இந்த இரண்டு நிறுவனங்களுக்குள் 80:20 என்று மலைகள் முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள், விழுந்தோடும் அருவிகள் அருகே "ப்ரைவேட் ப்ராபர்ட்டி" என்று வேலி போட்டு திகைக்க வைக்கிறார்கள்!


"லாக் ஹார்ட் கேப் வேலி" - இதய நிறுத்து இடைவெளிப் பள்ளத்தாக்கு மஞ்சுப்புகை மூட்டத்தில் சென்ற வாகனமும் சாரதியும்


குண்டலா ஆற்று அணைக்கட்டுப் படகுத்துறை

கேரளாவின் தண்ணீர் வளம் பொறாமைப்பட வைக்கிறது. ஜீப்பில் பயணிக்கும் போது 10 நிமிஷத்துக்கு ஒரு சலசலக்கும் அருவி, வழிந்தோடும் நீரோடை, 40 கி.மீ சுற்றளவில் ஏராளமான தண்ணீர் 130அடி ஆழம் தேக்கி வைத்திருக்கும் 5 அணைக்கட்டுகள் (மாட்டுப்பட்டி அணை, குண்டலா அணை, கல்லார் அணை, பண்ணையார் டேம், தேவிகுளம்) முழுமையாய்ச் செயல்படும் நீர்மின் நிலையங்கள் என க்ரீன் ரீசோர்ஸ் மிகுதியாக இருக்கிறது. மலைக்கு கிழக்குப்பக்கம் தமிழகப்பகுதிகள் வெற்றுப்பாறை, கள்ளிச்செடிகள், முட்புதர்கள் உண்பதற்குக் காய் கனிகள் கிட்டாமல் அலைந்து திரிந்து இளைத்துப்போன ஒன்றிரண்டு குரங்கார்கள் என தமிழக வனப்பகுதி!!! ஒரு பத்து கி.மீ மலைக்குள்ளாக தமிழக எல்லையை நிர்ணயித்திருந்தால் தமிழ்நாட்டு தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாத ஒன்றாகியிருக்கும்


வ்யூ பாயிண்ட் வழியில் தந்தை-அடியேன் -குழந்தைகள்

மூணாறு தேயிலைத் தோட்டமனைத்திலும் தமிழர்களே வேலை செய்கிறார்கள். டாடா டீ நிறுவனத்தில் மட்டும் 15,000 தமிழர்கள் வேலை செய்கிறார்கள். தேயிலை பறிப்பதில் 100% பெண்கள் இருக்கிறார்கள். ஒருநாலைக்கு 85/-ரூபாய் கூலி, ஒரு தேயிலச் செடியில் 3நாட்களுக்கு ஒருமுறை இலை எடுக்கிறார்கள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேயிலைச்செடியை "கவாத்து"(அதிகம் வளர்ந்த கிளைகளை வெட்டிப் பறிக்கும் உயரத்திற்கு மட்டம் செய்கிறார்கள். கவாத்து செய்யப்பட்ட தேயிலைச் செடி அடுத்த 45நாட்களில் துளிர் விட்டு இலைபறிப்புக்குத் தயாராகிறது.

பறித்த தேயிலை அந்ந்தந்த எஸ்டேடில் குறிப்பிட்ட இடங்களில் கூடையினின்று பெரிய சாக்குகளில் மாற்றப்பட்டு ட்ராக்டர்கள் மூலம் பேக்டரிகளுக்குக்குச் செல்கிறது.

தேயிலைச் செடியில் முக்கோணவடிவில் சிறிய காய் வருகிறது முற்றியதும் தேயிலை நாற்றுப் போடுகிறார்கள். தேயிலைச்செடிகள் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறது. கவாத்து செய்யப்பட்ட தேயிலைச் செடிகளின் வேர்கள் 40அடி வரை தென்படுகிறது. கவாத்தாமல் விட்டால் பெரிய மரமாக வரும்போலிருக்கிறது.

நியமகாடு தேயிலைத் தோட்டதினுள் தந்தை-குழந்தைகள்-பைலட்

வழியில் வண்டியை நிறுத்திப் புல்தைரையில் உட்கார்ந்து லஞ்ச் இயற்கையான சூழலில் என அம்ர்ந்த சில நிமிடத்திலேயே சிறுபூச்சிகள் திரிவதைக் கண்டு மீண்டும் வண்டிக்கே வந்துவிட்டோம் , ரூமுக்கு திரும்பி வந்தால் மனைவி காலெல்லாம் ரத்தம் அட்டை சத்தம் போடாமல் வேலை காட்டியிருக்கிறது.

மறுநாள் ராஜாமலையில் எறாவிகுளம் தேசியப்பூங்காவில் என் வலது கால் செருப்புக்குள் நாவல் பழம் மாதிரி உருண்டையாக ஏதோ... நெளிகிறதே பசித்த பால் பென் ரீபில் திக்னஸ் அட்டை என் பின் தொடையில் குடைந்து ரத்தம் குடித்து நாவல்பழம் மாதிரி உருண்டையாகிருந்தது. பேண்ட் எல்லாம் ரத்தத்தில் சொட்டச் சொட்ட ஊறி நனையுமளவு அட்டையார் சேட்டை.

ஏதோ ஒருநாள் ஒரு அட்டை கடித்து 50மி.லி ரத்தம் சிந்தியதற்கே இப்படியா? மூணாறில் இருந்த ஐந்து நாட்களில் கண்ட ஏராளமான தேயிலை பறிப்போர் தினசரி 85ரூபாய் கூலிக்காக செய்யும் வேலையில் இரத்தம் குடிக்கும் அட்டையிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள்?

திரும்பி வரும் போது விமானத்தில் ட்யூட்டி ஃப்ரீ மேகஸினில் ஏதோ ஆங்கிலப் பெயர் போட்டு original leaf tea 100gm : US$ 31/- (கிலோ Rs.14,000/-) packed in special metal container என்று பார்த்தேன். உயிரியல் அட்டையின் நேரடி இரத்த உறிஞ்சலை விட சந்தைப்படுத்தல் அட்டை பலனைக் குடித்து நம்மாள் தினசரி 85ரூபாயில் வைத்திருக்கிறதோ? என்று எண்ணவைக்கிறது!

மூணாறு தேயிலைத் தோட்டத்தினிடையே பாறாங்கல்லில் ஏப்ரல் 4 மூணாறு தொல்.திருமாவளவன் வருகிறார் என்று எழுதியிருந்தது. திருமா பெயரை எழுதியவரை அட்டை கண்டிப்பாக கடித்திருக்கும். திருமா மாதிரி அரசியல் பிரமுகர்கள் தேயிலைத்தோட்டப் பணியாளர்களின் அடுத்த தலைமுறையை உருப்படியாக நல்ல கல்வி படிக்க வைக்க ஆவன செய்தாலே அட்டையுறிஞ்சல் இன்னல்களினின்று மீண்டுவரலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, September 11, 2006

(29) கோலாலம்பூரில் ஒரு வாரம்!

கோலாலம்பூரில் லேக் கார்டன், பேர்ட் பார்க், கேஎல் டவர் (421மீ உயரம்), சைனா டௌன் பெடாலிங் ஸ்ட்ரீட், சென்ட்ரல் மார்க்கட்,மெர்டேகா ஸ்கொயர், லிட்டில் இந்தியா, Zoo negera, Batu Caves முருகன் கோவில், சௌ கித், ஜென்டிங், KLCC,Ampang, சீனர்கள் கோவில்கள், மகா மாரியம்மன் கோவில் என்று ஏழு நாட்களில் சுற்றி வர முடிந்தது.

கோலாலம்பூரில் ஓடும் கோம்பாங்க், மற்றும் க்ளாங் (Confluence of Gombak & Klang rivers) ஆறுகள் சங்கமிக்கும் இடம் தான் கோலாலம்பூர் நகரம் உருவான இடம். இந்த ஆற்றுச் சங்கமத்தில் தகரத்தாது (Tin ore) கிடைத்து அதனால் ஆறுகள் கிளறப்பட்டதால் கலங்கலான ஆறு என்ற பொருளுடையதாக நகரின் பெயர் கோலாலம்பூர் என்று வைக்கப்பட்டது.

இன்றைய கோலாலம்பூரில் இந்த கோம்பாங்க், மற்றும் க்ளாங் (Confluence of Gombak & Klang rivers) ஆறுகள் சங்கமிக்கும் இடம் மஸ்ஜித் ஜாமெக் KTM rail station பின்புறம். இந்த இரு ஆறுகள் நகர ஆக்ரமிப்பில் ஆடுதாண்டும் காவிரிமாதிரி குறுகிக் கால்வாய் ஆகிவிட்டது ஆறு என்ற பதம் நகைப்புக்குரியதாகியிருக்கிறது. என்றாலும் ஆறு கூவம் மாதிரி சாக்கடை ஆகாமல் மழைநீர் வடிகால் மாதிரி பயன்பாட்டில் இருக்கிறது.

ஜலான் அலோர்(Jalan Alor) என்ற உணவகங்கள் சாலைப் பக்கம் (ஜலான்=சாலை) செல்லலாம் என்றிருந்தேன். சைனா டௌன் பெடாலிங்க் ஸ்ட்ரீட்டில் நடந்த போது சைனாக் காரர்களின் உணவகங்களில் தோலுரிக்கப்பட்டு மூக்கில் கம்பி கட்டித் தொங்கும் வாத்துகளும், பட்டி பட்டியாய் பாம்பா? வேறென்னவுமோ, 5நிமிடம் மூச்சை தம் கட்டி பெடாலிங்க் ஸ்ட்ரீட்டைக் கடப்பதற்குள் அப்பப்பா! சைனாக்காரன் உணவு வாசம்! (நாற்றம்) தாள முடியவில்லை.

எனவே ஜலான் அலோர் போனா மூச்சடைச்சு அலற வேண்டியிருக்கும் என்பதால் ஜலான் அலோர் விஸிட் கான்சல் ஆனது..

சரி துரியன் பழத்தைச் சுவைப்போம் என்றால் தங்கியிருந்த ஹோட்டலில் சாதுரியமாக நோ துரியன் பாலிஸி. ஆக துரியன் பழத்தைச் சுவைக்க முடியாத துரியாவஸ்தையானது.




கோலாலம்பூர் பறவைகள் பார்க்கில் சக கிளியார்கள் பார்க்க அசத்தலாக உருளை வண்டி ஓட்டும் சாகசக் கிளியார். Ambi-theatereல் தினசரியாக பார்வையாலர்களுக்காக நடத்தப்படும் பறவைகளின் சாகசங்கள்.


கோலாலம்பூர் zoo negera-ல் மூதாதையர் மையம். எள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தாக்கள் டார்ஜான் மாதிரி கயிறுகளில் தொங்கிச் சேவைகள் புரிந்துகொண்டிருந்தனர். கொள்ளுப்பாட்டியின் எள்ளுப்பாட்டிகள் சக எ.பாகளுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் children wading pool/play area விலிருந்து

புழுக்கமான வெய்யில்-ஈரப்பத அவஸ்தையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற wading pool + large children play area இரட்டைக் கோபுரத்தின் முன்பாக KLCC Suria shopping complex பின்னால் சென்றடையும் வண்ணம் லாண்ட்ஸ்கேப் அருமையாகச் செய்திருக்கிறார்கள். ஹிந்திப் படம் பார்க்கின்றவர் எனில் பாபி தியோல் /பிபாஷ பாஸூ மாதிரியானவர்கள் குதித்தாடிய இடம் என இனம் காணலாம்.


கோலாலம்பூர் மோனோரெயில் பாதை புகிட் நனாஸ் / மெதான் துனுக் அப்துல்ரஹ்மான் நிலையங்களுக்கு இடையே

இந்த மோனோரெயில் எலிவேட்டட் இருவழி ட்ராக் பாருங்க இடதுபக்க ட்ராக் KL Sentral போறது, வலதுபக்கம் Titiwangsa ன்னு ஒரு இடம் போறது. கீழே கார், பஸ், என தொந்தரவில்லாமல் போகிறது. அர்பன் மாஸ் transportationக்கு தீர்வா ஜெயலலிதா சென்னைக்கு இந்த மோனோரெயிலைத் தான் கொண்டுவர மலேஷிய அமைச்சர் டத்தோ சாமிவேல்மூலம் எல்லாம் ரெடி பண்ணாங்க. பா.மா.க ரயில்வே இணை அமைச்சர் ஆ..ஊன்னார்... அம்மா ஆட்சி காலி திட்டமும் காலி. மவுண்ட் ரோடுக்கு மோனோரெயில் தான் சரியாகும். இப்ப பாதாள ரயில் அமைக்க திமுக பா.ம.க ஆய்வு செய்றாங்க!

என்னமோ போங்க. சென்னை வாசிக்கு வசதி இப்போதைக்கு வரப்போறதில்லை. குரோம்பேட்டை மேம்பாலம், கத்திப்பாரா இன்டர்சேஞ்ச் இதுக்கே 10வருஷமாகியும் இன்னும் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. பால வேலைக்குச் தேவையான கருங்கற்களை விட கலைஞரு / டி.ஆர்.பாலு / ஜெயா நாட்டின திட்ட அடிக்கற்கள் எண்ணிக்கைதான் அதிகமா வேலை நடக்குற இடத்துல கிடக்கு!

எப்ப பாதள ரயிலு / மோனோ ரயிலு சென்னையில ஓடுமோ? பேரன் பேத்தியாவது போக முடிஞ்சா சரி!


ஜென்டிங் எண் டெர்டெய்ன்மெண்ட் சிட்டியிலிருந்து கோலாலம்பூர் கிளம்ப நம்ம பேருந்து முன்பாக

ஜென்டிங் எண் டெர்டெய்ன்மெண்ட் சிட்டி KL வாசிகளுக்கு பெரிய ஆறுதல். க்ளைமேட் சட்டென்று குளிர்ச்சியாகி ஈரப்பதம்+வெய்யில்=அவியல் என்று தினசரியில் உழல்வோர்க்கு 60 கி.மீ தொலைவில் முற்றிலும் புத்துணர்ச்சியளிக்கும் வரப்பிரசாத சிட்டியாக இருக்கிறது. இங்கிருக்கும் பர்ஸ்ட் வேர்ல்டு தீம் பார்க் குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் விளையாட்டுக்கள் நிறைந்த இடம்.
கேஎல் டவர் பின்ணணியில் ஜென்டிங் எண்டெர்டெய்ன்மென்ட் சிட்டி பேருந்திற்காக புதுராயா மத்திய பேருந்து நிலையம் முன்பாக

ஜென்டிங்-ல் ஸ்கைவே எனப்படும் கேபிள் கார் மலையுச்சியிலிருந்து கீழே வர என ஹாலிடே எபக்ட்க்கு கேரண்டி. நாங்கள் போன சம்யம் ஜென்டிங் ஸ்கைவே கேபிள் கார் வழி மூன்று மாத மேஜர் மெகானிக்கல் மெயின்டனன்ஸ் என்று மூடப்பட்டு இருந்தது டிஸப்பாயிண் ட் செய்தது. மாற்று அவானா ஹைவே கண்டுபிடிக்குமுன் மாலை 5ம்ணியாகிவிட KLக்கு 8மணிக்குள் திரும்ப வேண்டும் என்பதால் ஏமாற்றத்துடன் வரவேண்டியிருந்தது.

கோலாலம்பூரில் ஒருவாரம் முடிந்தவுடன் அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல எண்ணியிருந்தேன். சிங்கப்பூர் சக வலைஞர் திரு.வடுவூர் குமார் மிக்க அன்புடன் அவர் இல்லத்திற்கு வரும்படி invite செய்திருந்தார். அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து எங்களுக்கு சிங்கையைச் சுற்றிக்காட்ட ஆயத்தமாயிருந்தார். நானும் குவைத்-சிங்கப்பூர் வலைஞர்கள் மாநாட்டுப் பதிவுக்கு தயாராயிருந்தேன்.

கோலாலம்பூர் சிங்கப்பூர் எம்பசியில் ஆகஸ்ட் 8ம்தேதி சிங்கைவிசாவுக்க்கு அப்ளை செய்தேன். காலை 11மணிக்கு விசா ஆபிஸர் உங்கள் போட்டோக்களின் பின்ணணி நீலவண்ணத்தில் உள்ளது அது வெண்மையான பின்ணணியில் வேண்டும் என்று வன்மையான விதிமுறையைச் சொன்னார். மறுநாள் ஆகஸ்டு 9ம்தேதி சிங்கை எம்பஸி விடுமுறை என்றார். நான் வெள்ளியன்று காலை 9மணிக்கே கோலாலம்பூரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்பதால் சிங்கை விஸிட் இயலாது போனது.

திரு.வடுவூர் குமார் அவர்களின் அன்புக்கு நன்றிகள். அடுத்த சந்தர்ப்பத்தில் தூரகிழக்குச் சிங்கையிலோ மத்திய கிழக்கு துபாயிலோ அவசியம் சந்திக்கலாம். இல்லை எனில் சென்னையிலோ /நாகப்பட்டினத்திலோ சந்தித்துக் கொள்ளலாம்.

கோலாலம்பூர் மொத்தத்தில் பிடித்திருந்தது. ஜென்டிங் ஸ்கைவே தவெர்த்து ஏமாற்றம் அதிகமில்லை. மலேஷிய மக்கள் ரொம்ப ப்ரண்ட்லி. தமிழ் பரவலாக பேசப்படுவதால் கூடுதல் வசதி. ஆனால் நான் கேஎல்லில் பார்த்த அளவில் வெகுதியான தமிழ் பேசுவோர் அடித்தட்டு வேலைகளாக, டாக்ஸி ஓட்டுதல், வீதிகள் துப்புறவு என்றிருக்கின்றனர். வணிகம் பராம்பர்யமாக நகரத்தார்-செட்டியார்கள் செய்கிறார்கள், ஆனால் HSBC மாதிரி உள்நாட்டு/அயல் நாட்டு வங்கிகளில், இதர வசதியான வேலைகளில் மத்திய கிழக்கு மாதிரி அவ்வளவு வெகுதியாகத் தமிழர்களை / இந்தியர்களைக் காண இயலவில்லை.

அன்புடன்,

ஹரிஹரன்

(28) கோலாலம்பூர் பத்து மலை முருகா!!

கோலாலம்பூர் - ஜென்டிங் எண்டர்டெய்ன்மென்ட் சிட்டி செல்லும் ஹைவேயில் KLசிட்டி சென்டரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது பத்துமலை குகை முருகன் கோவில். கோலாலம்பூர் வாழ் தமிழர் மட்டுமில்லாமல் அனைத்து நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பத்து மலைக்குகை (Batu Caves) மீதமைந்த முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாக அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கு அரேபியச் சுற்றுலாப் பயணிகளும் தவறாது வருகை தருகின்றனர் பத்து மலைக்கு.

மத துவேஷமற்ற மலேஷிய அரசின் சுற்றுலாத்துறை பத்துமலையின் பிரம்மாண்ட விழாவான தைப்பூச நிகழ்வை உரிய முறையில் உலகச் சுற்றுலாவாக விளம்பரம் அளித்து KLக்கு அருகாமையில் MUST SEE தலமாக பத்து மலைக்குகையை உலக டூரிஸ்டுகளூக்கு தெரியப்படுத்தியிருக்கிறது.


2006 ஜனவரியில் மலைக் கோவில் படிக்கட்டு முகப்பில் திறக்கப்பட்ட 147அடி உயர உலகின் மிக உயரமான குமரக்கடவுள் கையில் வேலோடு பொன்னிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, KL-ஜென்டிங் விரைவுச் சாலையில் செல்லும் அனைவரையும் தாமிருக்கும் தலம் MUST SEE என்று டூர் அஜெண்டாவில் note செய்ய வைத்து இந்திய/தமிழ்க் கலாச்சாரத்தின், இந்துமதத்தின் ஆன்மீக,மலேஷிய சுற்றுலாத்துறையின் ப்ராண்ட் அம்பாஸடராக effective ஆக impact செய்கிறார்.

பத்துமலைக் குகை முருகன் கோவில் முகப்பு, ஏறிச்செல்லும் 275படிகள், 147அடி உயர முருகக் கடவுள் சிலை.

வணிகத்துக்காக மலேஷியா சென்ற நகரத்தார் (செட்டியார்)சமூகத்தின் பெரு முயற்சியினால் பத்து மலைக்கோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

குகையினுள் அமைந்த சுப்ரமணியஸ்வாமி கோவில் பிரதான சன்னிதானம்

குகையினுள் ஏசி மாதிரி சில்லென்று காற்று, முந்தைய நாள் சிறுமழை காரணமாக குகைக்கூரையினின்று சிதறும் நீர்த்துளிகளால் விளையும் ரம்மியமான சூழல் காரணமாக 275படி ஏறிவந்தது மற்றும் சீதோஷ்ணத்தால் ஏற்படும் வியர்வை/புழுக்கம் மட்டுப்பட்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.


பத்து மலை முருகன் கோவில் கடைசிக் குகையினுள் மேற்கூரை வழித் தெரியும் சூரியன்.

ஆகஸ்ட் 09ம் தேதி ஆவணி அவிட்டம் ஆதலால் ஹோட்டல் ரூமிலேயே பூணூலை மாற்றிவிட்டு பத்துமலை முருகனை தரிசித்தோம். 275 செங்குத்துப் படிகள் ஏறி மேலே சென்றால் இயற்கையாக அமைந்த சுண்ணாம்புப்பாறை குகை (Lime stone hill caves) அமைப்பு பிரமிப்பைத்தருகிறது. முருகன் சன்னிதானம் அமைந்திருக்கும் குகையின் மேற்பகுதி திறந்ததாக ஆகாயம் வெளிப்படுமாதிரியான அமைவு கலக்கல்.

பத்துமலை முருகனுக்கு அரோகரா! கோலாலம்பூர் பயணம் பத்துமலை முருகன் கோவில், சைனா டௌன் ஏரியாவில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோவில் இவற்றால் சற்று ஆன்மீகமாகவும் அமையப்பெற்றது.

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, September 10, 2006

(27) ஹரிஹரன்களின் பார்வையில் கோலாலம்பூர்

மலேஷியாவிற்கும் குவைத்திற்கும் பல வித்தியாசம் இருந்தாலும் மிகப்பிரதானமாகப் படுவது மல்ட்டி எத்தினிக், மல்ட்டி ரிலிஜியஸ் cohesive கோ-எக்ஸிஸ்டன்ஸ். வெங்காய வடிவ மாடங்களுடன் மசூதிகள் நிறைந்திருந்தாலும் ஆங்காங்கே சீனர்களது புத்தக் கோவில்கள், இந்துக் கோவில்கள் கோலாலம்பூரில் காணக் கிடைக்கின்றன.

தமிழ் பேசும் இந்துக்கள் தம் மதக்கலாச்சாரத்துடனேயே தினசரி அலுவல்களுக்குச் சென்று வருகிறார்கள். அபிஷியல் இஸ்லாம் நாடெனினும் சக மதங்களை முழுமையாக சுதந்திரமாக அனுமதித்திருக்கும் அரசியலமைப்பு மிகப் பிடித்திருக்கிறது. மன(த)ப் புழுக்கம் சுத்தமாக இல்லை.


KLCC / Ampang area -ல் ஒரு சீனக் கோவில்.
புத்தர் 10 கைகளுடன் 10வித ஆயுதப்பொருட்களுடன் நம்மூர் துர்காதேவி மாதிரி. புத்தர் முன்னால இருக்கிறது கன்பூஷுயஸ் சாமி.
புத்தர் சிலைக்கு இருபுறமும் சிவப்புத்தூண்களில் நம்ம காளஹஸ்தி / காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் சகஸ்ர லிங்கம் (1008 லிங்கம்) மாதிரி 1008புத்தர்கள் மரத்தூண்கள்.



KLIA கோலாலம்பூர் ஏர்போர்ட். பின்புறம் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் ஏர்போர்ட் ஏரியாவில் ஏர்போர்ட் கட்டுமுன்பு 1996க்குமுன்பு இருந்த காடுகளின் ஒருபகுதி சாம்பிள் ஷோகேஸிங்காக!





கோலாலம்பூர் Petronas இரட்டை கோபுரம் (முன்னாள் உலக உயரமான கட்டிடம் 452மீட்டர் / 88மாடிகள் 42ம் மாடியில் பார்வையாளர் வ்யூ ப்ரிட்ஜ்)

மலேஷியா எங்கும் ட்ராபிக்கல் ஃபாரஸ்ட் நிறைந்த பகுதி, பொதுவாக காடுகள் என்றால் குளுமை என்ற எனது மேற்குத்தொடர்ச்சி அனுபவத்திற்கு மாறாக அத்தனை காடு எனினும் கடுமையாக வியர்க்கிற கோலாலம்பூர் சுற்றுப்புறம்.

கேஎல்லுக்கு 60 கி.மீ தள்ளி இருக்கும் "ஜென்டிங்" எனும் இடத்தில் குளிர் கொஞ்சம் மே.தொடர்ச்சிக் காடுகள் மாதிரி மிஸ்ட் கீழிறங்கி வந்து சாலையில் பரவி இறங்கிவர என்று இதமாயிருந்தது.

Modern express rail network, reasonable bus links, elevated Urban Monorail, not so regulated taxis என போக்குவரத்துக்கு எல்லா விதமான வகைகளில் சென்றுவர முடிகிறது ரொம்ப விலை இல்லை.

டாக்ஸிக்கள் டகால்டியாக 1986ம் வருஷ ஜப்பானிய மிட்ஷீபிஷி லான்ஸரை மலேஷியப் புரோட்டான் காராக வலம் வருகின்றன. யூ டென்ட் டூ / ட் ரை டு அவாய்ட் த டாக்ஸி பிகாஸ் ஆஃப் இட்ஸ் அவுட் டேட்டட் லுக்ஸ்! கட்டணம் பரவாயில்லை ஆனாலும் இவ்வளவு 20 வருஷப் பழைய வண்டிகளுக்கெனும் போது கூடுதல் என்ற எண்ணம் வருகிறது.

லிட்டில் இந்தியாவில் ஜலான் கஸ்தூரி தாண்டி வரும் பக்தி உட்லாண்ஸ் "பிராமணாள் சமையலுடன்" சைவ உணவு படைக்கிறது, சங்கீதா ஹோட்டல், செட்டிநாடு மெஸ் என்று இந்த ஏரியாவில் இந்திய உணவுக்கு பிரதானமானதாக இருக்கிறது.

ஜலான் துனுக் அப்துல் ரஹ்மானில் இருக்கும் ஓடியன் மணி தியேட்டரில் சம்திங்..சம்திங் உனக்கும் எனக்கும் பார்த்தோம். ஹோட்டலில் இருந்து 10 நிமிட நடை தூரம். படம் ப்ரவாயில்லை. ஊரில் படுஹிட் ஆகியிருக்கிறது. கேஎல்லில் எப்படியும் 1000 ஹோட்டல்களாவது இருக்கும். சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கிய பின்பு தேடினாலும் எப்படியும் ரூம் கிடைத்துவிடும்.

சுற்றுலாவை வைத்து பெரிய எகனாமியே உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றுலா இடங்களில் பார்வைக்கட்டணம் (25-40வெள்ளி) சற்று அதிகம் எனப் படுகிறது. 75செமீ /3வயது தாண்டிய குழந்தைகள் கூட 75% நுழைவுக்கட்டணம் என்று சுற்றுலா எகானமி ஜோராக ஆரோக்கியமாக வத்திருக்கின்றார்கள்.

மூணு போட்டோ தான் ப்ளாக்கர் அனுமதித்தார். மற்றவை அடுத்த பதிவில்.

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, September 06, 2006

26. விடுமுறை முடிஞ்சாச்சு! நான் திரும்ப வந்தாச்சு!!

முப்பத்தி இரண்டுநாட்கள் விடுமுறை நேத்தோடு முடிஞ்சுபோச்சு.

குவைத்திலிருந்து கிளம்பி கோலாலம்பூர், சென்னை, போடி, மூணாறு, மதுரை, திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சி என்று இம்முறை விடுமுறை கொஞ்சம் பெண்டு கழட்டுறமாதிரி இருந்தாலும் திட்டமிட்டிருந்தபடி நிறைய இடங்கள் புதிய, மற்றும் மீள்பதிவாக பார்த்த இடங்களை பார்ப்பது என்பதை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.


வித விதமான சூழல்கள், வெவ்வேறு விதமான மனிதர்கள், பல்வேறுவிதமான கலாச்சாரங்கள், முற்றிலும் வேறுபட்ட பூகோள, மற்றும் சீதோஷ்ண நிலைகள் என இந்த விடுமுறை அமைந்திருந்தது.

நாலரை மற்றும் மூன்று வயது குழந்தைகளோடு சுற்றுலாப் பயணிக்க மிகுந்த மன தைரியம் வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது இந்த விடுமுறை.

நான் பெற்ற இன்பம் இந்தத் தமிழ் வலைப்பூ வையகம் பெற வேண்டும் என்பதால் நான் சென்ற இடங்கள், பார்த்தது, கேட்டது, பார்த்த மக்கள் இவை பற்றி தொடர் பதிவாக எழுத எண்ணி இருக்கிறேன்.

அன்புடன்,

ஹரிஹரன்