Sunday, July 27, 2008

(191) பகுத்தறிவு தமிழகத்தில் இடஒதுக்கீடு தந்த பலன்

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டினால் பகுத்தறிவு வற்றாது ஓடும் சமூகநீதியை அரசியல் திராவிட பெத்தடின் கொள்கைக் கட்சிகளின் ஆட்சிகள் நிலை நாட்டிவிட்டதாக புருடா விடப்படுவது அறிந்ததே.

சில நாட்கள் சமீபத்தில் சக பதிவர் தனது பதிவில் மருத்துவக் கல்லூரி இடங்களில் முதல் 300மதிப்பெண்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுகீட்டினால் மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டு இந்தியாவுக்கே முன்மாதிரியாகைவிட்டதாகச் சொல்லியிருந்தார்.

நான் பின்னூட்டமாக அந்தப்பதிவில், "மருத்துவக்கல்லூரி சேர்க்கை லிஸ்ட்டில் தெரிவிக்கப்படும் ஜாதியை மட்டும் வைத்து சமூகநீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது" உண்மையில் ஜாதிச் சான்றிதழ் சார்ந்த இட ஒதுக்கீட்டு வெற்றி என்பது பம்மாத்து என்பதாக கருத்து தெரிவித்திருந்தேன்


கல்வி, அரசு வேலைக்கான ஜாதிச் சான்றிதழ் விற்பனைத் திருவிழா கொண்டாட்டம் ஆண்டுதோறும் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பு ஆரம்பமாகும் ஜூன் மாதத்தில் உச்சத்தில் இருக்கும்.


நிதர்சனத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு பாயும் தமிழகத்தினை பகுத்தறிவற்று வேத ஆகமப்படி பரந்த கோவில்கள் கட்டி அரசாண்ட சோழர் / பல்லவர்-பாண்டியர் வழித்தோன்றலாகவும் இருந்துகொண்டே பிற்படுத்தப்பட்டவராக, தமிழக அரசியல் களத்தில் முனைப்பில் இருந்து, கடின உழைப்பால் நூறாண்டுகள் நின்ற மரங்களை வெட்டி சாலையெங்கும் வீழ்த்தி சுயமாக மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகமாக இருந்துகொண்டே ஆதி திராவிடரை / பழங்குடியினரை வெறுத்தாலும் ...

தமிழகத்தில் ஆட்சி செய்யும் / அதிகாரத்தில் இருக்கும் பகுத்தறிவு பெத்தடின் ஏற்றும் அரசியல் திராவிட கழக உறுப்பினர் அட்டை இருந்தால் தமிழ்நாட்டில் 69% சமூகநீதி நிலவிடச் செய்யும் "இட ஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்" ஆவது எளிது.

தமிழகத்தில் 2008-09 ஆண்டு 70,000 பொறியியல் கல்வி இடங்கள் அரசு கோட்டாவில் இருக்கிறது. அரசு தனியாருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் கல்விச் சந்தையில் 50%மானேஜ்மெண்ட் கோட்டா 70,000 இடங்கள் இருக்கின்றது.

இந்த 70-85,000இடங்களுக்கான டொனேஷன் தொகை என்பது தமிழக்த்திலே ஜாதியை அறவே ஒழித்துவிட்டு, சமூகநீதிப்படி பகுத்தறிவோடு இயங்கும் அரசியல் திரா"விட" பெத்தடின் அரசு ஆசிர்வாதத்தில் ஓப்பன் கேட்டகிரிக்கு 5-9லட்சம் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3-5 லட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இந்நாள் அரசியல்வாதிகள்/முன்னாள் அரச வம்சத்தினர்)2-3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இடஒதுக்கீட்டு சான்றிதழ் ஏஜண்ட்டுக்குத் தரவேண்டியது ரூ. 5000/- கல்லூரி கேபிடேஷன் தொகை ரூ இரண்டு முதல் நாலு லட்சம் வரை சேமிப்பு!

எனவே சாதியை முற்றிலும் ஒழித்துவிட்ட புரட்(டு)சி /வீரபூமியான தமிழகத்தில் இட ஒதுக்கீடு தேவையுள்ள அனைவரும் இந்த இடஒதுக்கீட்டு சான்றிதழ் விற்பனையைப் பயன்படுத்தி கல்வியில் மேம்படவும்.


பகுத்தறிவு தமிழகத்தில் இட ஒதுக்கீடு தரும் பலன்

`சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!

என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை... உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.

அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!

நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.

பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.

அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.

``சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?'' என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!

``எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.' சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!'' என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

பிளாட்ஃபாரத்து பெட்டிக்கடையில் ஒரு ஃபார்ம் வாங்கினார். அதை நிரப்புவதற்கு ஒருவரிடம் கொடுத்தார். அழுக்கு மூட்டையாய் நின்ற மற்றொருவரிடம் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் வாங்கினார். பின் நம்மைப் பார்த்து, ``ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!'' என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி'ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.

ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'

`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்...

பாரதி சினிமாவுக்குப் பாட்டெழுதியிருந்தால் ஒருவேளை இவர்களுக்கு நினைவிருந்திருக்கலாம். அதனால் இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்... ஸ்ரேயா, அசின் என்றால் நாற்பதைத் தாண்டிய புரோக்கர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பளிச்சென்று ஞாபகத்துக்கு வராது! அதனால் குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்...

இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!' என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.

சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.

``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.

ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.


பி.குறிப்பு 1:
குஷ்பூவுக்கு கோவில் கட்டிய பகுத்தறிவு தமிழன் தான் மறத்தமிழனே என்பதை மீண்டும் ஒருமுறை குஷ்பூவுக்கு மறவர் ஜாதி சான்றிதழ் வழங்கி பறைசாற்றியிருக்கிறான் அந்த "இடஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்"


பி.குறிப்பு 2:
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி, கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் அடிப்படையிலான மக்கள் தொகை 10 கோடிக்கும் மேல்??

பி.குறிப்பு 3:

இனி தமிழ்நாட்டுல போங்கடா புள்ளகுட்டிங்கள டிஸ்கவுண்டட் இடஒதுக்கீடு ஜாதிச்சான்றிதழ் வாங்கிட்டு படிக்க வைங்கடான்னு சொல்லிக்கலாம்!

பி.குறிப்பு 4:

மெய்யாகவே தம் வாழ்வில் மேம்பட வேண்டிய கல்வி வேலைவாய்ப்பு உதவி தேவைப்படும் அனைத்து பிரிவு தமிழகத்து மக்களுக்கும் கனிவான மொழியில் கழக அரசு பதில் சொல்லாமல் கனிமொழியை மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்திட அன்னை சோனியாவின் ஆமோதிக்கும் கனிமொழிக்காகவும், கடைக்கண்பார்வைக்காகவும் அலையும் ஐந்து முறை தமிழகத்து முதல்வரான 85 வயது இளைஞனை வாழ்த்தி கட் அவுட் வைத்து மூப்பெரும் விழா எடுத்து மகிழவேண்டியதுதான்!


அன்புடன்,

ஹரிஹரன்