இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலத் தேர்தல்களில் மிக அதிகமாக பதிவாகும் வாக்குப்பதிவு 65% சதவீதமே!
தேர்தல்களால், மாறும் அரசுகளினால் தாங்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவுக்கு பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள் அவர்களது ஆற்றலுடனான பங்களிப்பை அரசியல்கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளை 'ஸ்பான்சர்ஷிப்" செய்வதன் மூலமாக சாதித்துக்கொள்கிறார்கள்.
பணமில்லாத ஏழைகள் தங்கள் ஓட்டுக்கு இவ்வளவு என்று ஓட்டு விற்பனை, இலவச பிரியாணி, இலவச டிவி, இலவச நிலம், இலவச அடுப்பு, இலவச சேலை, வேட்டி, மலிவு விலை ரேஷன் அரிசி இப்படி பல இலவசங்களை வாக்குறுதிகளாகப் பெற்று பெருவாழ்வு வாழாவிட்டாலும் டாஸ்மாக்கில் குஷியாகி இருக்கும் சொற்ப கைப்பொருளையும் இழந்து விடுகிறார்கள்! தம் ஓட்டை பிரியாணிக்கும் இன்ன இலவசங்களுக்கும் ஈடாக்கி வாழ்வில் ஈடேற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
வாக்காளர் மிஸ்டர் மிடில்கிளாஸ் மாதவன்கள். இவர்கள் இருப்பதிலேயே தனியான தினுசு. இவர்கள் பொதுவாக இலவசங்களை வாங்கமாட்டார்கள், தேர்தல் மற்றும் அரசியல் கட்சி, அரசுகளின் இலவசங்களை வாங்குவது அவமானம்-கௌரவக்குறைவாக நினைப்பவர்கள். அதுக்குன்னு அரசியல் கட்சி வேட்பாளர்களை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களும் அல்ல இந்த மிடில்கிளாஸ் மாதவன்கள்.
இந்தியாவில் தேர்தல் வாக்கு வங்கியில் மிடில்கிளாஸ் மாதவன்கள் கிட்டத்தட்ட 50%
இந்தியாவில் செயல்படும் எந்த அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ , வேட்பாளர்களோ என எவரும் பகைத்துக்கொண்டுவிட முடியாத தனிபெரும்பான்மையான தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையுடைய பிரிவினர் இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள்.
யாரெல்லாம் மிடில்கிளாஸ் மாதவ-மாதவிகள் பிரிவில் வருவார்கள்??
சென்னையின் மாநகரப் பேருந்தில் Mசர்வீஸ் பஸ்டிக்கட் வாங்கிப் பயணம் செய்யும் பொருளாதார வசதி படைத்த நபரில் இருந்து ஆரம்பித்து, உழைத்துச் சம்பாதித்த காசிலும், பாதி வங்கி லோனிலுமாக வாங்கிய Maruti Swift-VDI மாடலில் தினசரியாக அலுவலகத்துக்கு செல்ஃப் டிரைவிங் செய்யும் சாப்ட்வேர் ஆசாமிவரை நீளும் பெரிய சோஸியல் எகனாமிக் ஸ்பெக்ட்ரம் இந்த மிடில்கிளாஸ் வர்க்கம். இந்த பொருளாதாரப் பட்டைக்குள் (Economic band) வருவோர் அனைவரும் மிடில்கிளாஸ் மாதவன்-மாதவிகளே!
(சும்மா ரைமிங்குக்காக மாதவன்-மாதவின்னு... அதெப்படி மாதவின்னு சொல்லலாம்னு மதுரையை எரிச்ச கண்ணகிகளா மாறி மானிட்டரை எரிக்குமளவுக்குப் பார்க்க வேண்டாம்)
இந்த மிடில்கிளாஸ் ஆசாமிகளால்தான் நம் இந்திய தேசத்தின் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது!
மிடில்கிளாஸ் மாதவன்கள் தான் இந்திய தேசத்தின் மத்திய, மாநில அரசுகள், அதன் அமைச்சர்கள் என அனைவரையுமே அரசியல் கட்சிகள் நிர்ணயிக்க பிரதான காரணியாகின்றனர்!
பதிவைப் படிக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் அவசரமா ரொம்ப பெருமைப் பட்டுவிடவேண்டாம்!
துரதிர்ஷ்டவசமாக மிடில்கிளாஸ் மாதவன்கள் இந்திய அரசியல் நிர்ணயத்தை பாஸிவ்வாக தாங்கள் அரசியல் கடமையை செயல்படுத்தாமல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு அநாவசியமான அகங்காரத்தினை அளிக்கின்றார்கள்.
ஆக்டிவ்வாக மிடில்கிளாஸ் மாதவன்கள்/ மிடில்கிளாஸ் மாதவிகள் ( வரும் தேர்தல்களில் வோட்டுப்போடும் அரசியல் கடமையை 100% செய்யவேண்டும்.
காடுவெட்டி குரு, வடசென்னை சேகர் மாதிரியான ரௌடி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அந்தத் தொகுதிகளில் 49ஓ போடுங்க! நரேஷ் குப்தா வரும் தேர்தலில் அனைத்து பூத்களிலும் 49ஓ வாக்காளர் போட வழிவகை செஞ்சிருக்காரு!
வெள்ளைக்கார ரவுடிங்களை எதிர்த்து நம்ம தாத்தாக்கள், பாட்டிகள் எல்லாம் அடிவாங்கி, அந்தமான் சிறை சென்று என்று அரும்பாடுபட்டுப் போராடிப் பெற்ற சுதந்திரம் மிடில் கிளாஸ் மற்றும் அனைத்து சமூகப்பிரிவு பேராண்டிகளால் பேணப்படவேண்டியது அவசியம்!
பாரத தேசமெங்கும் மக்கள் தொகையில் 50 சதவீத வாக்கு வங்கியாக இருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் தேர்தலில் போடும் 49ஓவை விட அரசியல் கட்சிகளிடம் மிடில்கிளாஸ் மக்கள் நேர்மையான பொருளாதார சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக ஒருசேர்ந்து நெகோஷியேட் செய்து வாங்க வேண்டும்.
1. வருமான வரி வரம்பு குறைந்தபட்ச அளவை ஒரு நிதி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாயாக்க வேண்டும்.
2.வங்கிகளில் சேமிப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை ஒரு லட்ச ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.
3.அனைத்து இருசக்கர, 100 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் 10% விற்பனைவரி அல்லது 10% சாலைவரி இவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே வசூலிக்கப்படும்.
4. நிதிஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்திற்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படும். வருமான உச்சபட்ச வரி 15% என்ற அளவில் அமைக்கப்படவேண்டும்.
5. பெட்ரோல், டீசல், எரிவாயு, சமையல் எரிவாயு போன்ற எரி பொருட்கள் மீதான மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 15% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.
6. உணவுப்பொருள், அத்தியாவசியப் பொருட்கள் இவற்றின் மீதான மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மொத்த விற்பனைவரி உச்சபட்சமாக 10% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.
7. நாள் ஒன்றுக்கு ரூ 1500/- வாடகை வாங்கும் தங்கும் விடுதிகளில் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த விற்பனைவரி உச்சபட்சமாக 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.
8. உணவு விடுதிகளில் ரூ 500/-க்கு மேற்பட்ட தொகைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். உச்ச பட்ச ஒருங்கிணைந்த மத்திய மாநில அரசுகளின் விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும்.
9. ரெடிமேட் ஆடைகள், ஜவுளி, காலணிகள், தங்க நகை, வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் , கம்ப்யூட்டர் போன்ற அனைத்துப் பொருட்களுக்குமான மத்திய மாநில ஒருங்கிணைந்த உச்சபட்ச விற்பனைவரி 5% என்ற அளவில் அமைக்க வேண்டும்.
10. மாணவர்கள் கல்விக்கான பாடபுத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுதுபொருட்களுக்கு 100% முழுமையான மத்திய மாநில அரசுகளின் வரிவிலக்கு அளிக்கவேண்டும்.
மிடில்கிளாஸ் மாதவ, மாதவிகள் தேர்தல் அன்று விடுமுறையை வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்காமல் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் சினிமாப்படம், சினிமா நிகழ்ச்சி, சாட்டிங், மயிலாட மானாட பார்த்து என்று முறையற்று இருந்துவிட்டு விலைவாசி எல்லாம் எகிறியதற்கு திறமை அற்ற மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தை வசைபாடுமுன்பு இவை இவ்வளவு மோசமானதற்கு வாக்காளர் மக்கள் தொகையில் 50% அளவுக்கு இருந்தும் வாளாவிருந்த பாஸிவ் மிடில்கிளாஸ் மக்களின் பொறுப்பற்ற அரசியல் பங்களிப்பே காரணம் என்பதை உணரவும்.
மிக மோசமாகச் செயல்படும் திறமையற்ற கொடுங்கோல் பல்முனை சேவை வரிவிதிப்புத் திலகமான நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாதிரியான மத்திய நிதி அமைச்சர்களையும், மாநில நிதி அமைச்சரான க.அன்பழகனையோ, ஊழல் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியையோ மக்களவை/மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து திருப்பி அழைக்கும் தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி மத்திய மாநில தேர்தல் ஆணையாளர்களிடம் மிடில் கிளாஸின் 50% வாக்காளர்களும் ஒருசேரத் திரண்டு சமூகப் பலன்களை உரிமையாக்க வழிவகை செய்யவேண்டும்.
சென்னையில் ஒரு ரூம் உடைய வீட்டுக்கு மாத வாடகை ரூ 7,000 முதல் 10,000/- வரை, பெட் ரோல் லிட்டர் ரூ 60/- சாதாரண உணவு விடுதியான சரவணபவனில் ஒரு ரெண்டு இட்லி ஒரு தோசை, காபி ரூ 80/- மதிய உணவு ரூ 60/- இரவு உணவு ரூ 80/- எனும்வகையில் ஒரு நாளைக்கு ரூ 220/-
வயிறு நிறையாத உணவுக்கு ஸ்டார் அந்தஸ்து ஏதும் அற்ற சாதாரண சரவண பவன் / உடுப்பி ஓட்டலுக்கே ஒரு மாதத்திற்கு பேச்சிலருக்கு ரூ 7000/- தேவைப்படுகிற மோசமான பொருளாதார சூழல்!
தான் சென்னையில் மெஸ்ஸில் வாழ்ந்துகொண்டு தன்னை படிக்கவைத்த பெற்றோர், குடும்பத்திற்கோ, வாங்கிய கல்விக் கடனைத் திருப்பிக்கட்டுவதற்கு அனுப்புவதற்குமாக ஒரு பேச்சிலருக்கு குறைந்தபட்சம் 20,000/- சென்னையில் வருமானம் இருந்தாக வேண்டும்.
திருமணமாகி, மனைவி, பள்ளி செல்லும் இரு குழந்தைகள், பெற்றோர் என்று குடும்பத்துடன் சென்னையில் 100சிசி இருசக்கர வாகனத்துடன் சாதாரண வீடு/பிளாட்டில் வசிக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் மாதசம்பளம் 25,000/- இருக்க வேண்டும்.
சொந்தமாக 700 சதுரஅடி வீடு ரெண்டு 10க்கு 10 ரூம், ஹால்,கிச்சன், கழிவறைகொண்ட மிகச்சாதாரணமான ஒரு ப்ளாட் வாங்கி வசிக்க வேண்டுமானால் ப்ளாட்டுக்கு ஒரு சதுர அடி ரூ 7000 என குறைந்தது ஐம்பதுலட்சம் விலை தரவேண்டும். கடன் வாங்கி 20 ஆண்டுகள் மாத தவணையாக புறாக்கூடு வீட்டுக்கு வீட்டுக்கடன் மட்டுமே மாதாமாதம் 30,000/- கட்டவேண்டிய அவலமான பொருளாதாரச்சூழல்!
முடை நாற்றம் நிறைந்த கூவமும், அடையாறும் பெருக்கெடுத்து நகர்முழுதும் ஓடும் குப்பைகள் நிறைந்த சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவழித்து புறாக்கூடு பிளாட்டாக வீடு வாங்குவது அவசியமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடப்பது இறைநம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி என்ற போதும் குடும்பமாய் வாழ்பவர்கள் வயதான பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களிலும் குடும்பத்தலைவன் சனிக்கு சனிக்கிழமை, சங்கடஹரசதுர்த்தி போன்ற நாட்களிலும், படிக்கும் குழந்தைகள் தஷிணாமூர்த்தி மற்றும் குருவுக்கு வியாழக்கிழமையிலும் வீட்டுத்தலைவி மகாலஷ்மி, சக்திக்கும் உகந்த செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதங்கள் இருக்கப்பழகிக்கொள்வது பொருளாதாரத்தை இந்து சமய ஆன்மீகத்தின் துணை கொண்டு பகுத்தறிவுடன் சமாளிக்க பேருதவியாய் இருக்கும்!
எல்லாவற்றுக்கும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநில அரசின் நிதி அமைச்சர் க.அன்பழகனும் அவர்களது முட்டாள்தனமான பெரும்பான்மை மக்களைப் பற்றிய அக்கறை இல்லாத பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட வரிவிதிப்புகளும் காரணம்!
இன்றைக்கு பெருவாரியான மத்திய தர சாமானிய மக்கள் உழைத்து ஈட்டிய சம்பளப்பணம்/பொருள் தத்தம் வீடு வந்து சேருமுன்பாக பல்முனை சேவை வரிகளால் சேதாரப்பட்டு போகும்விதமான ஆப்பிரிக்கநாடுகளை ஒத்த மோசமான கொடூர வரிவிதிப்பு பொருளாதார சூழல் இந்தியாவில் நிலவுகிறது!
பத்துகோடி, நூறுகோடி என்று தொழிலதிபர் போர்வையில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் 40% கமிஷனை அரசியல்வாதிக்கு வெட்டி வாங்கிவிட்டு பின்னர் ஒரு சுபயோக தினத்தில் இன்ஸால்வன்ஸி என்று மஞ்சக்கடுதாசி இன்னும் ஒரு 15% கமிஷன் வெட்டினால் கட்சி, ஆட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் மிடில்கிளாஸ் மக்களின் வங்கி டெபாசிட் பணத்தை சூறையாடுகிறார்கள்.
மிடில்கிளாஸ் மாதவன்கள் தங்களது அரிய தேர்தல் கடமையை உரிய சமயத்தில் தவறாமல் செய்வதன் இன்றியமையாத கடமையை உணராமல் டிவியில் தேர்தல் தினத்தன்று நேற்று நக்மா, குஷ்பூ,என்றும் இன்று நமீதா குத்தாட்ட நடிகை வகையாறாக்களின் மார்புக் க்ளிவேஜ்களின் க்ளோஸப் காட்சிகளில் சிக்கித் தவித்துப் பின்னொரு சமயத்தில் பொருளாதார சிக்கல்களிடையே மாட்டித்தவித்துக் பொருளாதார ரீதியில் க்ளோசாகிறார்கள்!
நம் தாத்தாக்கள் அரும்பாடுபட்டு கொள்ளைக்கார வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நம் அப்பாக்கள் அசட்டுத்தனத்தினால் அயோக்கிய அல்லக்கை கட்சி அரசியல்வாதிகளிடம் காவுதந்ததால் இந்தியாவின் வரிவிதிப்பு ஆப்பிரிக்க நாடுகளையும் விஞ்சும்விதத்தில் மிகமிக மோசமானதாக இருக்கிறது!
மிடில்கிளாஸ் மாதவன்களின் தேர்தல் ப்ராஸஸில் பங்கேற்காத குணாதிசயம், வோட்டுப் போடுவதில், அரசியல் கட்சிகளிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதிலான பாஸிவ்னஸ், அசட்டைத்தனம் இவை அரசியல் வாதிகளின் மிக மோசமான வரிவிதிப்பு, நிதி நிர்வாகத்திறமையின்மை இவைகளை தேர்தலுக்குப் பின்பாக வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களாக மிடில்கிளாஸ் மக்களை ஆக்குகிறது!
அடுத்துவருகின்ற மக்களவை / மாநில தேர்தல்களில் மிடில்கிளாஸ் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு, அரசு நிதி அமைச்சகங்களுக்கு, மாவட்ட கலெக்டர்களுக்கு இமெயில்களாக, குடியிருப்புச் சங்கங்கள் இதர சமூக அசோசியேஷன்கள் மூலம் பொது இடங்களில் பிட் நோட்டீஸ்களாக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சிகளின் வட்ட, மாவட்டங்களுக்கு எழுத்து பூர்வ கோரிக்கைகளாக தொடர்ச்சியாக அனுப்பி மிடில்கிளாஸ் மக்களின் அரசியல் பலத்தை உணர்த்தவும்.
மக்கள் தொகையில் 15% என்று சிறுபான்மையாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவதில் பெரும்பான்மையாக ஆண்டுகள் தோறும் தொடர்ச்சியாக இருக்கும் சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகளை ஏற்கின்ற அரசியல் கட்சிகளின் அரசுகள் ஒற்றுமையாக ஒருசேர்ந்து 50% வாக்காளர் பலத்துடன் இருக்கும் மிடில்கிளாஸ் மக்களின் நியாயமான பொருளாதார கோரிக்கைகளை மறுத்துவிடுமா?
மிடில் கிளாஸின் தனித்த ஒரு ஓட்டு அரசியல் கட்சிகளிடையே பயத்தையோ,பாதிப்பையோ ஏற்படுத்தாது! ஒருசேர்ந்து அமைப்பாக இன்றிலிருந்தே வரப்போகும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு உருப்படியான மிடில் கிளாஸ் மக்களுக்கான வரிவிதிப்புடனான ஒரு பொருளாதார கோரிக்கை லிஸ்டை அரசியல் கட்சிகள், அரசுகளுக்குத் தெரியப்படுத்துங்கள்!
அழுகிற பிள்ளை பசியாறும்!
மக்களுக்கு வரிவிதிப்பு நியாயமாகும்! தனி நபர் பொருளாதாரம் மேம்படுவதன் வாயிலாக தேசத்தின் பொருளாதாரம் மேம்படும்! நியாயமான வரிகள் ஏய்ப்பு செய்யப்படாமல் அரசுக்கும் செலுத்தப்படும்!
மிடில்கிளாஸ் வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படும் மோசமான கட்சிகளின் அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை காலம் இந்தியர்களின் ஒவ்வொருவர் தலைக்கும் இத்தனை ஆயிரம் கடன் வைத்திருக்கும் இந்திய அரசுகளைச் சகித்திருக்க வேண்டும்!
அடுத்த தேர்தல் வருமுன்பாக உடனடியாக ஆட்சியைத் தேரிவு செய்வதற்கு விழித்தெழுங்கள் மிடில் கிளாஸ் மாதவன்களே & மாதவிகளே!
மிடில்கிளாஸ் மக்களாகிய உங்கள் சேவை வரப்போகும் தேர்தல் காலங்களில் பாரத தேசத்திற்கு மிக அவசியம் தேவை!
அன்புடன்
ஹரிஹரன்