(181) இந்தியன் ரயில்வே - பெஸ்ட் ஆஃப் இந்தியா
இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தியாவை வடக்கில் ஹிமாச்சலில் ஆரம்பித்து - பஞ்சாப் பதன்கோட்டில் இருந்து தெற்காக சென்னைக்கு 2800 கிமீ தூரத்தை ஹரித்வார்-டில்லி வழியாக ரயிலில் 48 மணிநேரம் பயணித்தது தனி அனுபவம்.
ஐரோப்பாவின் மேற்கத்திய லண்டன் நகரிலிருந்து ஐரோப்பாவின் கிழக்கு முனை நகரமான இஸ்தான் புல்லிற்கு இடையே இருக்கும் தூரம் கிட்டத்தட 2700 கிமீ.
லண்டன்(இங்கிலாந்து) - பாரீஸ்(ப்ரான்ஸ்) 350 கிமீ
பாரீஸ் - ம்யூனிச்(ஜெர்மனி) 685 கிமீ
ம்யூனிச்- வியன்னா(ஆஸ்திரியா) 350கிமீ
வியன்னா -ப்யூடாபெஸ்ட்(ஹங்கேரி) 220கிமீ
ப்யூடாபெஸ்ட் - புசாரெஸ்ட்(ரொமானியா)650 கிமி
புசாரெஸ்ட்- இஸ்தான்புல்(துருக்கி) - 445 கிமீ
இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்கு ரயிலில் கிளம்பினால் மூன்று இரவுகள் ரயிலில் பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள இரண்டாம் வகுப்பில் ஒரு நபருக்கு 400 யூரோ கட்டணம் 400 x 55 = Rs. 22,000/-
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முதாவியிலிருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு இடையே இருக்கும் தூரம் 3739 கிமீ 4 நாட்கள் 96 மணி நேரம் பயணிக்க வேண்டும்
கட்டணம் குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 2900/-, மூன்றடுக்கு குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 1950/- தூங்கும் வசதி இரண்டாம் வகுப்பில் ரூ 690/-
இந்திய ரயில்வே சந்தேகமே இல்லாமல் க்ரேட் ஓவர் ஆல் பெர்பார்மர். (லாலுவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை)
எந்த நேரத்திலும் ஆறு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மேலும் கீழுமாய் டில்லி-சென்னைக்கு இடையே ஓடுகிறது!
டில்லி, சென்னை ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன்களில் வசூலிக்கும் காசுக்கு ஏற்ற அளவில் உணவுப் பண்டங்களின் தரம் இருக்கிறது.
டில்லி ரயில்வே கேண்டீனில் மண்சொப்புவில் (பாறை)இட்லிக்கு சாம்பார் வாங்கிச் சாப்பிட்டது டிபிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்! (மண் சொப்புவுக்கும் லாலுவுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு)
தமிழகத்தில் கன்னியாகுமரி, குஜராத் கட்சில் இருக்கும் Okha, இவை இந்தியா தேசத்தின் விளிம்பில் இருக்கும் ரயில் நிலையங்கள்!
ஊட்டி, சிம்லா ரெண்டு இடங்களில் மட்டும் குறுகிய ரயில்பாதை மலை ரயில் இருப்பதாக நம்மில் பலர் நினைப்பதைத் தாண்டி பஞ்சாப் பதான் கோட்டில் இருந்து ஹிமாச்சல் பிரதேஷ் ஜோஹீந்தர் நகருக்கு நேரோ கேஜ் பொம்மை மலை ரயில் ஓடுகிறது.
இந்திய ரயில்வேயின் முழு நெட்வொர்க்கையும் இந்த மேப்பில் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ரயில் நெட்வொர்க்கை விட மிக விஸ்தாரணமான நெட்வொர்க் இந்தியன் ரயில்வே நெட்வொர்க்.
வால்யூ பார் மணி இந்தியன் ரயில்வேயில் உத்திரவாதம்.
சதாப்தி ரயில்கள் வேகம் + வசதிகளில் மேம்பட்டிருக்கிறது.
ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவிக்கு 3739 கிமீ தூரம் ஓடும் நெடுந்தூர வாராந்திர ரயில். திருவனந்தபுரம் - கௌஹாத்தி 3300 கிமீதூரம் ஓடி தெற்கிலிருந்து கிழக்கை இணைக்கிறது.
இந்தியன் ரயில்வேயில் பல்வேறு தரங்களில் பயண வசதி ரயிலில் கிடைக்கிறது.
வரிசைப்படி மிகுந்த முதல் தரமான ரயில் சேவை கிடைப்பது:
முதலிடம்- ராஜதானி துரித ரயில்கள்
இரண்டாம் இடம்- சதாப்தி, ஜன-சதாப்தி துரித ரயில்கள்
மூன்றாம் இடம் -சம்பர்க்ராந்தி துரித ரயில்கள்-
நான்காவது இடம் கரீப் ரத்-ஏழைகளின் ரதம் துரித ரயில்கள்
ஐந்தாம் இடம் - இதர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்
இந்தியன் ரயில்வேயில் முன்னுரிமை தந்து அவசரமாக சில மாற்றங்கள் எடுத்துவரவேண்டும்:
1. தற்போது ரயில்களில் நடைமுறையில் இருக்கும் ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லெட் மாற்றப்பட்டே ஆகவேண்டும்.
இந்த ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட் மாறினாலே ரயில் நிலையங்களில் துர்நாற்றம், ஈக்கள், கொசுத்தொல்லை,பெருச்சாளிகள் தொல்லைகள் 80% குறைந்துவிடும்.
தற்போதைய தினசரி துப்புறவு,சானிடேசன் செலவுகளில் பெரும்பாலானதை அடுத்தகட்ட பயணிகளின் வசதிகளை மேம்படுத்தலாம்.
குறிப்பாக 100% ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கலாம்.
அதிகமான பயணிகள் வந்துபோகும் பிசியான ஸ்டேஷன்களில் கூடுதலாக நாற்றம் குறைந்த பல கழிப்பிடங்கள் ஏற்படுத்திப் பராமரிக்கலாம்.
2. பான்பராக் தயாரிப்பாளர்கள் ரயில்வே ஸ்டேஷன் சுத்தப்படுத்தும் செலவுகளில் 50% ஏற்கவேண்டும் மீதியை சிகரட் தயாரிப்பாளர்கள்+குளிர்பான தயாரிப்பாளர்கள் ஸ்பான்ஸர் செய்யவேண்டும்.
3. பயணிகளில் பான்பராக் போட்டு சகட்டுமேனிக்குத் துப்புபவர்களை அப்போதுதான் பயணிகள் ரயில் வந்து போன ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தின் தண்டவாளத்தை ஒருமணிநேரம் கட்டாயம் சுத்தப்படுத்தும் பொறுப்பைத் தரவேண்டும்.
இந்திய ரயில்களில் ரயில் நிலையங்களுக்குள்ளே பயணிப்பதை / இருப்பத்தைத் தவிர்த்து, இந்தியன் ரயில்வேயின் ரயில்களில் பயணிப்பது இணையற்றது.
இந்திய ரயில்வேயின் ரிசர்வேசனுக்கு இணையில்லை! திறமையாக, விரைந்து செயல்படும் மக்கள் உணரும் சேவைகளில் இந்திய ரயில்வேயின் இணைய முன்பதிவு / எங்கிருந்தும் எந்த ரயிலுக்கும் முன்பதிவு என்பது உலகத் தரமான விஷயம்.
மொத்த ஐரோப்பா ரயில் நெட்வொர்க்கைக் காட்டிலும் பரந்த கட்டமைப்பு, ஸ்டேஷன்கள், ரயில்கள் அதிகம் இருப்பது இந்தியரயில்வேயில். ஆன்லைனில் ரிசர்வேசன் செய்துகொள்ளலாம். உள்ளூர் முகவரி தந்தால் மூன்று நாட்களில் கொரியரில் அனுப்பிவிடுகிறர்கள். இல்லை இந்தியாவில் பயணத்தைத் துவங்கும் நாளில் டில்லி, மும்பாய், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சி போன்ற பெரிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தியா வந்ததும் கலெக்ட் செய்து கொள்ளலாம்!
தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் Pantry Car கல்யாண வீடு மாதிரி பரபரப்பா டீ, காபி,குளிர்பானம், இட்லி, வடை, பொங்கல், சாம்பார், மசால்தோசை, ப்ரட் சாண்ட்விச், மதிய மீல்ஸ், மாலையில் பக்கோடா, மெதுவடை, சிப்ஸ், இரவு சூப் , மீல்ஸ் என்று ரவுண்டு கட்டி விற்பனை செய்கிறார்கள். விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் நகரும் ரயிலில் கிடைக்கும் வசதிக்கும் , வெரைட்டிக்கும் சமாதானம் செய்துகொள்ளலாம்.
இந்திய ரயில்வேயின் டெலஸ்கோபிக் கட்டணமுறை இன்னொரு ஆச்சரியம். சென்னை to மதுரை 500கிமீ தூரத்திற்கு ரூ. 230 கட்டணம் சென்னை to ஜம்மு 2800 கிமீ தூரத்திற்கு ரூ 570 கட்டணம். ஒரே தேசமாக இந்திய யூனியனாக இருப்பதால் இந்தக் கட்டணமுறை சாத்தியம்.
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிப்பதிலே பெரிய மகிழ்ச்சி. பல்வேறு விதமான மக்களோடு 36 மணிநேரம் பயணிக்கும் கலகலப்பு நிறைந்த பெரிய வாய்ப்பு.
வீட்டில் பெரும்பாலானோர் தேர்வான ஏசி பெட்டியைத் தவிர்த்து வெகுஜன கலகலப்பான சூழலை அனுபவிக்க வேண்டி சாதாரண தூங்கும் வசதிப் பெட்டியை வற்புறுத்தியிருந்தேன். நான் சற்று பயந்தது ஜூன் மாத மத்தியபிரதேச, நாக்பூர், ஆந்திரா வெய்யில் உக்கிரத்தை எண்ணியே. தெய்வம் அருள் புரிந்தது. ஜான்ஸியில் பெய்ய ஆரம்பித்த மழை சென்னை வரும்வரை சூரியன் குளிர் மேகத்துகுள்ளேயே இருந்துகொண்டார். இயற்கை அன்னையே மொத்த ரயிலுக்கும் குளிர்சாதனம் செய்து தந்தது.
90களில் இருந்த ரயில் பெட்டிகளை விட புதிய இரண்டாம்வகுப்பு பெட்டிகளில் மினரல்வாட்டல் ஹோல்டர், யுடிலிடி நெட், முகம் பார்க்கும் கண்ணாடி என்று கூடுதல் கொஞ்சம் வசதி செய்து தந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக அனைத்து பெட்டிகளையும் கரப்பு-பூச்சித்தொல்லையிலிருந்து பெஸ்ட் கண்ட்ரோல் சிலமாதங்களுக்கு ஒரு முறை செய்வது தரும் பலனைக் கொஞ்சம் உணரமுடிகிறது.
இடார்சி தாண்டி விந்திய மலைக்குடைவுகள் வாயிலாக பயணிக்கிறபோது சட்டென்று இருட்டி வெளிச்சம் மீண்டு வருவது மும்பை தடத்தில் லோனாவாலா-புனே ரயில்வே டன்னல்களை நினைவூட்டுகிறது. அப்பர் பர்த்தில் பகலில் ஏறிப் படுத்துக்கொண்டு சடசடசட என்று பாலங்களில் இசை எழுப்பிய படி ரயில் செல்வதை ரசித்தபடி பயணிப்பது அந்த ரயில் அனுபவத்தை நினைவுகளில் பதியவைக்கிறது.
இந்திய ரயில்வேயின் எலக்டிரிக் டிராக்ஷன் (மின்மயமான தடங்கள்) பிரமிப்பு இன்னும் இருக்கிறது. விமானம் தவிர்த்த இந்திய பொது மக்கள் போக்குவரத்தில் சகாயமான விலையில் 125 கிமீ வேகத்தில் தொடர்ந்து செல்ல முடிவது சூப்பர் பாஸ்ட் ரயில்களால் தான்.
புதுடில்லியிலிருந்து சென்னைக்கான 2200 கிமீ தூரத்தை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 ஊர்களில் மட்டும் நின்று செல்கிறது.
இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ஒரே பெரிய குறை ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட். மக்களுடன் நேரடியான தொடர்பு இருக்கும் இந்திய அரசுத்துறைகளில் சிறப்பான நிர்வாகத்திறன் இருப்பது முதலிடம் தபால் துறைக்கு இரண்டாவது இடம் ரயில்வே என்பது எனது எண்ணம்.
அன்புடன்,
ஹரிஹரன்