Wednesday, June 28, 2006

எந்தை உண்ண மறந்த ஆனியன் ரவாக்களும், ஸ்பெஷல் மசாலாக்களும்

ஜூன் மாதம் அப்பாக்கள் தினம் வருகின்ற மாதம். எனது தந்தை பற்றிப் பதிய விழைகிறேன்.

எந்தை 39ஆண்டுகள் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார், நான் ஏழாவது படிக்கும் போதுதான் உள்ளூர் பள்ளிக்கு மாற்றலாகி தினசரி அப்பாவைப் பார்க்க முடிந்தது. அப்பா "ரிசர்வ்டு" டைப், அப்பாவுக்கு எதற்காகவும் ரொம்ப சந்தோஷப்படத் தெரியாது, எதற்கும் அதிகம் வருத்தமும் அடைய மாட்டார்.

பள்ளி நாட்களில் நான் ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் இருப்பேன். +2 வரையில் அப்பாவுடன் மிகக் குறைவாகத்தான் பேசியிருக்கிறேன். பெரும்பாலும் அம்மா ரூட்டில்தான் அப்பாவை அணுகியிருக்கிறேன்.

அப்பாவுக்கு சிலசமயம் இயலாமையில் கோபம் வரும். தாத்தா பெரிய அளவில் குடும்ப பாரத்தை சுமந்ததில்லை. பாட்டிதான் சிரமங்களுடன் மூத்தவரான அப்பாவை வறட்டி தட்டி, விற்று என்று காந்தி கிராமத்தில் "டீச்சர் டிரைனிங் டிப்ளோமா" படிக்க வைத்தார், அப்பாவும் பழைய வேஷ்டியைச் சட்டையாகத் தைத்து அணிந்து,படித்து தீவிர பிராமண எதிர்ப்பு இருந்த காலத்தில் 1955-56 ல் மிக்கச் சிரமப்பட்டு தமிழ்நாடு பிற்படுத்தப்ப்ட்டோர் நலத்துறையில் கள்ளர் சீரமைப்பு ஸ்கூல் வாத்தியார் ஆனார்.

அப்பாவுக்கு வரிசையாய்,நிறைய மிரட்டுமளவிற்குப் பொறுப்புகள். தன் தம்பிகளை வழிநடத்தியும், தனக்குக் கிட்டாத கல்லூரி உயர் டிகிரிப் படிப்பு படிக்கவைத்தார். தன் தமக்கையின் கணவர் பொறுப்பில்லாமையால், அவர்களது ஐந்து குழந்தைகளும் பள்ளியிறுதிப் படிப்புவரை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் கூடுதலாக ஏறியது.

இதற்குள் 1986 வந்துவிட நான் +2, தம்பி 10வது முடித்துவிட இருவரும் விடுதியில் தங்கிப் படிக்க என ஆனது. திருச்சியில் விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் விடுதி,கல்லூரிக் கட்டணம் என பல காரணங்கள், என்னை அப்பாவுடன் நேரடியாக அணுகிப் பழக பல சந்தர்ப்பங்களைத் தந்தன.

அப்பா என்னை, 1986-ல் பெரிய பச்சைக்கலர் தகர டிரங்க் பெட்டியோடு கல்லூரியில் சேர்த்த்துவிட்டு,விடுதிஅறையில் விட்டுவிட்டு போடிக்குத் திரும்ப பேருந்து பிடிக்கக் கிளம்பிச்சென்று விட்டார். மனம் ஏதோ மாதிரி பிசைய குடுகுடுன்னு ஓட்டமா ஓடி பஸ் ஸ்டாஃப் சென்றால், அப்பா பஸ்பிடித்துச் சென்று விட்டிருந்தார்.

விடுதியில் வாழ்க்கையே வேறு! என் மாதிரி டிரங்க் பெட்டி ஆசாமிகளை ரொம்ப ரஸித்து எதிர்பார்த்தது இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
விடுதியில் சேரும் போது நான் கடுமையான வெஜிடேரியன் எனவே, மெஸ்ஸில் எனது கோட்டா முட்டைகளை தானமளித்து இரண்டு தீவிர ஆதரவாளர்களைப் பெற்றேன்.

அப்பாவுக்கு வெளியூர் செல்ல "ஜெயா ஸ்டோர்ஸ்" ம்ஞ்சள் பை போதும்.
ஆனால் விடுதியில் தங்கிப்படிக்கும் என்னையும் அம்மாதிரி எதிர்பார்க்க, எப்படி டிரங்க் பெட்டி, ரெக்ஸின் பேக்கிலிருந்து எவால்வ் ஆகி நாகரீகமடைவது என்று யோசித்தேன் ...

அப்பாவிடம் அடுத்த டெர்முக்கு ஃபீஸ் அனுப்பவும் என்றவுடன் எனது வங்கிக் கணக்குக்கு முதல் டெர்ம் தொகையையே அனுப்பிவைத்தார். நான் படித்தது "செல்ஃப் பைனான்ஸ்" கல்லூரி. Even செமெஸ்டர்ஸூக்கு ஃபீஸ் Odd செமெஸ்டரைவிட 40% குறைவு. முதல் செமெஸ்டரை விட இரண்டாவதற்கு 900 ரூபாய் வித்தியாசம். 1986களில் என் மாதிரி 12ஆம் வகுப்பு வரை "பாக்கட் மணி"பற்றி அறிந்திராதவனுக்கு 900ரூபாய் காமதேனுவே கைக்குக்கிட்டி, கற்பகவிருட்ஷ நிழல் கிடைத்து விட்டதாக பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

ஊர் போகும் வழியில் திருச்சி மெயின் கார்டு கேட்டில் இருந்த விட்கோ-ல் விஐபி பெட்டி வாங்கிக் கொண்டேன். அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிட்டு அப்பா கேட்டால் நண்பனுடையது என்று சொல்லச் சொன்னேன். அன்றிரவு என்னிடம் அப்பா, "நண்பனிடம்" இனி பெட்டியெல்லாம் இரவல் வாங்கக்கூடாது என்றார். அது தான் இனி தேவை இல்லையே. அப்பாவிடம் சரி என்றேன்.


எனக்கு அப்பாவிடம் ரொம்பப் பிடித்தது எதற்கும் என்னை, பில் காட்டு, ரெசிப்ட் தா, என்று அலட்டி வதைத்ததில்லை. என்னை முழுமையாக நம்பினார். படிப்படியாக, ஒவ்வொரு செமெஸ்டராக, யாஷிஹா கேமெரா, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஃபோட்டோக்குரோமாட்டிக் ஸ்பெக்ஸ் என எனது அவுட்லுக் எவால்வ் ஆனது.

அப்பா வேலை செய்த ஊர்கள் அன்னஞ்சி, ஏத்தக்கோவில், குள்ளப்புரம், கம்பம், கூடலூர் எல்லாம் போடியிலிருந்து வெறும் 30 கி.மீ தூரத்திற்குள்தான். என்றாலும் அகண்ட கூட்டுக்குடும்பத்தின் பணத்தேவைக்காக, அங்கேயே தங்கி வேலைபார்த்து, கரியடுப்பில் தானே சமைத்து உண்டு வாழ்ந்து, இரு வாரங்களுக்கு ஒருமுறை வருவார்.

அப்பா சில நேரங்களில் மெல்லிய விரக்தியோடு சொல்லக் கேட்டிருக்கிறேன். "சேர்ந்து வெளியில் சென்றால் செலவு செய்ய இயலாது என்பதற்காகவே, சொல்லிக்கொள்ளும்படி நட்பு கூட இல்லாது போனது தனக்கு என்று".

தனது இளமையான காலங்களிருந்து 50 வயது வரை தனித்தோ, உறவினருடனோ வெளியில் ஹோட்டல்களில் உண்ணச் சென்றால் இரு இட்லி, ஒரு சாதா தோசையோடு முடித்துக் கொள்வார்... ஆனியன் ரவா தோசையும், ஸ்பெஷல் மசாலா தோசைகளையும், அப்பாவால் அவரது வயதில் சுவைக்க முடிந்ததில்லை.

அப்பா அனைவரையும் போல் அந்தக் காலத்தில் ஆனியன் ரவாவையும், ஸ்பெஷல் மசாலாவையும் உண்பதைக் கருத்தில் கொண்டிருந்தால் ஒரு பத்துப்பேர் (நான் உட்பட) வாழ்ந்து வரும் உலகளாவிய வளமான வாழ்வு இல்லை என்றாகியிருக்கும்.

எந்தை உண்ண மறந்த ஆனியன் ரவாக்களும், ஸ்பெஷல் மசாலாக்களும் மற்றும் லயிக்க மறந்த லாகிரி வஸ்துக்களும், எந்தை உணர்ந்திருந்த அவ்வைப் பாட்டியின் மூதுரையான் "கற்கை நன்றே..கற்கை நன்றே.. பிச்சைப்புகினும் கற்கை நன்றே"என்பதும் எமை உருப்படியாக உருவாக்கின!

தந்தையர் தியாகம் தலைமுறை வளர்க்கும்! சத்தியமான உண்மை!


அன்புடன்,


ஹரிஹரன்.

6 comments:

Hariharan # 26491540 said...

துளசியக்காவின் பின்னூட்டம்

அன்புள்ள ஹரிஹரன்,
'அப்பா' படித்தேன். சூப்பர். அவர் செய்த தியாகம்தான் இன்னைக்குப் பத்து உயிரைக்
காப்பாத்தி இருக்கு.

ஆமாம், பின்னூட்டப்பெட்டி வைக்கலையா? ஏன்?

என்ரும் அன்புடன்,
துளசி

Hariharan # 26491540 said...

//'அப்பா' படித்தேன். சூப்பர். அவர் செய்த தியாகம்தான் இன்னைக்குப் பத்து உயிரைக்
காப்பாத்தி இருக்கு.//

வாங்க துளசியக்கா, அப்பா ஒருத்தரோட தியாகம் பத்துப் பேரை நல்லா வளமான வாழ்க்கை வாழ வகை செய்திருக்கிறது.

//ஆமாம், பின்னூட்டப்பெட்டி வைக்கலையா? ஏன்?//

ப்ளாக்கர் தகறாறு. சரி செய்துவிட்டேன்.

கோவி.கண்ணன் said...

மிகப்பெரிய குடும்ப பொறுப்புகள் தான் அன்றைய கால அப்பாக்கள் எல்லோரையும் குழந்தைகளுமிருந்து தள்ளி வைத்திருந்தது. நல்ல நினைவுகளுடன் எழுதுகிறீர்கள் நன்றாக இருக்கிறது

செந்தழல் ரவி said...

இதுபோன்ற உன்மை நிகழ்ச்சிகள் தான் சிலசமயம் திரைப்படமாக வந்திடுது...

தவமாய் தவமிருந்து பார்த்தீங்களா ? அப்போது உங்கள் உணர்ச்சி என்ன ?

Hariharan # 26491540 said...

//மிகப்பெரிய குடும்ப பொறுப்புகள் தான் அன்றைய கால அப்பாக்கள் எல்லோரையும் குழந்தைகளுமிருந்து தள்ளி வைத்திருந்தது.//

வாங்க கோவி கண்னன். உண்மை. அதுவே அவர்களை குறைவான நகைச் சுவையோடும், கூடுதலாகக் கோபமானவர்களாகவும்
வெளிக்காட்ட வைத்திருந்திருக்கிறது.


// நல்ல நினைவுகளுடன் எழுதுகிறீர்கள் நன்றாக இருக்கிறது//

சில நினைவுகள் மிக்க உணர்வுபூர்வமானவை. மறக்கக் கூடாததல்லவா!

Hariharan # 26491540 said...

//இதுபோன்ற உன்மை நிகழ்ச்சிகள் தான் சிலசமயம் திரைப்படமாக வந்திடுது...//

இன்னும் நிறைய வரணும் ரவி.

//தவமாய் தவமிருந்து பார்த்தீங்களா ? அப்போது உங்கள் உணர்ச்சி என்ன?//

நானறிந்து தந்தையின் அருமையைச் சொல்லி வந்த ஒரே படம். முழுப்படம் பார்க்கும் துணிவு இல்லை.