Thursday, February 28, 2008

(189) சுஜாதா எனும் வரலாற்று மைல்கல்!

சுஜாதா காலமானார் என்ற செய்தி அறிந்தவுடன் என் மனம் கனத்து வெறுமையானது.

சுஜாதாவின் பாசாங்கு குறைவான சாமானியனுக்குப் புரிகிற மாதிரியான நாடகத்தனம் இல்லாத அவரது தமிழ் எழுத்து அவருடன் வாசகனுக்கு ஒரு நெருங்கிய மானசீகமான நட்பை, உறவை, இணைப்பை ஏற்படுத்துகிறது.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போன்ற அனுபவப்பகிர்வு எழுத்து அவரை ஓரளவுக்கு ஒவ்வொரு வாசகனும் தனிப்பட்டு அறிந்து கொண்ட நிறைவைத் தந்த உபயோகமான வழிகாட்டுதல் எழுத்து.

சுஜாதாவின் எழுத்து இரண்டு தலைமுறையையும் தாண்டி எளிமையான வெகுஜன சாமனியர்களை விரைந்து கவர்ந்திழுத்தது.

பெரும்பாலும் பொறியியல் படிப்பு, பெரிய நிறுவனத்தில் நல்ல உயர்ந்த வேலை என்று வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் முழுமையான தமிழில் எழுதுவது, பேசுவதை தவிர்க்கும் நமது சமூகத்தில் பொறியாளர்,விஞ்ஞானி, பெரிய நிறுவனத்தின் டைரக்டர் என்று வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் எளிமையாக தமிழில் அளவளாவி, தன் தமிழ் எழுத்துக்களால் வெகுஜனத்தைக் கட்டிப்போட்ட திரு. சுஜாதாவின் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது.

2000-ல் இங்கே குவைத்தில் "தமிழ் பொறியாளர்கள் அமைப்பு"(Tamil Engineers Forum-TEF) துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழ் பொறியாளர்கள் அமைப்பு விழாவில் தமிழில் பேசாவிட்டால் சாப்பாடு கிடைக்காது என்று மிக எளிமையாக பேச்சைத் துவங்கினார். விழா முடிந்து இரவு உணவின் போது கையில் உணவுத்தட்டை ஏந்தியபடி மிக சகஜமாக அளவளாவிய எளிமையை வெளிப்படுத்திய அனுபவத்தை நினைவு கூர்கிறேன்.


சுஜாதா அவரது அறிவியல், கணினி விஞ்ஞானம், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொது அறிவு என்று தமிழில் அவரால் எழுத முடிந்த அவரது பன்முகத் திறன் அவருக்கு வெகுஜன சாமானிய மக்களால் தனித்து தனக்கென்று சாம்ராஜ்ஜியம் அமைக்க முடிந்ததற்கு காரணம்.

சுஜாதாவின் எழுத்துக்கு இருந்த வரவேற்பை அவர் வீட்டு சலவைத்துணிக் கணக்கை வாராந்திர பத்திரிக்கை வெளியிட்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படித் தனக்கு இருந்த வெகுஜன ஆதரவை உணர்ந்து பொறுப்பாக அவரது தமிழ் எழுத்தில் கணிணி, அறிவியல் பதங்கள் என்று தமிழை செம்மொழி ஆக்கியதில் தனது பணியைச் செய்தவர்.

சுஜாதா மிக எளிமையாக்கிய திருக்குறளை படிக்கும் போது சுஜாதா பொறியாளராக, விஞ்ஞானியாக தமிழை மீட்டெடுத்து மீண்டும் வெகுஜன புழக்கத்தில் எடுத்துவருவதில் அவருக்கான பங்களிப்பை செவ்வனே செய்தவர்.

சுஜாதாவை பாகுபாடு இல்லாமல் வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு நன்கு அறியப்பட்ட தமிழ் ஆசானாகவே உணர்கிறேன். பரந்துபட்டு தனக்குக்கிடைத்த வாழ்க்கையினை கட்டுரைகளாக்கிய அனுபவப்பகிர்வின் மூலம் வெகுஜனங்களுக்குக் கிடைத்த வழிகாட்டியாகவும் உணர்கிறேன்.

ஒரு தமிழ் ஆசானை, ஒரு வழிகாட்டியை இழந்த இரட்டை சோகம்!

சுஜாதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளன் தன் மறைவால் இத்தனைக்கு இழப்பாக உணரவைத்திருக்கிறான்!

சுஜாதா ஒரு வரலாற்று மைல்கல்.


வெறுமையை உணரும் சுஜாதாவின் வாசகனாக,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

42360
டெஸ்ட் மெசேஜ்!

பிரேம்ஜி said...

அவரது ஆன்மா சாந்தியடைவதாக

மங்களூர் சிவா said...

எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைத்து நின்று அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெற பிரார்திக்கிறேன்

enRenRum-anbudan.BALA said...

//
ஒரு தமிழ் ஆசானை, ஒரு வழிகாட்டியை இழந்த இரட்டை சோகம்!

சுஜாதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளன் தன் மறைவால் இத்தனைக்கு இழப்பாக உணரவைத்திருக்கிறான்!

சுஜாதா ஒரு வரலாற்று மைல்கல்.


வெறுமையை உணரும் சுஜாதாவின் வாசகனாக,

ஹரிஹரன்
//

Many of his readers feel the same way and that is his Greatness !!