Thursday, September 13, 2007

(174) ஹரிஹரனின் பார்வையில் தலைநகரம் டில்லி

டெல்லியும் மொகலாயத்தனமான ஆட்சிகளும் பிரிக்கமுடியாத வரலாறு என்பது இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பது நேரடியாகக் கடந்த ஜூன் மாதம் நேரடியாக உணர்ந்தேன்.

டெல்லியின் இந்திரா காந்தி பன்னா(ட்டு)டை விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் இந்த மொகலாயர்கள் கதை நினைவுக்கு வந்தது.

நெறியற்று, மக்களுக்கு பயனற்ற வகையில் அரசாட்சி செய்த முகலாய அரச தந்தை ஷஜஹான் தனது சாகும் தருவாயில் தன் மகனிடம் எனக்கு நீ மக்களிடையே நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்று தன் மகன் ஔரங்கசீப்பிடம் கேட்டுக்கொள்ள ஔரங்கசீஃப் நடத்திய கொடுங்கோலாட்சியைக் கண்டு பீதியும் துயரமுற்ற மக்கள் ஷஜகான் எவ்வளவோ பரவாயில்லை இந்த கொடுங்கோலன் ஔரங்கசீப்போடு ஒப்பிடுகையில் என்றனர்.


இந்தியா வரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் இந்தியாவில் சுற்றுலா செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், ஹிமாச்சல், மற்றும் இதர இமயமலைப் பிரதேசங்களான உத்தராஞ்சல் என வருவோர் அனைவருக்கும் பிரதான இந்திய நுழைவு வாயில் இந்த இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்! இந்தியாவுக்கு தேச அவமானமாக மிக மிக மட்டமான கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன் ஔரங்கசீஃப் கொடுந்தொல்லையாகி சென்னையை ஷஜகான் பரவாயில்லையே என உயர்த்திக் காட்டியது எனக்கு!

ஆகஸ்ட் 1991க்கு அப்புறம் டில்லிக்கு ஜூன் 2007ல் தான் வருகிறேன். 91ல் தனியாக உடன்பணி செய்த நண்பனுடன். 2007 ஆறுபேர் கொண்ட மூன்று தலைமுறை கொண்ட பெருங்கூட்டத்துடன் :-)

கால அவகாசமின்மையால் நாங்கள் நேரடியாக குவைத்திலிருந்து டெல்லிக்கும், என் வயதான பெற்றோரை சென்னையில் இருந்து டெல்லிக்கு தனியாக உள்நாட்டு விமானத்தில் வரும்படி செய்து டெல்லியின் விமானநிலையத்திலே சந்தித்துக் கொள்ளும்படியாக எபக்டிவாக கோ ஆட்டினேட் செய்ய டெக்னாலஜி(மொபைல்) உதவியது.

மொழிப்போர் தியாகியாகி ஹிந்தியை நான் எதிர்க்காமல் அரைகுறையாக சிவயோகம் சாரிடம் ஹிந்தி ப்ரவேஸிகா வரையில் பிரைவேட்டாகப் படித்துத் தெரிந்து கொண்டது வெத்துவேட்டாகாமல் டாக்ஸி டிரைவரிடம், உள்ளூர் வணிகர்களிடம் பேசிப் பழகி குறைவாக ஏமாற உதவியது.

ஒரு சொட்டு ஹிந்தி தெரியாமல் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக எனது பெற்றோர் அவ்வப்போது அரிதாரம் பூசாத அவதாரம் எடுத்ததைப் பார்க்கும் போது தமிழ்நாட்டுக்கு ஆஸ்கர் தந்து கட்டுப்படியாகாது என்பதால் தான் தரப்படவில்லை என்று புரிந்தது.

என் தந்தை ஒருபடி மேல் சென்று சரளமான முழுத் தமிழிலே ஹிந்திக்காரனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்லி டெல்லியின் ஹிந்திக்காரர்களுக்கு தேசத்தின் மொழிக்கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை இவற்றை அடிக்கடி நினைவுபடுத்தும்படி கிலி ஏற்படுத்தினார்!

புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனுக்குப் "புது" டில்லின்னு தைரியமாகப் பேர் வைத்தவனைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். புதுப் புது குப்பைகள் நிறைந்த இடத்தில் இருக்கும் ஸ்டேஷன் என்பதால் அப்பெயர் என விளங்கிக் கொண்டேன்!

இந்தியத் தலைநகரிலிருக்கும் தேசிய அவமானம் புது மற்றும் பழைய டில்லி ஸ்டேஷன்கள் இரண்டும்! நிஜாமுதீன் ஸ்டேஷன் போகும் பாக்கியம் கிட்டவில்லை இந்தமுறை.

LNG எரிபொருளாக பொதுமக்கள் போக்குவரத்துவாகனங்களில் பேருந்து, டாக்ஸி,ஆட்டோவில் பயன்படுத்தப்படுவதால் சென்னையை விட வாகனப் புகையால் கண் எரிச்சல் பரவாயில்லை. டெல்லி போக்குவரத்துக்கழக, தனியார் பேருந்துகள் டிபிக்கல் நார்த் இண்டியன் தரம். ஒருசில தாழ்தளப் பேருந்துகள் பரவாயில்லை.

டெல்லிக்காரர்கள் டிராபிக் லைட்டை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். கனாட் பிளேசிலேயே Might is Right என்பதே டிராபிக் விதியாகக் காணப்பெற்றேன்.

தலைநகர் டெல்லியின் ஒரே போக்குவரத்து சிறப்பு மஞ்சள் லைன், நீல லைன், சிவப்பு லைன் என்று ஓடும் டெல்லியின் நவீன மெட்ரோ ரயில் நெட்வொர்க்! அதிலும் மஞ்சள் லைன் நீல லைன் என இரண்டு மெட்ரோ லைன் சந்திக்கும் ராஜீவ் சௌக் (கன்னாட் ப்ளேஸ்) மெட் ரோ ஸ்டேஷன் அரசியல்வாதிகள் மனதுவைத்து நிதிஒதுக்கி, திட்டம்தீட்டி செல்படுத்தினால் நவீன இந்தியா எப்படி சிங்காரமாக மாறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. குப்பை இல்லாத, பிச்சைக்காரர் இல்லாத, பான்பராக் எச்சில் இல்லாத அதி சுத்தமான பளிச் ரயில் நிலையங்கள் டெல்லி மெட்ரோ நிலையங்கள் என்பதற்காகப் பாரட்ட வேண்டும்!

விமானநிலையத்துடன் மஞ்சள் லைன், மற்றும் நீல லைன் இணைக்கப்பட்டு 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக நடக்கும் மெட்ரோ ரயில் இரண்டாம் நிலை விரிவாக்கம் டெல்லியை போக்குவரத்தில் ஓரளவுக்கு இன்னும் சிறப்புடையதாக்கும்.

வரலாற்று டெல்லி மொத்த நகரமுமே குப்பை கூளங்கள் நிறைந்த மெகா சைஸ் மியூசியமாக இருக்கிறது! ஜூன் மாத வெயிலில் டெல்லியின் வீதிகளில் வலம் வர ஒரு கொடுப்பினை வேண்டும். எனக்கு நிறையவே இருந்தது அந்தக் குடுப்பினை!

நம்மூர் சித்திரைத் திருவிழாவில் அக்கினிக் குண்டம் இறங்க பயப்படுபவன் டெல்லியின் பல ஸ்தலங்களில் காலணியைக் கழற்றி வைத்துவிட்டு மதிய வெயிலை உள்வாங்கிய கிரானைட், மார்பிள் கற்களில் உரிந்து போன வெப்பத்தடுப்புப் பூச்சால் பூக்குழி இறங்கிய அனுபவமும் பெற்றேன்.

கால்காஜி தாமரைக் கோவிலில் மதிய 2 மணிக்கு ஓஹோய்.. ஏ க்யா ஹை என்று வெயில் கொளுத்தும் படிகளில் ஸ்டெப் டான்ஸாடியபடியே "பஹாய் பாரம்பரிய" வழிபாட்டு அரங்கின் வழிபாட்டு அரங்கத்தின் பெஞ்சில் வெந்து போன நூடுல்ஸாக டெல்லி வெயில் தாக்கத்தின மனதுக்குள் அமைதியாக நொந்தபடி அமர்ந்து வந்தது எக்ஸ்ட்ரீம்லி "ஹாட்& பர்ன்டு" அனுபவம்!

மாலையில் கைலாஷ் கிழக்கில் இருக்கும் இஸ்கான் கோவிலின் மாலை நேர ஆரத்தி ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டங்கள் மற்றும் உள்ளரங்கு காட்சி அமைப்பு ஸ்பெஷல் எபக்ட் காட்சிகள் பார்வையிடல் ஒரு சிறப்பான அனுபவம்.

தென்னிந்தியக் கோவில்கள் அதன் கருங்கல் சிற்பங்கள் பலநூறு ஆயிரம் வருடங்கள் வெய்யில் மழை தாங்கி நிலைத்து இன்றளவில் கோலோச்சுவதும் அதன் வேத பாரம்பரிய ஸ்தபதி சாஸ்திர ஆர்க்கிடெக்சுரல் எக்ஸலன்ஸின் பெரும் அருமையை நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

நவம்பர் 2005ல் திறக்கப்பட்ட அக் ஷர்தாம் கோவில் கலைவளாகத்தில் ஜூன் 2007ல் இரண்டாண்டுகளுக்குள்ளாக பிரதான கோவிலைச் சுற்றிய நீர்நிலையில் அமைக்கப்பட்ட கோமுகங்கள் நீக்கப்பட்டும் நீர்நிலையில் மராமத்து வேலை, வெளிப்பிரஹாரத்தில் இருக்கும் மணற்பாறையில் வடிக்கப்பட்ட பிரதான யானை சிற்பங்கள் வெடித்தும், கீறல் விழுந்தும் என இரண்டே ஆண்டுகளுக்குள் 21ம் நூற்றாண்டு டெக்னாலஜி எட்டம்/பத்தாம் நூற்றாண்டு பண்டைய பாரதத்தின் வேத பாரம்பரியமான ஸ்தபதி சாஸ்திரம் கொண்டு நிறுவப்பட்ட காஞ்சி, மதுரை,மாமல்லபுரம் சிற்ப,கட்டிடக்கலை நுட்பத்திடம் பகிரங்கமாகத் தோற்றுப் போயிருக்கிறது.

என்ற போதும் பாரதப் பாரம்பரிய கட்டிட, சிற்பக்கலையை மீண்டும் வெளியே உணர்த்த அக்ஷர்தாம் கோவில் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வெயில் விழாத கோவில் உட்புறத்திலிருக்கும் பளிங்குக்கல் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதம். நுணுக்கமான சிற்பவேலை அதிலும் சீலிங் மார்பிள் கார்விங் நிஜமாக வாய்பிளக்க வைக்கிறது!

எண்டெர்டெயின்மெண்ட் தீம்பார்க் தொழில் நுட்பம் மற்றும் ரொபாட்டிக்ஸ் நவீன பொம்மலாட்ட உத்தியை பாரத பாரம்பரியப் பண்டைக்காலத்தையும் சுவாமி நாரயண் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்த அமர்க்களமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.


வெளியே அடிக்கும் வெயிலுக்கு மிக இதமாக குளிர்சாதன அக்ஷர்தாம் ஐ மேக்ஸ் பெருந்திரை ஸ்பெஷல் எபக்ட் தியேட்டரில் "நீல்கண்ட்" சுவாமி நாராயணனாவது பற்றிய 45 நிமிடப் படம் சிறப்பான தொழில் நுட்பத்தில் இமயமலைகளின் பிரம்மாண்ட கேமரா கோணங்களுடன் கண்ணுக்கும், மனதுக்கும் இதம்!

கூவம் சென்னைக்கு, செங்கோட்டை, அக்ஷர்தாம் வளாகங்களின் பின்னே ஓடும் யமுனை டெல்லிக் கூவம்! சைதாப்பேட்டைக் கூவம் ஆற்று மறைமலை அடிகள் பாலத்தை மூக்கை மறைக்காமல் நடக்கும் சென்னைவாசிக்கு டெல்லி யமுனை தெள்ளிய நதியாகவும் தெரியலாம்! இந்த ஆற்றைச் சாக்கடை ஆக்குவதில் சென்னை ஔரங்கசீஃப்பாகி டெல்லியை ஷஜகான் ஆக்கிகிறது!

செங்கோட்டையைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஆஜ்தக் டிவிக்காக உலக புராதான சின்னங்கள் பட்டியலில் செங்கோட்டை இடம்பெற்றதை ஒட்டி செங்கோட்டை இந்தியாவின் பெருமை என்று என்னைக் கருத்து தெரிவிக்கச் சொன்னார் அந்த நிருபர் பெண்மணி. நான் எனது எண்ணங்கள் அப்படி இல்லை. செங்கோட்டையை இந்தியர்கள் அடிமையாக்கப்பட்ட, வேதனையான கடந்த காலத்தின் எச்சமாகவே என்னால் அடையாளம் காண முடிகிறது. இந்தியனாய் செங்கோட்டையை இந்தியாவின் பெருமையாகவெல்லாம் கருத முடியவில்லை என்றேன். அடுத்த ஆளைப் பார்த்து தனக்கு உவப்பான கருத்தைச் சேகரிக்கச் சென்றுவிட்டார் அந்த பெண் நிருபர்!


கன்னாட் பிளேஸூம், சாந்திபாத்தும் பன்னாட்டு வங்கிகள், அலுவலகங்கள், தூதரகங்கள் என இருப்பதால் புதுடெல்லியாக பளபளப்போடு இருப்பதை ஆர்கேபுரம் மலைமந்திர் முருகனைக் காணப் பயணித்தபோது பார்க்க, உணர முடிந்தது.

மலைமந்திர் முருகப்பெருமான் வெயில் கொடுமை குறைய அருள் புரிந்தார் என்பதை படியேறி மேலே செல்லு முன்பாக கீழே இடும்பன் சன்னதியில் தோகை விரித்தாடி மயில் சொல்லியது. அன்று மாலை மழை பெய்தது டெல்லியில்.

மலைமந்திர் முருகன் கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் குண்டுமல்லிகை கண்டு மகிழ்ந்தவாறே தமிழில் பேரம் பேசி வாங்க வாய்ப்பு என்பதால் என் தாயார்க்குக் கூடுதல் மகிழ்ச்சி (பேரம் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம்)

கன்னாட்ப்ளேஸ் ஹனுமான் கோவிலுக்கு டெல்லிவந்த செவ்வாய்க் கிழமை அன்றே சென்றதைத் தவிர்த்திருக்கலாமோ எனும் அளவுக்கு மிகநெரிசலாய் இருந்தது.

கன்னாட்ப்ளேசில் சீக்கியர் வழிபாட்டுத்தலமான பங்ளாசாகேப் குருத்வாரா சென்றபோது ஏழடி உயரத்திற்கு வாளும், வேல்கம்புமாய் பிரதான கோவில் வாசலில் காவல் இருக்கும் சீக்கியர் சரித்திர காலத்திற்கு இட்டுச்செல்ல ஸ்பார்க்கினார். பக்தர்கள் நடக்கும் பாதையை ஒரு வேண்டுதலாகச் சுத்தம் செய்யும் சீக்கியர்கள், பக்தர்கள் தாகத்திற்கு தண்ணீர்தரும் சீக்கியர்கள் என்று வித்தியாசமான அனுபவம்.

பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ஜம்மு மெயில் பிடித்துப் பஞ்சாப்-காஷ்மீர்-ஹிமாச்சல் பார்டர் டவுன் பதான்கோட்டில் இறங்கி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலா-மெக்லோட்கஞ்ச்(Ppper Dharamshala-Mcleodganj) மலைப்பிரதேசத்துக்கு பஸ் பயணம். 110 கிமீ தூரம் 5மணிநேரம் ஒரு டீ பிரேக், ஒரு சிற்றுண்டி ஹால்ட் என படுத்தினார்கள் ஹிமாச்சல் பரிவஹன் நிஹம்(போக்குவரத்து நிறுவனம்)!

டெல்லியில் வெயிலில் காய்ந்ததற்கு பனிமூடிய தௌலாதர் ரேஞ்ச்(Dauladhar Range) இமயமலைச் சிகரங்கள் பின்ணணியோடு மலைமுகட்டில் இருக்கும் ஹிமாச்சல் பெரிய வரப்பிரசாதம் டெல்லியிலிருந்து 700 கிமீ தொலைவு. ஜம்மு 100 கிமி தூரம்தான் பதன்கோட்டிலிருந்து...அன்புடன்,


ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

39387
டெஸ்ட் மெசேஜ்!

Srikanth said...

Couple of years ago, I had the chance to stay in the New Delhi Railway quarters for a few days and mingle with common people in and around there. The people there told me stunning stories on happenings in delhi.

Delhi would look very much harmless and peaceful at the outset but it has always remained unstable, due to communal and terrorist activities :(

Nice travelogue.

மங்களூர் சிவா said...

//
ஒரு சொட்டு ஹிந்தி தெரியாமல் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக எனது பெற்றோர் அவ்வப்போது அரிதாரம் பூசாத அவதாரம் எடுத்ததைப் பார்க்கும் போது தமிழ்நாட்டுக்கு ஆஸ்கர் தந்து கட்டுப்படியாகாது என்பதால் தான் தரப்படவில்லை என்று புரிந்தது.
//
//
என் தந்தை ஒருபடி மேல் சென்று சரளமான முழுத் தமிழிலே ஹிந்திக்காரனிடம் தான் சொல்ல வந்ததைச் சொல்லி டெல்லியின் ஹிந்திக்காரர்களுக்கு தேசத்தின் மொழிக்கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை இவற்றை அடிக்கடி நினைவுபடுத்தும்படி கிலி ஏற்படுத்தினார்!
//
:-)))

இன்னும் நார்த் இந்தியா பாக்குற கொடுப்பினை வரலை.

ஆனா நீங்க சொன்ன மாதிரி பூமிதி அனுபவம் இருக்கு கொல்லூர் மூகாம்பிகை கோவில்ல தெரியாத்தனமா ஒரு தடவை மதியம் போய்ட்டு பிரகாரம் எல்லாம் ஓடி ஓடியே சாமி கும்பிட்ட அனுபவம் இருக்கு.

இப்ப சமீபத்தில் பிரகாரம் முழுவதுக்கும் கூரை போட்டிருக்காங்க.