Sunday, September 02, 2007

(169) தமிழுணர்வு முழங்கும் தமிழ் வலையுலகுக்கு ஒரு வயலும் வாழ்வும் செய்தி

தமிழ் மொழியைக் கேட்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ளும் சக்தி இருந்ததற்காக சென்னை மெட்ரோ வாட்டர் / குழாயடி சண்டை நடக்கும் இடங்களில் அரிதாக வருந்தவேண்டிய சூழல் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கக்கூடும். அந்தத் தெருவைக் கடக்கும் முன்பே சமாதானம் அடைந்தும் விடுவோம். காரணம் அப்படியான அழுகல் தமிழ்மொழிப் பயன்பாட்டைக் கையாள்வோர் கல்லாமை என உணர்வதால்.

கணிணியில் தமிழ்மொழியைப் படித்து தமிழ்மொழிபேசுவோர் உள்ளத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்ததற்காக வெட்கி வெந்து நொந்தேன்.

மனனப் பகுதியாக மதிப்பெண்ணுக்காக மட்டுமே தமிழ் ஆன்றோர் மொழிகளைக் கருதித் தாய்த்தமிழில் பள்ளியில் சொல்லித்தரப்பட்ட கருத்துக்களைக் காற்றில் விடுதலை செய்துவிடுவதால் வெளிப்படும் உண்மை வெளிச்சம் இல்லாத கருமையாக வெளிப்படுகிறது.

எனது பள்ளிக்கூடகாலத்தில் தமிழாசிரியர் எனக்குத் திருத்தமாகச் சொல்லித்தந்த தமிழ் ஆன்றோர் செய்யுளை நினைவு கொள்கிறேன்.


"இன்சொல் விளைநிலமாம் ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவூட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்!"


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கணிணி நிபுணத்துவம் நிறைந்த உயர்கல்வி கற்ற நம் தமிழ்மக்கள் நிறைந்த தமிழ் வலை உலகில் பதிவர்கள் அனைவராலும் பின் பற்றப்பட வேண்டிய விஷயங்களை ஒரே செய்யுளாக "நச்" என்று நாலுவரியில் நம் தமிழ் ஆன்றோர் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே சொன்னது.

நம்மால் வலை உலகில் பதிவுகளில் தமிழ் வார்த்தைகளாய், வாக்கியங்களாய் வெளிப்படுத்தப்படும் தமிழ் பண்புடன்,நல்ல தமிழாய் நறுமணத்துடன் திகழும்படி பார்த்துக்கொள்வது என்பது "தமிழுணர்வு"க்கு அடிப்படையாக அமைதல் அவசியம்.


அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

38800
டெஸ்ட் மெசேஜ்!

ஜீவி said...

கண்ணை உறுத்தும் எழுத்துப் பிழைகளைக் கண்டு வெதும்பி
எழுதியுள்ளீர்கள். ஒரு மொழி
அழகுருவது, அந்த மொழியின்
வாக்கிய அமைப்புகளால் என்றால்,
எழுத்துப் பிழைகள் அற்று எழுதுவது
அதற்கு அழகான அணிகளைப்
பூட்டுவதற்கு சமமாகும். பேசும் போது அந்த மொழிக்கே உரித்தான
இசைபடப் பேசுதல், அந்த மொழியைச் சீராட்டுதலுக்கு சமமாம்.
மொழியின் மேல் இருக்கும் ஆர்வம்,
அந்த மொழியைக் கையாளுவதில் இல்லாதது வருந்தத் தக்கதே. அந்தக்
காலத்தில், 'முரசொலி' ஏடு, அச்சு
வாகனம் ஏறுவதற்கு முன்னால், கலைஞர் பார்வைக்கு வருமாம்; அந்த நேரத்து, அச்சுப்பிழைகளைத் திருத்துவதற்கே மிகுந்த நேரம் எடுத்துக்கொண்டு, பொறுமையாகத்
திருத்துவாராம். பிழைகளுடன் தமிழ்
மொழி அச்சாவது அவரால் சற்றும்
பொறுத்துக் கொள்ளமுடியாது; அதில் அவர் உறுதியுடன் இருந்தார் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

ஜீவி,

வாங்க.

தாய்த்தமிழே கேவலப்படும் வண்ணம் அழுகல் சொல்லாடல்கள் தமிழ்ப் பதிவுலகில் ஏராளம் கண்டு வெம்பி வெதும்பியதால் விளைந்த பதிவு!

எழுத்துப்பிழைகளையாவது மன்னித்து விடலாம்.