Monday, February 05, 2007

(117) ராமரண்ணே வர்றாரு...

டவுசர் சிறுவனாய் எனது (ஆரம்பப்) பள்ளிக்கூட நினைவுகளில் சிலதை தொகுத்திருக்கிறேன் இங்கே!

ஜமீன்தாரிணி காமூலம்மாள் நினைவு ஆரம்பப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி - இது இரண்டும் நான் பிறந்த போடிநாயக்கனூரில் நான் +2 வரை படித்த பள்ளிக்கூடங்கள். 125 ஆண்டுகள் பழமையான 3000 மாணவர்கள் படிக்கும் பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி வளாகம் ரொம்ம்ப்ப்ப்ப்பெரியது. கிலோமீட்டர்கள் நீளமுள்ள மைதானங்கள் அடக்கியது.

ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை ஆரம்பப் பள்ளி இரு வேறு வளாகங்களில் அடுத்தடுத்த தெருக்களில் இருந்தவாறு செயல்படும் பள்ளிக்கூடங்கள்.

இதில் முதல் இரண்டாம் வகுப்புக்களுக்கான பள்ளிக்கூட வளாகம் ஐந்துவயதில் நேரடியாக ஒண்ணாம் வகுப்பு வரும் மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பயணம் துவக்கும் இடம்.

நெடிய அசோகமரங்கள்(நெட்டிலிங்க மரம்)நிறைந்த வளாகம். பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலையில் 8.30 மணி. ராமர் அண்ணன் தான் இந்த வளாகத்தில் பியூன். பள்ளியின் கதவுகளைத் திறப்பது, வகுப்புகளுக்கு மாணவர் வருகை ஏடு (அட்டெண்டெண்ஸ் ரெஜிஸ்தர்)
சாக்பீஸ் தருவது போன்றவற்றுக்குப் பொறுப்பானவர்.

காலை 8.15க்கே 90சதவீத மாணவர்கள் பள்ளியின் மூடிய கேட் முன்னால் குவிந்து விட்டிருப்பார்கள். ராமர் அண்ணன் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு 8.20க்கு கோவில் பக்கவாட்டு வழியாக பள்ளிக்கூடத் தெருவுக்குள் நுழைந்தவுடன் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மொத்த மாணவர்களும் கோரஸாக "ராமரண்ணே வர்றாரு..ராமரண்ணே வர்றாருன்னு" அவர் அதட்டியபடியே கேட்டை திறந்துவிடும் வரை ஒரே பாட்டுதான்.


எந்த ஆசிரியருக்கும் கூட இப்படியான வரவேற்பு பாட்டு கிடையாது. தினம் பள்ளிக்கூடத்தெருவின் நூறுமீட்டர் தூரத்தை காக்கி பேண்ட் காக்கி சட்டை அணிந்து வரும் பியூன் ராமரண்ணனுக்கு மட்டுமே உரித்தான மரியாதை வரவேற்புப் பாட்டு. நான் +2 படிக்கும் போதும் பியூனாகவே இருந்து ரிடையராக இருந்த ராமரண்ணனுக்கு அதே பாட்டு அதே உற்சாக கோரஸ் ராகத்தில்.

பிரியாணிப்பொட்டலம், பேட்டாக்காசு இவைகளுக்காக லாரிக்கு உள்ளிருந்து ஆதரவுக் குரல் தருவதா? இல்லை மீட்டிங் நடக்கும் திறந்த வெளியிலிருந்து ஆதரவு தருவதா? இல்லை Issue based ஆதரவா என்பதான குழப்பங்கள் இல்லாமல் மனப்பூர்வமான பாசத்தினால் சிறுவர்கள் ராமரண்ணனுக்கு கலக்கலாக தினசரி பாச ஆதரவு கோஷம் எழுப்புவார்கள்.

பள்ளிக்கூடத்தின் முதல் தெரு திருப்பத்தில் கட்டிட கொத்தனார் சுப்பிரமணி மேஸ்திரி வீடு. பள்ளிக்கூட இடைவேளையின் போதும் , காலை வகுப்புகள் முடிந்து பள்ளிக்கூடத்தினின்று செல்லும் போது கொத்தனார் வீட்டின் முன்பாக நின்று தினமும் சில சூராதி சூரர்கள் கோரஸாக இந்தப்பாட்டு பாடுவார்கள்:

" பட்டம் பறக்குது
பள்ளிக்கூடம் தெறக்குது
கொத்தனாரு ------யில
கொய்யாப்பழம் தொங்குதுன்னு"

பெரும்பாலும் அமைதி காத்தாலும் சில நேரத்தில் கொத்தனார் வீட்டில் இருந்து யாராவது ரெட்டைவால் ரெங்குடு சூரர்களை விரட்டி வருவார்கள். கையில் அகப்பட்டவனுக்கு அவ்வப்போது மண்டகப்படி நடத்துவார்கள்.

பள்ளிக்கூடம் பக்கத்தில் வீடு இருந்தால் அங்கு வசிப்போருக்கு அளவுக்கு அதிகமாகப் பொறுமை தேவைப்படும்!

பள்ளிக்கூட இடைவேளையில் வெளியே "ஜவ்வுமிட்டாய்"விற்பவருக்கு சிறுவர்கள் தரும் மரியாதை தனியாகச் சிறப்பாகக் கிடைக்கும். ஐந்து பைசாவுக்கு வாட்ச் மாதிரி ஜவ்வு மிட்டாயிலேயே செய்து தருவார். 10பேருக்கு வாட்ச் செய்து தரும்வரை பார்வையாளனாக பொறுமையோடு இருந்தால் ஒரு இன்ச்க்கு மிட்டாயைக் கிள்ளி இலவசமாகத் தருவார்.

பாக்கெட் மணி இல்லாத எனக்கு ஜவ்வுமிட்டாயைச் சுவைக்க இருந்த ஒரே வழி பொறுமையோடு பார்வையாளனாக இருப்பது மட்டுமே .ஆதலால் கொஞ்ச நேரம் நின்று மிட்டாய்க்காரரது செய்முறையைக் கூர்ந்து கவனிப்பேன்.

ஒரு மரக் கம்பத்தின் உச்சியில் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியநிலையில் மொத்த மிட்டாயும் இருக்கும். அதை குறிப்பிட்ட தடிமன், அகலத்தில் சீராக இழுத்து அதிலே வாட்சி, பொம்மை என்று செய்து தருவார். கொஞ்ச நேரம் பொம்மையாகப் பாவித்து விளையாடிவிட்டு சாப்பிட்டு மகிழலாம்.

கொய்யாப்பழம், வேகவைக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மரவள்ளிக்கிழங்குத் துண்டுகள், சீனிமிட்டாய், குச்சி ஐஸ், இலந்தைபழம், ஈச்சம்பழம்,அரை-முழு நெல்லிக்காய், பிஞ்சுமாங்காய், கிலாக்காய், வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், மதிய வெய்யிலில் சூடேறிய எவர்சில்வர் தட்டில் இளகிப் போன கமர்கட், கடலை மிட்டாய்கள், இவைகள் பள்ளி இடைவேளையில் விற்கப்படும் ஸ்னாக்ஸ்கள்.

இவைகளுடன் அரிதாகச் சில சமயம் அதிரடியாக அசைவ ஸ்னாக்ஸாக வறுக்கப்பட்ட ஈசல் ஆழாக்கு உழக்கில் அளந்து தந்து சர்க்கரையோடு விற்கப்படும் (கள்ளர் இனத்தவர்கள் அதிகமான அளவில் வாழும் பகுதி) இதனாலேயே பின்னாளில் பிபிசியில் ஒரு சிம்ஸன்ஸ் வேர்ல்டு நிகழ்ச்சியில் சீனாவில் ஸ்கார்ப்பியன் fry என்று எண்ணையில் பொரித்த தேளை சீனப் பிரத்தியேக ஸ்னாக்காக உண்பதைக் காட்சியாகக் கண்டபோது ரொம்பவெல்லாம் அதிரவில்லை நான் :-))

பள்ளிக்கூட இடைவேளையில் அருகாமை வீடுகளில் குடிக்கத் தண்ணீர் கேட்டுச் சிறுவர்கள் படையெடுப்பார்கள். எதிர்ப்படும் எவரும் அண்ணன், அக்கா தான். எனது வீடு பள்ளிக்கு அருகாமையில் இருந்ததால் சில சமயம் சிறுவர்கள் எங்கள் தெருவுக்கும்/ வீட்டுக்கும் தண்ணீர் கேட்டு வருவார்கள்.

ஒரு சித்திரைமாத வெயில் நாளன்று முற்பகல் வெயிலின் தாகத்தில் தண்ணீர் வேண்டி வந்த சிறுவர் குழாமில் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவன் தன் சகாக்களைப் பார்த்து டேய் இந்தவீட்டுக்கு வாங்கடா இந்த அக்கா தண்ணீர் தர்றாங்கன்னு எழுபது வயதான என் தந்தை வழிப் பாட்டியை "அக்கா"ன்னு கூப்பிட்டு அந்தமாணவன் தந்த அதிர்ச்சி ரொம்ப நாளைக்கு என்னை விட்டு அகலவில்லை :-))

அன்புடன்,

ஹரிஹரன்

11 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

ஜயராமன் said...

பசுமையான நினைவுகள். வெள்ளையாய் மனமிருந்து கொள்ளையாய் மகிழ்ச்சியிருந்த அந்த நாட்களின் சில மணங்களை இங்கு பதிந்ததற்கு நன்றி

வடுவூர் குமார் said...

பசங்களுக்கே உரிய பாட்டு "சிரிப்பை வரவழைத்தது".
பல கிராம மற்றும் சிறிய ஊர்களில் பள்ளிகள் பக்கத்தில் நீங்கள் சொன்ன அவ்வளவும் பார்க்கலாம்.
கொஞ்ச நேரம் அங்கு போய் வந்த மாதிரி இருந்தது.

நன்மனம் said...

அழகான நடையில் அமைந்த விவரிப்பு.

நடுல அரசியல அழகா நுழைச்சிருக்கீங்க :-)

bala said...

//நடுல அரசியல அழகா நுழைச்சிருக்கீங்க //

நன்மனம் அய்யா,

ஆமாங்கய்யா.இந்த பிஞ்சுகளில் சிலர் மீது,நஞ்சைப் பாய்த்து,குஞ்சுகளாய் மாற்றி,பிரியாணி/சாராயத்துக்காக கழக கும்பலில் கோவிந்தா போடும் உருப்படிகளாக மாற்றும் நயவஞ்சகத்தை,நைஸா சொல்லியிருக்காரய்யா.

பாலா

வல்லிசிம்ஹன் said...

சிறுவர்கள் உலகம்.
அழகாக இருக்கிறது.
சின்னவர்களுக்கே உரித்தான
உற்சாக நடையில் ஓடுகிறது.
வாழ்த்துகள்.

Hariharan # 26491540 said...

//பசுமையான நினைவுகள். வெள்ளையாய் மனமிருந்து கொள்ளையாய் மகிழ்ச்சியிருந்த அந்த நாட்களின் சில மணங்களை இங்கு பதிந்ததற்கு நன்றி //

வாங்க ஜெயராமன்.

நிஜம் சார். இந்தப் பிராயத்து மகிழ்ச்சி என்பது மாதிரி வேறெப்போதும் திரும்பக் கிடைப்பது இல்லை.

நினைவுகளாக திரும்பி அசைபோடுவதும் மகிழ்ச்சி தருகிறது தற்போது!

வருகைக்கு நன்றி

Hariharan # 26491540 said...

//பசங்களுக்கே உரிய பாட்டு "சிரிப்பை வரவழைத்தது".
பல கிராம மற்றும் சிறிய ஊர்களில் பள்ளிகள் பக்கத்தில் நீங்கள் சொன்ன அவ்வளவும் பார்க்கலாம்.//

குமார்,

அந்தப் பாட்டோடு பாடிய ரெட்டைச்சுழிப் பயலுகலை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

//கொஞ்ச நேரம் அங்கு போய் வந்த மாதிரி இருந்தது. //

ஏதோ நம்மால ஆன நோஸ்டாலஜி:-))

Hariharan # 26491540 said...

//அழகான நடையில் அமைந்த விவரிப்பு.//

வாருங்கள் நன்மனம்,

நன்மனத்துடன் பாராட்டியதற்கு நன்றி

//நடுல அரசியல அழகா நுழைச்சிருக்கீங்க :-) //

லாரி லாரியாய், அலைகடலாய் திரண்டு ஆதரவு என்பதான அரசியலை எப்படி வடிகட்டி எழுதினாலும் உள்ளே அப்படியும் பூந்துடுச்சா :-))

Hariharan # 26491540 said...

//இந்த பிஞ்சுகளில் சிலர் மீது,நஞ்சைப் பாய்த்து,குஞ்சுகளாய் மாற்றி,பிரியாணி/சாராயத்துக்காக கழக கும்பலில் கோவிந்தா போடும் உருப்படிகளாக மாற்றும் நயவஞ்சகத்தை,நைஸா சொல்லியிருக்காரய்யா.//


வாருங்கள் பாலா,

ஆழ்மனத்தில் இருப்பதாலோ என்னவோ சிந்தையிலிருந்து இந்த அரசியலை ஒதுக்கி எழுதும் எழுத்தில் கூட வெளிப்பட்டு விடுகிறது!

உண்மையில் இந்த பிரியாணி/பேட்டாக்காசு வலையில் சிக்கித் தம் வாழ்க்கையில் வெளங்காமப் போனவர்கள் அதிகம்:-(

Hariharan # 26491540 said...

//சிறுவர்கள் உலகம்.
அழகாக இருக்கிறது.
சின்னவர்களுக்கே உரித்தான
உற்சாக நடையில் ஓடுகிறது.
வாழ்த்துகள்.//

வாங்க வல்லிசிம்ஹன்,

சின்னப்பசங்க உலகம் தனி. பள்ளிக்குச்செல்லும் என் குழந்தையைப் பார்க்கும்போது நான் பள்ளிக்குப் போன நாட்கள் டிரிக்கர் ஆனதால் விளைந்த பதிவு.

குழந்தைகள் என்றாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்தானே :-))