Tuesday, August 21, 2007

(161) அங்கவை...சங்கவை...இங்கவை...வை ராஜா வை..தமிழ் உண(ர்)வு

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நடிக்க இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
நல்லா இருக்கட்டும். எல்லா வளத்துடனும் சிறப்புடன் வளமா வாழ வாழ்த்துவோம்.

நேற்று இரவு சன் டிவியில் வந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் வடிவேலுவின் சூப்பர் ஹிட் நகைச்சுவைக் காட்சிகளை தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். எந்த திரைப்படத்தில் இந்த நகைச்சுவைக்காட்சி என்று தெரியவில்லை. சாராம்சம் இதுதான்:

வடிவேலு ஒரு முடிதிருத்தும் கடைக்கு வருகிறார். நாவிதர் கடையின் உள்ளே ஒருவருக்கு சவரம் செய்துகொண்டிருக்கிறார்... கடையின் வெளியே பெஞ்சில் ஒருவர் அமர்ந்து தினசரி செய்திகளை சத்தமாகப் படித்தபடியே வடிவேலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.

செய்தித்தாள் படிப்பவர் : (உரத்த குரலில்) சுனாமி சேதாரங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் பார்வையிட்டார்... வடிவேலைப் பார்த்து கிளிண்டனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..

செய்தித்தாள் படிப்பவர்: கிளிண்டனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?
மீண்டும் செய்தி படிப்பதைத் தொடர்கிறார்... சதாம் உசேனைத் தூக்கில் போட்டது சரியா?
வடிவேலைப் பார்த்து சதாம் உசேனைத் தெரியுமா?

வடிவேலு: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க.. கடைவீதியில் கறிக்கடை வைத்திருக்கும் உசேனைத் தெரியும்

செய்தித்தாள் படிப்பவர் : சதாம் உசேனைத் தெரியாமல் ஏன் சலூனுக்கு வந்தாய்?

டென்சனான வடிவேலு: உனக்கு முனியாண்டியைத் தெரியுமா?

செய்தித்தாள் படிப்பவர்: யார் முனியாண்டி எனக்கு ஏன் தெரியணும்?

வடிவேலு : உன் மனைவியை உனக்குத் தெரியாமல் ஒருவருஷமாக "வைத்துக் கொண்டிருக்கும்" முனியாண்டி உன் மனைவியோடு ஓடிப்போயிட்டிருக்கிறான்..

இதைக் கேட்டதும் அய்யோ ஓசம்மா...மோசம் போயிட்டியேன்னு ஓடுகிறார் செய்தித்தாள் படித்தவர்..

ஓடு ஓடிப்போய் ஓசூர் எக்ஸ்பிரஸ்லே போய்த் தேடுன்னு டிப்ஸ் வேறு வடிவேலு தருகிறார்.

அடுத்து நாவிதர் வடிவேலிடம் : முனியாண்டி தான் அந்தாளோட பொண்டாட்டியை வைச்சிட்டுருக்கான்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?

வடிவேலு: அது உன் பொண்டாட்டியை வைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆறுமுகம் சொல்லித்தெரியும்..

நாவிதரும் சவரம் செய்துகொண்டிருந்த ஆறுமுகம் என்ற நபரும் அலறியபடியே ஓடுகிறார்கள்.


மழைத்துளி விழுந்த தார்ச்சாலை நிறத்தில் இருக்கும் அக்மார்க் தமிழன் வடிவேலு, தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை மண்ணின் மைந்தன் வடிவேலு, இரண்டுகோடி ரூபாய் சம்பளம் வாங்கியபடியே தமிழ்த் திரைப்படங்களில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மனைமாட்சியை
இந்த அளவுக்குப் பெருமைப்படுத்தியிருக்கக்கூடாது!


அடுதத கொடுமை தொகுப்பாளினியின் அறிவிப்பு... நேயர்களே வைகைப்புயலின் இந்த காமெடி சீனை ரசித்து மனம் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள் அடுத்து சந்திக்கும் வரை பை..பை..

இதே வடிவேலு கிரி எனும் படத்தில் தன் தமக்கையை வைத்துப் பிழைப்பதாக கேடுகெட்ட கலாச்சாரப் பிழையுடன் கூடிய நகைச்சுவையை!! செய்திருப்பார்! வாழ்க வடிவேலு! இன்னும் இதுமாதிரியான நகைச்சுவைகாட்சிகளை பெருவாரியாக ரசித்து தமிழ்மக்களாகிய நாம் வடிவேலுவின் சம்பளத்தை இரண்டு கோடி ரூபாயிலிருந்து நான்கு கோடி ஆக்குவோம்!


இன்னொரு சினிமா நகைச்சுவை காட்சியில் சாமி, பூதம் இவைகளில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவா(ந்)தி மணிவண்ணன் நகைச்சுவை பாத்திரங்களில் உச்சத்தில் இருந்து நடித்த போது வந்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சியில் உதிர்த்த முத்து இது:

ஒரு குடியிருப்பில் ரெண்டு சிறுவர்களிடம் பேசும் காட்சி:

மணி வண்ணன் : டேய் தம்பி அது யார்ரா உங்கூட இருக்கும் பையன்?

சிறுவன் : என் தம்பி

மணி வண்ணன் : என்ன வயசுடா உன் தம்பிக்கு?

சிறுவன் : ரெண்டு வயசுஆகுது

மணிவண்ணன் : எப்படி? உங்கப்பன் துபாய்க்குப் போய் மூணு வருஷமாச்சு... உன் தம்பிக்கு ரெண்டு வயசா? எப்படி? குழப்புறயே...!!


சின்னக் கலைவாணர் விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் கறுப்பு மனைவி, கறுப்பு புருஷனுக்கு கலரான குழந்தை பிறந்ததால் எழுந்த சந்தேகத்தினை கறுப்பு பலப்பம் கறுப்பு சிலேட்டில் எழுதும் போது வெள்ளை நிறத்தில் எழுத்து உருவாவதைக் காட்டி பஞ்சாயத்து செய்துவிட்டு... அந்தப் பெண்ணிடம் ப்ரௌன் நிறத்தில் குழந்தை வேணும்னா எங்கிட்ட வான்னு வெட்கப்பட்டுக்கொண்டு சொல்வார்..

இன்றைக்கு அடல்ட்ரி தான் தமிழ் சினிமாவின் மச் டிலைட்டட் & அல்டிமேட் நகைச்சுவை!

வள்ளுவர் போன்ற தமிழ் ஆன்றோர்கள் மனைமாட்சி குறித்துச் சொன்னதெல்லாம் இன்றைக்கு தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்துமான்னு கேள்வி வருது.

சிவாஜி படத்து அங்கவை.. சங்கவை மேட்டரை வைத்து சுஜாதாவை வை.. ராஜா வை... உன் பதிலை இங்கவைன்னு பாமரத்தனமா அசுர ஓசையுடன் தமிழுணர்வு பொங்க வலைப்பதிவில் எழுப்புகிறோம்!

சிவாஜியில் நடிகை ஸ்ரேயாவின் நெகிழ்ந்த மேலாடை வழியே வெளித்தெரியும் அங்கங்களைக் கண்டு மகிழ்ந்த படியே ஸ்ரேயாவின் திறந்த மனத்தைப் பாராட்டிக்கொண்டே அண்ணாமலையில் நேற்றைய அண்ணி குஷ்பூ மாதிரி இன்றைய அண்ணி ஸ்ரேயா ஆவதற்காக மணிமேகலைப்பிரசுர சினிமாப் பிரபலங்கள் முகவரிகள் புத்தகத்தில் ஸ்ரேயாவின் சென்னை/ஹைதராபாத் இல்லம் தேடி ஸ்ரேயா அண்ணியின் இளைத்த உடல் தேறி வர சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் சகிதம் நிற்பவர்கள்தானே தமிழர்களாகிய நாம்!

கூடையில் என்ன பூ குஷ்பூ என்ற வரிகளை வகைக்கு ஏற்ப புரிந்து கொண்டு கோவில் கட்டி வழிபட்ட நவீன பாரம்பரியம் தமிழர்களாகிய நமது பாரம்பரியம்! அடுத்த தலையாய கடமை புது அண்ணி ஸ்ரேயாவுக்குத் தமிழகத்தில் சிலை எடுப்பதுதானே!


வைகைப்புயல் வடிவேலின் தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய மனைமாட்சியை பாலியல் இச்சை வக்கிர வடிவமைப்பு நகைச்சுவைக்காட்சியை நயந்து ரசித்த தமிழர்களாகிய நாம்...

பகுத்தறிவு வா(ந்)தி மணிவண்ணனின் கணவன் மனைவி பிழைப்பு காரணமாக பிரிந்து வாழும் சூழலை மங்கி, மாசுபட்ட மனைமாட்சியாய் சித்தரித்த சீக்குப்பிடித்த நகைச்சுவைக் காட்சியை ரசித்த தமிழர்களாகிய நாம்..

இன்ன பிற நடிகர்களின், திரைப்பட கர்த்தாக்களின் பாலியல் வக்கிர, மனைமாட்சி மாசு நிறைந்த காட்சிகளை கைதட்டி விசிலடித்து ரசிக்கும் தமிழர்களாகிய நாம்...

இன்றைக்கு வலையுலகில் அசுரத்தனமான ஓசையுடன் பாமரத்தனத்துடன் பாரிவள்ளலின் மகள்கள் அங்கவை சங்கவையை கருப்பாக்கிக் காட்டி பார்ப்பனராகிய, திருவரங்கத்து அக்கிரஹார சுஜாதா மட்டம் தட்டிவிட்டார் பொங்கி எழுங்கள் என்று அறைகூவுகிறோம்!

ரெண்டு கோடி சம்பளம் தந்து வடிவேலு, விவேக் போன்றோர் தமிழர் பாரம்பரிய மனைமாட்சியை நெறியற்ற வாழ்வியலாகச் சித்தரிக்கும் செய்தியை அங்கீகரித்து கைதட்டி விசிலடித்து மகிழும் பகுத்தறிவுத் தமிழர்களாகிய நமக்கு அறைகூவும் அருகதை நமக்கு இருக்கிறதா!!


சுஜாதா-ஷங்கரின் சிவாஜி அங்கவை.. சங்கவை கருப்பு மேக்கப் காட்சியோடு பாரிவள்ளல் மகள்களை இணைத்து தமிழர் பாரம்பரியத்துக்கு பார்ப்பன சுஜாதாவால் இழுக்கு எனும் அறைகூவல் எழுப்புவோர்க்கு இருப்பது தமிழுணர்வு என்பதை விட இவர்களுக்குத் தமிழால் உணவு எனும் உண்மை விடுதலையாகிறது!

தமிழர்களின் கரிய நிறம் சிறுமையானது அல்ல! beauty is only Skin deep!

ஆனால் வெகுதியான தமிழர் சமூக, மனைமாட்சி, வாழ்வியல் நிகழ்வுகளின் பாரம்பரியத்தினைச் சிதைப்போரை மறுப்பதை மறுத்து, சாதி, அரசியல் கொண்டு கறுப்புத் திரை போட்டு மூடியபடி அறைகூவுவது என்பது you RACE to ERACE the true heritage of your own RACE! என்பதாகவே இருக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

38318
டெஸ்ட் மெசேஜ்!

படகோட்டி said...

இதுக்குப் பேர்தாங்க நச் பதிவுன்னு சொல்றது.

சூப்பர்.. கலக்குங்க.

மாசிலா said...

நல்ல அனுகுமுறை. மாறுபட்ட பார்வை. நல்ல அலசல்.

நீங்கள் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையே.

இவர்கள் தமிழர்களின் மனைக்காட்சியை வைத்து விகடம் செய்வது என்பது தமிழர்களே இப்படியெல்லாம் உங்களாலும் செய்ய முடியும், இதெல்லாம் சகஜம்தான் என்கிற குடிகெடுக்கிற விதயம்தான்.

மிகவும் கண்டனத்திற்கு உரியது.