(167) கம்யூனிஸம் = கயமைத்தனம் + களவாணித்தனம்
பள்ளிக்கூட காலங்களில் கம்யூனிஸம் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்த விஷயங்கள் எனது பதின்ம வயதில் பள்ளிச் சிறுவனாக இருந்த போது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
சோவியத் ரஷ்யாவில் எல்லோருக்கும் கம்யூனிஸ அரசாங்கமே ரொட்டி இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே மாஸ்கோ நகரத்தின் சாலை சந்திப்புகளில் கண்ணாடி அலமாரிகளில் ரொட்டிகளை அடுக்கி வைத்திருப்பார்கள், அலமாரியைப் பூட்டக்கூட மாட்டார்கள் என்று கம்யூனிஸ அரசின் சாதனைகள் காதில் வந்து விழும்.
ரொட்டி என்றாலே 25 பைசாவுக்கு கிடைத்த பன் ரொட்டியும் அதன் மீது அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு செர்ரியும் நினைவுக்கு வரும். பொய்யாக காய்ச்சல் என்று சிவப்பு செர்ரி வைத்த பன் ரொட்டிக்காக தவமிருந்திருக்கிறேன்.
இந்தியாவில் ஒரு பன் ரொட்டிக்கே பெற்றோரிடம் நாம் மன்றாட வேண்டியிருக்கிறது. மாஸ்கோவில் மட்டும் பிறந்திருந்தால் சாலை ஓரங்களில் அலமாரிகளில் இருந்து தேவையான ரொட்டியை எடுத்துக் கொள்ளும் பாக்கியம் இருந்திருக்கும் என்று எண்ணிக்கொள்வேன்.
இதற்கு மேலாக சோவியத் ரஷ்யாவின் தலைவர்கள் பெயர்கள் குருசேவ், கோர்பசேவ் என்று இருந்து என்னை கம்யூனிஸ்ட் ரஷ்யர்களை தமிழகத்தின் காராசேவ், சீனிசேவ் பண்டங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருத வைத்து ஒரு ஸ்பெஷல் அந்நியோன்னியத்துடன் மனதில் நினைக்க வைத்தது!
இந்திய ரஷிய ராஜாங்க உறவுகள் புரிபடும் முன்பே போடி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் மலையாகக் குவித்துவைக்கப்பட்ட சீனிச்சேவ், காராச்சேவ்களில் கம்யூனிஸ்ட் ரஷ்ய தொடர்பு இந்திய கிராமங்கள் வரையில் ஊடுருவியிருப்பதை உணரவைத்தது.
பள்ளி இறுதி வகுப்பு கோடை விடுமுறைக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சியில் மாஸ் மசாலா பால் சாம்பிளைச் சுவைத்துவிட்டு அங்கே இருந்த ஒரு புத்தகக்கடை/ கம்யூனிஸ மிர் பப்ளிகேசன்ஸ் பதிப்பகத்தின் மிக மலிவான விலையிலான புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது தமிழ்வாத்தியார் திரு.சுப்பிரமணி சொல்லித் தந்த தமிழ்நடையில் இல்லாத எழுத்துநடையில் எழுதப்பட்டிருந்தது கண்டு குழம்பினேன்.
மிர் பப்ளிகேசன்ஸ் புத்தகங்களில் கையாளப்பட்ட தமிழ் "ஜுனூன்" தொலைக்காட்சி தொடரில் பயன்படுத்தப்பட்ட கையாலாகத தமிழின் முதல் மூலம்!
பிற்பாடு 89-90ல் காராச்சேவ் தலைமையில் மன்னிக்கணும்... கார்ப்பசேவ் தலைமையிலான சோவியத் சிதறுண்டு போனபோது மாஸ்கோ எந்த திசையிலிருக்கிறது என்பதே தெரியாத நிலையிலும் ஏதோ ஒரு மெல்லிய சோகம்!
பிறகு ரஷ்யாவினுள்ளே நடக்கும் விஷயங்கள், செய்திகளாக உலக மீடியாவில் மெல்ல வெளிவரத் துவங்கியது. ஒரு ரஷிய ராணுவ வீரனுக்கு மாத சம்பளமாக ஒரே ஒரு தர்பூசணிப்பழம் மட்டுமே தரப்பட்டது என்று 1991-ல் வந்த செய்தி துணுக்குற வைத்தது.
அடுத்தடுத்து ரஷ்யாவைப் பற்றி வந்த செய்திகள் கம்யூனிஸ ரஷிய அரசாங்கத்தின் சாதனைகளை பறை சாற்றியது. பொதுவுடமை கம்யூனிஸ ரஷ்யப் பெண்கள் மிகுந்த தனியுடமைக்காக பொருளீட்டும் வாழ்க்கை வழியாகத் தேர்ந்தெடுத்தது விபச்சாரத்தை!
90களின் மத்தியில் பஹ்ரைன் தலைநகரில் நான் தங்கியிருந்த ஹோட்டலின் லிப்டில் கட்டுப்பாடு ஒழுக்கம் மிகுந்த சவுதிநாட்டினர் சிலர் உடைந்த ஆங்கிலத்தில் கேட்டது " வேர் ஆர் த ரஷ்யன் கேர்ள்ஸ்?" ரஷ்யாவின் நிலை நினைத்து நொந்தவாறே ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது டெலிபோன் ஒலித்தது. எடுத்தால் அடுத்த முனையில் ஹஸ்கி வாய்சில் ஒரு ரஷிய அழகி எனது மாலைப்பொழுதை மகிழ்வூட்ட ரேட் ஒப்பித்தாள்!!
அமெரிக்கா இந்தியாவைத் தாக்கினால் ரஷ்யா உடனடியாக இருந்த இடத்திலிருந்தே பட்டனை அமுக்கி மிஸைல் அனுப்பி இந்தியாவைக் காக்கும் என்று கம்யூனிஸ ரஷ்யாவின் தொழில்நுட்ப உறவு அருமை பற்றிச் சிலாகிப்பார்கள் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள்.
ரஷ்யாவின் டகால்டி தொழில் நுட்பம்.
இந்திய ராணுவத்திலிருக்கும் , பயிற்சியின் போது தினத்திற்கு ஒன்றாக விழுந்து நொறுங்கும் ரஷ்ய மிக் 25 போர்விமானங்கள் ரஷ்ய தொழில் நுட்பத்தின் இன்னொரு அனுபவரீதியாக உணர்ந்த உதாரணம்.
கம்யூனிஸ ரஷ்யாவின் அணுசக்தி தொழில் நுட்பம் பொதுவுடமை ரஷ்யர்களுக்கே புரிபடாதது என்பது 1986 ல் செர்னோபில் அணு உலை வெடிப்பு நடந்து உலகுக்கு வெளிப்படுத்தியது.
2004ல் நார்வே-ரஷ்ய எல்லையில் பேரண்ட் கடலின் ஆழத்தில் ரஷ்யாவின் Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine 118 ரஷ்ய ராணுவவீரர்களுடன் சிக்குண்டபோது ரஷ்யா அவர்களை மீட்கத் திணறிய பாடு, இரண்டு வாரம் முயன்று முடியாமல் நார்வே தந்த உதவியை ஏற்காமல் 118 வீரர்களும் மாண்டனர். கடைசியில் நார்வே உதவியோடு முழுகிப்போன Kursk அணுசக்தி நீர்மூழ்கி Submarine ஐ மேலே கொண்டுவந்தனர்.
ரஷியாவின் ஆட்டோ மொபைல் தொழில் நுட்பம் என்பது 200% டகால்டி தொழில் நுட்பம் என்பதில் ஐயம் இல்லை.
1970 பியட் நிறுவன technology பயன்படுத்தும் கார்தான் இன்றும் ரஷியாவின் தேசிய கார்! லாடா LADA என்ற கண்றாவி கார், ஜீப் இவைதான் ரஷ்யாவின் தயாரிப்பு!
லெனின், ஸ்டாலின் என்று பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே அழிந்த ரஷ்யாவின் பொருளாதாரம் இன்றைக்கு மேம்படத் துவங்கியிருப்பதற்கு காரணம் தனியுடமை அமெரிக்காவின் ஈராக் போரால் பீப்பாய் 12 டாலரிலிருந்து 70 டாலருக்கு மேலெழும்பிய கச்சா எண்ணைய் விலை!
பொதுவுடமை கம்யூனிஸம் பேசியே சிதைந்துபோன ரஷியாவின் பெரும் நிதி தேவைப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பணமுடை நேர்ந்தபோது அமெரிக்க தனியுடமை தொழிலதிபர்களை பத்துலட்சம் டாலர்கள் கட்டணத்தில் சுற்றுலாவுக்கு விண்வெளிக்கு அழைத்துச்சென்றது!
ரஷ்யாவின் கம்யூனிஸம் வீழ்ந்த பின்னும் கயமைத்தனம் இன்னும் முழுமையாகப் போகவில்லை! 2003ல் ரஷ்ய மிகப்பெரும் தனியார் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான மிகையீல் கோட்ரோவோஸ்கியை ரஷ்ய அரசியலில் தனியுடமைப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டியதற்காக வரி ஏய்ப்பு என்கிற போர்வையில் Yukos Petroluem எனும் தனியார் நிறுவனத்தை அரசுடமையாக்கி சிதைத்து, நிறுவனத்தின் தலைவரை எட்டு ஆண்டுகள் சிறைக்குள் வைத்திருக்கிறது ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் அரசு.
இன்றைக்கு ஆர்டிக்கின் பனிக்கடல் அடியே ரஷ்ய தேசியக்கொடியைப் பதித்து அதனடியே இருக்கும் பெரும் பெட் ரோலிய வளத்துக்கு பண்டைய ரஷ்ய ஜார்மன்னர்கள் பாணியில் ரிசர்வ் செய்து சர்ச்சையை, நிஜமான Cold warஐ ரஷ்யா ஆரம்பித்துவைத்திருக்கிறது!
ரஷ்யா இன்னமும் வெளிப்படையாகப் புரிந்துகொள்ளும்படியான தேசமாக இல்லை.
இரும்புத்திரை போர்த்திய தேசமாகவே ரஷ்யா இன்றும் தொடர்கிறது.
குவைத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ரஷ்ய நர்ஸ் ஒருவர் இந்தியன் என்பதால் என்னிடம் மெனக்கெட்டுப் பேசி தான் "மேட் இன் இந்தியா" உடைகள் அணிந்து வளர்ந்ததை, ராஜ்கபூர், அமிதாப் பச்சன் படங்கள் பார்த்திருப்பதை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார்.
ரஷ்யர்கள் வாங்கியது இந்திய உடைகளை மட்டுமே.. ரஷ்யர்கள் ரசித்தது ராஜ்கபூரையும், அமிதாப்பையும் மட்டுமே! இந்தியர்கள் எத்தனை நூறு மிக் 25 போர்விமானங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கி தினத்துக்கு ஒன்றாக இந்திய ராணுவத்தில் பயிற்சியின் போது விழுந்து நொறுங்குவதைப் பார்க்கிறோம்.
மரியா ஷரபோவா, ஆன்னா கார்னிகோவா போன்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைகளை இந்தியர்கள் வோட்காவை அடித்தபடியே ரசித்து என்ற அளவில் இந்தியா-ரஷ்யாவுடனான உறவுக்கு பதில் மரியாதை செலுத்துவதோடு இருக்கட்டும்.
அணுசக்தி தொழில் நுட்பத்திற்கு அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசியம்.
இந்தியா எப்படியும் அணுசக்தி மற்றும் இதர தொழில்நுட்பத்தை வெளியே இருந்துதான் வாங்கவேண்டும் எனும் போது நல்லதாக வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்!
நல்ல தொழில்நுட்பத்தை இந்தியா வாங்க முட்டுக்கட்டையாக இருக்கும், இந்தியாவில் இன்னமும் உலகளவில் காயலான் கடைக்குப் போய்விட்ட பொதுவுடமை கம்யூனிஸம் பேசும்
பரதன், சீதாராம் யச்சூரி, பிரகாஷ்கராத், ஜோதிபாசு,புத்ததேவ் போன்றவர்களை பொதுவுடமை-கம்யூனிஸ தெய்வங்களான லெனின், ஸ்டாலின்,மாவோ, காஸ்ட்ரோ, சேகுவேரா, தோன்றிய தேசங்களான ரஷ்யா,சீனா, கியூபா,பொலிவியா போன்ற பொதுவுடமை கம்யூனிசகொள்கையால் பிரகாசிக்கும் தேசங்களுக்கு 14 ஆண்டுகள் புனிதப் பயணிகளாக அனுப்பிவைப்போம்!
இந்த களவாணித்தனம் + கயமைத்தனம் = கம்யூனிஸம் பேசித்திரியும் காம்ரேடுகள் 14 ஆண்டுகள் கம்யூனிஸ கொள்கை நிறுவிய காம்ரேடு தெய்வங்கள் பிறந்த தேசங்களுக்கான புனிதப்பயணத்திலிருந்து திரும்பி வரும்போது 2020ல் காம்ரேடுகள் தொல்லையில்லா இந்தியா கலாம் கனவுகண்டபடி தொழில்நுட்பத்தில், அனைத்துவிதத்திலும் வல்லரசாகாவிட்டாலும் கண்டிப்பாக முன்னேறி இருக்கும்!
அன்புடன்,
ஹரிஹரன்
3 comments:
38656
டெஸ்ட் மெசேஜ்!
pathivu oru best massage!
அருமையான பதிவு ஹரிஹரன்.மிக்க நன்றி
Post a Comment