Monday, August 27, 2007

(166) வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்துகொள்ளும் இந்திய ஊழியர்கள்

இரு நாட்களுக்கு முன்பாக அல் ஜசீரா ஆங்கில தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான Blood Sweat and Tears எனும் நிகழ்வு வளைகுடா நாடுகளில் கட்டுமான வேலைகளில் சிக்கிக்கொண்டு கொத்தடிமைகளாக்கப்பட்டு அல்லலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்களைச் சந்தித்து அவர்களது நிலையினைச் சித்தரிக்கும் நிகழ்ச்சி.

குறிப்பாக அமீரகம் எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கட்டுமானத் துறையில் ஊழியர்களாக 70 சதவீதம் இருக்கும் இந்தியர்கள், இதர துணைக்கண்டத்தவரின் அடிப்படை நலன் மிக மோசடி செய்யப்படும் சூழ்நிலையை வெளிச்சம் போடுகிறது இந்த நிகழ்வு.

செல்வக்குமார் எனும் 22 வயது தமிழ் இளைஞன் லேபர் கேம்ப்பில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதற்குக் காரணம் டிராவல் ஏஜெண்டுக்குத் தரவேண்டிய 65000 ரூபாய் கடன் சுமை, வேலை செய்த நிறுவனம் ஒன்பது மாத சம்பளம் தராதது, உடல்நலக்குறைவுக்கு மருத்துவம் பார்க்க கையில் காசு இல்லாத நிலை.

இந்த ஆண்டு துபாயில் இந்திய தூதரகத்தில் பதிவான இந்திய ஊழியர் தற்கொலைகள் நூறுக்கும் மேல். கடந்த ஆண்டினை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம்.

அதாவது சராசரியாக மாதத்திற்கு 10 இந்தியர்கள் துபாயில்(அமீரகத்தில்) ஏஜண்ட் கடன் தொல்லை, பலமாதங்கள் சம்பளம் கிட்டாமை, அடிப்படை தங்குமிட, உணவு, மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான செல்வக்குமார் மாதிரியான நபர்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களில் பிரதானமானது Ambe International என்பது. மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்து பலமாத சம்பளம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கில் செல்வக்குமார்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.


நரைத்த தாடியுடன் கண்களில் சோகமுமாய் செல்வக்குமாரின் தந்தையும், தளர்ந்துவிட்ட தாயும் சுவரில் மாட்டப்பட்ட சந்தனப்பொட்டுவைத்து, மாலையிடப்பட்ட படத்திலிருக்கும் 22வயதில் துபாயில் தூக்கிட்டுக்கொண்டு மடிந்துபோன தன் மகனைக் கடைசியாகச் சந்தித்தது- இரண்டாண்டுகளுக்கு முன்பாக நிலத்தை விற்றுக்காசாக்கிக்கொண்டு ஏஜெண்டை சந்தித்து துபாய்க்கு பயணப்படுவதற்கு முன்பாக!

அல்ஜசீரா தொலைக்காட்சி ரகசிய கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விபரங்களுடன் இந்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க புகார் தந்திருக்கின்றார்கள்.

இந்தியாவில் பணிக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டுகள் அனைவரும் அரசியல் தொடர்புடையவர்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வா(ந்)திகள் தொடர்புள்ள பத்து தொலைக்காட்சிகளும் இருபத்து நாலுமணி நேரமும் சினிமா, குத்துப்பாட்டு, மடத்தனமான சீரியல்கள் என்பதான நிகழ்வுகளை மட்டுமே மக்கள் அக்கறையோடு தொலைபரப்பும்.

ஆட்சி,அதிகாரத்தில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் கட்சிகள் அல்ஜசீராவின் ரகசிய கேமராவில் படம்பிடிக்கப்பட்ட ஏஜெண்டுகள் க்ளிப்பை இன்னொரு செல்வக்குமாராக இந்தியர்/தமிழர் மோசடி விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலை மாற்றிட ஆவன செய்வார்களா??

இல்லை அரசியல் கட்சிகள் தங்களது வழக்கமான உத்தியான கட்டிங்/கமிஷன் ரேட்டை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வளைகுடா வேலைக்கு கல்வி அறிவு குறைந்த கிராமத்து மக்களை இன்னும் தொடர்ச்சியாக மோசடி செய்தபடியாக ஆட்களை அனுப்புவதைச் செய்தபடியே இருக்கப்போகிறார்களா??

துபாயில் வேலைசெய்யும் ஏழு இலட்ச இந்தியர்களில் 80% கிட்டத்தட்ட ஐந்து லட்சம்பேர் கட்டுமான உழைப்பாளர்கள்! மிக மிகக் குறைவாக மாதம் 500 திர்ஹாம் அளவில் இவர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும் தொகை 500 x 500000 x16 = Rs. 4,000,000,000 (நானூறு கோடி ரூபாய்) ஒரு ஆண்டுக்கு 400 x 12 = 4800 கோடி ரூபாய்!


சம்பாதித்த காசை அயல்நாட்டின் பச்சை அட்டை நிரந்தர குடிமை பெற்று அயல் நாட்டிலேயே முடக்கி செத்தாலும் அயல்நாட்டிலேயே புதைக்க வேண்டும் என்று விரும்பும் பேராசியர் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தால் ஒன்பது பேருக்கு அரசு செலவில் விமான டிக்கெட் தரும் பகுத்தறிவு அரசியல்வா(ந்)திகள் நிறைந்த நாடு நம் இந்தியாவாகத்தான் இருக்கும்!

வளைகுடா கட்டுமான வேலைக்கு நிலத்தை விற்று ஏஜெண்டுக்குப் பணம் கட்டி விமான டிக்கெட் எடுத்து வந்து துபாயிலிருந்து தன் தாய் நாட்டிற்கு மாதம் நானூறு கோடி நிதியைத் தன் ரத்தம் சிந்தி 50மாடிக் கட்டிடத்தின் மீதும், ஐம்பது டிகிரி வெய்யிலிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே காற்றடித்து மண் விழுந்த நிலையில் மதியச் சாப்பாட்டை சாப்பிட்டு உழன்றபடியே உழைத்து அனுப்பி வைக்கும் செல்வக்குமார் மாதிரியானவர்களை தளரவைத்து, மனமுடைந்து தற்கொலை செய்ய வைப்போம்!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

38605
டெஸ்ட் மெசேஜ்!

Unknown said...

ஹரிஹரன் சார் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு (அரபியில் மியா மியா) சரியான கருத்து. நம் நாடு அவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இங்கு ஒரே வேலையில் பிலிபைனீஸ் மற்றும் நமது நாட்டவர் இருக்கிறார்கள். ஆனால் பிலிபைன்ஸ் நாட்டவருக்கு மட்டும் நல்ல சம்பளம், முறையான விடுமுறை மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்கின்றன ஆனால் நம்மவருக்கோ எல்லாம் முறையின்றி கிட்டுகிறது. காரணம் நமது கண்ஸ்லேட் எல்லா காரியங்களிலும் ரெம்ப லேட் !!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க செந்தில் அழகு,

ஒரு தூதர், 4 செகரெட்டரிகள், 50 அலுவலர்கள் கொண்டு செயல்படும் இந்திய தூதரகத்தை மட்டுமே பழிக்க முடியாது.

லட்சக்கணக்கான இந்தியர்கள் தினசரி வாழ்வு பற்றிய பாலிசி முடிவு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் + தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வளைகுடா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வங்கிக்கணக்கின் மூலமாகத் தரப்படும் சம்பளம், குறைந்தபட்ச ஆண்டு விடுமுறை நாட்கள், விமான டிக்கட் போன்றவற்றை உத்திரவாதம் செய்யும் வழிமுறையை வளைகுடா நாடுகளுக்குப் பயணப்படுமுன்பான மெடிக்கல் டெஸ்ட் போன்று கட்டாயமாக்கினால் வளைகுடா நாடுகளில் இந்திய தூதரகங்களில் பிரச்சினையோடு வரும் இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை குறையும், அப்போது தூதரகங்கள் பிரச்சினையை விரைவாக அணுகித் தீர்க்கமுடியும்.

நிறைய இந்தியாவில் பாலிசி அளவில் நடக்கவேண்டும்.

Anonymous said...

Romba varuthamaga iurkunga!

Romba ubayogamaana pathivu.

Anbudan,
Na.Anandkumar

மாசிலா said...

மேலும் ஒரு நல்ல பதிவு ஹரிஹரன்.

அரசாங்கமே இதற்கும் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

தாய்நாட்டுக்கே தம் மக்களின் நலண்களில் அக்கறை இல்லை என்கிறபோது, இடைதரர்கள், இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி மனிதர்களுக்கா அக்கறை வந்துவிடும்?

இதெல்லாம் இந்த இடைதரகர்களுக்கு ஒரு சாதாரண விசயமே. வந்தால் வரவு, வராவிட்டால் செலவு எனபதுபோல்தான்.

ஒவ்வொரு மாநிலமும் அயல் நாடுகளில் வேலை செய்யும் தம் மக்கள் பற்றிய நிலவரம், நலண், பிரச்சினைகள் ஆகிய போன்றவைகளை சரிவர ஆராய்ந்து கணக்கெடுத்து சோதனைகள் பல செய்து மக்களின் நல்வாழ்வுக்கும் வசதிகளுக்கும் வழிதேடவேண்டும்.

வெளி நாடு சென்றதும் அவர்களை அம்போ என அனைவரும் கைவிட்டு, இடைத்தரகளின் வசம் மாட்டிக்கொண்டு இன்னல் படும் இத்தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

அவர்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை மட்டும் வைத்து வங்கிகளும், அரசாங்கமும் நன்றாக வியாபாரம் செய்வதோடு இவ்விரு அமைப்புகளின் கடமை முடியவில்லை. இவ்வூழியர்களுக்கு எல்லோருக்கும் பாதுகாப்பு தருவதும் அரசின் கடமை.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க மாசிலா.

கட்டாயமான கல்லூரி வரையிலான கல்வி அனைவருக்கும் அவசியமாக்கப்பட வேண்டும்.

கல்வியால் மட்டுமே மக்களிடையே விழிப்புணர்வை பரவலாக எடுத்துவரமுடியும்.

தமிழகஅரசு சாராயம் விற்று 9000கோடி வியாபரம் செய்வதில் 70% குடும்பத்தலைவனை குடிகார தந்தையாக்கி அவர்தம் கைப்பொருளைக் களவாடுகிறது.

கல்வியில்லாத அடித்தட்டு மக்கள் கைப்பொருளை தங்களது அடுத்த தலைமுறையினர்க்கு கல்விக்குச் செலவிடுவதை போதிக்க வேண்டும் அரசு.

தினம் 100 ரூபாய் சாரயத்துக்கு செலவிடுவோர் 100x365 = Rs. 36,500 அளவுக்கு ஆண்டுக்கு கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்.

தன் கையே தனக்குதவி என்று அரசு விற்கும் சாராயத்தின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் கல்லூரி-கணிணிக் கல்வியினைக் கற்கவேண்டும்.

அரசுகள் மக்கள் நலம் குறித்து குறைந்தபட்சம் 10%மாவது நினைவில் வைத்துச் செயல்பட வேண்டும்.

வளைகுடாவில் மிக அதிக அளவில் இந்தியர்கள் மிகக்குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வந்து அல்லல்படும் நிலை மாற்ற அரசே குறைந்தபட்ச மாத சம்பளம் 250 அமெரிக்க டாலர்கள் என்றாவது நிர்ணயிக்க வேண்டும்.

திருவடியான் said...

ஹரிஹரன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பணிப்பெண்களுக்கு குறைந்த பட்ச அயல்நாட்டு ஊதியம் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். அதன்படி இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறும் அனுமதி மறுக்கப்படும். இதனால் சிங்கை, மலேசியா மற்றும் மத்தியக் கிழக்கு போன்ற நாடுகளில் இதை அனுசரித்து சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தியப் பணிப்பெண்கள்தான் பாவம், குறைந்த சம்பளம் பெறுகிறார்கள். காரணம், தூதர்களுக்கு இங்குள்ள குறைந்த ஊதியம் பெறும் இந்தியர்கள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லாதவர்கள்.

அமெரிக்காவில் கிரீன்கார்டு வாங்கிய நபரைப் பார்க்க அரசாங்க செலவில் விமான டிக்கட் வாங்கியதைப் பற்றிச் சொல்கிறீர்களே.. இன்னும் அமெரிக்கக் குடிமக்களாய்ப் போன விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு (கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ்) இந்திய மீடியாக்கள் தரும் விளம்பரம் அதீதமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்போர் யாருமில்லையா?

அது சரி, இனிமேல் இந்தமாதிரியான வெளிநாட்டு வேலை மோகத்தால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி இணையத்தளத்திலாவது எழுதி ஒரு விழிப்புணர்வை உண்டாக்கலாம் என்பது ஒரு சிறிய ஆறுதல்.

Azhagan said...

Your article is absolutely right. I believe, the awareness about the ways and means of getting a proper visa should be increased among Indians. Most of them arrive to the gulf thinking earning a job/money is easy. The agents lure them with lots and lots of lies. Unless the Government prevents people from leaving the country without proper job offers/visa, these things will continue. Once I came across about 50 people stranded at the Sharjah airport with fake visa papers. No one came to receive them, their return ticket was dated about 10 or 15 days later. Most importantly, none of them wanted to go back since all of them have borrowed money to land here(about 1 to 1.5lakhs, each). Sadly, some of them even knew they had only a visit visa and have to survive "somehow" in the strange land.