சென்னை மாதிரி பெரு நகரமானாலும், கிராமமானாலும் மனித உடல் எரியூட்டப்படும் இடம் சுடுகாடு! பிணமாகிவிட்ட மனித உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவது விறகினாலா அல்லது மின்சாராத்தாலா என்பது வேண்டுமானால் வேறுபடலாம். உடல் மனித மிருகத்தினுடையதாக இருப்பின்! சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டும் நபர் வெட்டியான்!
பிணம் எரிக்கப்படும் ஒரு சுடுகாட்டுக்கு வார இறுதியில் செல்லவேண்டும் என்று எந்த மனிதனும் விரும்புவதில்லை!
பிணம் எரிக்கப்படும் சுடுகாடுகளுக்கு நட்சத்திர அந்தஸ்து என்று தந்து மனிதன் வார இறுதி மற்றும் கொண்டாட்ட நாட்களைக் கொண்டாடுவதில்லை.
ஏனெனில் உயிரிழந்து பிணமான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்படுவது முற்றிலும் தன்னை ஒத்த உயிரினம் என்பதால்!
ஆனால் உயிருள்ள போது மனிதன் இதர பிராணிகளுக்குச் செய்யும் கொடுமைகளில் கொடூரமானது ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்கள் முதல் தட்டேந்தும் தள்ளுவண்டி உணவகம் வரை தினசரியாகக் காணப்படுவது!
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அலுவலக விஷயமாக சுயபரிமாறல் பஃபே லன்ச் ஆன் அல்லது டின்னர் என்றாலே பல்வேறு உயிரனங்கள் பிணங்களாக்கப்பட்டு பிணவாடை நிறைந்த அந்த நிகழ்வு என்னை வேறு தளத்தில் இட்டுச்செல்லும்.
தண்ணீரில் நீந்தும் மீனைப் பிணமாக்கிக் குடல்நீக்கிக் கொதிக்கும் எண்ணைய்ச் சட்டியில் போட்டு எடுத்து அடுக்கிவைக்கப்பட்டவை ஒருபுறம்!
ம்மே...ம்மே என்று நியுஸிலாந்தில் பிறந்து பாலைவன குவைத்துக்கு கப்பலில் பயணித்து பாலைவனத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் "ஹலால்"முறைப்படி கொலை செய்யப்பட்டு Lamb Stewவாகி விட்ட ஆட்டுக்குட்டியை நிரப்பிய சுடுசட்டி இன்னொருபுறம்!
தான் வாழமுடிந்தவரையில் எந்த ஒரு சுடுசொல்லும் பேசியிருக்கமுடியாத வாயில்லா ஜீவனான காளையின் நாக்கு துண்டிக்கப்பட்டு Ox tongue என்று சிறப்பு உணவாக ஒருபுறம்!
மெக்கானிக்கல்,குவார்ட்ஸ், கடிகாரம் என்று காலம் உணர்திடும் கருவிகள் வருமுன்னே, இருள் கவிந்த அதிகாலையில் வெயில் கொண்டு விழும் நிழலால் காலம் உணர்த்திய ஆதவனைப்போல் மனிதனுக்கு அவனது பொக்கிஷமான காலம் தூக்கத்தில் விரயமாகாமல் பல்வேறு ஆக்கமான காரியங்களுக்கு உதவிட கொக்கரக்கோ என்று கூவியும்... தொடைதட்டி சவால் ஏதும் விடாமல் பக்..பக்..பக் என்றபடிக்கு இருந்த சேவக்கோழிகள் தொடையறுக்கப்பட்டு வறுக்கப்பட்ட Leg Pieces அடுக்கப்பட்ட தட்டு இன்னொருபுறம்.
ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, இறால் இதர உயிரினங்களின் நெஞ்செலும்பு, மூளை, தலைக்கறி, ஆட்டுக்கால்சூப்பு, குடல்குழம்பு, ஈரல், இரத்தப்பொறியல்-ன்னு மனிதன் மிருகங்களைப் பிணமாக்கி, அதைத்துண்டுகளாக்கி அதை நீராவியில் வேகவைத்தும், நேரடியாக நெருப்பில் வாட்டியும், எண்ணையில் பொரித்தும் என்று செய்யும் வெகுபிஸியான ஹைடெக் வெட்டியான்!
வெந்த அரிசிக்குள்ளே புதைக்கப்பட்ட வேகவைத்த பிராணியின் பிணத்தை பிரியாணி என்று மென்று தின்று கொண்டாடுகிறான்!
கரி நெருப்பில் பாதி எரிக்கப்பட்ட பிணத்தை பார்பிக்யு என்று பாராட்டுகிறான்!
ஐந்து நட்சத்திர Buffet உணவகக் காட்சி என்னை எப்போதும் நிலைகுலைய வைக்கும்! சுய பரிமாறல் செய்யப்படும் பல்வேறு வகைப் பிணங்களினூடே, மீன், நண்டு, இறால், ஆட்டுக்குட்டி சதை, மாட்டிறைச்சி எனப் பலவாக அடிக்கும் பிணவாசனைக்கு மத்தியில் மனம் முற்றுலும் ஒடுங்கிய நிலையில் ப்ளைன் ரைஸ் + யோகர்ட் (தயிர்) உண்ணும் யோகியாகி யோசிக்க வைக்கும்.
கொல்லப்பட்டு உண்ணப்படுவது நம்மை மாதிரியான அதே வகை உயிரினம் எனில் மட்டுமே நம்மால் கொடுமையை முழுதும் உணரமுடியும்!
நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?
நம் வீட்டுக்குழந்தை மாதிரிக் கொல்லையில் பேர் வைக்கப்பட்டு வளர்ந்த பிராணியை வராத விருந்தினர் வந்தார்ன்னு தண்ணிக்குள் முக்கித் திணறடித்தும், கழுத்தைத் திருகியும், தலையைக் கொய்தும் கொன்று அதன் பிணத்தை உணவாக உண்டு மகிழ்வது...சே! என்ன ஒரு கொடூரம்!
பிணமாக்கப்பட்ட கோழியின் உடலோடு மிளகாய், மிளகு, பூண்டு என்று சேர்த்து Chilly Chicken, Pepper Chicken, Garlic Chicken... அடப்பாவிகளா அடுத்தமுறை ஷேவிங் ரேஸர் கீறல்மீதும், அடுக்களைக் காய்கறி நறுக்கிய கீறல் சிராய்ப்பின் மீதும் மிளகாய், மிளகு, பூண்டு பூசிப் பாருங்க... ஊண் செய்து உண்ணும் பெருங்கொடூரம் உறைக்கும்!
இதிலே நவீன உரிமைக்குரலாக இந்த பண்டிகைக்கு ஒட்டகத்தைத் தான் அறுத்துப் பிணமாக்கி உண்டு களிப்போம் என்று தான் வாழும் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒரு பிராணியைக் கொன்று பிரியாணியாக்கி உண்பது தங்கள் உரிமைக்குரல் என்று அடிமைத்தனம் நிரம்பிய ஒட்டக வெட்டியானாக விரும்பும் பாலைவன நம்பிக்கையாளர்கள்!
இதிலே கழுத்தை அறுத்துக் கொலை செய்வதில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பேச்சு!
தன் இருப்பை, பஞ்சபூதங்களை உணர்ந்து கொள்ளும் "கான்ஷியஸ்னஸ்" உள்ள, இதர சக பிராணிகளின் உயிரை எடுத்து பிணமாக்கி உணவாக்குவது இன்னொரு பிராணியான சிந்திக்க முடிந்த மனிதனுக்குள்ள உரிமையா? நிச்சயமாக இல்லை! முற்றிலும் இயற்கை ஸ்வரம் பிசகிய கொலை வெறி ஏறிய அசுரம்!
Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause!
பிராணிகளைக்கொலை செய்து உண்ணும் செயல்களின் விளைவுகள் அனைத்தும் தனக்கே திரும்பவரும்.
நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!
விலங்குகள் போல் இதர பிராணிகளின் பிணந்தின்னியாக மனிதன் வாழவேண்டிய கட்டாயம் இல்லை!
பகுத்தறிந்து கொல்லாமைக் கோட்பாடு பேணி வாழுங்கள்!
அன்புடன்,
ஹரிஹரன்