Tuesday, February 13, 2007

(119) தாத்தா மணி எத்தனை?!!! பாஸா? பெயிலா? காய் தெரியுமா?

பள்ளிக்கூட கோவில் திருவிழா நாட்கள் நினைவுகள் தொகுப்பு-2
போடியில் இருந்த நாட்களில் முருகன் கோவிலுக்கு தினமும் மாலையில் அப்போது தடியூன்றியபடியே வெறும் நாலுமுழ வேட்டி மட்டும் அணிந்து ஒரு தாத்தா வருவார். அவரிடம் போய் தாத்தா மணி எத்தனை? என்று கேட்டால் அப்படி ஒரு ஆவேசத்துடன் அவரிடம் இருந்து வசை மொழி கிடைக்கும்.

சிறுவர்கள் கூட்டத்தினரிடம் அவர் ஆவேசம் எடுபடாது. ஒளிந்து ஒளிந்து தாத்தா மணி எத்தனை? தாத்தா மணி எத்தனை? என்று அந்தத் தாத்தவை நோக்கிக் கேட்டுக்கொண்டே ஓடுவார்கள். அந்தத் தாத்தா 360 டிகிரிக்கு கைத்தடியைச் சுழற்றி, ஆவேசமாகக் கத்தி கத்தியே ஓய்ந்துபோவார்!

கோவிலில் இருக்கும் யாராவது ஒரு நடுவயது ஆள் வந்து ரெண்டு ரெட்டைச்சுழி ரெங்குடுகளை நாலு மொத்து மொத்தி சத்தம் போடும்வரை தாத்தாவிடம் மணி கேட்டு அவரை அவேசமாக்கி அவர் ஆவேசமாவதை கண்டு சிரிப்பான சிரிப்பாகச் சிரிப்பது சிறுவர்களுக்குப் பிடித்த பல ஆண்டுகள் தொடர்ந்த ஒரு விளையாட்டு!

முருகன் கோவில் பிரகாரத்தில் முன்பு நிறையத் தென்னை மரங்கள் இருக்கும். மாவிலிங்கேஸ்வரரை அடுத்து இருந்த ஒரு தாழ்ந்து வளைந்த பெரிய தென்னை மரம் சிறுவர்கள் ஏறிவிளையாட வெகுவசதியாய் இருக்கும். கீழே உதிர்ந்து கிடக்கும் தென்னங் குரும்பைகளை ஓசி மினி இளநீர் என்று கடித்து துவர்ப்பாய் குருத்தைச் சுவைப்பது, துர்க்கை சன்னிதிக்கு எதிரே இருந்த அரைநெல்லிக்காய் மரத்தினை உலுப்பி அதிசயமாய் அரைநெல்லிக்காய் உதிர்ந்துவிட்டால் அது எத்தனை பிஞ்சாக இருந்தாலும் அதைப்பொறுக்கித் தின்பது என்பது துர்க்கையின் அருள் கிட்டிய பரவசத்தினையும் மிஞ்சும் மகிழ்ச்சிதருவதாக சிறுவயதில் நான் உணர்ந்தது :-))

கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் என்று சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிரஹாரத்தை 108 முறை வயதான தந்தைவழிப் பாட்டியோடு போட்டி போட்டவாறே முதலில் 108முறை சுற்றிவந்து முதலில் முடித்து பாட்டி போகலாம்.. பாட்டி போகலாம் எனப் பாட்டியைத் தொணத்தி எடுப்போம்.

தீபாவளி சமயத்தில் கோவில் பிரஹாரத்தில், கடைவீதியில் திருவள்ளுவர் சிலை மூன்றாந்தலில் நடந்தேறும் நரகாசுரவதம் நிகழ்வு, பங்குனி உத்திரக் காவடியாட்டம் என நடராஜகுருக்கள் உயிரோடு இருந்தவரை உயிர்ப்போடு இருந்தது.

நடராஜகுருக்கள் முருகப்பெருமானாக வேல் ஏந்தியபடி போரிட்டு நரகாசுரனை வதைக்கும் காட்சிகள் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வெளிச்சத்தில், பக்தகூட்டத்தில் மிதந்து மெதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்துகளினின்று சிறப்புப் பார்வைக்கோணத்தில் கண்டுகளிக்கும் பேறு பெற்ற பஸ் பயணி பக்தர்களும் பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக்கொள்ள அரோகரா சத்தம் முழங்கும்.

கோடுபோட்ட டவுசர் தெரிய வெள்ளை வேட்டி கட்டி, டயர் செருப்பு அணிந்த பெருசுகள் கூட்டமாய் கூடிநின்று வேடிக்கை பார்க்க, என்கால்களை வதம் செய்யும் டயர் செருப்பு மிதிகள் வாங்கியபடியே நரகாசுரவதம் கண்டுகளித்த டவுசர் கால சிறு பிராய நினைவுகள் தனித்துவமானவை. இன்றைக்கு இம்மாதிரியான விஷயங்கள் முன்பு மாதிரியான விமரிசையுடனோ, ஏகோபித்த வரவேற்புடனோ நடப்பதாகத் தெரியக்காணோம்.

சித்திரை விழாக்காலங்களில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் வளாகத்தில் இளம்பிறை மணிமாறன், புலவர் கீரன், போன்ற பேச்சாளர்களது உரைகள் கேட்பது வாடிக்கை. பேச்சாளர்கள் உரை ஆரம்பிக்கும் முன்பாக மண்டபத்தில் ஒலிக்கவிடப்படும் பித்துக்குளி முருகதாஸின் பாடல்கள், ஊத்துக்காடு பாடல்களை பித்துக்குளித்தனமாய் முருகதாஸ் வித்தியாசமாகப் பாடக் கேட்டு ரசித்தது (பின்னாளில் அதே ஊத்துக்காடு பாடல்களை ஜேசுதாஸ், இதர பாடகர்கள் முற்றிலும் வேறுபட்டுப் பாடியதைக் கேட்டு ரசித்தது தனி)


முருகன் கோவில் தெற்குப் பிரஹாரத்தில் ஆஞ்சநேயர்-பெருமாள் சன்னதிக்கு இடையே வில்வ மரத்தின் காய்கள் கீழே விழும். கோவில் வளாகத்தில் இருந்த மரங்களின் காய்களில் தின்னமுடியாத காய் வில்வக்காய்தான். ஆனால் கொஞ்சம் பெரிய கிளாஸ் படிக்கும் சிறுவர்களிடையே வேறு விதத்தில் மரியாதையான பெருமதிப்பைப் பெற்று இருந்தது.

முழுப்பரீட்சை எழுதிவிட்டு கோடை விடுமுறையில் ரிசல்ட்டை எதிர்நோக்கியிருக்கும் பெரிய கிளாஸ் சிறுவர்கள், தங்கள் கையில் கோவில் தெற்குப் பிரஹார வில்வமரத்தில் இருந்து உதிர்ந்த வில்வக் காயுடன் வடக்கு பிரஹாரத்திலிருக்கும் நடராஜர் சன்னதி அபிஷேக தீர்த்தம் வெளிவரும் யாளிமுகத் தூம்பில் முகம்பதித்து பாஸா? பெயிலா? என்று நடராஜப் பெருமானிடம் கேள்வி கேட்டுவிட்டு கையோடு எடுத்துவந்த வில்வக் காயை தரையில் வீசி அடிப்பார்கள்.

வீசி அடித்த வில்வக்காய் சிதறி உடைந்துவிட்டால் நடராஜ பெருமானே பரீட்சையில் "பாஸ்" என்று சொல்கிறார் என்றும், அப்படி முற்றிலும் உடைந்து சிதறாமல் வெறும் கீறல்களுடன் வில்வக்காய் உருண்டோடினால் நடராஜப் பெருமானே பரீட்சையில் "ஃபெயில்" என்று சொல்வதாகவும் ஏகமனதாக வில்வக்காய் உடைதல் அருள்வாக்கு இண்டர்பிரடேஷன் சிறுவர்கள் உலகில் நிலவியது.

சிவராத்திரிக்கு சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கும். சிவலிங்கத்தை அன்னத்தால் அலங்காரம் செய்து பூஜை , அடுக்கு தீபாராதனை முடிந்தபின் அலங்கார அன்னம் களைந்து வற்றல் குழம்பில் பிசைந்து தொன்னையில் பிரசாதமாகத் தருவார்கள்.சிவலிங்கத்தின் பழைய எண்ணைய்ப்பூச்சு (மெல்லிய)வாசத்துடன் சுவையாக இருக்கும்.

சமீபமாகச் 2006 ஆகஸ்டில் சென்றபோது மாவிலிங்கேஸ்வரர்->காசிவிஸ்வநாதராக மாறிவிட்டிருந்தார். (மாவிலிங்கேஸ்வரர் பெயர்க்காரணமான மாமரம் பட்டுப்போய் புதிய மரம் வளராததாலா? ) பிரதோஷத்துக்கு கூட்டமான கூட்டம் வருகிறது கோவிலுக்கு. 50மடங்கு அதிகமான கூட்டம்.

முன்பு கேட்ட பித்துக்குளி முருகதாஸ் பாட்டு கேட்டால் நினைவுகள் என்னை எனது டவுசர் காலத்திற்கு இட்டுச் செல்லும். விடுமுறை நாளின் 11-12 மணி காலைப்பொழுதில் வெய்யில் ஏறிய பிரகாரம், முருகன் சன்னதி துவஜஸ்தம்பத்தினைத் தொட்டு வணங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் போது உண்டியல் மேல் அமர்ந்து கரைகின்ற காகம், உச்சிகால பூஜைக்கு இசைக்கப்படும் தவில், நாதஸ்வர, கோவில்மணி ஓசை என கால்நூற்றாண்டுக்கு முன்பான வாழ்வுமுறை நினைவுக்கு வருகிறது.

தினசரி மாலை நேரத்தில் ஒருமணிநேரத்திற்கும், வாகனமேறி உற்சவர் நகர்வலம் வரும்போதும் நாதஸ்வரக்காரரும், அவர் மகளும் என இரட்டை நாதஸ்வரம், ரெண்டு தவில் வித்வான்கள் என்று பெரிய ஈடுபாட்டுடன் இசையிலேயே உரையாடுவார்கள்.

இப்போது முருகனுக்கு முக்கால பூஜைக்கும் கருங்கல் தூண்களிடையே அந்தரத்தில் வைக்கப்பட்ட ஆட்டோமேடிக் மெஷின் மூலம் ஒலி (கர்ணகடூரமாக) எழுப்பப்படுகிறது.

காலம் ஓடிவிட்டது. வாழ்வுமுறை முழுதுக்கும் , வழிபாடுகள் வரைக்குமாக இயந்திரமயமாகிவிட்டது:-))

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Hari said...

பாஸா பெயிலா என்று சீட்டு குலுக்கி, கடவுளை உதவிக்கு கூப்பிடவது என்று நான் செய்ததெல்லவற்றையும் நினைவுபடுத்தி விட்டீர்கள்.


இப்போது முருகனுக்கு முக்கால பூஜைக்கும் கருங்கல் தூண்களிடையே அந்தரத்தில் வைக்கப்பட்ட ஆட்டோமேடிக் மெஷின் மூலம் ஒலி (கர்ணகடூரமாக) எழுப்பப்படுகிறது.

காலம் ஓடிவிட்டது. வாழ்வுமுறை முழுதுக்கும் , வழிபாடுகள் வரைக்குமாக இயந்திரமயமாகிவிட்டது:-))


முற்றிலும் சரி. இந்த இயந்திரமாக்கலுக்கு நாம் அனைவருமே ஒரு வகையில் காரணம்

வடுவூர் குமார் said...

ஆனால் கொஞ்சம் பெரிய கிளாஸ் படிக்கும் சிறுவர்களிடையே வேறு விதத்தில் மரியாதையான பெருமதிப்பைப் பெற்று இருந்தது.
இப்படி ஒரு மதிப்பா அந்த காய்க்கு.
எங்கூரில் நாங்க இந்த மாதிரி விளையாடியதில்லை.
அப்பா கிட்ட அடிவாங்கவில்லை என்றால் பாஸ் மற்றதுக்கு பெயில்.

இலவசக்கொத்தனார் said...

//சமீபமாகச் 2006 ஆகஸ்டில் சென்றபோது மாவிலிங்கேஸ்வரர்->காசிவிஸ்வநாதராக மாறிவிட்டிருந்தார். (மாவிலிங்கேஸ்வரர் பெயர்க்காரணமான மாமரம் பட்டுப்போய் புதிய மரம் வளராததாலா? ) பிரதோஷத்துக்கு கூட்டமான கூட்டம் வருகிறது கோவிலுக்கு. 50மடங்கு அதிகமான கூட்டம்.//

பெயர் மாற்றத்திற்க்ப் பின் கூட்டம்? நியூமராலஜி?!! :))

Hariharan # 03985177737685368452 said...

//Hari said...
பாஸா பெயிலா என்று சீட்டு குலுக்கி, கடவுளை உதவிக்கு கூப்பிடவது என்று நான் செய்ததெல்லவற்றையும் நினைவுபடுத்தி விட்டீர்கள்.//

கொசுவர்த்தி சுழன்றதா தங்களுக்கும்
:-)

//முற்றிலும் சரி. இந்த இயந்திரமாக்கலுக்கு நாம் அனைவருமே ஒரு வகையில் காரணம் //

எல்லோரும் டிவி சீரியல்ல மூழ்கி முத்தெடுக்குறாங்க!! காசு காசுன்னு ஓட்டமா காசைத்துரத்திட்டு ஓடுகிறோம் :-))

Hariharan # 03985177737685368452 said...

//இப்படி ஒரு மதிப்பா அந்த காய்க்கு//

பயபக்திகூடிய தெய்வீகக் காய் அது:-)

//எங்கூரில் நாங்க இந்த மாதிரி விளையாடியதில்லை.
அப்பா கிட்ட அடிவாங்கவில்லை என்றால் பாஸ் மற்றதுக்கு பெயில்.//

அப்பாக்கிட்ட அடிவாங்கமா வலுவான அஸ்திவாரம் போட்டிருபக்கீங்க அப்பவே ... தான் இப்ப பெருசு பெருசா கட்டடம் கட்டுறீங்க :-))

Hariharan # 03985177737685368452 said...

//பெயர் மாற்றத்திற்க்ப் பின் கூட்டம்? நியூமராலஜி?!! :))//

சிவனுக்கே நியூமராலஜியா?? தாங்காது சாமீ..

Hariharan # 03985177737685368452 said...

//சிறுவயதில் தினம் தோரும் ஓடி விளையாடிய என் முருகப் பெருமானிடம் எடுத்துச் சென்று விட்டது உங்கள் நினைவலைகள்.//

வாங்க வரதன்,

உங்களையும் முருகப்பெருமான் நினவுகளில் ஆக்கிரமித்துக்கொண்டாரா?
நல்லது தான். எல்லாம் அந்த முருகனருள் :-))