Monday, April 23, 2007

(154) பற்றற்ற நிலைக்கு காட்டில் முனிவராக்த்தான் இருக்கணுமா??

பற்று அற்று இருந்தால் வாழ்வில் இனிமை கூடும்! வீண்சச்சரவுகள் குறையும்!

ஆனால் இன்றைக்கு 2007ல் நாம் அனைவரும் வாழும் வாழ்க்கையில் பற்றுதல் வைக்காமல் வாழ்வது சாத்தியமா?

பற்று அற்று வாழும் முறையை அறிய நாம் ரிஷிகளை/முனிவர்களைத் தேடி காட்டுக்குப் போய்த்தான் கற்று வரவேண்டுமா?

இன்றைக்கு முற்றும் துறந்த பற்று அற்ற முனிவர்கள்/ரிஷிகள் காட்டிலாவது கிடைப்பார்களா?

இன்றைக்கு நாம் வாழும் இடத்திலேயே பற்று அற்ற தன்மைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன!

ஒவ்வொரு வங்கியிலும் இடஒதுக்கீட்டு வழியாகவும், திறந்த போட்டி மூலமும் வந்து பணியாற்றும் பற்று அற்ற வாழ்வு வாழும் நவீன முனிவர்கள்/ரிஷிகள் இருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களா?

டெல்லர் கவுண்டர் கேஷியர்கள் நவீன முனிவர்கள்! ஸ்டிராங்க் ரூம் சாவி வைத்திருப்பவர் நவீன ரிஷி!

வங்கியின் காசாளர்கள் தினமும் லட்சக்கணக்கில் / கோடிக்கணக்கில் தங்கள் கைகளால் 1000,500,100 என்று புத்தம்புதிய நாசிக் கரன்ஸி நோட்டுகளைக் கையாள்பவர்கள். இருந்தும் இல்லாமல் இரு எனும் சித்தர் தத்துவப்படி டெல்லர் கூண்டுக்குள் முனிவர்களாக வாழ்பவர்கள்.

ஸ்டிராங்ரூம் எனப்படும் லாக்கர் ரூமில் இருக்கும் எல்லா லாக்கரின் மாற்றுச்சாவி கைவசம் வைத்திருக்கும் வங்கிப்பணியாளர் லாக்கர்களில் தன்னிடம் இல்லாத பல்வேறு நகைகள், சொத்துக்களின் பத்திரங்கள் என அடுத்தவரின் எல்லா உடமைகள் இருந்தாலும் அலட்டாமல் ஸ்டிராங்ரூமில் இருப்பவர்.

கோடிகள், லட்சக்கணக்கில் தினமும் பரிவர்த்தனை செய்யும் காசாளர் அன்றைக்கு பரிவர்த்தனை செய்த பணத்தை டேலி செய்யும் போது கூட்டலில் ஒரு 100 ரூபாய் குறைந்து வித்தியாசம் வரட்டும், கோடிக்கணக்கிலான பணத்தோடு தான் இருந்த நேரத்தில் வராத பதற்றம் அவருக்கு வரும்! ஏனெனில் தனது 100 ரூபாயோடு தனக்கு இருக்கும் பற்றுதல் ஏற்படுத்தும் பதற்றம் அவரது நிம்மதியை இழக்கச் செய்கிறது!

500 ரூபாய் டேலி ஆகவில்லை என்றால் அவருடைய வீட்டில் இருப்பவரது நிம்மதியும் காலி! சில சமயம் காசாளர் டெல்லர் கூண்டுக்குள் அன்றைக்குப் பரிவர்த்தனையாகும் பணத்தைத் தனதாகக் கருதினால் என்ன ஆகும்?? கையாடல் நடக்கும்! அந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்கள் நிம்மதி போகும்.

லாக்கர் ரூமின் லாக்கர்கள் தன்னுடையது என்று வங்கிப்பணியாளர் கருதி, தன்வசம் இருக்கும் மாற்றுச்சாவிகொண்டு லாக்கர்களைத் திறந்து அதில் இருக்கும் நகைகள், சொத்துப்பத்திரங்களை தனதாக எடுத்துக் கொண்டால்??

நாமிருக்கும் இந்த உலகத்தை டெல்லர்/விரைவுக் காசாளர் கூண்டு என்று எடுத்துக் கொண்டால் அங்கு நடக்கும் பரிவர்த்தனைகளில் பற்றுதல் இல்லாமல் இருக்கும்வரை நிம்மதி மேலோங்குகிறது!

நம்மூர் அரசியல் வாதிகள் பொதுமக்கள் சமூக நலத்திட்ட நிதியில் குறிப்பாக வைக்கும் பற்றுதல் ஊழலாகி உலகை வலம் வருகிறது!

இன்றைக்கு நகரங்களில் ப்ளாட்டில் வசிப்பவர்கள் ஓரளவுக்குப் பற்றுதல் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 10 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இரண்டாம் மாடியிலிருந்து 9ம் மாடி வரை வசிப்பவர்களுக்கு கீழேதரையும், மேலே கூரையும், பக்கவாட்டுச் சுவர்களும் சொந்தமில்லை!

தனி மனிதப் பற்றுதல்களை விடவும் ஆட்சி அதிகாரம் என்றுபதவியில் இருப்பவர்களின் பற்றுதல்களால் நாட்டில் அநேக குழப்பம் ஏற்படுகிறது! அதிலும் தான், தன்மகன், பேரன், பேரனின் பேரன் வரை சிந்தித்து வரும் பற்றுதல்கள் நாட்டைக் காடாக்குகிறது!

"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவனுடையதாகிறது!"

"எதைக்கொண்டு வந்தாய் நீ அதை இழந்தேன் என்று சொல்வதற்கு?"

எனும் கீதை உரைகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் பற்றுதல் மனப்பான்மையினை நீர்த்துப்போகவைத்து மனதை லேசாக்கும்!

"ஆசையே துன்பத்திற்குக் காரணம்" எனும் சித்தார்த்தனின் கூற்றும், ஆசையால் அடையவேண்டும் எனும் எண்ணம் எழ, ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றம் பின் சினமாகி, சினத்தால் சிந்திக்கும் திறன் இழந்து, சரியாகச் சிந்திக்காத செயல்களால் மொத்தமாக நாசமடைவது உறுதி! கீதை படிப்படியாக மனிதனின் இறக்கத்தைச் சொல்லி முறையாக ஒருவன் தன்னை வழிநடத்த உதவுகிறது.

நிறையப் பற்றுதல்கள் பல்வேறு விஷயங்களில் நமக்கு இருக்கிறது. குழந்தை பர்ஸ்ட் ரேங்க் வரவில்லை என்றால் மனமுடைகிற பல ஆட்கள் இருக்கிறார்கள். குழந்தைக்கு படிப்பு, செயல்பாட்டுக்கு வழி காட்டுவது கடமை. அதில் சில சமயம் குழந்தையால் பிரகாசிக்க இயலாமல் போகும் போது தன் ஆசையைப் புகுத்துவதால் ஏற்படும் ஏமாற்றம் மனமுடைய வைக்கிறது.

வலைப்பதிவுகளில் பின்னூட்டத்தின் மீது பற்றுதல் வைப்பதால் ஒருவரே 10 பெயர்களில் தமக்குத்தாமே பின்னூட்டிக்கொண்டு கும்மி அடிப்பது நடந்தேறுகிறது :-))

ஒருவர் தனக்குள்ள மிகையான பற்றுதல்கள் அளவைப் படிப்படியாகக் குறைத்தாலே மனம் விரிவடையும். கொதிப்பு, கோபம் குறையும். பலரை நம்குடையின் கீழ் அனுமதிக்க, அவர்களுக்கு உதவ என அடுத்த தளம் நோக்கி முன்னேறலாம்!

வங்கிக்காசாளர் டெல்லர் கூண்டுக்குள் இருப்பதுமாதிரியான மனோபாவத்தை விரிவுபடுத்தி அடுத்த செயல்களுக்கும் அமல்படுத்தினால் மேம்படலாம்!

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

கோவி.கண்ணன் said...

//வங்கிக்காசாளர் டெல்லர் கூண்டுக்குள் இருப்பதுமாதிரியான மனோபாவத்தை விரிவுபடுத்தி அடுத்த செயல்களுக்கும் அமல்படுத்தினால் மேம்படலாம்!//

நற்சான்று !

பொன் வானவில் said...

எது சரி எது தவறு என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது. வாழ்வில் பற்றற்று இருந்தால் தான் நல்லது, அது தான் இன்பத்துக்கு வழிவகுக்கும் என்பது மரமண்டைக்கு நன்றாகவே உறைக்கிறது. இருந்தாலும் நடைமுறையில் செயல்படுத்த முடியவில்லையே ...

Hariharan # 03985177737685368452 said...

தங்கள் வருகைக்கு நன்றி கோவி. கண்ணன்