(136) உதயசூரியன் என்றாலே புரட்டு...பொய் என அறியுங்கள்!
பகுத்தறிவு என்று ஒன்று தனித்து இல்லாது போனாலும் பொதுஅறிவு என்பது இருப்பின் உதயசூரியன் எனும் மாயையில் இருந்து விடுபட்டு விடலாம். வற்றாத ஜீவநதியாக பகுத்தறிவு வெள்ளம் பாயும் தமிழ்நாட்டில் உதயசூரியன் என ஏற்படுத்தப்பட்டது வெறும் மாயை என அறிய வேண்டியது ஏன் அவசியம் ஆகிறது?
தினம் காலை எழுந்தவுடன் எப்போதும் உதிக்காதது ஒன்று உதயசூரியன் என்று உதித்துத் தன் அறிவை மறைக்கும் மாயை பற்றி ஒரு நபர் அறிய வேண்டியது அடிப்படைத் தேவை.
பகுத்தறிவு உட்பட எல்லா விதமான அறிவின் மெய்யான ஆசான் பகலவன் எனப்படும் சூரியன். அடிப்படையாகச் சூரியன் பற்றிய தெளிவு இல்லாமல் காலையில் கிழக்கில் உதிப்பது உதயசூரியன் மேற்கில் மறைவது அஸ்தமன சூரியன் என்று நாம் பொதுவாகச் சொல்லிக்கொள்கிறோம்!
உதயசூரியன் எனும் வார்த்தை முதலில் தமிழ்ச்சொல்லா?
இல்லை உதயசூரியன் என்பது 100% சமஸ்கிருத வார்த்தை.
தெள்ளிய தமிழில் உதயசூரியனைக் குறிப்பிட "எழும் ஞாயிறு' எனலாம்."
அப்படியாயின் உண்மையாக ஞாயிறு எழுமா? தினசரி எழுகிறதா ஞாயிறு?
உண்மையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் இல்லங்கள் தோறும் இருக்கும் "நேற்று கிழமை சனி எனில் இன்று கிழமை என்ன? பதில்: ஞாயிறு" என்கிற கடுமையான புதிர், தத்துவங்களுடனான சிவகாசி தினசரி காலண்டரின் ஞாயிறு வேண்டுமானால் சீலிங்கில் தினசரி தொங்கும் ஃபீலிங் இல்லாதிருக்கும் கேதான் /க்ராம்ப்டன்/ஓரியண்ட்/போலார் மின்விசிறி ஓடும்போது காற்றில் ஆடியபடியே எழும்.
உதயசூரியன் குறித்த வானியல் உண்மை என்ன?
நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. சூரியன் வெகு உயரத்தில் அப்படியே நிலையாகவே இருக்கிறது. பூமி சுற்றுவதால் சூரியனின் ஒளி எல்லா நேரத்திலும் பூமியின் முழுப்பரப்பின் மீதும் விழுவதில்லை. சூரியனைப் பார்த்திருக்கும் பூமியின் பகுதியில் சூரிய வெளிச்சம் விழும் நேரம் பகல் என்றும், அதேநேரம் சூரியக்கதிர்கள் விழாத, பூமியின் அடுத்த பகுதி சூரியனைப் பார்க்க இயலாத நேரம் இரவென்றும் அழைக்கப்படுகிறது.
நாமிருக்கும் பூமியானது தன்னைத் தானே சுற்றிச் சுழன்று கொண்டே இருப்பதால் பகல், இரவு என்பதாக சூரிய வெளிச்சம் மாறி மாறி பூமிப்பரப்பில் விழுகிறது! இதனால் நமக்கு சூரியன் தினசரி எழுந்து விழுவதாகத் தோன்றுகிறது.
ஆக உண்மையில் சூரியன் எங்கே உதிக்கிறது? உதித்தால் தானே அஸ்தமிக்க?
வானில் இருக்கும் கோள்களில் எப்போதும் நிலையானது சூரியன்.
வான் வெளியில் சூரியனின் இந்த நிலைத்த தன்மையால்தான் இதர நகரும் கோள்களின் ரெபரன்ஸ் பாயிண்ட் என சூரியன் கருதப்படுகிறது. நகராத மையப்புள்ளியாக சூரியன் இருந்துகொண்டு, தன்னைச்சுற்றிவரும் இதரகோள்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு சூரியக்குடும்பம் என அமைக்கிறது.
உண்மையில் பூமியை உள்ளடக்கிய, உண்மையான சூரியக்குடும்பத்தின் தலைமையான சூரியன் உதித்தும், அஸ்தமித்தும் என இருந்தால் வானியல் சூரியக்குடும்பமே குளோஸ்!
அப்போ தமிழ்ச்சொல்லாக இல்லாத, வானியல் நிஜத்தில் இல்லாத உதயசூரியன்? தமிழ்நாட்டில்
உதயசூரியனை இன்றுவரை உண்மை என்று நம்பிய பாட்டாளி முதல் படிப்பாளி ஆகியோர் நிலை?
வேற வழி ஏதும் இல்லை. உதயசூரியன் என்கிற மாயையை நம்பியது தவறு என்று உணர்ந்து சுழலும் பூமியால் விளையும் மாயத்தோற்றமே உதயசூரியன் என்று உங்கள்
கருத்தை உண்மையின் பக்கம் மாற்றிக்கொள்ளுங்கள்.
குறிப்பு:
இது வானியல் வகையிலான உண்மையைச் சொல்லும் பதிவு. உதயசூரியன் கட்சி கருணாநிதி மந்திரிசபையில் மந்திரிகள் ஆக முடியாமல் பாட்டாளியின் கனவு இப்படி வெம்பிய மாம்பழம் ஆகிடுச்சே என ஃபீல் ஆகும் பாமக கட்சி ராமதாஸ் உளைச்சலைச் சொல்லும் பதிவல்ல!
அன்புடன்,
ஹரிஹரன்
3 comments:
உதயசூரியன் ஒரு மாயையா?
திராவிடத்தின் ஒளிக்கதிராக, திம்மிகளின் விடிவெள்ளியாக, சுயநலங்களின் குணக்குன்றங்களாக நாங்கள் இத்தனை வளர்ந்திருப்பது தெரியாமல் எங்களை மாயையென்றெண்ணும் தங்களின் அறியாமையையென்னி வருத்தம்!!!
//உதயசூரியன் ஒரு மாயையா?//
பூமியைப் பொறுத்தவரையில் உதயசூரியன் என்பது மாயைதான்!
தமிழ்நாட்டின் வானியலிலும் அப்படியே!
அரசியலில் ஆளுக்கொரு கருத்து!
உதயசூரியனை மாயை என்போர் உண்டு!
உதயசூரியனை மாயை என்போர்தான் மாயை என்போரும் உண்டு!
உண்மையில் எது 100% உண்மையான மாயை... எது மாயை அற்ற 100%உண்மை... எனப் பகுத்தறிவது அவரவர் பொறுப்பு :-))
அந்த கடைசியாக ஒரு குறிப்பு கொடுத்துள்ளீர்களே அது தான் பதிவோ என்று நினைத்தேன்.நல்ல வேளை தெளிவுபடுத்திவிட்டீர்கள்.:-))
புளூட்டோவை தூக்கியதற்கு "இங்கு" ஏதாவது நேருமா?
Post a Comment