Thursday, March 01, 2007

(124) பகுத்தறிவு சுனாமி தமிழகத்தில் ஒழித்த சாதி பேதம்

விளாங்குடி பாண்டியன் டூரிங் டாக்கீஸ். ஊருக்கு வெளிப்புறமாக டிடிஎஸ் எபெக்ட் அமையப்பெற்ற திரையரங்கு என்பதைச் சொல்லும் விதமாக குழாய் ரேடியோ ஸ்பீக்கர்கள் மூங்கில் கம்பத்தில் கட்டப்பட்டு இருந்தது.


தினசரி ரெண்டு காட்சிகள்தான். வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டும் மூணுகாட்சிகள் ஓடும் டூரிங் திரையரங்கம் பாண்டியன்.

அன்றைக்கு ஞாயிறு மத்தியான மேட்னி ஷோவின் ரெண்டாவது இடைவேளையின் போது புரொஜெக்டர் ரூமில் அடுத்த ரீலை மாட்டிக் கொண்டிருந்தார் திரையரங்க மேலாளர் கம் ஆபரேட்டர் கம் பார்ட்னரான பாண்டியன்.

பழைய டப்பிங் திரைப்படங்கள் அடிக்கடி ஓடும் திரையரங்கம். திரையரங்க பார்ட்னர் பாண்டியன் சல்லிசாக வந்த பழைய டப்பிங் மலையாள மம்மூட்டி நடித்த திரைப்படம் இப்படி திடீர்ன்னு தீமூட்டி விவகாரம் ஆக்கும்னு எதிர்பார்த்திருக்கவில்லை.

மீண்டும் சாதிப்புழுதியைக் கிளப்பி முன்போல் புகழுச்சிக்கு எப்படியாவது வரவேண்டும் என்ற பசியோடு காத்திருந்த பழுப்புச்சட்டைப் பகுத்தறிவுக் கட்சிக்கு நகரத்துக்கு வெளியே விளாங்குடி பாண்டியனில் ஓடும் பழைய மலையாள டப்பிங் திரைப்படத்தை வைத்து சாதிபேதத்தின் மீது மீண்டும் விளக்கு வெளிச்சம் போடக் கிடைத்த சந்தர்ப்பம் என்று உடனடியாகச் செயலில் இறங்கியது.

பழுப்புச்சட்டைப் பகுத்தறிவு இயக்கக் கதிரவனுக்கு போன் போட்டான் சக போராளி பரமு. கதிரவா எங்கே இருக்க? இப்போ தமுக்கம் "தேவர்" சிலை அருகே இருக்கேன் வர்ற வழியில் சிம்மக்கல்ல "நாடார்" ஹார்டுவேர்ஸ் கடையில் கருப்பு பெயிண்ட், பிரஷ் வாங்கிட்டு ஒரு பத்துநிமிஷத்தில் அரசரடியில் இருப்பேன்.. வந்ததும் உடனே ஊர்வலமாக் கிளம்பிடலாம்.. பேனருக்கு மல்லுத்துணி "செட்டியார்"கடையில வாங்கிக்கோன்னு போன் இணைப்பைத் துண்டித்தான்.

அவசர அவசரமாக எதிர்ப்பு வாசக பேனர்கள் தயார் செய்யப்பட்டன. கருப்பு பெயிண்ட், தார் டப்பாக்கள் சகிதம் கிளம்பினர் ரெண்டு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் விளாங்குடி பாண்டியன் திரையரங்கை நோக்கி.

அரசரடியிலிருந்து ஆட்டோவில் வந்த பகுத்தறிவுத் தோழர்கள் காளவாசலில் காத்திருக்கும் சகாக்களுடன் கூட்டமாகச் சேர்ந்து பேனர்களுடன் நடக்க ஆரம்பித்தனர். ஃபாத்திமா பெண்கள் கல்லூரி அருகாமையில் கூடுதலாக வீரம் குரலில் தெறிக்க ஆர்ப்பாட்ட கோஷங்கள் முழங்யபடியே முன்னேறினர்.

பகுத்தறிவுப் போராட்டத் தோழர்களில் ஒருவனான பரமு வழியில் எதிர்ப்பட்ட சாலையோர பனைமரத்தடியில் இருந்தவாரே எல்லோருக்கும் அருள்பாலிக்கும் "வழிவிடும் பெருமாளிடம்" தான் பங்கேற்கும் பகுத்தறிவு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டான்.

பரமுவின் பழுப்புச்சட்டை பகுத்தறிவுச் சீருடையால் மதிய வெய்யில் உண்மையாகவே கொளுத்தியதில் வியர்வை விடுதலை அடைந்து சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டது (பரமு பகுத்தறிவுக் கொள்கையில் ஒட்டிக்கொண்டமாதிரி).

பரவை, சமயநல்லூர், சோழவந்தான் செல்லும் 29 நம்பர் நகரப்பேருந்துகளும் வாடிப்பட்டி விரையு, 71ம் வழித்தடப் பேருந்துகளிலும், திண்டுக்கல் செல்லும் வயிரவன், நல்லமணி, சோலைமலை பேருந்துகளின் பக்கவாட்டில் தட்டி போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தியபடியே விளாங்குடி பாண்டியன் திரையரங்கை முற்றுகையிடுகின்றார்கள்.

சாதிப்பெயர் பெயராகக்கொண்ட திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கம் ஒழிக! திரைப்பட இயக்குனர் ஒழிக! அதில் நடித்த பார்ப்பன அடிவருடி மம்மூட்டி ஒழிக என கோஷமிட்டபடியே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்தச்சொல்லி பரமுவுடன் நான்கைந்துபேர் சென்று ஆபரேட்டர் ரூம் கதவைத் தட்டி குரலெழுப்புகின்றார்கள்.

அடுத்தகுழு கையோடு எடுத்துவந்த கருப்பு பெயிண்டால் ஓடிக்கொண்டிருக்கும் டப்பிங் மலையாள மம்மூட்டி பட போஸ்டர்களில், நகரும் விளம்பரத்தட்டியில் இருக்கும் திரைப் படத்தின் பெயரின் மீது கரிபூசி அடிக்கின்றார்கள். திரையரங்க வளாகத்தில் இருக்கும் போஸ்டர்களைக் கிழிக்கின்றார்கள்.

மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி நடித்த "அய்யர் தி கிரேட்" திரைப்பட போஸ்டருக்குக் கறுப்பு பெயிண்ட் அடித்துப் போராட்டக்குழு சாதி ஒழிப்புச் செய்ததில் "தி கிரேட்" என ஆக்கி கிரேட் ரெவல்யூஷன் செய்த திருப்தி அடைந்தனர்.

போராட்டாம், ஆர்ப்பாட்டம் எனத் தகராறு பெரிதாகி போலீஸ் கீலீஸ் வந்தால் டூரிங் பெர்மிட்டை எடு காலாவதியாகி ரெண்டாண்டு ஆச்சே என்று செலவு பெரிதாகவருமே என்பதால் வந்த பதபதைப்புடன் ஓடோடி வந்த திரையரங்க பார்ட்னர் பாண்டியன் போராட்டக் குழுவின் தலைவனான கதிரவனை இன்ஸ்டண்ட் அன்பால் கிரஹணம் போல் அரவணைத்தார்.
அடுத்த ஷோவுக்கு படத்தை மாற்றுவது என்று ஒப்புக்கொண்டார்.

மலையாள டப்பிங் படமான, சாதிபேதத்தைத் தூண்டிடும் படமான, சமூகப் பிளவுக்கு வழிகோலும் திரைப்படமான "அய்யர் தி கிரேட்"டுக்கு எதிராக ஆர்ப்பரித்து, விழிப்புணர்வுடன் போராடிய பழுப்புச்சட்டைப் பகுத்தறிவு இயக்கக் கதிரவனையே அடுத்த ஷோவுக்கு வேறு திரைப்படங்கள் இரண்டில் ஒன்றை மாற்றாகத் தெரிவு செய்ய வேண்டினார் பார்னர் பாண்டியன்.

பழுப்புச் சட்டை பகுத்தறிவுக் கதிரவனுக்குப் பாண்டியன் டூரிங் திரையரங்க பார்ட்னர் பாண்டியன் மாற்றாகத் தந்த படங்கள் : 1. தேவர் மகன் 2. சின்னக் கவுண்டர் 3. கவுண்டர் பொண்ணா கொக்கா?

பார்ட் டைமாக "பரவை சரக பாயும்புலி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளலரான" பகுத்தறிவுக் கதிரவனுக்கு தேவர்மகனாக ஆரம்பித்து சண்டியராக விவகாரமாகி விருமாண்டியாகி தற்போது பத்து அவதாரம் எடுத்துவரும் கமலஹாசன் காலடிமண்ணைப் போற்றிப்பாடுவதா என எண்ணங்கள் ஓடியது.

போராட்டம் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டு ஏற்பட்ட சமரசத்தைத் தெரிவிக்கும் விதமாக பார்னர் பாண்டியன் அருகாமை புரோட்டா ஸ்டாலில் இருந்து அவசரமாகத் தருவித்த பரோட்டா, குஸ்கா, சிக்கன் லெக் பீஸை சுவைத்தபடியே பகுத்தறிவுக் கதிரவன் அய்யர் தி கிரேட்டுக்கு மாற்றாகப் தெரிவு செய்த படம் "சின்னக் கவுண்டர்".

சிக்கன் லெக் பீஸ் எலும்பு பீஸ் பீஸாகும் படி கடித்தபடியே பகுத்தறிவுக் கதிரவர் சொன்னார்: "பாண்டிண்ணே சின்னக்கவுண்டர்ல நம்ம "கவுண்ட"மணியோட காமடி சூப்பர்ன்னே... சுகன்யா தொப்புள்ள பம்பரம் விடுற சீன் சூப்பரா இருக்கும்ணே! அதுக்காவே நாலுவாட்டி பார்க்கலாம்ணே!

திரையரங்க பார்னர் பாண்டியன் மெதுவாகத் தனக்கு மட்டும் கேட்கும் குரலில் ( போலீஸ் வந்து டூரிங் பெர்மிட் காலாவதின்னு அஞ்சாயிரம் குடு.. பத்தாயிரம் குடுன்னு அஞ்சாமக் கேப்பானுங்க... பகுத்தறிவோட ஏதோ நான் இப்பச் செயல்பட்டதால் புரோட்டா, குஸ்கா, கோழிக்கால்ன்னு அறுநூத்தம்பது ரூவாயோட போச்சு)

மாலைச்சுடரொளியில் செய்தியாக வந்தது விளாங்குடியில் பழுப்புச்சட்டை இயக்கத்தார் பகுத்தறிவுக் கதிரவனாக ஆர்ப்பரித்துப் போராடிச் சாதி பேதம் ஒழித்தனர் என்று.


அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

சென்ஷி said...

:))))

நல்ல கதையோட்டம்... ஆழமான சிந்தனை..

ஆனால் ஏதோ தமிழர் அனைவருமே ஐயர்களுக்கு எதிரானவர்கள் என்பது போன்ற கருவில் மட்டுமே எனக்கு நம்பிக்கையில்லை...

சென்ஷி

Vajra said...

//

ஏதோ தமிழர் அனைவருமே ஐயர்களுக்கு எதிரானவர்கள் என்பது போன்ற கருவில் மட்டுமே எனக்கு நம்பிக்கையில்லை
//

தமிழர் அனைவரும் இல்லை, பகுத்தறிவு வாதிகள் அனைவரும் என்று சொல்லவருகிறீர்களா ?

சரவணகுமார் said...

சென்ஷி,

கதையில் தமிழர்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்களென்று சொல்லப்படவில்லை..அப்படிச் சொல்வதும் உண்மையல்ல ..பகுத்தறிவு வாதம் பேசித் திரியும் "தீரா -விடங்கள்" போடும் இரட்டை வேடத்தைத்தான் இந்தக் கதை அழகாகத் தோலுரித்துக் காட்டுகிறது :)
இதில் பக்க வாத்திய கோஷ்டிகளான " இணைய முஸ்லீம்களையும்" சேர்த்துக் கொண்டிருந்தால் கதை இன்னும் நிறைவாய் இருந்திருக்கும் :)