Thursday, March 15, 2007

(135) பீர்பல் கதைகள்-2

பீர்பல் கதை-பகுதி-1

அக்பரின் அரசவைக்கு அன்று ஒரு வறியவன் வருகிறான். அன்றைக்கு அக்பருக்கு ஏனோ தன்னை நாடிவந்த வறியவனுக்கு நேரடியாகப் பொருளைத் தர விருப்பமிலாது போயிற்று. வறியவனை நோக்கி உனக்கு நான் ஒரு போட்டி வைப்பேன், அதில் நீ வென்றால் உனக்குப் பெரிய பரிசு உண்டு என்கிறார்.

வறியவனுக்கு வேறு வழி இல்லை. எனவே போட்டிக்கு சம்மதிக்கிறான்.

போட்டி : அக்பரின் அரண்மணைக் குளத்தில் நீரினுள் வறியவன் இரவு முழுதும் இருக்க வேண்டும்.அரண்மணைக் காவலர்கள் வறியவன் போட்டியில் வென்றதை நேரடியாகக் குளத்தின் கரையிலிருந்தபடி மேற்பார்வை செய்வார்கள்.

மறு நாள் காலையில் அரசன் வைத்த போட்டியின் படி இரவு முழுதும் குளத்தினுள் நீரில் இருந்துவிட்டு அக்பரிடம் பரிசை எதிர்பார்த்து வறியவன் அரசவைக்குச் செல்கிறான்.
பரிசுக்கு பதிலாக அதிர்ச்சி காத்திருக்கிறது. அரச காவலர்கள் கூற்றுப்படி வறியவன் குளத்தினுள் நீரில் இருந்த போது, குளக்கரையில் இருந்த விளக்குக்கம்பத்தையே பார்த்தபடி இருந்தான். விளக்கின் சூட்டைப் பெற்றதாலேயே வறியவனால் இரவுமுழுதும் நீரில் இருந்தது சாத்தியப்பட்டது எனவே வறியவன் போட்டியில் தோற்றதாகவும், அரச கட்டளையை மீறியதாகவும் அதனால் பரிசுக்கு பதிலாகக் கசையடி தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று அக்பரிடம் காவலர்கள் சொன்னார்கள். கசையடி தண்டனை வறியவனுக்கு வழங்கப்படட்டும் என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்க அக்பர் அந்தப்புரம் சென்றார்.

அக்பர் அரசவையினின்று அந்தப்புரம் செல்லும் வழியில் பீர்பல் ஏதோ செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அருகே சென்று பார்க்கிறார். உறியடிக்கிற பாணியில் உயரத்தில் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது கீழே பீர்பல் விறகை எரித்துக்கொண்டிருக்கிறார்.

அக்பர் பீர்பலிடம் என்ன செய்கிறாய் என வினவ, அரசே நான் சமைத்துக்கொண்டிருக்கிறேன் என பதிலளிக்கிறார் பீர்பல். அரசர் எள்ளலுடன் பீர்பல் பானை இவ்வளவு உயரத்தில் இருக்கையில் சாப்பாடு தயாராகாது என்றார்.

பீர்பல் அரசே நேற்றைய போட்டியில் பிச்சைக்காரனுக்கு அவன் குளத்தினுள் நீரில் இருக்கும்போது அவனுக்கு குளக்கரை விளக்கு வெப்பம் தரவில்லையா அதுமாதிரிதான் இதுவும் எனச் சொல்ல அக்பருக்கு பீர்பல் என்ன சொல்கிறார் என்பது புரிகிறது.

அக்பர் அரசவைக்கு விரைந்து வறியவனுக்குத் தந்த கசையடி தண்டனையை நீக்கிப் பரிசுகள் பலதந்து அனுப்பிவைக்கிறார்.

(குறிப்பு: மன்னராட்சி என்றாலே மந்திரிகளுக்கு வாழ்க்கை இப்படியான தினசரி நிகழ்வுகள் நிறைந்ததுதான். அரசன் கோபமடையாமல் அதே சமயம் பாதிக்கப்பட்ட ஏழைக்கு நீதியை நிலைநாட்ட இப்படியாக அனுதினம் தம் நுட்பமான மதியால் உறியடிக்க வேண்டியிருக்கும்)

அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

அமர்நாத் said...

அக்பர் அவ்வளவு விவரம் தெரியாதவர் இல்லப்பா...அவரும் புத்திசாலி தான்

காமெடி க்காக, பீர்பல் அக்பருக்கு அறிவுரை சொல்ற மாதிரியே வைச்சுட்டாங்க.

ஓகே. அக்பருக்கு பீர்பாலை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றாக இருந்தது ரசித்தேன். நன்றி

சேதுக்கரசி said...

உள்ளேன்!!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க அமர்!

//அக்பர் அவ்வளவு விவரம் தெரியாதவர் இல்லப்பா...அவரும் புத்திசாலி தான்//

அக்பரை விடவும் பீர்பல்தாங்க புத்திசாலி! அதனால்தான் அக்பரே ஆவணப்படுத்தியிருக்கிறார்.

//காமெடி க்காக, பீர்பல் அக்பருக்கு அறிவுரை சொல்ற மாதிரியே வைச்சுட்டாங்க//

காமெடிக்காக இல்லைங்க அக்பராலேயே ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்கள் வாயிலாக வெளிஉலகத்துக்குக் கொணரப்பட்டவை பீர்பலின் புத்திக்கூர்மை விஷயங்கள்!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ரசித்துப்படித்துப் பாராட்டியதற்கும் என் நன்றிகள்!