Saturday, March 10, 2007

(132) ஹரிஹரனின் சென்னை சங்கமம்!

1989 ஜூனில் சென்னைக்குள் சைதாப்பேட்டையில் சர்ச் வாசலில் தந்தை பெரியார் பேருந்தினின்று இறங்கியபோது மாலைநேரத்து மாநகரின் பெரிய(!?) சாலைகளும், இடைவிடாத போக்குவரத்தும், நெரிசலான அலைமோதும் மக்கள் கூட்டம் என்ற எல்லாமே மாக்ரோவாகத் தெரிந்தது. கூடவே இந்த மாக்ரோ மாநகரினுள்ளே எங்கே காணாமல் போய்விடுவேனோ :-)) என்ற மெல்லிய கிலி.

சென்னை என்றாலே திரைப்படங்களின் மூலமாக மிகையாகக் காட்டப்பட்ட தகவல்களே அதுவரை சென்னையை எனக்கு உருவகப்படுத்தியிருந்தது. வளசரவாக்கம் செல்லவேண்டும் எனக்கு.

இரவு 9.30மணிக்கு மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் ஓடிச்சென்று காலியாக இருந்த பணிமனைக்குள் போகவேண்டிய அய்யப்பந்தாங்கல் செல்லும் வழித்தடம் 17JJ/RR/V பேருந்தில் ஏறியது பல்லவனில் முதல் சிறப்பு அனுபவம்.

பல்லவன் பேருந்து சேவைகளாக அப்போது இருந்த R (எம்ஜி)ராமச்சந்திரனையும்,
J என்பது ஜெயலலிதாவையும், V என்பது (ஆர்.எம்)வீரப்பனையும் குறிப்பதான தகவல் என்பது தமிழக அரசியலில் அதுவரை எவ்விதத்திலும் ஈடுபடாத என்னையும் இப்பேருந்துகளில் பயணிப்பதன் மூலம் அரசியலில் வலிந்து வளைத்துபோட்டுக்கொண்டது.

EMU (Electric Multiple Unit) எனப்படும் மின் தொடர்வண்டியும், அதன் பீக் அவர் நெரிசலும், ரயில்பெட்டியின் வாயிலில் பிதுங்கித் தொங்கிக்கொண்டும், நடைமேடையில் பேசியபடியும், சைட் அடித்தபடியேயும், ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் நடைமேடை முக்காலுக்கும் ஓடியபடியே வரும் இளம் வீர சூரர்கள் ஒருநொடி அஜாக்கிரதையால் கூடுதலாக அரை அடிக்கு வெளியே உந்தப்படும் போது மின்கம்பத்தில் மிகக் கோரமாக அடிபட்டு கீழே வீழ்ந்ததை மவுண்ட், கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் எனப் பல இடங்களில் கண்டு ஆடிப்போயிருக்கிறேன்.

சைதாப்பேட்டை சின்னமலை பேருந்து நிருத்தத்தில் தந்தைபெரியார் பேருந்திலிருந்து இறங்கிய கிரமத்தான் கவனமற்று சாலையைக் கடக்கும்போது பல்லவன் அவன்மீது மோதி பலிகொள்ள அவன் கட்டியிருந்த வேட்டியை உருவிப்போர்த்தியதைக் கண்டது என்பது விபரமறிந்து நான் கண்ட முதல் உயிர்ப்பலி சாலை விபத்து!

வடக்கு உஸ்மான் ரோட்டில் ஒரு நிறுவனத்தில் எனது முதல் இண்டர்வியூ. லிபர்டி நிறுத்தத்தில் இறங்கி கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வலது புறம் திரும்பினால் வடக்கு உஸ்மான் ரோடு வந்து விடும். கிராமத்திலிருந்து வந்த முதல் நாள் கோடம்பாக்கம் பாலத்தின் மீது நடக்கையில் கண் எரிச்சல் வாகனப் புகையால். (சென்னை 1989லே இருந்ததுக்கு இப்போ பெருங்கொடுமையாக இருக்கு வாகனப் புகை)

மவுண்ட் ரோடு எல்.ஐ.சிக்கு அருகில் சிம்ஸன் அருகிலிருந்த ஒரு வங்கியில் எனது தூரத்து உறவினர் வேலை செய்கிறார் என்ற தகவல் மட்டும் வைத்துக்கொண்டு வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து சைக்கிளில் முதுகு வேர்வையில் சட்டை ஒட்டிக்கொள்ள நாக்குத் தள்ளியபடியே மிதித்து காமராஜ் அரங்கம் தாண்டி ஜெமினி மேம்பாலத்தில் பலங்கொண்ட மட்டும் சைக்கிளை மிதித்து ஏற நடுப் பாலத்தில் போக்குவரத்துப் போலீஸால் தடுத்து நிறுத்தப்பட்டேன். மேம்பாலத்தில் சைக்கிளில் போகக்கூடாது என்று திருப்பி அனுப்பப்பட பல்வேறு கிளைகளுடனான ஜெமினி ஜங்ஷனைத் தாண்டி மவுண்ட் ரோடை மீண்டும் கண்டு கொள்ள நான் பட்ட பாடு.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை சந்திப்பு, கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு இவைகளில் சிவப்பு மஞ்சள் பச்சை என ப்ளாஸ்டிக் பக்கெட் மூடிகளை போக்குவரத்துக் குடையிலிருந்தபடியே காவலர் காட்டியதுதான் அதுவரையிலான நான் பார்த்த "ஸோபிஸ்டிகேட்டட் டிராபிக் மேனேஜ்மெண்ட்"

ஏற்கனவே கிராமத்தான் எல்லாம் கேனைன்னு நினைப்புள்ள அந்த பட்டணத்து தூரத்து உறவினரை சட்டை பேண்ட் எல்லாம் தொப்பலாக வியர்வையில் வழிய வழிய நனைந்த படியே பார்த்துப் பேசிவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் மவுண்ட் ரோடு எல்.ஐசியிலிருந்து சைக்கிள் மிதித்து வடக்கு உஸ்மான் வந்து சேர்ந்தேன்.

எனது வேலையின் லஞ்ச் பிரேக் ஒருமணி நேரத்தில் இப்படி போகவர 20கிலோமீட்டரருக்கு சைக்கிள் மிதித்து உறவு பேணி கிராமத்தான் கேனைன்னு மீண்டும்நிரூபித்தேன் :-))

ஆரம்ப நாட்களில் சென்னை எழும்பூரில் காஞ்சி ஹோட்டல் அருகே இருந்த ஒரு க்ளையண்டைப் பார்க்க காலையிலே போகச் சொல்லிய மேலாளர் அப்படியே வாயைத் திறந்தவாறே அங்கேயே இருந்திடாதே என்ற போது என் மரமண்டைக்கு ஏதும் புரியாமல் பொத்தாம் பொதுவாக தலை ஆட்டியவாறே ஆட்டோவில் சென்றது முதல் ஆட்டோ பயணம். பிற்பாடு தெரிந்து கொண்டேன் அங்கே சென்னையின் பிரபலமான எத்திராஜ் மகளிர் கல்லூரி இருக்கிறது என்று.

"கெட்டும் பட்டிணம் சேர்" எனும் மூதுரையை கணக்கில் எடுக்காத பணி இடத்தில் இருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒரு நபர் ஏங்க எல்லோரும் ஊர்நாட்லேர்ந்து இங்கவந்து டேரா அடிக்கிறீங்கன்னு என் மாதிரியான கெடாமலே பட்டினம் சேர்ந்தவர்களை நக்கலடித்து ராகிங் வதை செய்வதை ரங்கநாதன் தெருவில் சுகந்தி மேன்சனில் தங்கி இருந்த நாட்களில் கேசரி பவுடர் கலரிலான "ராகிமால்ட்" எனும் பானத்தை வெறுப்போடு மறுத்துப் பார்த்தபடியே 40காசுக்கு ஒரு சிங்கிள்டீ அடித்துக்கொண்டு தீவிரமாக யோசித்திருக்கிறேன்.

பாண்டிபஜார் தி.நாகர் தலைமைத் தபால் நிலையம் அருகே பரபரப்பாகச் செயல்படும் படித்த இளைஞர்களின் கையேந்தி பவனில் மெனுபார்த்து உண்ட தருணங்களை விட கையில் இருக்கும் காசுக்கேற்ற வகையிலான மெனு தேடுவதில் கையேந்திபவனிலும் புரியாத புதிராக இருந்த எனது பொருளாதாரம் இந்தியா மாதிரி கடன்காரப் பொருளாதாரமாக இல்லாதிருக்க முயற்சித்த காலங்கள்!

திநகர் தபால் நிலையத்தின் முன் இருந்த கையேந்தி பவனுக்கும், ராஜா தெருவின் அடுத்த முனையில் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் முன்னாலிருக்கும் கையேந்திபவனுக்கும் விலை வித்தியாசம் தெரியாமல் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் (கட்டாயமாகப் பொருளாதார இழப்பால் உந்தப்பட்ட) நடத்திய விரத அனுஷ்டிப்பு கையேந்தி பவன்களிலும் இருக்கும் பேதம், பாகுபாட்டை உணர்த்தியது!

சென்னை எனக்கு உணர்த்தியவை, நான் சென்னையில் உணர்ந்தவை அடுத்து வரும்....

அன்புடன்,

ஹரிஹரன்

14 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

ஜடாயு said...

ஹரிஹரன், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் விசயத்துக்கு ஏற்றவாறு நடையைக் கையாளும் திறமை அசத்துகிறது.

தொடரட்டும் அனுபவங்கள்.

பங்காளி... said...

ஒரே ஃபீலிங்ஸ் ஆய்டுச்சி....ம்ம்ம்ம்.

இன்றைய உயரங்களை தேடிய நேற்றைய படிக்கட்டுகளில் இடறிவிழுந்த வலிகள் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதுதான் இப்போதிருக்கும் நிலையை தக்கவைக்க்கவும் புதிய உயரங்களை நிமிர்ந்து பார்க்க வைக்கும் சக்தியை கொடுக்கிறது.

வடுவூர் குமார் said...

ஹரி
இப்படி எழுதுவது ம்னதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.
முட்டாள்தனமான செய்கைகள் உங்களுக்கு மட்டும் ஏற்படுபவன அல்ல.அதை அசைபோடும் போது வரும் சிரிப்பு இருக்கே!!நல்ல நகைச்சுவையாளர்களால் கூட வரவழைக்க முடியாது.
முகத்திருத்தம் செய்ய பணம் இல்லாத நாட்களில்,குளிக்கும் சோப்பே அதற்கும் உபயோகிப்பேன்.இது எப்படியிருக்கு.

Hariharan # 03985177737685368452 said...

//ஹரிஹரன், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் விசயத்துக்கு ஏற்றவாறு நடையைக் கையாளும் திறமை அசத்துகிறது. //

வாருங்கள் ஜடாயு,

தங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்!

//தொடரட்டும் அனுபவங்கள்//

நீங்களும் தொடர்ந்து வாசித்து ஆதரவு அளிக்கவும் :-))

சென்ஷி said...

//பல்லவன் பேருந்து சேவைகளாக அப்போது இருந்த R (எம்ஜி)ராமச்சந்திரனையும்,
J என்பது ஜெயலலிதாவையும், V என்பது (ஆர்.எம்)வீரப்பனையும் குறிப்பதான தகவல் என்பது தமிழக அரசியலில் அதுவரை எவ்விதத்திலும் ஈடுபடாத என்னையும் இப்பேருந்துகளில் பயணிப்பதன் மூலம் அரசியலில் வலிந்து வளைத்துபோட்டுக்கொண்டது.//

:)))))

சென்ஷி

லக்கிலுக் said...

நண்பரே!

ரீல் விட ஒரு அளவு இல்லையா? 1989 ஜூனில் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். 1989 ஜனவரியில் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடனேயே R மற்றும் V சர்வீஸ் பஸ்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதே. நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக J சர்வீஸ் பஸ்களும் இல்லை. அவை 91க்கு பின்பாகவே நடைமுறைக்கு வந்தது.

நீங்கள் குறிப்பிடும் 89, ஜூன் வாக்கில் Yellow Service, White Service முறைகளே சென்னையில் இருந்தது.

அன்புடன்
லக்கிலுக்

Hariharan # 03985177737685368452 said...

//ரீல் விட ஒரு அளவு இல்லையா? 1989 ஜூனில் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். 1989 ஜனவரியில் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடனேயே R மற்றும் V சர்வீஸ் பஸ்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதே. நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக J சர்வீஸ் பஸ்களும் இல்லை. அவை 91க்கு பின்பாகவே நடைமுறைக்கு வந்தது.//

ரீலுக்கு அவசியம் ஏதும் இல்லை. நான் வளசரவாக்கத்தில் இருந்தது 30 நாட்கள் தான். அப்போது தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர் தினசரி 17Rல போனாயா RRல் போனாயா Jல் போனாயா JJல் போனாயா இல்லை Vல் போனாயான்னு கேட்டுத் துளைத்தெடுப்பார்.

பேருந்துகளில் இந்த போர்டுகள் நான் இருந்த ஜூலை மாதத்திலும் இருந்தன!

லக்கி சிபிஐ விட்டே விசாரிக்கச் சொல்லிடுவீங்க போலிருக்கு. உங்க ஆட்சி தானே இப்பவும்:-))

Hariharan # 03985177737685368452 said...

//ஒரே ஃபீலிங்ஸ் ஆய்டுச்சி....ம்ம்ம்ம். //

பங்காளி ஃபீலிங்ஸை பங்குபோட்டதற்கு நன்றி :-))

இன்றைய உயரங்களை தேடிய நேற்றைய படிக்கட்டுகளில் இடறிவிழுந்த வலிகள் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதுதான் இப்போதிருக்கும் நிலையை தக்கவைக்க்கவும் புதிய உயரங்களை நிமிர்ந்து பார்க்க வைக்கும் சக்தியை கொடுக்கிறது. //

மெய்யான வார்த்தைகள் பங்காளி!

Hariharan # 03985177737685368452 said...

//இப்படி எழுதுவது ம்னதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.//

எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

//முட்டாள்தனமான செய்கைகள் உங்களுக்கு மட்டும் ஏற்படுபவன அல்ல.அதை அசைபோடும் போது வரும் சிரிப்பு இருக்கே!!நல்ல நகைச்சுவையாளர்களால் கூட வரவழைக்க முடியாது.//

:-))))) அது சரிதான்!

Hariharan # 03985177737685368452 said...

சென்ஷி,

வருகைக்கும் படித்துச் சிரித்ததற்கும் நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

//பல்லவன் பேருந்து சேவைகளாக அப்போது இருந்த R (எம்ஜி)ராமச்சந்திரனையும்,
J என்பது ஜெயலலிதாவையும், V என்பது (ஆர்.எம்)வீரப்பனையும் குறிப்பதான தகவல் என்பது தமிழக அரசியலில் அதுவரை எவ்விதத்திலும் ஈடுபடாத என்னையும் இப்பேருந்துகளில் பயணிப்பதன் மூலம் அரசியலில் வலிந்து வளைத்துபோட்டுக்கொண்டது.//

நண்பரே!

ரீல் விட ஒரு அளவு இல்லையா? 1989 ஜூனில் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். 1989 ஜனவரியில் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடனேயே R மற்றும் V சர்வீஸ் பஸ்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதே. நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக J சர்வீஸ் பஸ்களும் இல்லை. அவை 91க்கு பின்பாகவே நடைமுறைக்கு வந்தது.

நீங்கள் குறிப்பிடும் 89, ஜூன் வாக்கில் Yellow Service, White Service முறைகளே சென்னையில் இருந்தது.//

லக்கி,

1989ல் திமுக என்பது எம்ஜிஆரால் 12 ஆண்டுகள் ஆட்ட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டு மக்கள் ஆதரவு குன்றிய திமுக 1989ல் இருந்த நிலையை இன்றைக்கு சன் டிவி , மத்திய அமைச்சர்கள் பின்ணணியோடு இருக்கும் 2007 திமுகவுடன் ஒப்பிட்டு உளறவேண்டாம்.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெ. அணி, ஜா அணி என அதிமுகவை உடைத்த ஆர்.எம்வீரப்பன் 1988ல் ஜானகியை வைத்து இரட்டை இலையை முடக்கி இரட்டைப் புறா சின்னத்தால் அதிமுக தோற்றது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் அப்போது ஜெயித்தது எங்கள் போடியில்தான்.

உண்மை இப்படியிருக்க தமிழகத்தில் 1991ல் ஜெயா ஆட்சிக்கு வந்தபின் V சர்வீஸ் பல்லவனில் எடுத்துவந்தார் எனச் சொல்லும் லக்கி 1989ல் மாங்காயடி - எச்சல்விடும் வீரருடன் பள்ளிக்கூடத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தையாய் இருந்திருக்கவேண்டும்.

100% அரசியலில் வேண்டுமானால் உண்மை இருக்காது!

100% உண்மையை மட்டும் பேசும் போது அதில் அனைத்தும் உள்ளபடியே இருக்கும்-அரசியல் உட்பட!

உண்மை என்பது அதைப் பேசுபவருக்குத் தரும் பலம் மாதிரி ஏதும் இல்லை எப்போதும்!

லக்கிலுக் said...

//1989ல் திமுக என்பது எம்ஜிஆரால் 12 ஆண்டுகள் ஆட்ட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டு மக்கள் ஆதரவு குன்றிய திமுக 1989ல் இருந்த நிலையை இன்றைக்கு சன் டிவி , மத்திய அமைச்சர்கள் பின்ணணியோடு இருக்கும் 2007 திமுகவுடன் ஒப்பிட்டு உளறவேண்டாம்.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெ. அணி, ஜா அணி என அதிமுகவை உடைத்த ஆர்.எம்வீரப்பன் 1988ல் ஜானகியை வைத்து இரட்டை இலையை முடக்கி இரட்டைப் புறா சின்னத்தால் அதிமுக தோற்றது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் அப்போது ஜெயித்தது எங்கள் போடியில்தான்.

உண்மை இப்படியிருக்க தமிழகத்தில் 1991ல் ஜெயா ஆட்சிக்கு வந்தபின் V சர்வீஸ் பல்லவனில் எடுத்துவந்தார் எனச் சொல்லும் லக்கி 1989ல் மாங்காயடி - எச்சல்விடும் வீரருடன் பள்ளிக்கூடத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தையாய் இருந்திருக்கவேண்டும்.

100% அரசியலில் வேண்டுமானால் உண்மை இருக்காது!

100% உண்மையை மட்டும் பேசும் போது அதில் அனைத்தும் உள்ளபடியே இருக்கும்-அரசியல் உட்பட!

உண்மை என்பது அதைப் பேசுபவருக்குத் தரும் பலம் மாதிரி ஏதும் இல்லை எப்போதும்!
//

இந்த உளறல் எனக்குப் புரியவில்லை. யாருக்காவது புரிந்து தொலைத்தால் சரி தான் :-))))))

Hariharan # 03985177737685368452 said...

//இந்த உளறல் எனக்குப் புரியவில்லை. யாருக்காவது புரிந்து தொலைத்தால் சரி தான்//

லக்கி,

1991ல் ஜெயலலிதாதான் தன்னைத் தீவிரமாக அதிமுக தலைமை ஏற்க ஜானகி அணி கண்டு அரசியல் செய்த தன் எதிரியான ஆர்.எம்.வீரப்பனை குறிப்பிடும் V சர்வீஸை சென்னையில் பல்லவனில் எடுத்துவந்தார் என்பது உளறல் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி :-)))

லக்கிக்கு இந்த உண்மையை உளறல் எனச் சொல்லவேண்டியிருப்பது வேறென்ன.. காலத்தின் கட்டாயம்!
:-))