(103) போகி பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்!!
நாளைக்கு போகிப் பண்டிகை, நாளான்னிக்குப் பொங்கல் பண்டிகை!
கிராமங்களில் உழைக்கும் மாடுகளுக்கு கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவது, இருக்கும் வீடுகளுக்கு சுவர்களுக்கு வெள்ளையடித்து,வர்ணம் தீட்டுவது என்பதாக தினசரி வாழ்வின் அங்கமாகிய இவை சிறப்பாக எடுப்புடன் தெரிவதற்கு, அவைகளுக்கான நமது பாரம்பரிய தேங்க்ஸ் கிவிங் என்பதாகச் செய்யப்படுவது.
போகிப் பண்டிகை என்பது குப்பை கூளங்களைக் கொட்டி எரித்து சுற்றி நின்று தம்பட்டம் தட்டுவது என்பதாக சென்னையில் சம்பிரதாயமாகச் செய்யப்படுகிறது.
குப்பை, கூளங்களால் நிறைந்த மனம் எனும் வீடு, அதில் எழும் அழுக்குகள் கூடிய எண்ணங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்கிற தாத்பரியத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
உழவினால், உயிர்களை, உலகைக் காக்கும், தெய்வமாகிய சூரியனுக்கும், உடன் உழைக்கும் அஃறிணைகளுக்கும் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு நன்றி செலுத்த உள்ளத்தில் நிறைந்துகிடக்கும் குப்பைக் கூளங்களாகிய பயனற்ற எண்ணங்களைக் களைய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவது போகிப்பண்டிகை.
இந்த போகிப்பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் பொருட்கள் என்கிற அளவில் மட்டும் இல்லை. தனக்கும்,பிறர்க்கும் ஊறு விளைக்கும் குப்பை கூளமாகிய பழைய எண்ணங்கள் சிந்தனைகள் நீக்கி, புதிய நல்ல சிந்தனைகளால் மனமும் சிந்தனைகளும் புதுப்பிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும்.
ஆசிரியர் மகனாகவும், கிராமமும் இல்லாமல் பெரியநகரமும் இல்லாமல் ஒரு டவுனில் பள்ளிக்காலம் வரை படித்ததாலும் சங்கராந்திப் பண்டிகையான அறுவடைத்திருநாள் பொங்கலுக்கு ஒரு பயிர் பச்சையோடு மாடு, கன்று என வாழ்கின்ற முழுமையான விவசாயியின் 100% சொந்தமான அறுவடைநாள் கொண்டாட்ட அனுபவம் கிட்டியதில்லை.
என்ற போதும் என் தாய்வழி மாமன்கள் நேரடியாக வயலில் இறங்கி விவசாயம் செய்து வாழ்ந்ததால் மிக அரிதாக விடுமுறைக்குப் போகும் சமயங்களில் எப்போதாவது கிராமத்துக் களத்துமேட்டில் நெற்கதிர்களைக் கட்டுக்கட்டாகக் கட்டியும், சில சமயம் டிராக்டர் வைத்து போரடிக்கும் காட்சிகளை டவுசர் போட்டபடியே, உடலைச் சொறிந்தவாறே "போரடிக்கும்" பொழுதுபோக்காகப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
எனது தாய்வழிப் பாட்டனின் பழைய காரைச் சுண்ணாம்பு வீட்டின் மாடியில் காயப்போட்ட நெல்லை கணிப்பைப் பொய்யாக்கி சட்டென்று வரும் பெரும் மழைத்தூறலினின்று காக்க மாடி சுண்ணத்தரையில் இருக்கும் துவாரம் மூலம் மாடியினின்று நேரடியாக நெற்களஞ்சியத்திற்கு
அனுப்பும் பொருட்டு ஒருசமயம் நானும் காலால் காய்கின்ற நெல்குவித்து என் கால் பாதம் முழுக்க நெல்லால் அக்குபங்சர் செய்த அனுபவம் கொஞ்சம் உண்டு.
விவசாயியாக இருப்பவன் அத்லடிக் மாதிரி ஆக்டிவாக இருந்தாக வேண்டும். வலுத்து இறங்கும் மழைத்துளிகள் பெருமழையாக்கி அந்த போகத்தில் விளைந்த விளைச்சலை நாசமாக்கிடும் முன்பாக, மொட்டை மாடி முழுக்க காயப்போடப்பட்ட நெல் ஐந்து நிமிடத்திற்குள் களஞ்சிய துவாரங்களுக்கு முன்பாக குவிக்கப்பட்டாக வேண்டும்.
காரைச்சுண்னாம்பு மொட்டை மாடி பெரிய லோக்கல் எகானமியே சொல்லிவிடும். மொட்டை மாடியின் சுண்ணாம்புத் தரையில் எத்தனை களஞ்சிய துவாரங்கள் இருக்கின்றனவோ அவை வயல்காட்டு நிலத்தின் அளவு, விளையும் விளைச்சல், மாடியில் காயப்போடப்பட்ட நெல் சேமிக்கப்படும் களஞ்சியங்களின் எண்ணிக்கைகளைச் செல்லும்.
வயல்காடு, களத்துமேடு, என உழைக்கும் வண்டிமாடுகள் பியூட்டி பார்லர் செல்கின்ற வருடாந்திர தருணம். கொம்புகள் வர்ணம் தீட்டப்பட்டு, கொல்லையில் இருக்கும் கறவை மாடுகளை கவர்செய்யும் பொருட்டு அடிக்கப்பட்ட புதிய லாடத்தினால் சத்தமாக குளம்பொலி எழுப்பி (ஆபீசர் ஷூ போட்டு டக் டக் என நடப்பதுமாதிரி) காராம் பசுக்களைக் கறாராகக் கரெக்ட் செய்யும் காலம்.
கட்டுக் கரும்பை, ராமர் கரும்பு என்பதாகிய சர்க்கரை ஆலைக்கான கரும்பிலிருந்து, ஐந்து பைசாவுக்கு ரெண்டு கணு என கடிக்கக் கடினமான அதிக இனிப்புச்சுவையுடனான அடிக்கரும்பும், அதே ஐந்து பைசாவுக்கு நாலு கணுவாக சோகைக்கு அருகில் இனிப்புக்குறைந்த தட்டைக்கரும்பையும் சுவைத்த டவுசர் நாட்கள் நினைவுகளை மகிழ்வோடு மாடு கரும்புச் சொகையை அசைபோடுவது மாதிரி நினைவு கூர்கிறேன்.
இந்த போகிப் பண்டிகைக்கு மனவீட்டையும் குப்பை கூளங்கள் குறைவானதாக முயற்சிப்போம்!
தை மாதம் பிறந்து எல்லோருக்கும் நல்ல வழிகளைக் காட்டட்டும்.
எல்லோருக்கும் இனிப்புச்சுவையோடு கூடிய எனது பொங்கல் பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஹரிஹரன்
3 comments:
டெஸ்ட் மெசேஜ்!
i am aasath
Why are celebrate this peasents festival?
Are you ready to remove the old thoughts like VARNASHRAMADHARMAA?
Finally, you become remember the small things of farmers ... Today they loss their life at AP, Vidharbha dist ....
பகத் / ஆசாத்,
என்ன சொல்ல வர்றீங்க?
மீண்டும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் :-))
Post a Comment