Wednesday, January 17, 2007

(106) துணிவு வரும் வழி

கல்லூரி வாழ்வில் பத்தோடு பதின்னொன்னா எந்த செயல்பாட்டிலும் சிறப்பான தனித்துவம் ஏதும் இல்லாம இருந்தாலும் சிங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். பாழாய்ப்போன ஒம்போதா இருந்தா... அதுவும் கல்லூரி வகுப்பில் ஒரு ஒம்போது மாணவன் படும்பாடு ..த்சௌ..த்சௌ சொல்லி மாளாது. உடன் பயிலும் அறிவுசீவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் அந்த ஒம்போது மாணவனின் சுயமரியாதையை எள்ளி நகையாடுவதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எனது கல்லூரி வாழ்க்கையில் சில ஆண்டுகள் ஒம்போது மாணவனாக இருந்த நேரடி அனுபவம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது ரீலு இல்ல ரியலு ஸ்டோரி.

***************************** சீன் 1 *************************

எனது கல்லூரி வகுப்பில் எனது ரோல் நம்பர் ஒம்போது. எனது வகுப்போ மாணவியரும் உடன் பயிலும் கோ-எட்.

அட்டண்டன்ஸ் எடுக்கும்போது வேறு எதிலாவது கவனத்துடன் இருந்தால் ஒம்போது நான் தான் என ஒத்துக்கொள்ளும் வரையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும்.

வகுப்பின் பின் வரிசையில் இருந்து பாகுபாட்டையும்,சாதியையும் அறவே ஒழித்துவிட்ட வடதமிழகத்து பகுத்தறிவுப் பகலவன்களின் கொழுந்துகள் டேய் அய்யரு... ஒம்போது... புரொபஸர் கூப்புடுறாருன்னு.. நினைவூட்டல்கள் அத்துணை அன்பாய்ச் சொல்வார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை ஆறு வகுப்புகளில் கூப்பிடப்படும் போதோ, சுயமாய் எழுந்தோ ஒம்போது உள்ளேன் ஐயா / ப்ரஸண்ட் சார் என்று சொல்லி அலையாய் எழும் விஷமச் சிரிப்புக்கிடையே எனது வருகையைப் பதிய வேண்டிய கட்டாயம்.


0,1,2,3,4,5,6,7,8 இவைகளுக்கு இல்லாத சிறப்பு கவனிப்பு 9 எண்ணுக்கு அதுவும் எதிர்மறையாக ஏன் என்று நான் குழம்பியதில்லை, கூச்சப்பட்டதும் இல்லை. நல்லவேளை எனக்கு ஒன்பது எனும் எண்ணை "ஒம்போது" என்கிற சொல்லாடலின் பின்ணணியில் இருக்கும் கேலித்தொனி கல்லூரியில் நான் படிக்கிற காலத்தில் எனது பிரக்ஞையில்(Consiousness) இதரமாணவர்களின் பிரக்ஞை மாதிரியே இல்லாதிருந்தது இறைவன் எனக்குத் தந்த வரம். (இன்னிக்கும் பல விஷயங்களில் எனது பிரக்ஞை அப்படியே)

******************************** சீன் 2 *******************

எனது கல்லூரி வாழ்வின் இறுதியாண்டில் 1989ல் நிகழ்ந்த சம்பவம். கல்லூரி நாள் விழாவில் நிகழ்வு அரங்கின் கடைசி வரிசையில் எங்கள் வகுப்பு மாணவர்களோடு கலகலப்பாக இருந்த சமயத்தில் அடுத்த துறையின் புரொபஸர் மதியழகன் எங்களிடம் வந்து தேவையில்லாமல் ஏதோ கடிந்து சொல்லிவிட்டு அவர் நகரும் போது ஏஏய்ய்...ன்னு ஒரு பெரிய சவுண்ட் எங்களது குழுவிலிருந்து யாரோ எழுப்ப அந்த இளம் வயது புரொபஸர் மீண்டும் எங்களிடம் வந்து யார்ரா அவன்? நேரா வாடா? என சில துறை மாணவிகள் அங்கே இருந்ததால் கூடுதலாக சவாலுடன் வீரியமான வீரம் காட்டினார்.

மூட் அவுட் ஆகி எங்கள் குழுவினர் அரங்கிலிருந்து கல்லூரி நுழைவு வளைவில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது அதே புரொபஸர் அவரது மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்து சென்றார். அடுத்த விநாடி ஏஏஏய்ய்ய்..னு மீண்டும் அதே சவுண்ட் எங்கள் குழுவிடமிருந்து எழுந்தது. பைக்கைத் திருப்பி திரும்பவும் கல்லூரிக்குள் சென்ற புரொபஸர் நேராக முதல்வர் அலுவலகத்தினுள் சென்றார். நாங்களும் கலைந்து அவரவர் இருப்பிடம் சென்று விட்டோம்.

மறுநாள் காலையில் நோட்டீஸ் போர்ட் அருகே பரபரப்பு. எல்லாத் துறை மாணவர்களும் குழுமியிருந்தார்கள். எனது வகுப்பு மாணவனான இருப்போரிலேயே ஆறு அடி உயரம், கனத்த மீசை, என புரொபஸர் மாதிரியான உடல் வாகோடு இருந்த எனது நண்பன் கும்பகோணம் படையாச்சி குமாரவடிவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதான அறிவிப்பு. சம்பவம் நடந்த போது நாங்கள் இருவரும் அருகருகே இருந்தோம். அவன் ஏதும் செய்யவில்லை என எனக்குத்தெரியும்.

நேராக பிரின்ஸிபால் பொன்னுசாமியின் அறையில் நுழைந்த நான், "சார் குமாரவடிவேல் எதுவும் செய்யவில்லை, நேற்று புரொபஸர் மதியழகனைப் பார்த்து இருமுறை ஏஏஏய்ய்ய்ன்னு ஒலி எழுப்பியது நான் தான் என்றேன்". முதல்வர் பொன்னுசாமி திகைத்தார். ஒடிசலான தேகம், எண்ணைய் போட்டு படிய வாரிய தலை, நெற்றியில் சந்தனம், கண்ணில் கண்ணாடி, காலிலே செருப்பு என இருந்த என்னை மேலும் கீழுமாக சிலமுறை பார்த்தார் புரொபஸர் மதியழகனை வரச்சொல்லி பியூனை அனுப்பினார்.

புரொபஸர் மதியழகன் வந்ததும் நான் தான் நேற்றைய சம்பவத்தில் அவரைப் பார்த்து ஒலி எழுப்பியது என்பதை ஒப்புக்கொண்டு நண்பன் குமாரவேல் தவறுதலாக தண்டிக்கப்பட்டதை மாற்றும் படி முதல்வரிடம் வேண்டிக்கொண்டேன். புரொபஸர் மதியழகன் என்னைப் பார்த்து ஒலிஎழுப்பியது நீயா? நம்பமுடியவில்லை என அதிர்ந்த நிலையில், நான் சஸ்பெண்ட் செய்யப்பட்தை கல்லூரி நோட்டீஸ்போர்டு சில மணித்துளிகளில் சொன்னது. தவறிழைக்காத குமாரவடிவேல் செஸ்பெண்டு செய்யப்பட்டது நீக்கப்பட்டு வகுப்பில் அனுமதிக்கப்பட்டான்.

தவறு செய்யாத எனது நண்பன் அவனது தோற்றம் + கல்லூரிக்கு வராமை+ ஏகப்பட்ட அரியர்ஸ் இவைகளால் அவன் செய்யாத ஒரு விஷயத்திற்கு நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவனுக்குத் தரப்பட்டதை ஏற்க இயலாத எனது நேர்மையான மனம் பிரின்ஸிபலை அணுகும் துணிவை எனக்குத் தந்தது.

************************ சீன் 3***************************

லிண்டா குட்மேன் எனும் ஆங்கில ஜோதிட,ஜாதக, எண்கணித நிபுணர் கணிச்சா அப்படி இப்படி என்று எனது பிறந்த தேதி 18 என்பதின் கூட்டுத்தொகை 9, ராசி ஸ்கார்ப்பியோ, பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ஒன்பது என்றிருக்கும் + ஸ்கார்ப்பியோ ராசிக்காரர்கள் துணிவானவர்கள், அவர்கள் தரப்பு வாதத்தை, செயல்பாட்டை (இரக்கமில்லாமல்) மிக உறுதியாகச் செயல்படுத்துவார்கள் எனவே லிண்டா குட்மேன் கணிப்புப்படி நான் பேட் மேன் என எனது மனைவி கல்யாணமான புதிதில் எனது இயல்பான ஒருதரம் சொன்னா நூறுவாட்டி சொன்னமாதிரின்னு (அமைதியாத்தாங்க)எனது சுபாவத்துக்கு எனது பிறந்த தேதி எண்ணிக்கையை லிண்டா குட்மேன் வழியாக் கண்டுபிடிச்சு சொன்னப்பவும் நான் குழம்பியதில்லை.

பிற்பாடு சாவகாசமாக ஒருநாள் மெல்லமாக என் மனைவியிடம் (பெண்ணீயத்துக்கு முன்னாடி ஆண் ஈயம், பித்தளையா பேரிச்சம்பழத்துக்கு இணையானவனா ஆகிடுறதாலே மெல்லமாத்தான் பேசவேண்டி இருக்கு) நான் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்த 1990ல் இருந்து கூடுதலாக ஒரு செட் டிரஸ் எடுக்க 1999 வரையில் எனது பிறந்தநாள் 18வது டிஸம்பர் 1969ன்னு நினைச்சு தீபாவளி சமயத்துலேயே மூணு செட் டிரஸ் எடுத்து வைச்சுக்கிறது வழக்கம். 2000ல் கால்கட்டுப்போடணும்னு என் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கும்போது அப்பா அம்மா பழையபேப்பரை தூசி தட்டியபோது கவனித்ததில் எனது பிறந்தநாள் 18வது நவம்பர் 1969ன்னு கண்டுபிடிச்சேன்னு சொன்னப்போ என்மனைவி என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்து ஒரு மனிதனுக்குத் தன் பிறந்தநாளே சரியாகத் தெரியாதா? 30வயது வரை தன் ஜாதகத்தையே பார்த்ததே இல்லையான்னு ஒரே ஆச்சச்சர்யம்(அதிர்ச்சி).

நான் இப்பவும் அப்படித்தான். ஆங்கில ராசியான அம்பு எய்யும் சஜிட்டாரியஸிலிருந்து பழைய கட்டம் கட்டிய ஜாதக பேப்பரால், பட்டென்று கொட்டுகின்ற ஸ்கார்ப்பியோவுக்கு சந்தர்ப்பவசமா மாறிட்டேன்!

ஜாதகம், ராசிபலன் எல்லாம் எனக்கு ஜாலிக்குத்தான். விளையாட்டா எப்போவாவது ராசிகள் பேப்பரில், வார இதழ்களில் நான் பார்க்கும் போது 12ராசிகளில் எதுக்கு அமோகமா பலன்கள் இருக்கோ அது என்னோடதுன்னு பாவிக்கிறது இப்பவும் என்னோட சுபாவம்.


பகுத்தறிவுச் சுயமரியாதைச் பகலவன்களின் தொலைக்காட்சியில் மேஷ ராசிக்காரகளுக்கு சூரியன் அஸ்தமிக்கும் மேற்கு திசை ஆபத்து என்றும் ஜெயத்து டிவியோ சூரியன் உதிக்கும் கிழக்கு திசைதான் மிகுந்த ஆபத்தானது என்றும் தெற்குதிசையிலிருந்து மக்களை வடக்கிருக்கச் சொல்கின்றார்கள்.

பகுத்தறிவுகள் பரப்பும் தொலைகாட்சி நிகழ்வுகளில் நியூமராலஜிகொண்டு எண்ணங்கள் செயல்களில் எண்கணிதப் பித்து முற்றித்திரியவைக்கிறார்கள். பெயரின் எழுத்துகளின் ராசி எண்மதிப்புக் கூட்டுத்தொகைக்கு குறுக்கீடு என எண்கணிதர் சொல்லி இனிஷியலையே மாற்றுகிறார்கள்... இனிஷியலே மாறுகிறதே என்கிற குற்ற உணர்வே இல்லை!
வாழ்க பகுத்தறிவு... வாழ்க சுயமரியாதை தொலை(க்காட்சி)நோக்கு பரப்பல்!

ஆக ஒரு நபருக்கு மனத் துணிவைத் தருவது எது?

ஒம்போது என்ற நம்பர் தருவது துணிவா? ஸ்கார்ப்பியோ எனும் ராசி தருவது துணிவா? ஒரு நபருக்குத் துணிவென்பது இந்த ரெண்டுவழியாக வர்ற விஷயமா?

உண்மையை நேர்மையா அப்படியே எதிர்கொள்வது என்பதில் அல்லவா துணிவு என்ற ஒன்று ஒருவரிடம் இருப்பது வெளிப்படுகிறது.

என்ன நான் சொல்றது?

அன்புடன்,


ஹரிஹரன்

4 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

Anonymous said...

ஏதோ ஒரு பத்திக்கு சிரிச்சிட்டு நிப்பாட்டலாம் என்று பார்த்தால் முடியலயே!!

Hariharan # 26491540 said...

//ஏதோ ஒரு பத்திக்கு சிரிச்சிட்டு நிப்பாட்டலாம் என்று பார்த்தால் முடியலயே!! //

வாங்க குமார்,

எப்படி சிரிப்பான சிரிப்பா என்னோட கதை இருக்கு பார்த்தீங்களா? :-))

Anonymous said...

i am aasath

"thairium eanappaduvathu ennavenil, ilam vaiathu, vazhuvatharkkaan vaaippu, kanavugal ... eana ellavatraiyum thuranthuvittu naatukkaaga, makkalukkaga thuukkil eaari mattrum chekkizhutha Bagath m, VOC m tham symbol courage.