(98) உயர்ந்த ஆத்மா ( Elevated Soul)
எல்லோருக்குள்ளும் ஆத்மா இருந்தாலும் சிலரது சிந்தனை, செயல்பாடுகளிலேயே அவர் சாதாரணர் இல்லை என்பது புலப்பட்டுவிடும். நான் மிஸ்டிசிஸம் எனும் மாயவித்தை பற்றிப் பேசவில்லை. பின்பற்றப்படும் வாழ்வியல் தத்துவ வேத நெறி முழுமையாக தினசரி வாழ்வில் பேணும் போது விழைகின்ற வியத்தகு மாற்றம் குறித்தே பேச்சு.
வாழ்வின் மீதான தனிமனிதனின் பார்வைக் கோணம் அவன் வாழ்வு அனுபவங்களைச் செங்கற்களாகக் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கைக் கோட்டை மகிழ்ச்சிக் கோட்டையா இல்லை சோகமான சிதிலமடைந்த மாளிகையா என்பதாக அமைக்கிறது.
ஞானி என்கிற உயர்ந்த ஆத்மாவாக ஒரு நபர் தன்னை உயர்த்திக் கொள்ளுவது சிரமமான விஷயமா எனில் முற்றிலும் அப்படியாக இல்லை. பொதுவாழ்வில் சாதாரணனுக்குப் பகலாக இருப்பது ஞானிக்கு இரவாக இருக்கும். உதாரணமாக என்ன சீரியல் கோலங்களா, சித்தியா, அண்ணாமலையா,செல்வியா என்பதிலிருந்து டபுள் சீஸ் பீட்ஸாவா கொண்டாட்ட கோக்கா என்பதெல்லாம் ஞானிக்கு இரவு மாதிரி ஆனால் நம்மில் பெரும்பாலானவர்க்கு இதுதான் பகல் மட்டுமில்லை மொத்த வாழ்க்கையே!
ஒரு ஆத்ம ஞானிக்கு இறந்தகாலம் குறித்த வருத்தம் கிடையாது, எதிர்காலம் பற்றிய கவலையும் கிடையாது. ஞானிக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் நமது நிகழ்கால வாழ்வு மிகவும் குறுகியது. ஞானிக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இணைந்து நிகழ்காலம் கூடுதலாகிறது.
குழப்பமாக இருக்கும். சரி ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.
ஒரு மரத்தின் மீது ஞானி இருக்கிறார். கீழே சாமானியன் மரத்தின் கீழே இருக்கிறான். ஞானி சாமானியனிடம் சொல்கிறார்... காய்கறி வண்டி வருகிறது என்கிறார். சாமானியன் வெளியே எட்டிப் பார்த்து ஞானியிடம் பொய் சொல்லாதே வண்டியே வரவில்லை என்கிறான். சிறிது நேரம் கழித்து காய்கறி வண்டி வருகிறது. சாமானியன் அட ஆமா காய்கறிவண்டி என்கிறான்.
வீட்டு வாசலில் இருந்து காய்கறிவண்டி நகர்ந்து சென்றதும் சாமானியன் காய்கறி வண்டி போய்விட்டது என்கிறான். ஞானி சொல்கிறார் இல்லை காய்கறி வண்டி போக வில்லை என்று. சாமானியன் மீண்டும் ஞானியைப் பார்த்து பொய் சொல்கிறாய் என்கிறான்.
இரண்டுபேரின் பார்வைக் கோணம் வேறு வேறு. இரண்டு பேர் அனுபவிப்பதும் வெவ்வேறான அனுபவம். சாமானியனின் பார்வைக் கோணத்தினால் அவனது நிகழ்கால அனுபவம் மிகக்குறைவு. ஞானியின் பார்வைக்கோணம் இறந்தகாலத்தில் ஒருபகுதியையும், எதிர்காலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய நீண்ட நிஜ நிதர்சனங்களை உள்ளடக்கிய நிகழ்காலம்.
சாவு / இறப்பு குறித்த சாமானியனின் சிந்தனை கண்முன்பாக காய்கறி வண்டியைக் காண்பதுமாதிரி இப்படியானதே. ஞானி தனது மேம்படுத்தப்பட்ட பார்வைக் கோணத்தினால் ஆத்மாவாகிய தான் எங்கிருந்து வந்து நிகழ்காலமாய் இருந்து இந்த உடலை உதறி அடுத்து எங்கே செல்கிறது ஆத்மா என்பதை உணர்ந்து கொள்கிறான்.
ஆத்மா எனும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேத நெறி சொல்லும் மெய்ஞான சிந்தனா வழி முறைகள் மனிதனுக்கு உதவுகிறது. பரப்பிரம்மமாகிய ஆத்மா அணிந்திருக்கும் சட்டையே உடல் என்கிற மெய்ஞானம் வருகின்றபோது, இந்த உண்மையை உணர்கின்ற போது மரணம் பற்றிய பயம் விலகுகிறது. மரணம் என்கிற ஒன்றே வெறும் மாயையான உணர்வு என்று தெரியவரும்.
ஆத்மா பற்றிய உணர்வு வந்துவிட்டாலே பொறிகளும், புலன்களும் ஓரளவுக்கு நமது கட்டுப்பாட்டில் வரும். பெரும்பாலும் பொருள்சார் உலகில் புலன்கள், பொறிகளின் கட்டுப்பாட்டிலேயே உழல்கிறோம்.
ஆத்மாவின் இருப்பை உணராத வெறும் சட்டைகளாக மட்டுமே வாழ்கின்ற நிலையில், வாழ்வின் அர்த்தம் உணராத சட்டைகளாகிய உடல்களுக்குள்ளாக பாகுபேதம், அதனால் எழும் பல்வேறு சண்டைகள், சர்ச்சைகள் மட்டுமே விஞ்சி நிற்கும்!
சனாதன தர்மமாகிய இந்துமத ஞானமார்க்கம் என்கிற வழியில் உள்முகமாகப் பயணிக்க நேரும் போது ஆத்ம சக்தி அவனுள் திரேஜஸாக பரிமளிக்கிறது. ஆத்மாவை உணர உணர ஆத்ம சக்தியானது சாதாரணமாக வீணாகும் வகையிலான உணர்வுகள், செயல்கள் குறைந்து எல்லாவற்றிலும் "Oneness" எனப்படும் பார்வைக் கோணம் மேம்படும். நீ வேறு, நான் வேறு, அவன் வேறு என்பதாகிய பாகுபேதங்கள் தானே விலகும்.
குண்டலினியோகம் என்கிற முறையில் யோகிகளுக்கு ஆத்மசக்தியாகிய இது தலைக்கு மேலே சென்று தன்னைத் தனது உடம்பிலிருந்து முற்றிலுமாகத் தனித்து நோக்கும் பாங்கு "துரியாதீதப் பெருவழி" எனப்படுகிறது. உடலின் வருத்தம் தன்னைப் பாதிக்காமல் இருப்பது. இது எல்லாமே மனக்குவிப்பு என்பதால் கிடைக்கிறது.
இறைவனை நினைத்தபடி ஜெபம் என்று ஆரம்பித்து தன்னுள்ளே பயணப்பட ஆரம்பித்து தியானம் என முன்னேறி ஒரு நபர் யோகியாகப் பரிமளிப்பது.
சாதரணமாக ஒரு நபர் தன் உடலுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து தனது மனதை இறைசக்தியான ஆத்மாவை உணர்வதற்காக ஒரு புள்ளியில் குவித்து மனதைப் பழக்குவதன் மூலம் புத்தியானது மாஸ்டராகி மனதையும், உடலையும் நெறிப்படுத்தி வாழ்வது!
மனம் ஆசைகளால் சினம்,ஏமாற்றம், வருத்தம் என உழல்வதை, மன அமைதியான நிம்மதி என்பது எத்தகைய பேரானந்தம் என்பது அறிந்து அதில் திளைக்கும் ஆத்மா உயர்ந்த ஆத்மா!
இதைவிடச் சிறந்த தனிமனித Anger / Anxiety Management டூல் ஏதும் கிடையாது.
அன்புடன்,
ஹரிஹரன்
4 comments:
டெஸ்ட் மெசேஜ்!
அன்பு ஹரிஹரன்,
"ஒரு மரத்தின் மீது ஞானி இருக்கிறார். கீழே சாமானியன் மரத்தின் கீழே இருக்கிறான். ஞானி சாமானியனிடம் சொல்கிறார்... காய்கறி வண்டி வருகிறது என்கிறார். சாமானியன் வெளியே எட்டிப் பார்த்து ஞானியிடம் பொய் சொல்லாதே வண்டியே வரவில்லை என்கிறான். சிறிது நேரம் கழித்து காய்கறி வண்டி வருகிறது. சாமானியன் அட ஆமா காய்கறிவண்டி என்கிறான்.
வீட்டு வாசலில் இருந்து காய்கறிவண்டி நகர்ந்து சென்றதும் சாமானியன் காய்கறி வண்டி போய்விட்டது என்கிறான். ஞானி சொல்கிறார் இல்லை காய்கறி வண்டி போக வில்லை என்று. சாமானியன் மீண்டும் ஞானியைப் பார்த்து பொய் சொல்கிறாய் என்கிறான்".
அற்புதமான உதாரணம்.மனதில் இருந்த ஒரு கேள்விக்கு விடையளித்தது. நன்றிகள்.
ராமச் சந்திரன்.
வருகைக்கு நன்றிகள் ராமச்சந்திரன்.
அன்பு அரிகரன்
தங்களது உயர்ந்த ஆத்மா படித்தேன்
வாககிய அமைப்பு சற்று கடினமாக உள்ளது.
சற்று எளிமைப்படுத்தினால் நன்றhக இருக்கும்.
நல்ல வைகளை படிக்க வேண்டும் என்று ஆவலாக
தேடும் எனக்கு தங்களது பக்கங்கள் மிகப்பெரும்ஆறுதல்
தொடருட்டும் தங்களது சீரிய பணி
வணக்கமுடன்
Post a Comment