Tuesday, March 20, 2007

(137) யார் காரணம்???

பல நாட்கள் பார்க்கின்ற காட்சிகள்தான் என்றாலும் அதை அணுகும் முறையால் அவை புதிய பார்வைக்கோணத்தால் உணர்த்தப்படும் உண்மைகள் உரைத்து உறைக்க உறக்கம் கலைந்த உணர்வு ஏற்படுத்துகின்றன சில சமயம்.

இன்று கண்ட இரு காட்சிகள் காட்சியில் இருப்பவரிடத்தில் என்னை வைத்துப் பார்த்ததில் ஏற்பட்ட எண்ணங்கள் இவை.


காட்சி -1:

சைரன் ஒலிக்க பந்தோபஸ்து பாதுகாப்பு வண்டிகளுக்கிடையே குவைத் சிட்டியிலிருக்கும் தலைமை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட செல்லும் குற்றவாளிகள் ஏற்றப்பட்ட பேருந்து!
உள்ளிருக்கும் எவரையும் காணமுடியாதபடி தகடுகளால் மறைக்கப்பட்ட சிறைத்துறைப்பேருந்து!

உள்ளிருப்போர் மனநிலை எப்படி இருக்கும்? என்ன குற்றங்கள் செய்தவர்கள்? எந்தச் சாலை வழியாக இட்டுச்செல்லப்படுகிறோம் எனும் தகவல் கூட கிடைக்காத தனிமைப்படுத்தப் படுவோம் என்கிற விஷூவலைசேஷன் இருந்திருந்தால் இழக்கப்போகும் விலைமதிப்பற்ற சுதந்திர நடமாட்டம், பேச்சு,உணவு, உடை என எல்லாம் எந்த நொடியில் எந்த காரணத்துக்காக எதைச் செய்து சிறைப்பட்டுக்கொண்டார்கள்?

இவர்கள் சுதந்திரமின்மைக்கு அவர்களே அன்றி வேறு யார் காரணமாயிருக்கமுடியும்?

காட்சி -2:

கண்ட இந்த இரண்டாவது காட்சி நிறைய நேட்டிவிட்டி கொண்டது!

குவைத் முழுதும் தொலைதொடர்பு கேபிள் பதிப்பு இந்தியாவின் டிசிஐஎல் (டெலி கம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட்)நிறுவனம் செய்துவருகிறது.

முன் மதிய நேரத்தில் குவைத் ஸ்டாக் எக்ஸ்சேஞ் அருகே சிக்னலுக்காக டிராபிக்கில் காரில் காத்திருக்கும் போது நடைபாதை ஓரம் தொலை தொடர்பு கேபிளுக்கு எக்ஸ்கவேஷன் வாணம் தோண்டிக்கொண்டிருந்த நபர்கள் பேச்சு கார் கண்ணாடி ஏற்றி இருந்த நிலையிலும் காருக்குள்ளே எனக்குக் கேட்கிறது. எல்லாம் நம் தமிழ் மக்கள்தான். இளம் இருபதுகளில் இருப்பவர்கள். கையில் பிக்காசு, கடப்பாரை கொண்டு கேபிளுக்காகத் தெருக்களிலும், பாலைவனப் பொட்டைக்காட்டிலும் குழிதோண்டி பிசாத்துக் காசு சம்பளம் பெற கடல்தாண்டி வந்து பல்வேறு அவதிப்படுபவர்கள்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஏதும் இல்லை அடிமையாக இங்கிலாந்துக்கு இருந்தார்கள் கழுதையில் பல மைல்தூரம் குடிநீர் சுமந்து சென்று விற்ற, மீன்பிடித்து, முத்துக்குளித்து, கப்பலை மடக்கி நடுக்கடலில் கொள்ளையடிக்கும் தொழில்கள் செய்த முன்னேறாத சமூகமாக இருந்தது!

இன்று இங்கிலாந்து தம் முன்னோரை, தம் தேசத்தை அடிமைப்படுத்தியது, சுரண்டியது என்று குவைத் ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குச் சொல்லிக்கொண்டு இல்லை. குவைத் மக்களின் கல்வி பி.எச்டி வரை இலவசம்! எல்லாவிதமான வசதிகளையும் குடிமக்களுக்குச் செய்து தந்திருக்கிறது!

நம்மூர் தமிழ்ப்பற்று, தமிழின, பகுத்தறிவு திரா"விட" இயக்கங்கள் நாற்பதாண்டுகள் ஆட்சியில் 234 தனியார் பொறியியல் கல்லூரிகள் தனியார்வசம் தரப்பட்டு கல்வி வியாபாரமாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தனியார் கல்வி நிறுவனங்களில் 90% திரா"விட" இயக்க அரசியல் வாதிகள் நடத்துவது! பெரும்பணம் இருந்தால் அன்றி உயர் கல்வி படித்தல் சாத்தியமில்லை!

உயர்கல்வி கற்பது தமிழனுக்கு அவனது வளமான எதிர்காலத்துக்கு அவசியம் என்பதை மக்களுக்கு மறைத்துவிட்டு வீணாய்ப்போன பார்ப்பன எதிர்ப்பு, குடுமி அறுப்பு, பூணூல் அறுப்பு, இறை மறுப்பு என்று சமுதாயத்தை வெட்டித்தனமான விரயக்குழியில் தள்ளியதுதான் திரா"விட" இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த நாற்பதாண்டுகளில் சாதித்தது!

குவைத்தின் சாலையில் காரினுள்ளே தமிழக அரசு உதவிகள் செய்யாமல் நிராகரிக்கப்பட்ட நானும் தமிழன், நடைபாதையில் பிக்காசு போட்டுக் குழிவெட்டும் நபர்களும் தமிழர்கள். நான் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் சந்தித்தபடியே கல்வி கற்று, உழைத்து, அலைச்சல் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருக்கிறேன்!


குவைத் வந்து நடைபாதையில் கேபிளுக்கு குழி தோண்டும் தமிழர்களும் சத்தியமாக மிகக்கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் உயரம் எட்டவில்லை! எட்டமுடிவதில்லை தலைமுறைகளாக இவர்களுக்கு ஏன்? தமிழர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரா"விட" இயக்கத் தமிழின, மானத்தலைவர்கள் சீரிய ஆட்சியில் இருந்தபடியே அடித்தட்டுத் தமிழனுக்குத் தேவை என்ன எனத் தேடித் தேடி, பார்த்துப்பார்த்து எவையெல்லாம் தேவையோ அவையில்லாம் இந்தத் தமிழர்களுக்குத் தந்திருக்கின்றார்கள்! கடந்த நாற்பதாண்டுகளாக!

உடலால் மட்டுமே 100% உழைத்தால் உயரம் தொடுதல் சிரமம்! மூளையைச் செயல்படுத்தி உழைக்க உயர்கல்வி அவசியம். உயரம் தொடுதலில் உயர்கல்வி என்பது ஒரு மிக முக்கியமான பேக்டர். உயர்கல்வி கற்பிக்க தந்தையின் தியாகம் மிக முக்கியமானது.

எனது இன்றைய நிலைக்கு எனது உழைப்பும் காரணம் என்ற போதும் என்னை நிலைநிறுத்த எனது தந்தை மேற்கொண்ட முயற்சிகள் எனது வெற்றிக்கு அஸ்திவாரம். எனது தந்தை தமிழகத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கும் அரசியல் திரா"விட" இயக்கங்களில் இல்லாதது, எனக்குக் கல்விக்காக பட்டினி கிடந்தது, புகை, குடி, கூத்து என்று தன்சுகம் கருதாதது முக்கியக்காரணம்.

எனது தாத்தா காலத்தில் என் தந்தை எதிர் கொண்ட வறுமைச் சூழல், என் தந்தையை பாட்டி சாணி-வறட்டி தட்டிப் படிக்கவைத்து, என் தந்தை தன் சகோதரர்கள், தன் தமக்கை மகன்(ள்)கள், தன் பிள்ளைகள் என 1970 முதல் 1989 வரையிலான 19 ஆண்டுகளில் என் தந்தை ஒருவரின் அர்ப்பணிப்பு, தன்னலமில்லாத செயல்பாடு, தன் சுகம் மறுக்கும் தியாகத்தால், அதி தீவிர பிராமண எதிர்ப்பலைவீசும் சூழலில், எந்த சலுகை, அதிகாரம் இல்லாதபோதும் தன் மிகச்சிறிய சம்பளத்தைக்கொண்டு ஒரு 20தனிநபர்கள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்ற முடிந்தது. கல்வி+ உழைப்பால் பொருளாதார ஒளி உள்வந்து உயர்ந்தவர்களில் நானும் ஒருவன்!

உயரவேண்டும் எனில் தேவை உழைப்பு, அர்ப்பணிப்பு, தொலை நோக்குப் பார்வை. என் தந்தை குடித்து,புகைத்து, சூதாடி, சீரணி அரங்கில் நடக்கும் அரசியல் திரா"விட" சீரழிப்புக் கூட்டத்துக்க்கு ஆர்ப்பரித்து அலைகடலாய் லாரியில் பயணித்து அழியவில்லை! இவை இல்லாததால் என் தந்தையால் ஒரே தலைமுறையில் பலரை மேல் ஏற்றிவிட ஏணியாய் இருக்க முடிந்தது!


நாற்பதாண்டுகளில் இந்த உலகத்துக்கு ஹிட்லரையும், இரண்டாம் உலக யுத்தத்தையும் தந்த ஜெர்மனியில் ஹிட்லரின் வம்சாவளியினரை, பிரிவினரைத் தேடி பழித்துகொண்டிருப்பதை மட்டுமே ஹிட்லருக்குப்பின் வந்த அரசாங்கம் ஜெர்மெனியில் செய்யவில்லை!

ஜப்பான் தனது சமுராய் வீரர்களையும், அவர்கள் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர்மீது தொடுத்த தாக்குதல்களால் சினமுற்ற அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசியது. 90% அழிந்து போன ஜப்பானில் அடுத்துவந்த ஆட்சியாளர்கள் சமுராய் வீரர்களையும், அவர்கள் இனத்தவரை ஜப்பானின் ஹான்ஷி, ஹ்யூஷு, ஹொக்கைடோ- வெங்கும் மேடைகள் அமைத்து கொக்கி போட்டு திருடிய மின்சாரத்தில் செயல்படும் மைக், ஒலிபெருக்கிகள் முன் முழங்கி சமுராய்வீரர்களைப் பழித்தபடி ஊழலைக் கண்டுபிடித்த சர்க்காரியா கமிஷன் சர்க்கார் நடத்தவில்லை! ரோபோக்கள், கார்கள், பைக், டெக்னாலஜி என்று கண்டுபிடித்தார்கள் ஜப்பானியர்கள்!

மேடைதோறும் ஜப்பானில் தாய்மொழியில் கல்வி கற்கிறார்கள்! ஜப்பான் முன்னேறியது!
ஜெர்மெனியில் தாய்மொழியில் கற்றதால் ஜெர்மனி முன்னேறியது! தமிழிலேயே உயர்கல்வி கற்கவேண்டும் என முழங்குவதால் மட்டும் வந்துவிடுமா தமிழரிடம் மாற்றம்??

ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் அழிவைக்கொண்டு வந்த இனப்பிரிவினை நாஜி சிந்தனையை வைத்து பார்ப்பன எதிர்ப்பு எனும் இன வெறுப்பு மட்டும் தினம் டானிக் மாதிரி திரா"விட"க் கொள்கைகளாக ஆட்சியாளர்கள் ஊட்டி வளர்த்தாலோ, பிராமணனின் குடுமி, பூணூலை அறுப்பதாலோ, இந்து தெய்வங்களை செருப்பால் அடிப்பதாலோ, உடைப்பதாலோ தமிழ்நாடு முன்னேறி இன்றைய ஜெர்மெனி, ஜப்பான் என ஒருபோதும் ஆகாது. மாறாக ஹிட்லரின் ஜெர்மெனியாகவோ, ஹிரோஷிமா, நாகசாகியாக அழிவு கண்ட ஜப்பானாக சமூக வரலாற்றில் இன்னும் விரைந்து பின்னேறலாம்.

பிரிட்டிஷ்காரர்களின் நிர்வாகத்திறனுக்கு இணையானவர்கள் பகுத்தறிவு அரசியல் திரா"விட" ஆட்சியாளர்கள்! ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! கண்டிப்பாக!

அடிமை இந்தியாவின் அரசாண்ட பிரிட்டிஷ்காரர்கள் ஃபிஜித்தீவுகளுக்கும், தென் ஆப்பிரிக்கா, டிரினிடாட்,மலேஷியா மற்றும் கரீபியன், இலங்கைத் தீவுகளில் கரும்பு, தேயிலைக்கூலி வேலைக்கு தமிழர்களை அனுப்பிவைத்தார்கள் அன்று.

இன்று பகுத்தறிவுப்பாடை பேசுவோர் ஆட்சி நடத்தி நாற்பதாண்டுகளில் பெரும்பான்மை வெளிநாடுவாழ் தமிழர்கள் குவைத்தில் குழிவெட்ட, மலேஷியாவில் மண் அள்ள, சிங்கப்பூரில் சித்தாள் வேலை செய்ய ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்!

குவைத்தின் நடைபாதைகளில் , மத்திய கிழக்கு எண்ணைய் வயல்களில் குளிர் , மணற்புயல், கடும் வெயிலில் எடுபிடி, கூலிவேலை செய்யும் ஒவ்வொரு அடித்தட்டுத் தமிழனின் மேம்படாத வாழ்வுக்கும் பிரதான காரணங்கள்:

1. நாற்பதாண்டுகளாக ஜெர்மெனியைப்பார், ஜப்பானைப்பார், தமிழனா கொக்கா? தமிழின மான, உணர்வு, பகுத்தறிவு என்றபடியே தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சும் அரசியல் திரா"விட"க் கட்சிகள்.

1அ. கல்வியை எட்டாக்கனியாகப் பெரும் செலவு பிடிக்கும் வியாபாரமாக்கிவிட்டு தமிழன் அதை உணராமல் இருக்க திரா"விட"க்கட்சிகள் வீசி எறியும் இலவச வேட்டி, சேலை, செருப்பு, கோவணங்கள்...இத்யாதிகள்....

1.ஆ. நாற்பதாண்டுகளாக மக்கள் நலத்திட்ட நிதியை ஊழல் செய்து தொலைக்காட்சிகள் குழுமங்கள் அமைத்து 24 மணி நேரமும் சினிமா..சினிமா..சினிமாவுக்கு மக்களை அடிமையாக்கியிருப்பது!

2.தமிழ்நாட்டு திரா"விட"க் கட்சிகளின் முப்பெரும், ஐம்பெரும் விழாவுக்கு பிரியாணி, பேட்டாக்காசுக்காக லாரியில் ஏறி அலைகடலாக ஆர்ப்பரித்துச் சென்னைக்குச் செல்வதைமட்டுமே வாழ்வாகக் கழித்த அவர்கள் தந்தையரும் காரணம்!

3.வாழ்வில் என்னவாக வேண்டும் என்கிற எந்த இலக்கும் இல்லாமல் 13வயதில் ஆரம்பித்து நம்ம ஊரில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், விஜய்காந்த், இளையதளபதி விஜய், தல அஜித், சிம்பு,தனுஷ், ஆர்னால்டு,ப்ரூஸ் லீ,ஜாக்கிசான், டைட்டானிக் கேட் வின்ஸ்லெட்,த்ரிசா,நயன்தாரா, நமீதா, சிநேகா,வடிவேலு, விவேக்,விஜய டி.ராஜேந்தர்,கஞ்சா கருப்புக்கு ரசிகர்மன்றம், நற்பணி மன்றம், தோரணம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோ, கட் அவுட்ன்னு திரிஞ்சு அலைவதில் தன் தனி வாழ்க்கையினின்று தரம் கெட் அவுட் ஆகிறதே எனும் கவனமில்லாத, தன் உயர் கல்விக்குத் தானே கெட் அவுட் சொல்லிவிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா நாயகர்கள் கட் அவுட் வைக்க ஆற்றலுடன் ஒர்க் அவுட் செய்யும் பெரும்பான்மையான அடித்தட்டுத் தமிழ் இளையர்களின் தொலைநோக்கு!

குவைத் வாழ் தமிழர்களில் 75,000 பேரில் 70-80% பேர் டிராவல் ஏஜன்சியிடம் பணம் கட்டி வந்து கூலி வேலை, டிரைவர், எடுபிடிவேலை இவற்றில் தான் இருக்கின்றார்கள்.

பார்ப்பானும், அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த கட்டுக் குடுமியும், இன்றைக்கும் போடும் பூணூலும் தான் இதற்குக் காரணம் எனும் சிந்தனை அக்மார்க் ஆஸ்திரேலிய தீக்கோழித்தனமானது!

அன்புடன்,

ஹரிஹரன்

2 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

ஜடாயு said...

ஹரிஹரன், மனம் திறந்த பதிவு. வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைப் பார்த்து அதிலிருந்து கற்பது என்பதே ஒருவிதமான தியான அனுபவம் தான்.

தமிழ்நாட்டை பல துறைகளிலும் மட்கிப் போகச் செய்த திராவிட அரசியலை இதே கோபத்துடன் தான் நானும் திரும்பிப் பார்க்கிறேன். What bloody days!