Saturday, July 08, 2006

(10) ஹரிஹரனின் போடி டூ சென்னை அனுபவங்கள்-1

நானும் கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் விடுதியைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர் போடிக்கு வந்தேன். போடியில் 89-90களில் நிறையபேர் என்ஞினியரிங் படிப்பு படித்துக் கொண்டும், படிப்பை முடித்து விட்ட டெக்னோகிராட்ஸ் நிறைய இருந்தனர். அப்போது அவர்களது பிரதான வேலையே 5-10 பேர் கொண்ட சிறு குழுக்களாக, முறை வைத்துக் கொண்டு, இருந்த ஏழெட்டு வீதிகளில் சுற்றிச் சுற்றி ரஜினி, கமல் படங்கள் பற்றி அதிதீவிரமாக விவாதிப்பதும், குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலைகளில் "பக்தி" பெருக்கெடுத்து நகருக்குள் இருந்த சுப்ரமண்யசுவாமி கோவில், பெருமாள் கோவில் பக்கம் ஒதுங்குவது என்றிருந்தது.

கோவில்களின் புகழ் கூட ஏறி இறங்கும் விஷயமாக இருக்கிறது. யாரோ சில படிக்கிற பயபுள்ளைக இந்தக் கோவில் சாமியைக் கும்பிட்ட்டால் புத்தகத்தை முழுப்பரீட்சை வரைக்கும் தொடலைன்னாலும் சாமி பாஸாக்கி விட்டுரும்னு கிளப்பி விட்டது போடியில பயங்கரமா ஒர்க் அவுட் ஆனதில், 4கி.மீ தூரத்தில் மேலச்சொக்கநாதபுரம் எனும் கிராமத்தில் இருந்த தொட்டராயசாமி கோவிலுக்கு சனிக்கிழமைகளில் போடியிலிருந்து நிறைய பேர் குடும்ப சகிதமாகச் செல்வார்கள்.

நம்ம சிபிஏகல்லூரி மாணவர்கள், ஊரில் வளையவரும் டெக்னேகிராட்ஸ் "சனிக்கிழமை" மாலைகளில் "ப்ளாக் கமெண்டோ" மாதிரி தொட்டராயசாமி கோவிலுக்குக் "மாணவிகளோடு" செல்லும் குடும்பத்திற்கு "இஸட்"பிரிவு பாதுகாப்புத்தருவார்கள்.

இப்ப பாவம் அந்த தொட்டராயசாமி முன்னமாதிரி பிட் எடுத்துப்போட ஆள் அனுப்புவதில்லை போலிருக்கிறது. கோவில் காத்தாடுகிறது.

நமக்கு இருந்த குடும்பச்சூழலில் "ப்ளாக் கமெண்டோ" வேலைசெய்யக் குடுப்பினை இல்லை. மேலும் ரஜினி,கமல் நடித்துப் பணத்தில் புரள அவர்களது படங்களைப் பற்றி உயிரைவிட்டு தெருவெல்லாம் கால்தேய நடந்து விவாதிக்கவும், இன்னபிற டைனமிக்,யூத்புல்லான செயல்கள்செய்ய நாணயமான ஆசிரியராக கௌரவமாகப் பணியிலிருக்கும் தந்தைக்கு இடையூராக இருக்க என்மனம் விரும்பவில்லை.

கல்லூரிபடிப்பு முடிந்த பத்துநாட்களில் அப்பாவிடம், உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது சென்னையில் இருந்தால் என்னை அங்கே அறிமுகப்படுத்திவிடச் சொல்லி தினம் இம்சித்ததில் அப்பாவும் நிறைய யோசித்து அதிகம் பழக்கம் இல்லாத அவரது உறவினரைக் கேட்பது என்று என்னால் நிர்பந்திக்கப்பட்டார்.

அந்த உறவினரும் சரி...வரலாம்...வந்தால் என்று முடிவுக்கு வருமுன் 102டிகிரி காய்ச்சலெனினும் தந்தையோடு சென்னைக்குள் நான் ஆஜர்.

சென்னையில் இறங்கியவுடனே நகரத்தின் பெரிய அளவிலானதான தன்மை என் 20வயதையும் மீறி ஒரு கிலியை ஏற்படுத்தியது. அப்பா மறுநாள் ஊருக்குச் சென்றுவிட்டார்.

மதுரைக்குப் பலமுறை பள்ளிநாட்களில் ஆண்டுவிடுமுறையின் போது தாய்வழிப்பாட்டி ஊரான சோழவந்தான் போகும்போதும், மதுரையிலேயே அரசரடியில், ஊமச்சிக்குளத்தில், பழங்காநத்தம், என்று பல இடங்களில் இருந்த என் தந்தை வழி அத்தைவீட்டுக்குப்போகும் போது போயிருக்கிறேன். மதுரை போடியை விடப் பலமடங்கு பெரிய நகரம்.

மதுரை புதுஜெயில் ரோட்டில் அத்தை வீட்டிலிருந்து பொழுதைக்கழிக்க வேண்டி எனது சகோதரனுடன் அரசரடியில் அப்போது பலகாலமாகக்கட்டப்பட்ட "ராம்விக்டோரியா" தியேட்டர் அருகே நின்றுகொண்டு"டைம்கீப்பர்"மாதிரிதிண்டுக்கல்போகும்வயிரவன்,
சோலைமலை,நல்லமணி,சி.கே.சொக்கன், எங்கஊர்போகும்எஸ்.என்.ஆர்,மதுரைமீனாக்ஷி,சி.கே.பாலன்,திருமால்அழகுஎன்று எல்லா பஸ்ஸையும் வழியனுப்புவதுதான் பொழுதுபோக்கு.

இந்தப் பொழுதுபோக்கு பிற்பாடு பரிணாம வளர்ச்சிகண்டு லண்டன் ஹீத்ருவிலும், ஆம்ஸ்டர்டாம்ஷிபோல் ஏர்போர்டில் க்வாண்டாஸ்,எஸ்.ஏ.எஸ்,ஏர்ப்ரான்ஸ்,லூப்தான்ஸா,விர்ஜின்,அமெரிக்கன்,கேஎல்.எம், இன்னபிற நாட்டு விமானங்களைக்கண்டபோது க்ராபிக்ஸ்ல போட்டிருந்த புல்சூட் மறந்து டவுசர் சிறுவன் வந்து குதூகலிப்பில்

"வானத்தை வளைத்தேன் வில்லாய்"
"வாயெல்லாம் சிரித்தேன் பல்லாய்" - எனக் புதுக்கவிதை பாடியது.

எண்ணங்கள் நயாகரா வேகத்தில் வந்ததில் சென்னையை விட்டு ஹீத்ரு வரை வந்துவிட்டது. பேக் டு டிராக்.

மதுரையில் எல்லாம் உறவுமுறைதான். ஆண்கள் யாரா இருந்தாலும் அண்ணன்தான், பெண்கள் அக்காதான். சின்னப்பையன் எல்லாம் தம்பி. பாண்டியன் பஸ் டிரைவர்கிட்ட பஸ் ஸ்டாப்பாக இல்லாத இடத்திலும் "அண்ணே ப்ரேக்க ஒருவாட்டி மிதிச்சா இறங்கிக்குவேன்னு" சொன்னா டிரைவர் அண்ணனும் இறக்கிவிட்டுப் போவார்.

சென்னையில் புதிதான எனக்கு கண்டக்டர் எழுந்து வரவே மாட்டார்ன்ற விஷயம் தெரியாது, ஊருக்குப்புதிதான நான் நாலுபேர்கிட்ட நாலுவாட்டி எறங்குற இடம் கேட்டு இறங்கத்தோதா படிக்கட்டில் நின்னுட்டு வந்தப்போ சென்னை பல்லவன் நடத்துநர் "டேய் கண்ணாடி, சாவு கிராக்கி" மேல ஏறிவாடான்னு கூப்பிட்டதுல கண்ல தண்ணியே வந்துருச்சு. அந்தக் கலாச்சார அதிர்ச்சியில இருந்து மீள சில பல நாட்கள் ஆனது எனக்கு.

பள்ளிக்கூடத்திலேயும் சரி, வீட்லேயும் சரி யாரும் என்னைத் திட்டும்படி நடந்துகொண்டதில்லை நான்.

ஆனால் அதுதான் சென்னைன்னு புரிஞ்சுபோச்சு சீக்கிரம். மதுரையிலே ஒரு ரெண்டு மாசம் அலைஞ்சா ஒரு வேலை கிடைக்கிறது குதிரைக்கொம்பு. ஆனால் சென்னையிலே எனக்கு அப்ளை பண்ணா பாதிகுப்பாதி இண்டர்வ்யூக்கு கூப்பிடுவாங்க. அதுல பாதிக்குமேல வேலைக்கு ரெடி.

வளசரவாக்கத்திலிருந்த தந்தைவழி உறவினர்க்கு 15நாட்களுக்கு மேல் சுமையாகிப்போக அப்பா இம்முறை நங்கநல்லூர் சிதம்பரம் ஸ்டோர்ஸ் அருகிலான 13வது குறுக்குத்தெருவில் தாய்வழி தூர உறவினர் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக விட்டுச்சென்றார்.

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு கம்பெனியில் ஒருமாதம் சம்பளமின்றி வேலை(!?) பின் சம்பள பேரம் கட்டுபடியாகாததில் சம்பளமே வாங்காத வேலையை ராஜினாமா செய்தேன்.

சென்னைக்கு வந்த 45நாட்களுக்குள் முதல் ராஜினாமா வரை வந்துவிட்டேன். பிற்பாடு முதல் வேலையைவிட ரூ.50 குறைவு என்றாலும் தன்மானத்திற்காக அடுத்த வேலை 15நாட்களுக்குள் ரூ300குச் சேர்ந்தேன். முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ300. அது அப்படியே பேயிங் கெஸ்ட் பேமெண்ட்க்குப் போய்விடும். முதல்மாத சம்பளத்தில் ரூ10எனக்குத்தந்தார் நங்கநல்லூர் உறவினர். மேலும் ஞாயிறு எனக்காக ஹிண்டு வாங்குவார். க்ளாஸிபைடு பார்த்து விண்ணப்பிக்க உதவியாக இருந்தது.

அடுத்த மாதம் ரூ750ல் ஒரு வேலை கிட்டியது. உடனே ஹைதராபாத் டிரைனிங்குக்காக ஒருமாதம் செல்லவேண்டிவந்தது. என்மாதிரி பேச்சிலர்ஸுக்கு இம்மாதிரி லாங் டூர் லாபகரமானது. டிஏ-வைத்தே சமாளிக்கலாம். என்றாலும் எனது ஸ்போக்கன் இங்கிலீஷ் சரியில்லாததால் 'விற்பனை'ப்பிரிவில் எச்சுக்கள் என ஒரே தள்ளாட்டம். பதினொரு மாதங்களில் இது முன்றாவது ராஜினாமா! பெட்டியைக்கட்டிக்கொண்டு போடிக்குத் தோல்விப்பயணம்.

ஊர்திரும்பிய எனக்கு என் உறவினர்களால் நான் ஒரு பெயிலியர், ப்ளாப் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டதில் சென்னையில் இவ்வவளவு பேச்சு வாங்கியிருந்தால் மாதக்கடைசியில் சம்பளமாவது கிடைக்கும் என்ற மெய்ஞானம் தோன்றியது. 45நாட்களில் மீண்டும் சென்னை.

இம்முறை ரங்கநாதன் தெருவில் இருந்த மேன்சனில். தக்க சமயத்தில் மேன்சன் வரை வந்து (நங்கநல்லூர்க்கு ரயில் பிடிக்கும் வழியில்) அந்த உறவினர் நான் முன்பே அப்ளை செய்திருந்த இண்ட் ர்வ்யூ லெட்டரைத் தந்ததை நன்றியுடன் நினைக்கிறேன். அந்தக் கம்பெனியில் ஐந்தாண்டுகள் ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸில் பணிபுரிந்தேன் அந்த அனுபவம் குவைத் வேலைக்குப் பெரிதும் உதவியது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,


ஹரிஹரன்

6 comments:

வடுவூர் குமார் said...

ஹரி
அப்படியே நம்ம இடங்களையெல்லாம் தொட்டுத்தான் போயிருக்கிறீர்கள்.
வலசரவாக்கம் எனது மாமனார் வீடு.
நங்கநல்லூர்....உங்க மாதிரியே உறவினர் வீட்டு சாப்பாடு,அப்படி இப்படி ஒரே அலை வரிசையில் தான் போயிருக்கிறீர்கள்.
போடுங்க போடுங்க..வாசிக்க நாங்க இருகோம்.
ஒரே வித்தியாசம் நீங்க போடினா நான் நாகப்பட்டினம்.

Hariharan # 26491540 said...

//அப்படியே நம்ம இடங்களையெல்லாம் தொட்டுத்தான் போயிருக்கிறீர்கள்.
வலசரவாக்கம் எனது மாமனார் வீடு.
நங்கநல்லூர்....உங்க மாதிரியே உறவினர் வீட்டு சாப்பாடு,அப்படி இப்படி ஒரே அலை வரிசையில் தான் போயிருக்கிறீர்கள்.//

வாங்க குமார். சென்னை அனுபவங்கள்தான் "ஆண்டிபயாடிக்" ஏதும் இல்லாமல் எதையும் எதிர் கொள்ளும் எதிர்ப்பு சக்தியை எனக்குத் தந்தது.


//போடுங்க போடுங்க..வாசிக்க நாங்க இருகோம்.//

பின்ன, உங்களை நம்பித்தானே ப்ளாக்கர் கடையை திறந்து வைத்துப் பின்னூட்டக் கல்லாவில் உக்காந்திருக்கிறது.:-)))

செல்வன் said...

ஹரிஹரன் அருமையான அனுபவ பகிர்வுகள்.

இந்தியாவில் நான் வேலை தேடி அலைந்த கதையும் கிட்டத்தட்ட இதுபோல் தான்.2700 ரூபா சம்பளத்துக்கு நாயாய் அலைந்திருக்கிறேன்.தினமும் 150 கிலொமீட்டர் பைக்கில் சுற்றி,சுற்றி பொருட்களை விற்றிருக்கிறேன்.

//படிக்கட்டில் நின்னுட்டு வந்தப்போ சென்னை பல்லவன் நடத்துநர் "டேய் கண்ணாடி, சாவு கிராக்கி" மேல ஏறிவாடான்னு கூப்பிட்டதுல கண்ல தண்ணியே வந்துருச்சு. அந்தக் கலாச்சார அதிர்ச்சியில இருந்து மீள சில பல நாட்கள் ஆனது எனக்கு.//

அடப்பாவிகளா..அப்படியா கூப்பிடுவார்கள்?

எங்கள் கோவையில் திட்டினால் கூட "உங்களுக்கு அறிவிருக்குங்களா"ன்னு மரியாதையா திட்டுவாங்க.

ஹும்ம்

நல்லவேளை சென்னையில் ஒரிரு நாட்களுக்கு மேல் நான் தங்கியதில்லை.அதனால் அந்த அனுபவம் ஏற்படவில்லை.

Hariharan # 26491540 said...

வருக செல்வன். ஊர் ஊராய் சுற்றியவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த வரையில், சென்னையிலும் வட மாவட்டங்களிலும் மக்கள் சற்றுக் கூடுதலாகவே கடினப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சாதரணர்க்கு மரியாதைக்குறைவுதான்.

கோவை நானறிந்ததில் மரியாதை தரும் ஊர். மதுரை மிக்க பாசக்கார ஊர்.

இதனாலேயே சென்னையில் பிழைக்கத் தெரிந்தால் எங்கும் பிழைத்துவடலாம்!

தங்கள் பாராட்டிற்கு நன்றி செல்வன்.

துளசி கோபால் said...

அதெப்டிங்க 'போடி' க்காரங்களுக்கெல்லாம் சென்னையில் இப்படி ஒரு உறவினர், தெரிந்தவர்
வீட்டு அனுபவம் இருக்கு?

Hariharan # 26491540 said...

//அதெப்டிங்க 'போடி' க்காரங்களுக்கெல்லாம் சென்னையில் இப்படி ஒரு உறவினர், தெரிந்தவர்
வீட்டு அனுபவம் இருக்கு?//

வாங்க துளசியக்கா,

கெட்டும் பட்டணம் சேர் இது பழ மொழி. என்னை மாதிரி "கெடாமலே" பட்டணம் சேர்ரவங்களுக்கு,வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கிவிடாதிருக்க ஏதோ ஆண்டவனால் அனுப்பப்படும் "அபய ஹஸ்தம்" தான் இம்மாதிரி தெரிந்தவர்கள்.

அதான் போடிக்காரங்க விவரமான ஆளுங்களாச்சே. கோடு போட்டா ரோடு போடற, புள்ளி வைச்சா கோலம் போடறவங்களாச்சே!