Sunday, July 30, 2006

(25) எந்நாட்டுக் கரன்ஸியும் இதற்கு இணையில்லை

இது எனது கால் நூற்றுப் (25வது) பதிப்பு.

உலகில் இன்றைய தேதியில் இருக்கும் கரன்சிகளில் நானிருக்கும் குவைத் நாட்டுக் கரன்ஸிதான் அதிக மதிப்புள்ளது.

ஒரு குவைத் தினார் = இந்திய ரூபாய் 160/-


நான் சிறு வயதில் என் ஆரம்பப் பள்ளிக்கூட காலகட்டத்தில் அஞ்சாப்பு , ஆறாப்பு படித்த 1980 களில் இன்றைய மாதிரி 24மணிநேர சினிமாப் பிரதானமான கேபிள் தொலைக்காட்சிகளோ, வீடியோ கேம்ஸ் கேட்ஜட்களோ இருந்ததில்லை.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தியேட்டரில் சாதா பெஞ்சு கிளாஸில் 40 பைசாவுக்கு ஏதாவது ஒரு படம். அதுவும் ரிலீஸாகி ஊரெல்லாம் ஓடி திரையில் "க்ரைன்ஸ்"மழை விழும் 35mm பட்டணத்தில் பூதம், திரிசூலம், துணிவே துணை மாதிரியான படங்கள்.

போடி நகர தியேட்டர்கள் இதற்கே போஸ்டர் ஒட்டிய நகரும் தட்டி (Mini Mobile hoarding !?) அதற்குத் தோரணம் கட்டி, பேண்ட் வாத்திய (ஸிம்பொனி)இசைக்குழு என்று மாலை 5.30 மணிக்கு நகரின் முக்கியத் தெருக்களில் எபெக்டிவ், இன்டராக்டிவ் advt. campaign என்று பின்னி எடுப்பார்கள்.

தியேட்டரில் தரை டிக்கட் 25 பைசா சிமண்ட் கட்டாந்தரையில் ஆசாமிகள் தலைக்குத் துண்டை வைத்துக் கொண்டு, படுத்துக்கொண்டு, காலைநீட்டி உட்கார்ந்த்துகொண்டு, பிடித்த காட்சிகளுக்கு விசில் அடித்து என்று படுரிலாக்ஸ்டாக படம் பார்ப்பார்கள்.

பால்கனியில் ரூ 1.25 க்கு ஐந்து மடங்கு அதிகமாக பணம் தந்து காலைக் கூட நீட்டமுடியாமல் மூட்டைப்பூச்சிக்கடியில் முழுமையாக படம் தெரியாமல் இடையில் தூண்கள் என்று அவதிப்படுவர்.

For a change நான் அறிந்து 25பைசா தரை டிக்கட் வாங்கிய பொருளாதாரத்தில் குறைவான ஆசாமி முழுமையாக மகிழ்ச்சியாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்ட பணக்கார ஆசாமி ஐந்துமடங்கு செலவழித்தும் ரிலாக்ஸ் பண்ண வந்து இயலாது போகும் முரண் பட்ட சூழல் இங்கே.

சரி பேக் டு தி ட்ராக்.

ரெண்டு மாசத்துக்கு ஒரு சினிமா என்ற பொழுதுபோக்கு என் மாதிரியான சிறுவர்களுக்கு சோளப்பொரி மாதிரி! வார விடுமுறைகள், இதர விடுமுறை நாட்களுக்கு செலவில்லாத பொழுது போக்கிற்கென சில விளையாட்டுக்கள் இருந்தன.

கோலி குண்டு விளையாட்டில் "லாக்" என்று ஏதாவது சுவரை ஒட்டி "ப" வடிவில் இரண்டுக்கு இரண்டு சதுரமாக, அதனுள் கோலிக்குண்டுகள் தங்க என்று சிறு குழிகள் இருக்குமாதிரி "லாக்" வரையப்பட்டு சாட் ப்பூட் த்ரீ முறையில் விளையாடுவோர் வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

இதில் குழுவாகவும் விளையாடுவார்கள். 2,3,5 கோலிகளை லாக்குக்குள் விதிக்கப்பட்ட எல்லைக் கோட்டிலிருந்து வீசிப்போடுவார்கள். லாக் லைனில், லாக்கினுள் உள்ள குழிகளில் உள்ள கோலிகளில் எதிராளி /எதிர்க்குழு சொல்லும் கோலியை கையில் உள்ள அளவில் பெரிய கோலியால் வீசி அடிக்க/தொட வேண்டும். அடிக்கும் கோலி 'லாக்"லைனில் நின்று விட்டால் ஆள் அவுட்.(முழுமையான விதிகள் மறந்துவிட்டது)

இதிலே வயதில் கூடிய கில்லாடிகள் (சண்டியர்கள்) சிலர், பேருந்து மெக்கானிக்கல் வொர்க் ஷப்பிலிருந்து உடைந்த பால் பேரிங்கின் பால்ரஸ் என அழைக்கப்பட்ட கடினமான உலோகக் கோலியைக் கொண்டு கண்ணாடி கோலிகளை அடித்து நொறுக்கி ஆடும் போதே வெற்றிக்களிப்பர்.

இச்சண்டியர்கள் பொதுவாக 5,10,25 பைசா என பணம் வைத்து ஆடுவார்கள். இவர்களது 'லாக்' ஏதோ குறுநில அரசின் எல்லைமாதிர் பரந்து பட்டிருக்கும். லாக் லைன் குழிகல் அகழி, பதுங்கு குழி ரேஞ்சில் அமைத்து விளையாடி பயங்காட்டுவார்கள்.

என் மாதிரி சிறுவர்கள் குழந்தை 'லாக்' விதிப்படி அமைத்து விளையாடுவோம். 5,10,25 காசுகள் எனச் சில்லறையாக இல்லாமல் நிறையப் பணம் வைத்து கண்டிப்பாக விளையாடுவோம். நாசிக்குக்கு இணையாக நோட்டடிப்போம். சிசர்ஸ், மஞ்சள், வெள்ளை வில்ஸ் நேவி கட் ,ப்ளூ பேர்டு, போன்ற சிகரட் அட்டைகளை மாப்பிள்ளை விநாயகர் கலர் கூல் ட்ரிங்கின் உலோக மூடியை இந்த சிகரெட் அட்டை மீது வைத்து கொண்டு சிமிண்ட் தரையில் தேய்த்துத் தேய்த்து அம்மூடியின் அச்சில் சிறு சிறு வட்டமாக எங்கள் விளையாட்டுக்கான கரன்ஸிகளை உருவாக்குவோம்.

"லாக்" மற்றும் "பேந்தா" "பம்பரம்" மாதிரியான கோலிகள் சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொதுக்கரன்ஸியாகப் பயன்படுத்தப்படும். "பேந்தா' எனும் வகை கோலிசார் விளையாட்டு ரவுடிகள் விளையாட்டு என்று "பொடா' விதிக்கப்பட்டு குழந்தைக் கரன்ஸிகளின் பணப்புழக்கம் வலிந்து குறைக்கப்பட்டதில், வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழித்திருக்கையில் வீட்டுக்குள் விளையாடப்படும் பல்லாங்குழி, பரமபதத்திற்கும் அவ்விளையாட்டுக்களின் extra femine தோற்றம் மாற்ற இக்கரன்ஸி தேவையின்றிப் புகுத்தப்படும்.

என்றாலும் லாக், பேந்தா போன்ற கோலிசார் விளையாட்டுக்கள் ஐந்தடி தூரத்திலிருந்து ஆறேழு வயது சிறுவர்க்கு குறிபார்த்து அளவில் சிறிய கோலிக்குண்டு இலக்கைத் தொடும் பயிற்சியை அளித்தது.

உப 'ஸ்கில்களாக" க்ரியெட்டிவ் எமுலேஷன் உத்தியில் சிகரட் அட்டையை சிறுவர் கரன்சியாக்கி அழகு பார்க்க வைத்தது, உப-உப திறனாக சிகரட் பெட்டிக்கு நான்கு மாப்பிள்ளை விநாயகர் மூடியை தென்னை ஓலைக்குச்சியில் (வெளக்கு மாத்துக்குச்சி) டயர்களாக்கி பொம்மைக் காராக்கி சுயமாய் பொம்மை உருவாக்கி ஏதுமில்லாதவைகளிலிருந்து இதோ ஏதோ இருக்கிறது (from nothings to something) என்றறியும் திறன் தந்தது.

சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை வந்தால் எனது அரை டவுசரின் இரு பைகளும், வாரச் சந்தைக்கு விற்பனைக்கென இட்டுச் செல்லப்படும் வழியில் அதன் உடல் எடை கூட்டுவதற்காக வம்படியாகத் தவிடு ஊட்டப்பட்டுப் பொருமிய ஆட்டின் வயிறு மாதிரி, கோலிகள், பம்பரம், சிகரட்டு அட்டைக் கரன்ஸி நிரம்பிப் பொருமியிருக்கும்.

ஸ்பெஷல் கரன்ஸியாக தீப்பெட்டிகளின் படம் ஒட்டிய அட்டைகள் சீட்டா பைட், இலை இன்ன பிற சிவகாசி பயர் ஒர்க்ஸ் தயாரிப்புத் தீப்பெட்டி பிராண்டுகள் அத்தனையும் இந்த "கரன்சி"அட்டைப் பொறுக்கலால் அறிந்தேன்.

இந்தச் சிறுவர் கரன்ஸி நோட்டுக்கள் சிவகாசி கள்ளநோட்டு மாதிரி பதுங்குகுழியில் அடிக்கப்படாது வீட்டின் வராண்டா சிமெண்ட் தரை "திடீர் நாசிக்" காக மதிப்புயர்வு தரப்பட்டு சிகரட் பெட்டி, தீப்பெட்டி என்ற மூலப்பொருட்கள் கொட்டப்பட்டுப் படு தீவிர ப்ரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கும் போது "பண்டிகை தினத்தன்று சிகரட், தீப்பெட்டி என்று மொத்த தெருக் குப்பையும் வீட்டுக்குள்ளே" என்று பெரியவர்கள் திடீர் எதிர்ப்பில் எனது பலமணிநேர கூரிய பார்வைத் தெருவிழா உலாவுதலில் கிட்டிய எனது ஸ்பெஷ்ல் கலெக்சன் தீப்பெட்டி படங்கள் குப்பையில் எறியப்படும். அதிலே அரிய மாணிக்கமான மூடும் வசதியுள்ள, காலியான 555 சிகரட் பெட்டியை வீட்டுப் பெரியவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

உலகப் பணச் சந்தையில் எந்தநாட்டுக்க் கரன்ஸியானாலும் நிர்ணயிக்கப்பட்ட எக்சேஞ் ரேட்டுக்குட்பட்டாகவேண்டும்.

ஒரு குவைத் தினார் = 160 இந்திய ரூபாய்கள்
ஒரு குவைத் தினார் = 3.45 அமெரிக்க டாலர்கள்
ஒரு குவைத் தினார் = ???? சிறுவர் கரன்ஸி

எவராலும் நிர்ணயிக்க முடியுமா எமது சிறுவர் கரன்ஸிக்கு எக்சேஞ் ரேட்?
எவராலும் மதிப்பிடவே முடியாது சிறுவர் உலகக் கரன்ஸிகளுக்கு.

இந்தச் சிறுவர் உலகக் கரன்ஸி பெற்றுத்தந்த மகிழ்ச்சியை வேறு எந்த நாட்டுக்கரன்ஸியும் தந்ததில்லை எமக்கு.

இச்சிறுவர் கரன்சிக்கு எந்த நாட்டுக் கரன்ஸியும் இணையில்லைதானே!


அன்புடன்,


ஹரிஹரன்

12 comments:

murali said...

ஹரி ஹரன்,
ரொம்ப நாளைக்கு அப்பறம் லாக், பேந்தா, சிகரேட் அட்டை, தீப்பெட்டி அட்டை சேகரிச்ச விஷயங்களை எல்லாம் ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி.

குழந்தைகளின் உலகம்போல் சிறுவர்களின் உலகமும் சுவாரசியமான உலகம்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Hariharan # 26491540 said...

வாங்க முரளி,

இந்தப் பதிவின் பின்னூட்ட கல்லாவில் கலெக்ஷனை ஆரம்பித்து வைத்ததற்கு 10 தீப்பெட்டி மற்றும் சிகரட் அட்டைக் கரன்ஸி தங்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்கப்படுகிறது.

கண்டிப்பாக சிறுவர்கள் உலகமும் ரொம்ப ஸ்பெஷல் உலகம்தான்.

(துபாய்) ராஜா said...

அருமையான பதிவு ஹரிஹரன்.நாம் சிறுபிராயத்தில் அனுபவித்து,மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களையெல்லாம்
இக்கால குழந்தைகள் இழந்துவிட்டார்களே!!!.

வடுவூர் குமார் said...

போன வாரம் முழுவதும் தலையை உடைத்துக்கொண்டிருந்தேன்.இதைப்போய் யாரிடம் கேட்பது என்றிருந்தேன்.உங்கள் பதிவின் மூலம் விடை கிடைத்தது.நன்றி.
"சுள்ளான்"படத்தில் அவன் காலைத்தட்டிவிடும் போது ஒரு freeze ஷாட் வருமே அது மாதிரித்தான் அடிப்பேன்.அதை சில டீம் எதிர்பார்கள்.நான் அடித்தபிறகு தானே ஓடி வருகிறேன் அதனால் தவறில்லை என்று விவாதித்து வேண்டுமென்றால் நீயும் அந்த மாதிரி அடித்துக்கொள் என்பேன்.
நாங்கள் மாற்றிக்கொண்டதெல்லாம் "சோடா பொட்டி மூடி" தான்.
ஆமாம் இந்த மாதிரி விளையாட்டை இப்போது எங்கேனும் பார்க்கமுடிகிறதா??

Hariharan # 26491540 said...

வாருங்கள் துபாய் ராஜா,

கண்டிப்பாக கோலி, கில்லி, பம்பரம் மாதிரியான கிராமத்து விளையாட்டுக்கள் மற்றும் ஆற்றில் குளித்தல் போன்ற பல்சுவையான, நுணுக்கமான உபயோகங்கள் நிறைந்த பலவற்றை நவீன நகர்ப்புற சிறுவர்கள் இழந்ததைக்கூட அறியாமலே இருக்கிறார்கள்.

Hariharan # 26491540 said...

குமார்,

இம்மாதிரி விளையாட்டுக்கள் தாவணி மறைந்து வழக்கொழிந்த மாதிரி காணாமல் போய்விட்டது. பம்பரம் மட்டும் சினிமாவில் ஹீரோயின் தொப்புளில் எப்போதாவது விளையாடுகிறார்கள். கோலி நகர்ப்புறங்களில் 'மார்பிள்ஸ்' என கண்ணாடிக்குடுவை நிறைய வைத்து ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள்.

அங்காங்கே கண்ணில் தட்டுப்பட்டாலும் அதன் சாரம் காலமாகிவிட்டதாகவே கருதுகிறேன்.

நன்மனம் said...

ஹரிஹரன்,

சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு, சந்தோஷமா இருக்கும் போது தான் இத மாதிரி குழந்தைங்க விளையாட்டு, குழந்தை பருவம் இதையெல்லாம் ரசிக்க முடியும்... சரியா.

நல்ல அனுபவ பகிர்வு. நன்றி.

:-)

Hariharan # 26491540 said...

நன்மனம்,

வாங்க. குழந்தைகள், சிறுவர்கள் உலகில் ஈஸியாக இருக்கலாம். பெரியவர்கள் உலகம் கடினமானது. தினம் என் குழந்தைகளுக்கு நாட்டாமை மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்குப் பஞ்சாயத்துச் செய்வதில் பாதி குழந்தையானால் தான் அவர்கள் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியும் அதனாலேயே நான் பாதி குழந்தை எனவே மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

வலைஞர்களில் பலர் கான்க்ரீட் ஜங்கிள்கலான நகர்ப்புறங்களில் படித்து கிராமங்களை சினிமாவில் ம்ட்டும் நிறையப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு நான் விளையாடிய கிராமத்து விளையாட்டுக்களை சும்மா அறிமுகப்படுத்திப் ப்டுத்டி எடுக்கலாமே என்ற ஆசையும் தான்.

வடுவூர் குமார் said...

வேண்டாம் ஹரி
தாவணிகளை ஞாபகப்படுத்தாதீங்க!!!!
ஏதாவது ஏடாகூடமாக உளரீரப்போரேன்.
:-))

Hariharan # 26491540 said...

குமார்,

வந்து படிச்சு இப்ப தாவணி ஞாபகம் வந்து வலையில் கால் வச்சிட்டீங்க.... தாவணிகள்(!!) பற்றி நிறைய்ய உளறி சீக்கிரம் வலையில் வசமாகச் சிக்கிக் கொள்ள அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

சினிமா பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்.
அப்பொழுது இருந்த சந்தொஷங்களுக்கு நிறைய விலை கிடையாது.
அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது
இப்போதைய குழந்தைகள் கொஞ்சம்
குறைப்பட்டு விட்டார்கள்.

Hariharan # 26491540 said...

வாருங்கள் வல்லி,

முதன் முதலாக பின்னூட்டமிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

25 வருடங்களில் நமது வாழ்க்கை அமைப்பே பெரிய அளவுக்கு மாறிவிட்டது.

முன்பு பணம் குறைவாய் இருந்தது ஆனால் ச்ந்தோஷங்கள் நிறைய இருந்தன.

இன்று பணம் பெரிய பற்றாக்குறை அல்ல எனினும் எதுவும் பெரிய சந்தோஷத்தைத் தருவதில்லை.

எத்தனை பணம் இருந்தாலும் கிராமங்களில் கூட இன்றைக்கு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா குளிப்பதற்கு?

நன்றி. தங்கள் வருகை ம்ற்றும் கருத்துக்கு.