Tuesday, July 25, 2006

(24) உஷ்ஷ்ஷ்.. இது பாரபட்சமில்லாத தனி உலகம்!

ஒன்று முதல் பன்னிரண்டு வயதிலான குழந்தைப்பருவம் மனிதன் பாரபட்சமின்றி பெரும்பாலும் மனிதனாகவே வாழும் பிராயம்.

எனக்கு என் வேலைதரும் அழுத்தங்கள், நான் நேரில் பார்த்ததைவிட பல மடங்குகள் உக்கிரமாக தமிழ்மணத்தில் நடந்தேறும் ஆரிய-திராவிட இன்னபிற மதம் சார்ந்த சர்ச்சைகள் எனக் கிளறப்படும் உணர்வுகள், வலிந்து தட்டி எழுப்பப்படும் என்னுள் தூங்கும் மிருகம் என மனதிற்குள் உணர்வுகள் நாடோடியாய் நாட்டியமாடியபடி வீடு வந்து சேரும் போது எனக்கு எனது இரு ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் மிகப் பெரும் ஆசிரியர்கள் ஆகிறார்கள்.

மாலை எங்காவது சூப்பர் மார்க்கட் போகும் போது தள்ளிச் செல்லும் ட்ராலியில் அமர்ந்தவாறு அதே மாதிரி அருகில் இன்னொரு ட்ராலியில் அமர்ந்து வரும் வேறு குழந்தையைப் பார்த்ததும் கல்மிஷமில்லாமல் பரஸ்பரம் சிரித்துக் கொள்கிறார்கள்.

அடுத்த ட்ராலியில் அந்தக்குழந்தை எகிப்திய/பிலிப்பைன்ஸ் குவைத்/வெள்ளைக்கார/இந்திய/வேறுஅரேபிய இனக் குழந்தையா என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்வதில்லை. பேச்சே வராத சிறு குழந்தைகள் கூட எச்சில் ஒழுகிக்கொண்டு நட்பாய் முதலில் மனம் திறந்த சிரிப்பு பின் அவர்களது "நிஜமான புரியாத தேவபாஷயில்" ஏதோ பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆனால் ட்ராலி தள்ளி வரும் பெற்றோர்கள் உலகம் வேறு நேர்மாறாக கல்மிஷங்கள் எக்கச்சக்க ஏராளம் நிறைந்தது.

கல்மிஷமில்லாத இந்தக் குழந்தைகள் மெல்ல வளரும் போது நாம் சொல்வதையெல்லாம் ஆச்சர்யத்துடன் கண்கள் வரிய, வாய்திறந்த நிலையில் கேட்டுக் கொள்ளும். ரூல் நம்பர் 1 ஆக நாம் சொன்ன விதிகளை எந்தப் பாரபட்சமுமில்லாமல் பெற்றோர் மீறும் போது சுட்டுவார்கள்.

இரண்டு முதல் நான்கு வயதுக் குழந்தைகள் சுபாவத்தின் படி கையில் கிடைத்த பேனா, பென்சில், க்ரேயான் கொண்டு சுவர் எல்லாம் கிறுக்குவார்கள்.

சில மாதங்கள் முன்பு வரை என் குழந்தைகளும் அப்படிச் செய்து வீட்டின் எல்லா சுவர்களிலும் அநியாயமாய் ஆட்டோகிராப் போட்டு வைத்திருந்தனர். நானும் என் மனைவியும் "குட் ஹேபிட்ஸ்" என்று சொல்லித்தந்த போது சுவரில் கிறுக்குவது "பேட் ஹேபிட்" என்று அழுத்திச் சொன்னதைக் கேட்டுக்கொண்டனர்.

வீட்டுச் சுவர்களை சில நாட்கள் கழித்து வெள்ளை அடிக்கலாம் என முடிவு செய்தபோது வெள்ளை அடித்தால் மீண்டும் என் குழந்தைகள் கிறுக்குவார்கள், கோபம் வரும்.. குழந்தைகளைத் திட்டக்கூடிய சூழல் வரும். எனவே பள்ளிக்கூட காலங்களில நான் சிறப்பாக வரைவதாக ஓவிய ஆசிரியர் பாராட்டியது நினவுக்கு வர, வீட்டையே குழந்தைகளுக்கான படி வர்ணம் பூசுவது என்று முடிவு செய்தேன்.

முடிவு செய்தபடி வித விதமான வர்ணங்கள் சுவர் மட்டுமில்லாமல் 'உட்புற ஆர்டிபீஷியல் ஸீலிங்கிலும்" வர்ணஜாலம் காட்டினேன். இச் செயல் என்னைக் குழந்தை மனோபாவத்திற்கு எடுத்துச்சென்றதில் குதூகலமாகி எனது வீட்டை ஆர்ட் கேலரியாக்க நான் குழந்தையாக இருந்தபோது விரும்பிய போடி கரிவண்டி ரயில், மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் வாங்க ஆசைப்பட்ட பலூன்கள், மிக்கி மௌஸ் எலி, டொனால்ட் வாத்து, கூஃபி நாய் என வரைந்து வைத்தேன்.

வரைவது எல்லாம் இரவில் 10 மணிக்குக் குழந்தைகள் உறங்கிய பின்பு தான்.அப்போதானே குழந்தைகள் அவர்கள் ஆர்வமிகுதியில் பெயிண்ட் டப்பாவைத் தட்டிக், பெயிண்ட் கீழே கொட்டி, அதனால் நான் குழந்தைகளைத் திட்டி என்பது தவிர்க்கப்படும் என்பதால் என் உறக்கம் தியாகம் செய்து நடுநிசிநேரம் தேர்ந்தெடுத்தேன்.

கூடுதலாகக் காலையில் குழந்தைகளிடம் ஹாலில் போய்ப் பார்... ரூமில் போய்ப் பார்... என்ன மாறுதல் தெரிகிறது என்று சொல் என்று அவர்களது "அப்ஸர்வேஷன் ஸ்கில்" சோதிக்கும் போர்வையில் கொஞ்சம் தற்பெருமை போதையில் இருக்கலாம் என்பதும் நடுநிசி நேரத்தை வரைவதற்குத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம்.

சரி. காலை வந்து குழந்தைகள் எழுந்திருக்கும் வரை எனக்குத் தூக்கம் வரவில்லை. குழந்தைகள் எழுந்து வந்ததும் "அப்ஸர்வேஷன் ஸ்கில்" சோதிக்கும் கேள்விகளாக ஹாலில் போய்ப் பார், ரூமில் போய்ப் பார் என்ன மாறுதல் தெரிகிறது என்று சொல்லவும் என்பவை என்னால் சுயபூரிப்புடன் அவர்களிடம் கேட்கப்பட்டன.

குழந்தைகள் ஹால், ரூம் இவையெல்லாம் சென்று பார்த்துவிட்டு வந்ததும் என்ன தெரிகிறதா? என்றேன் களிப்பில் கண்சிமிட்டியபடி. அவர்கள் என்னிடம் "அப்பா நீயா கலர்க் கலராக எழுதினாய்?" நான் ஆமாம் என்றேன் புளகாங்கிதத்தில் பல்லைக் காட்டிக்கொண்டு.

நான்கு வயதான என் பெரிய குழந்தை என்னைப் பார்த்துக் கொண்டே தீர்க்கமாக " அம்ம்மா... எங்களைச் சுவரில் கிறுக்காதே என்று சொல்லி விட்டு அப்பா சுவரெல்லாம் மஞ்சள், நீலம்,நிவப்பு, பச்சை,கறுப்பு, ஊதா எனக் கலர் கலராக கிறுக்கி வைத்திருக்கிறார் என்று சமயலறையில் அம்மாவிடம் புகாராகச் சொல்லிக்கொண்டு ஓடினர்.

குழந்தைகள் உலகில் என் ரூல் நம்பர் 1 ஆகிய சுவற்றில் கிறுக்குவது "பேட் ஹாபிட்' அதை அப்பாவே செய்தாலும்.

ஆம் குழந்தைகள் உலகம் என்பது பாரபட்சமில்லாத தனி உலகம் தான்!

பி,கு
தற்போது என் குழந்தைகள் உருளைக்கிழங்கு சிப்ஸிலிருந்து தாங்கள் சாப்பிடும் எதையும் மனப்பூர்வமாக சுவரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மிக்கி மௌஸ் எலி, டொனால்ட் வாத்து, கூஃபி நாய் -இவைகளோடு சேர்ந்து தான் உண்பது. (ஆயில் பெயிண்ட் என்பதால் எளிதில் துடைத்துச் சுத்தமாகிறது. ) இது குழந்தைகளின் இன்னொரு தனிஉலகம்.


அன்புடன்,

ஹரிஹரன்

16 comments:

நன்மனம் said...

:-)

தங்களது குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

Hariharan # 26491540 said...

நன்றி நன் மனம்.

நாகை சிவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க ஹரி.
அவர்கள் உலகம் என்றுமே தனி தான். அவர்களுடன் நேரம் செலவழிக்கும் போதும் நாமும் அவர்கள் உலகத்திற்கு சென்று விடுகின்றோம்.

Hariharan # 26491540 said...

வாஉங்கள் சிவா,

உண்மை. குழந்தைகள் உலகம் வெரி "சிம்பிள் அண்டு ஸ்ட்ரைட் பார்வர்டு" கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

இன்றைய பொருள்சார் வாழ்வியலிலான உலக வாழ்க்கை அமைப்பில் வயதால் வளர்ந்தவரை "என்னடா குழந்தை மாதிரி இருக்கே" என்று சொல்வது சைவமான திட்டு ஆகும். உண்மையில் குழந்தை மாதிரி இருப்பது சுய கருத்து உள்ள பெரியவர்களால் மிக மிகக் கடினமான செயலாகும்.

rnateshan. said...

ஆம் ஹரிஹரன்,
உண்மைதான்.
ஆனாலும் பெரியவர்கள் எல்லோருமே ஒரு நேரம் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே!!பின் ஏன் இந்த மாற்றம் தடுமாற்றம்.
உங்களை சிவமுருகன் பதிவில் பார்த்தேன்.
ஆத்திகம் வளர நாத்திகம் தேவைதான்!!
பாராட்டுக்கள்!!

Hariharan # 26491540 said...

வாருங்கள் நடேசன்.


//ஆனாலும் பெரியவர்கள் எல்லோருமே ஒரு நேரம் குழந்தைகளாக இருந்தவர்கள்தானே//

எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்படும் "வால்யூ செட்ஸின்" தார்மீகத் தரம்தான் பின்னாளில் வளர்ந்து பெரியவனாகி சுயமாய் தனக்கென ஒரு கருத்து ஏற்படுத்துகிறது.

இந்த "வால்யூ செட்ஸ்" சுயநலம் இல்லாமல் ஸ்ரைட் அண்ட் பார்வர்டாக சொல்லித்தந்த சூழலில் வளர்ந்தால் நலம் இல்லையேல் நாசம்.

Hariharan # 26491540 said...

//ஆத்திகம் வளர நாத்திகம் தேவைதான்!!//

உண்மையான ஆன்மீகம், பக்தி நல்ல வால்யூ செட்ஸை உறுதிப்படுத்தும்.

தமிழ்நாட்டில்
நாத்திகம் = சோம்பேறித்தனம் +திருடுதல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நடேசன்

SK said...

ஐம்புலன்களின் வசம் மனம் அடிமைபட்டுப் போகும் போது, குழந்தைத்தனம் போய், கயமைத்தனம் குடி கொள்ள ஆரம்பிக்கிறது.

கபடற்ற நல்ல உள்ளங்களை ரசிப்போம்.....இருக்கும்வரை!

அவையோ, அல்லது நாமோ!

Hariharan # 26491540 said...

வாருங்கள் எஸ்கே அவர்களே,

கண்டிப்பாக. குழந்தைகள் வயதில் வளர்ந்தோர்க்கு கபட அளவு அறிவிப்புக்காக நடு வயதில் இறைவனால் அனுப்பப்படும் நுட்பமானவர்கள்.

ரசித்துக்கொண்டே கற்கலாம். நிறைய்ய.

வடுவூர் குமார் said...

ஹரி
இந்த பருவம் அடுத்தவர்களிடம் எந்த வித எதிபார்ப்புகளும் இல்லாத பருவம்.
அதனால் தான் என்னவோ அவர்கள் சிரிப்பை பார்க்கும் போது ஒருவித பரமானந்த உணர்வு ஏற்படுகிறதோ என்னவோ?

Hariharan # 26491540 said...

வாங்க குமார்,

கண்டிப்பாக அடுத்தவர் மீதான குழந்தையின் நம்பிக்கையும், வள்ளல் மாதிரி விலைமதிப்பில்லாத மகிழ்ச்சியை அள்ளி வழங்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

பேரானந்த..பரமானந்த உணர்வுகள் கண்டிப்பாக ஏமாற்றாமல் தருவார்கள்.

செல்வன் said...

குழந்தையும்,தெய்வமும் குணத்தால் ஒன்று
அதனால் தான் முருகனையும்,கண்னனையும் குழந்தை வடிவில் பார்க்கிறோம்

Venkataramani said...

நான் கூட குழந்தையாகவே இருந்திருக்கக்கூடாதான்னு சிலசமயம் நினைப்பேன்.. நல்ல பதிவு.

Hariharan # 26491540 said...

செல்வன்,

கண்டிப்பாக குழந்தையும் தெய்வமும் வேறு வேறு அல்ல. அதன்ன்லேயே என்னவோ அதிகம் சிலாகிக்கும் படியான இனிமையான, மகிழ்ச்சியான, தெய்வபக்தி பஜனைகள் இந்தக் குழ்ந்தை தெய்வங்களாகிய முருகன், கண்ணன் மேல் ஏராளம்.

Hariharan # 26491540 said...

வெங்கட் ரமணி அவர்களே,

எனக்கும் வளர்ந்த பின்னால் குழந்தையாகும் ஏக்கம் ஏற்படும். என்றாலும் தற்போது இயன்றவற்றில் குழந்தைகள் மாதிரி எமுலேட் செய்து எதிர் கொள்ள முயல்கிறேன்.

CT said...

Very nice post and interesting to read.......