(12) ஹரிஹரனின் அமானுஷ்ய அனுபவங்கள்-1
இது ஒரு மாறுதலுக்காக. எனது நகர்கள் நோக்கிய பயணத்தில் சந்தித்த நபர்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் முயற்ச்சிக்கு இடையில், எனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களையும் சொல்ல வேண்டிய கடமை உணர்வினால் இப்பதிவு.
கல்லூரி விடுதியில் நான் தங்கியிருந்த அறையில் நான் மட்டும்தான். தொலைதூர ஊர்களில் இருந்து வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்கள் சிலர் மட்டும் வார இறுதியில் இருப்பார்கள். மெஸ் ஹாலில் உணவு உண்டபின் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டு இருப்போம். ஆரம்ப நாட்கள் அல்லவா, நான் சில சமயம் அவர்களது அறைக்குச்சென்று பேசிக்கொண்டு இருப்பேன், எனது அறைக்கு நான் வற்புறுத்தி அழைத்தாலும் கதவருகே நின்று பேசிவிட்டு உள்ளே வராமல் அவசரமாக அப்படியே ஓடி விடுவார்கள்.
துப்பறிந்ததில் சில நாட்கள் முன்பாக நானிருந்த அறையில் தங்கியிருந்த மாணவன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்த உண்மை தெரிய வந்தது.
நான் இதனிடையில் சில நாட்கள் நிம்மதியாக தூங்கி எழுந்து எனது தினசரி அலுவல்களை சாதாரணமுறையில் செய்து வந்திருந்தேன். உண்மை தெரிந்த பின்பும் எனக்கு பயமேதும் இல்லை. காலை பல்துலக்கும் தருணங்களில் ஒரே விசாரிப்புகள். அமானுஷ்ய அறை வாசி என்ற திடீர்புகழ் சிலநாட்களிலேயே எனக்குக் கிடைத்தது.
எனது இதர அறை நண்பர்களுக்கு இந்த "தற்கொலை"அறை செண்டிமெண்ட் உறுத்தலாக இருந்தது. மாற்று அறை விடுதியில் அந்த ஆண்டு இல்லை என்றதாலும், எனக்கு உணவு அசைவம் + தண்ணீர்ப்பற்றாக்குறையால் சேர்ந்த ஒரு மாதத்தில் நானும் நான்கு நண்பர்களும் வெளியே வீடு பார்த்து எடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தோம்.
அது பல குடும்பங்கள் வாழும் கீழ்தளத்தில் எட்டு, முதல் தளத்தில் நான்கு என்றமைந்த தொகுப்புக் குடியிருப்பு. கல்லூரியில் அனைவருக்கும் ஆச்சர்யம் எப்படி கல்லூரிமாணவர்களாகிய எங்களுக்கு அதுவும் "கலர் புல்லான" ஏரியாவில் குடும்பங்களுக்கே கிடைக்க அரிதான இடத்தில் கிடைத்தது என்று.
என்னைத் தவிர மீதி அனைத்து நண்பர்களும் தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை என்று அருகாமை 90கி.மீக்குள் இருந்த ஊர்க்காரர்கள் என்பதால் வார விடுமுறைக்கு வெள்ளி மாலை கிளம்பி திங்கள் காலை வருவார்கள்.
எனது சொந்த ஊர் போடிக்குப் பயண நேரம் 7மணி நேரமாகும். வசதிப்படாது என்பதால் நான் மட்டும் தனியாக வெள்ளி, சனி, ஞாயிறு இரவுகளில் தங்கியிருந்த குடியிருப்பில் இருக்க வேண்டிய கட்டாயம்.
இங்கு குடியிருந்தவர்களுக்கு எனது குழந்தைப்பருவ முதலான தினசரிப் பழக்கமான காலையில் எழுந்தவுடன் குளித்துக் கோவில் செல்லும் பழக்கம் வெகு விரைவில் ஒரு நற்சான்றிதழைப் பெற்றுத்தந்தது.
வார இறுதியில் புள்ளையாண்டான் தனியா பாவமா இருக்கானே என்ற ஒரு பரிதாபத்தில் சில கீழ்வீட்டு Auntyகள் மேலே மாடியில் துணிகாயப்போடும் போது நானிருந்த குடியிருப்பு வரைவந்து சில விசாரிப்புகளோடு அவ்வப்போது ஏதானும் ஸ்னாக்ஸ் தருவார்கள். ஆனால் என்ன வற்புறுத்தி அழைத்தாலும் உள்ளே மட்டும் வரமாட்டார்கள்.
எதிர் வீட்டுக்கார கல்லூரி நண்பனிடம் போட்டு வாங்கியதில் உண்மை வெளிவந்தது. நான் இருந்த குடியிருப்பில் சில நாட்களுக்கு முன்புதான் ஒரு பெண்மணி தீக்குளித்து இறந்து போன விஷயம்.
ஹரிஹரனுக்கு பயம் இல்லைதான். என்றாலும் இந்த உண்மைக்குப் பிறகு நண்பர்கள் கோடி கொட்டிக் கொடுத்தாலும் வார இறுதியில் வெள்ளி மாலை கல்லூரியிலிருந்தே பஸ் ஏறி சொந்த ஊர் ஓடித் தப்பித்து விடுவார்கள்.
வெள்ளி,சனி, ஞாயிறு இரவுகள் தனியாக எனது குடியிருப்பில் தூங்க வேண்டிய சூழல். அப்படியான ஒரு வெள்ளிக்கிழமை தூங்கும்போது நள்ளிரவில் முழிப்பு வந்தது எனக்கு, புரண்டு, புரண்டு படுத்தாலும் திரும்பத் தூக்கம் வரும் மாதிரி இல்லை. அப்படியே படுக்கையில் இருந்த போது "ஜல்..ஜல்'ன்னு சலங்கைச் சத்தம் கேட்டது.
எனக்குப் பயம் இல்லை, எழுந்து விளக்கைப் போட்டேன். முதல்நாள் நாங்கள் நால்வரும் வற்புறுத்தஇ.. இல்லை.. தர..தரன்னு எதிர்வீட்டு செல்வக்குமார்ப் பயலை நாங்கள் இருந்தகுடியிருப்புக்குக் கூட்டிவந்தபோது ஹாலில் தரையில் இருந்த அழுத்தமான திட்டு திட்டான கறைகளைக் காட்டி இது..இது தீக்குளித்த அந்தப்பெண்ணின் தீயில் தீய்ந்து ஒட்டிக்கொண்ட சேலைக்கறை என்று அடையாளம் காட்டப்பட்ட கறை கண்ணில் பட்டது.
"ஜல்..ஜல்' சலங்கை ஒலிச் சத்தம் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னில் அதுபாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. கதவைத் திறந்து கொண்டு மாடிக் கைப்பிடிச்சுவர்மீது கை ஊன்றியபடி தெருவைப் பார்க்கிறேன் தெருநாய் ஊளையிட்டபடி ஓடிக் கொண்டிருந்தது.
மீண்டும் உள்ளே வந்தேன். சேரம் நடுநிசி 12.55 மணி என்று எனது எச்.எம்.டி கைக்கடிகாரம் காட்டுகிறது. சரி என்ன நடந்தாலும் பரவாயில்லை வந்துவிட்ட 'ஜல்..ஜல்" அமானுஷ்யத்தை எதிர்கொண்டே தீருவது என்று முடிவெடுத்துவிட்டு எனக்குத்தெரிந்த சில மந்த்ரங்களைச் சொல்லி இறைவனை எனக்கு உதவும்படி வேண்டிக் கொண்டவாறே சமையலறைக்குள் வந்தேன்.
ஜன்னல் வழி பார்த்தால் கருப்பாக ஏதோ உயரமாக தலைவிரியாட்டமாடுவது மாதிரி... ஹரிஹரனின் லப்..டப் இப்போ மெல்ல எகிறியது. பயமில்லை என்றாலும் ஒருமாதிரி படபடப்பு... கூர்ந்து நோக்கியதில் அது தென்னைமரம்.
நிதானத்தில் இருக்கிறேன் என உறுதியானது.
இன்னும் "ஜல்..ஜல்.."சலங்கைச் சத்தம் விட்ட மாதிரியில்லை. மணி பார்த்தால் நடுநிசி 1.20. கிட்டத்தட்ட 25 நிமிடம் அமானுஷ்ய 'ஜல்..ஜல்' தாலாட்டு ! தூக்கம் போயே போயிந்தி! இப்போ ஒரு விஷயம் உறுதியாகியிருந்தது. அந்த அமானுஷ்யம் வாசலில் இல்லை. பின்பக்க சமையலறைப்பக்கம்தான் இருக்கிறது என்று எனது ஐம்புலனில் ஒன்றான காது சொன்னது.
உயிர் போனா மயிர் போன மாதிரி என்று முழுமையான வேகத்துடன் அமானுஷ்யத்தை எதிர் கொள்ளத்தயாரானேன். சமையலறை ஜன்னலை முழுக்கத் திறந்து வைத்தேன். அமானுஷ்யம் இப்போது ஹரிஹரனுக்குக் கொஞ்சம் வியர்வையை ஏற்படுத்தியிருந்தது. 'ஜல்...ஜல்' காதுக்குப் பழகியிருந்தது.. 'ஜல்...ஜல்'..களுக்கு இடையிலான நேரத்தை உற்று நோக்கியதில் ஒரு synchronization புலப்பட்டது.
ஜன்னல் வழி தெரிந்த காட்சியில் இருந்த அனைத்தையும் கூர்ந்து நோக்கினேன். மாட்டு வண்டி, கீழே காளை மாடு படுத்திருப்பது தெரிகிறது. க்ளோஸ்டு சர்க்யூட் காமிரா மாதிரி நிலைநிறுத்துகிறேன் காளை மாட்டின் மீது. காளையின் கழுத்தில் மணி தென்படுகிறது.
சாணக்கழிவினால் அங்கிருக்கும் "ஈ" காளையின் முகத்தின் மேல் தொந்திரவு செய்ய காளைமாடு தலையை இப்படி.. அப்படி அசைக்கிறது. சில வினாடிகளில் மீண்டும் மாடு தலையை அப்படி இப்படி அசைப்பது புலப்பட்டு இதுவரையிலான அமானுஷ்ய ஜல்..ஜல் பேட்டர்னுக்கான மூலம் ஹரிஹரனால் துப்பு துலக்கப்பட்டது.
ஹரிஹரன் அன்று பயந்திருந்தால் "மரணம்" அவனைத் தழுவி இருக்கும்.
பி.கு. தேன்கூட்டு ஜூலை மாதத் தலைப்புக்கூட "மரணம்". இது நம்மளோட உண்மை அனுபவங்க.
அன்புடன்,
ஹரிஹரன்.
5 comments:
நல்ல 'ஜல்ஜல்' போங்க.
'திக்திக்'ன்னு இருந்துச்சு படிக்கிறப்ப.
துப்பறியும் சாம்பு ரேஞ்சில் துப்புத்துலக்கிவிட்டு நல்லா நிம்மதியா தூங்கினேன்.
ஹிஹி உங்க சமூக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது :))
அதை விடுங்கள்..புதிய பதிவில் தலைப்பை சிறியதாக வைத்தால்தான்
பிளாக்கர் எடுக்கும்.
(இதில் திரா"விட" அரசியல் இல்லை)
நல்ல துப்புத் துலக்கல் போங்க, நான் முதலிலேயே இப்படி ஏதாவது இருக்கும்னு நினைச்சேன். மத்தபடி பாம்போட எல்லாம் குடித்தனம் நடத்தின அனுபவம் இருக்கிறதாலே பயமா எல்லாம் இல்லை. நீங்களும் கிட்டத் தட்ட மண்ணின் மைந்தர் தானே? அதான் பயப்படவில்லை.
வாங்க கீதா. அதேதான் மண்ணின் மைந்தனாய் இருப்பது பல நேரங்களில் உதவுகிறது.
Post a Comment