Wednesday, July 05, 2006

(9) ஹரிஹரனின் சொந்த ஊர் அனுபவங்கள்-1

போடிநாயக்கனூர் என்ற போடி. இதுதாங்க நம்ம சொந்த ஊர்.

மதுரையிலிருந்து 90கி.மீ. ஊரெங்கும் ஏலக்காய் வாசம் வீசும்.

ஊரில் பெரும்பாலோனார்க்கு ஏலக்காய்,காபி,டீ,எஸ்டேட் நிறைய. ஒரு 30நிமிடம் சைக்கிள் மிதித்தால் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வந்துவிடும்.

எங்க ஊர் பெருமையே எனக்குக் கல்லூரி விடுதி வாழ்க்கையில்தான் நிரம்பத் தெரிய வந்தது. திருச்சியிலிருந்து பஸ்ஸுல வரும்போது, என்னதான் சரியான தூக்கத்தில் இருந்தாலும் குப்புன்னு ரொம்பக் கெட்ட நாத்தம் (லெதர் டான்னிங்) என்னை எழுப்பினால் பஸ் திண்டுக்கல் வந்திருச்சுன்னு தெரிஞ்சுரும், அப்பிடியே கண்ணைத் தொறக்காம தம் கட்டி, மூச்சை இழுத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசிக்காம இருந்தா செம்பட்டி வந்துரும்.

வத்தலக்குண்டிலிருந்து வெளிச்சமா இருக்கும்போது பயணிச்சா மேற்குத் தொடர்ச்சி, கொடைக்கானல் மலைன்னு பயணம் கண்ணுக்கு விருந்தா இருக்கும். பெரியகுளம், தேனி தாண்டி வலதுபக்கம் மலையைப்பார்த்து ஒரு 12கி.மீ தூரம் உள்ளே போகணும்... வழி எங்கும் பச்சை சதுரங்களாய் நெல் வயல்கள், வாழை, கரும்புத்தோட்டங்கள், வலது பக்கம் வங்கார்சாமி கண்மாய்... ஹரிஹரனின் இஷ்டமான எல்லைக்காளியம்மன் கோவில்... இதோ போடி வந்திருச்சுங்க.

போடி பஸ்டண்ட்ல இருந்து. 2நிமிஷம் இளந்தாரியா நடந்தா மீனாஷி தியேட்டர் பின்னாடிதான் நம்மவீடு. போடி ஊர் சைஸுக்கு ஏழு சினிமாத் தியேட்டர் ரொம்ப ஜாஸ்திதாங்க.

பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் போடி ஜமீந்தாரணி காமூலம்மாள் நினைவு மேல் நிலைப்பள்ளி ரொம்ப பழைய பரம்பர்யமான பள்ளிக்கூடம். ஒரு 125வருஷப் பாரம்பர்யம் உள்ளது. நாம 1-12வது வரை இந்தப் பள்ளிக்கூடத் தயாரிப்புதாங்க.

போடியில் ஏலக்காய் வியாபாரிகள் சங்கக் (சிபிஏ)கல்லூரி 30 வருஷப் பழைமையானது. அதைவிட இங்க படிச்சா க்யாரண்டியா.. உருப்படவே முடியாதுங்க. மலை அடிவாரத்தில கல்லூரி... க்ளாஸ்ல இருக்குறதவிட மாந்தோப்புல, மலையில,கரட்டுலன்னு மாணவர்கள் ப்ரீயா இருந்து 30வயதுவரைக்கும் பெற்றவர்களுக்கு பாரமா பின்னால ஆறதுதான் முன்னாள் மாணவர்கள் செட் செய்த ட்ரண்டு!

இதனாலேயே மாடுகூட சந்தோஷமாய் மேய்க்க நான் ரெடி. ஆனா போடி சிபிஏ காலேஜ்ல மட்டும் படிக்கவே மாட்டேன்னு அப்பாகிட்டே +2 படிக்கும் போதே சொல்லிவைத்ததில் நம் வாழ்க்கை பிழைத்தது.

ஊர்ல இருந்தவரை காலை, மாலை கோவில் போவது, பள்ளிக்கூடம் போவது, பொதுநூலகம் போய் தினசரிகள், விகடன், கல்கண்டு,கோகுலம்,தினமலர் வாரமலர், என்னன்னே புரியாத யூனெஸ்கோ கூரியர் கூடப் புரட்டி இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர்,இந்திரா மாதிரி தலைவர்கள் வந்தால் ஹெலிபேட் நம்ம ஸ்கூல் கிரௌண்ட் தான். அவ்வளவு பெரிய்ய்ய்யது. ஏராளமான மரங்கள் அடர்ந்தது.

மாலையில் கூடுதிரும்பும் பறவைகள் இப்பள்ளி மரங்களில் எழுப்பும் ஒலி நம்ம வீடுவரை கேட்கும். (மாடியிலிருந்து அம்மா சின்ன டேப் ரெகார்டரில் பாட்டுப்போட்டால் ஸ்கூல் க்ளாஸ்ல நமக்குக் கேட்கிற தூரம்தான்)

இந்த மரங்களில்தான் "காக்காக்குஞ்சு" விளையாட்டு கற்று விளையாடியது. பத்து முறை மரத்தில் ஏறி கை, காலில் சிராய்ப்போடும், வ்ழிந்தோடும் வியர்வையோடும் ஸ்கூல் காம்பவுண்டுச் சுவர் ஏறி ஏதாவது ஒரு வீட்டைத் தட்டித் தண்ணீர்கேட்டுச் சொம்பிலிருந்து பாதி வாயிலும், பாதி சட்டையில் என்று குடித்துவிட்டு மீண்டும் மரமேறி "காக்காக்குஞ்சு" விளையாடுவோம்.

இந்த மரமேறி விளையாடும் "காக்காக்குஞ்சு" விளையாட்டுக்கு என்னைச் சேர்க்கமாட்டார்கள் ஏனெனில் விரைந்து மரமேறும் திறமைதான் இங்கு அடிப்படைத் தேவை. நான் போனாலே அய்யரை ஆட்டத்தில சேர்க்காதே என்பார்கள்.

சாட்...பூட்...த்ரீ என்று கைகோர்த்துச் சொல்லி செலக்ஷன் ப்ராஸஸ் (ஆட்டவிதிகள் மறந்துவிட்டன) செலக்ட் ஆனவர்கள் முன்னரே மரம் ஏறி வசதியான கிளைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். இறுதியாக மாட்டிக்கொண்டவர் மரத்தின் அடியில் மண் தரையில் ஒரு அடி அளவிலான குச்சியால் வட்டம் போட்டு, அதில் நின்று கொண்டு தூரவீசி எறிந்துவிட்டு விறு விறு என்று மரம் ஏறி கிளையிலிருப்பவரைத் தொட்டால் அவுட்.

எனக்கு க்யாரண்டிக்கு என் நண்பன் "சொத்தைப்பல்" சிவகுமார் வட்டத்திலிருந்து குச்சியை தூரவீசி எறிந்துவிட்டு விறு விறு என்று மரக்கிளையில் என்னைத் தொடாமல் வேறு எவரையாவது அவுட் ஆக்குவான்.

வேனிற்காலத்தில் புளியமரங்கள் துளிர்க்கும் போது அதன் கொழுந்து இலைகள் அதிகப்புளிப்பில்ல்லாது சுவையாக இருக்கும். புளியம்பூககளும், இளம் பிஞ்சுக்காய்களும் வெளியூர் செல்லாத முழுப்பரீட்சை லீவில் நமது அவுட்-டோர் ஸ்னாக்ஸ்.

மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பரமசிவன் கோவில் திருவிழா போடியில் கோடைகாலத்தில் நடக்கும். 100படிகளுக்கும் மேலான படிகள் ஏறிச்செல்லும் படி அமைந்த சிவன் கோவில்.

விழாக்கமிட்டியினர் உள்குத்து காரணமாக சிலசமயம் விழாவே கான்ஸல் ஆகி என்மாதிரி சிறுவர்களைச் சோகப்படுத்திவிடும்.

பரமசிவன் கோவில் விழாவில் "ஐந்து பூ மார்க் பீடி" நிறுவனத்தார் போடும் 16mm கறுப்பு வெள்ளை "வஞ்சிக்கோட்டை வாலிபன்" மாதிரியான "புதிய" படங்கள் சிறப்பம்சம்.

இந்த விழாவுக்கு போடியைச் சுற்றியுள்ள 18பட்டி கிராமத்துக் கிளிகளும், குடும்ப சமேதமாய் வந்து செல்வர்.

போடிக்கான குடிநீர் "கொட்டகுடி"ஆற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. சதுரசதுரமாய் பல ராட்சஸ தொட்டிகளின் மீது நடந்து சென்றது அந்தக்காலத்தில் த்ரில்லான அனுபவம். உபயம் பக்கத்து வீட்டு என்ஞினீயர்.

கொட்டகுடி ஆற்றங்கரையில் இருக்கும் "அணைக்கரைப்பிள்ளையார்கோவில்" தான் நான் சென்ற ஒரே "கல்விச் சுற்றுலா" . சின்ன மதகு அணை, ஆற்று நீரைப் பாசனத்திற்கு திருப்பி விடும் இடம். தென்னந் தோப்புகள், ஆறு என ரம்மியமான இடம். தோப்பில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சுவார்களாம்.

சரி. போடிய வச்சே சில பதிவுகள் போட்டுற வேண்டியதுதான்.

டுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... எங்க மாமியார் வீட்டைப் பத்தி இவ்வளோ சொல்லிட்டீங்களே.

கோபாலும் அதே ஹைஸ்க்கூல்லே படிச்சவர்தான்.

அப்புறம்தான் அங்கிருந்து 'தப்பி' பாளையங்கோட்டை, கோயமுத்தூர்னு ஓடிட்டார்:-))))

நீங்கசொன்ன ராட்சஸத்தொட்டி எல்லாம் படம் போட்டு பதிவுகள் போட்டுருக்கேன்.

வடுவூர் குமார் said...

அந்த மாதிரி இடத்தில் இருந்துவிட்டு இப்போது அங்கு இருப்பது-வெருப்பாக இல்லை?
எப்பவுமே பசுமையான இயற்கை சூழ்நிலைக்கு ஈடு இணையில்லை.

Hariharan # 26491540 said...

//அந்த மாதிரி இடத்தில் இருந்துவிட்டு இப்போது அங்கு இருப்பது-வெருப்பாக இல்லை?//

வாங்க குமார். அங்கே இருந்த எனக்கு உவப்பில்லாத ஆசிரியராக, வங்கிப் பணி என குறைவான வேலை வாய்ப்புகளே இடம் பெயர வத்தன.


//எப்பவுமே பசுமையான இயற்கை சூழ்நிலைக்கு ஈடு இணையில்லை//

குமார், குறிஞ்சி, முல்லை,மருதம், சென்னையில் நெய்தல் கண்டுவிட்டு, தற்போது பாலையில் வசிக்கிறேன்.

பசுமையான குறிஞ்சியில்தான் இருப்பேன் என்று அடம் பிடித்திருந்தால் பொருளாதாரமும், வாழ்க்கையும் பாலைவனமாகியிருந்திருக்கக்கூடும்.

Hariharan # 26491540 said...

//கோபாலும் அதே ஹைஸ்க்கூல்லே படிச்சவர்தான்.//

"விவரமான" போடிக்காரர்கள் பெரும்பாலும் ZKM School தயாரிப்பாக இருந்தாக வேண்டும்.

//நீங்கசொன்ன ராட்சஸத்தொட்டி எல்லாம் படம் போட்டு பதிவுகள் போட்டுருக்கேன்.//

துளசியக்கா புண்ணியத்திலே சுப்ரமண்யஸ்வாமி கோவில், எங்க ஸ்கூல், போட்டோ காணக் கிடைத்தது. நன்றிகள்.