Sunday, July 23, 2006

(22) என்ன இது? அமானுஷ்யமா? தெரியவில்லை..

இச்சம்பவம் நான் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடிக் கொண்டிருந்த கால கட்டத்தின் போது நடந்த சம்பவம்.

அது 1990 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நான் மேன்ஷன் அறையில் எனது அன்றைய தினத்திற்கான செயல்கள் அனைத்தும் முடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன்.

வேலையைத் சென்னைத்தெருக்களில் தேடி அலைந்த களைப்பில் அந்த மேன்ஷன் அறையின் சிமெண்ட் தரையில் விரித்த ஜமுக்காளத்தில் படுத்தவுடன் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

நள்ளிரவு பட்டென்று முழிப்புத் தட்டியது. கண்விழித்துப் பார்த்தேன். அருகில் என் சகோதரன் ஒரு அடி தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

என்மீது ஏதோ ஒன்று அழுத்துவது மாதிரி உணர்கிறேன். கால் நீட்டி மல்லாந்த நிலையில் படுத்திருந்த என் மேல் நான்கு 100கிலோ அரிசி மூடைகளை போட்டு அமுக்குவது மாதிரியான உணர்வு.

அருகில் ஓரடி தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிற என் சகோதரனை எழுப்ப முயற்சிக்க கையை தூக்க முயற்சிக்கிறேன் ம்ஹூம் என்மீது ஏதோ ஒன்று
அமர்ந்து நசுக்கி அமுக்குவது அதிகமாகிறது.

சரி கை கால் தான் அசைக்க முடியவில்லை, குரலெடுத்துக் கத்தியாவது சகோதரனை எழுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த கட்டிடமே அதிரும் வண்ணம் ஜீரோ டெஸி பெல்லில் காட்டுக்கத்தல் போடுகிறேன். என் காதுக்குக்கூட அந்த சத்தம் கேட்கவில்லை.

கை, கால் அசைக்க முடியவில்லை, பேச(கத்த) வும் இயலவில்லை. என்ன ஆயிற்று எனக்கு என்று என்று இயலாத அந்நிலையில் மனம் மட்டும் சிந்திக்கத் தொடங்குகிறது.

நான் ஹரிஹரன் என்ற ஞாபகம் இருக்கிறது. சிலமணிநேரம் முன்பாக சாதரணமாகத்தானே ஜமுக்க்காளம் படுக்கை விரித்துப் படுத்தேன் அதற்குள் என்ன ஆச்சு? என்று கவலையோடு யோசிக்கிறது.

ஒருவேளை நான் இறந்து போய்விட்டேனா? இறந்து போய்விட்டதால் தான் இப்படி எதையும் முன் (?!) மாதிரி செய்யமுடியவில்லை போலிருக்கிறது என்று பலவாறு எண்ணிக்கொண்டிருந்தது.

சரி நம்மால இனி ஏதும் ஆகிறமாதிரி இல்லை. என் இஷ்ட தெய்வமான போடி எல்லைக் காளியை நினத்துக் கொண்டேன். குபு குபுன்னு வியர்க்கிறமாதிரி தெரியுது கொஞ்ச நேரத்தில தொப்பலா வியர்த்து கொட்டிவிட்டது!

இப்போ மேலே இருந்த நான்கு அரிசிமூடை பளுவும் அது இதுவரை தந்த அழுத்தமும் குறைந்து காணாமல் போனது. கை கால் அசைக்க முயன்று முடியாமல் தோற்றுத் துவண்டு போயிருந்ததில் ஆயாசமாயிருந்தாலும் மீண்டும் முயற்சித்தேன். இப்போது முடிந்தது. நான் நினைத்த மாதிரி கால், கை அசைக்க முடிந்தது.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் சகோதரனை தட்டி எழுப்பினால் 'சள்" என்று விழுந்தான். சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எழுந்து விபூதியைப் பூசிக்கொண்டு மீண்டும் உறங்கினேன்.

காலையில் எழுந்து நானும் சகோதரனும் டாப், சைடு, ப்ரன்ட் வ்யூக்களில் தீவிர அனலைஸ் செய்தும் ஏதும் துப்புக் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் இன்னமும் அன்று என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று காரணம் அறிய முடியவில்லை.

1991ல் என் சித்தி பெண் திருமணத்தின் போது பேச்சு அரட்டையில் இச்சம்பவத்தை நான் விவரிக்கும் போது, சம்பவத்தை எதிர்கொண்ட நான் அமைதியாகப் பேசிக்கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்த என் உறவுக்காரப் பையன் மயங்கிவிழுந்து தண்ணீர் அடித்து திருநீறு பூசவேண்டியிருந்தது.

என்ன இது? அமானுஷ்யமா? சத்தியமா தெரியலீங்க!

பி.கு.
இந்த சம்பவத்திற்குப் பின்பாக நான் தொட்டதெல்லாம் துலங்கியது, முறையாக முயற்சித்தெல்லாம் கைக்குக் கிட்டியது என்னவோ உண்மைதானுங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

வடுவூர் குமார் said...

ஆமாம் ஹரி
இதே அனுபவம் ஒரே ஒரு தடவை நான் 10 வது படிக்கும் போது நடந்தது.
அதற்குப்பிறகு வரவில்லை.
புரியாத புதிர்.

நாமக்கல் சிபி said...

இதில் அமானுஷ்யம் எல்லாம் எதுவும் இல்லை. நன்கு உழைத்து விட்டு மிகுந்த அலுப்புடன் உறங்கும்போது சில சமயம் இப்படி நிகழ்வது உண்டு.

அதே போல் படுக்கும் இடம், திசை, காற்றோட்ட வசதி இவற்றிற்கும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு உண்டு.
அதனால்தான் பெரியவர்கள் குறிப்பிட்ட திசைகளில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வார்கள். அது அறிவியல் பூர்வமான கருத்து. மூட நம்பிக்கை கிடையாது.

துளசி கோபால் said...

எனக்கும் இப்படி பலசமயங்களில் நடந்துருக்கு. மூச்சு அடைச்சு கொஞ்சம் உணர்வுக்குத் திரும்பினா,
நம்ம பூனை, என் கழுத்து மேலே
உக்கார்ந்திருக்கும்.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் நாமக்கல் சிபி,

இம்மாதிரி ஏதாவது இருந்திருக்கலாம் என்று எண்ணி அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை. முழுமையாகத் துப்புத்துலக்க இயலாததால் குழப்பம் முற்றிலுமாகத் தீர்ந்தபாடில்லை.

சோதனைக்காக வடக்கில் தலைவைத்துக் கூட சில நாட்கள் உறங்கிப்பார்த்து இருக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி வருக.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் குமார்.

நிறைய நாட்களாகிவிட்டது நீங்கள் வருகை தந்து. வாருங்கள் அடிக்கடி.

உண்மைதான் புரியாத புதிராகவேதான் இன்றும் உள்ளது.

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

வாங்க. ரொம்ப நாளாச்சு பார்த்து (என் வலைப்பூவில்)

அட நம்ம கட்சிக்கு நீங்க, நம்ம வடுவூர் குமார் மாதிரி "ஸ்பெஷல் எபெக்ட்ஸ்" அனுபவங்கள் உள்ள ஆட்கள் இருக்கிறீங்க.

"பேயடிச்சுப்" பெரியாளானவர்கள் சங்கம்" ஆரம்பிச்சுலாம் போலிருக்கு:-))

நவீன் ப்ரகாஷ் said...

ஹரி உங்கள் பதிவு படித்தேன்.இதில் அமானுஷ்யம் என்று ஒன்றும் இல்லை. பலருக்கு இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம்.

உங்களுக்கு ஏற்பட்ட நிலையின் மருத்துவப்பெயர் ' sleeping Paralysis 'எனப்படும்.

திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தால் சில சமயங்களில் நம் உடல் மனவேகத்திற்கு ஈட்டுகொடுக்காமல் ஒத்துழையாமை செய்யும் :). இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் பீதியடைய வேண்டாம். பேய் அமுக்குகிறது என்பது மூட நம்பிக்கை. சிறிது நேரம் அப்படியே இருந்தால் தானாகவே சரியாகி நீங்கள் நினைத்தபடி உங்கள் உடல் கேட்கும் செயல்படும்.

இந்தத் தெளிவு நம் மக்களிடையே இல்லாததால் இந்நிலையை பேயின் செயல் என நினைத்து பயப்படுவோம்.

மற்றபடி இச்சம்பவத்திற்கு பின் தாங்கள் தெட்டதெல்லாம் துலங்கியதற்கு காரணம் உங்கள் சுயமுயற்சியேயன்றி வேறொன்றும் இல்லை :)

Geetha Sambasivam said...

இதிலே அமானுஷ்யம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.Over exhaust ஆனால் இப்படி உடம்பை அசைக்க முடியாமல் அழுத்தும். அந்த நேரம் நம் மூளை கூட சற்று மந்தமாகத் தான் இருக்கும்.

Hariharan # 03985177737685368452 said...

கீதா,

வருகைக்கு நன்றி. வெகுதியான களைப்பு காரணமாக இருந்திருக்கலாம்.
என் மூளை மூளை அந்நேரம் என்றில்லை எந்நேரமும் மந்தம்தான்:-))