(41) நல்லதை வெளியே சொல்லலாமா? கூடாதா?
எனக்கு மட்டும் அம்மாவின் நெக்லஸ் தரல உங்க சங்காத்தமே வேண்டாம்னு எளவு வீட்டுல என்ன பேசினாலும் இனி திருப்பிப் பேசமுடியாத அம்மாவின் உடலருகே சகோதரனிடம் சகோதரி சண்டையிடுகையில் இந்த ஆசையை இப்போ வெளியே சொல்லலாமா? கூடாதான்னு யோசிப்பதில்லை.
தன் மனைவியும் மறைந்த பின்பு வாழும் தந்தையிடம் அசையாச் சொத்துக்கள் பிரிக்கும்போது நடைமுறையில் மகளுக்கெல்லாம் உரிமை கிடையாது என்று முழுச்சொத்தையும் போலிப்பாசம் காட்டி கையகப்படுத்திய மகன் /சகோதரன், ஆறுமாசமா என் வீட்டில் தான் எதுக்கும் உதவாத வயசாளி அப்பன் குந்தி தின்றாரு... நான் மட்டும் தான் அவருக்குப் புள்ளையா? மக மகன்னு கிடப்பா கிடந்தாரே அவ வீட்டுல போயி முறையா அடுத்த ஆறுமாசத்துக்கு இருக்க வேண்டியது தானே? என்று இந்தக் கருத்தைத் தான் சொல்லலாமா? கூடாதா?ன்னு யோசிப்பதில்லை.
தமிழகத்தின் ஒவ்வொரு நிதி மாவட்டத்துக்கும், ஒண்ணுக்கு மூணு கழக மாவட்டம் போட்டுக் மக்கள் நலத் திட்டத்துக்கான நிதியில் நடத்தப்படும் திட்டங்களில் சதவீதக் கமிஷன் அடிக்கலாமா? இல்லை விசாரணைக் கமிஷன் வச்சு விசாரிச்சாலும் சரின்னு திட்டத்தையே கமிஷனாக்கி களவாணித்தனம் செய்து வயிறு/இயக்கம் வளர்க்கலாம்னு ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்கியிருக்கிற அரசியல்வாதி இந்த உண்மை வெளியே தெரியலாமா? கூடாதான்னு கவலைப்படுவதில்லை!
மார்ச் போனா மயிரே போச்சு! ஆண்டவன் கொடுத்த அக்டோபர் இருக்குன்னு கல்லூரி செமஸ்டரில் அரியர் வைத்த மாணாக்கன் இப்படி அடுக்காத அடுக்குமொழி வசனத்தை அலுக்காம வெட்கப்படாமல் வெளியே சொல்லலாமா? கூடாதா?ன்னு யோசிப்பதில்லை!
கொள்ளையடிக்கிற கொளுகைக்காரர்கள், அந்தந்த காலகட்டத்தில் வாழ்வியல் நெறி தவறியவர்கள் எல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறான், மார்தட்டிச் சொல்கிறபோது தனது சாதனைகளை வெளியே சொல்லலாமா? கூடாதா?ன்னு யோசிப்பதில்லை!
எங்கோ படிக்கத்திறமையிருந்தும், வேண்டிய மதிப்பெண்கள் இருந்தும் வறுமையினால் இயலாத நபர்களுக்கு உதவிசெய்தவர்கள் வேண்டாம் என் பெயர் போடவேண்டாம் / நான் என்று வெளியே தெரிய வேண்டாம் என்று!
இளவயதினில் கொடூரமான நோயால் அவதியுறும் நபர்களுக்கு உதவி செய்யும் இளகிய மனதுக்காரர்கள் இட்டதைச் சொல்லக்கூடாது ஏனெனில் இடது கை தருவது வலது கைக்குக் கூட தெரியக்கூடாதாம்!
இன்னின்ன செயல்களுக்கு உதவிடமுடிந்தது என்று உரக்கச் சொல்லுங்கள் உதவி செய்வோர்களே!
சுரண்டுவது மட்டுமே கேட்டு,பார்த்துப், பழகிய சுரணை கெட்டவர்களுக்கு சுர்ர்ரென்று , சுளீரென்று உறைத்திடவாவது சாட்டையடியாய்ச் சொல்லுங்கள்!
உங்களின் அறிவிப்புகளால் உதவுதல் என்பது இன்றளவில் நம்போன்ற சாதாரண மக்களிடையே இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்று உணர்த்திடவாவது அடிக்கடி அறிவியுங்கள்!
இன்னா மட்டுமே செய்யப் பழகிய கல(ழ)கக்காரர்களுக்கு அவர்கள் நாணுமாறு நன்னயமாய் பொதுமக்களே ஒருவருக்கொருவர் உதவுவதை அவ்வப்போது அரங்கேற்றுங்கள்!
செய்த நல்லதை செருக்கின்றிச் செவ்வனே செப்பிடுங்கள் தப்பாது! தெரிந்தோரிடமும் அறிந்தோரிடமும்! இன்னும் பல ஆயிரம் நன்மைகள் விளைந்திடும் இதனால். உந்தப்பட்டு உதவிட புதிய இளைய தலைமுறை ஓடோடிவரும்! உன்னதமான உதவிடுதல் தொடர்ந்து உய்க்கும்!
அன்புடன்,
ஹரிஹரன்
2 comments:
சோதனையூட்டம்!
அறிவிப்போடு நின்றுவிடும் விளம்பரங்கள் உதவிகளா?
அல்லது ஆபத்துக்கால உதவிகான நிதியைக் கழகக் கண்மணிகளின் கமிஷன் சல்லடைகளில் விழுந்து கையிலே தரும் போது அறிவித்ததொகையும் கையில் கிடைத்த பணமும் மலை-மடு என்ற வித்தியாசத்தோடு இருக்கும் போது தெரியும் செத்தவனெல்லாம் சீதக்காதி என்று! செத்தும் கழகத்துக்குக் கொடுத்திருக்கிற சீதக்காதிகள்!
நான் விளம்பரம் செய்யச் சொல்வது அல்லல்படுவோருக்கு தேவையறிந்து கொடுத்தபின்பும் அமைதியாயிருப்போரை!
இம்மாதிரி ஷேர் ஆட்டோவில் மரணித்த அப்பாவிகளுக்குத் தருவதாகச் சொன்ன நிதியே ஷேர் செய்யவே என்ற உள்ளர்த்தத்துடன் கபடமாய் விளம்பரப்படுத்தப்படும் உதவிகளுகல்ல!
18 x 50000 = 900000/- ஒன்பது லட்சம் உதவித்தொகை விளம்பரச்செலவு எத்தனை லட்சம்?
இது யாருக்கு உதவி செய்கிறதுக்காக? சிநேகிதன்?
Post a Comment