Tuesday, November 14, 2006

(54) யாருங்க நீங்க?

உடலால பெரியவராகிய ஆனால் மனதால் உண்மை அறியாத குழந்தைகளாக இருக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினமான இன்று இது apt ஆக அப்பீலானதால இந்தப் பதிவு!

பொதுவா இது பத்தி நிறையக் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இதுல நேரடியாக என்ன இது என்று அறிவதற்கு முயற்சியோடு முயல மாட்டோம். முன்னெல்லாம் அதாவது வெள்ளைக்காரன் அடிமைகளான இந்தியர்களுக்கு என்று உருவாக்கிய இன்றைய கல்விமுறையான அடிமைத்தனமாக மனனம் செய்ததை திருப்பி ஒப்பிக்கும் மெக்காலே கல்விமுறை திணிக்கப்படுமுன் எல்லோரும் இதை தினசரி முயன்று இருக்கிறார்கள்!

தினசரி வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பெரும்பாலுமாக பெற்றோருக்கு மகன் / மகளாக, வாழ்க்கைத்துணைக்கு கணவன் /மனைவியாக, குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, பல்வேறு உறவுமுறைகளாக, நண்பராக, அலுவலகத்தில் பணியளிப்போராக/பணிபுரிவோராக என்று இப்படித்தான் இருக்கிறோம். அடுத்தவருக்கு இன்னாராக என்று! உண்மையில் தான் யார் என்று அறிய முற்படுவதேயில்லை. 95% நபர்கள் இந்த எண்ணம் தோன்றாத அளவிலேயே வாழ்ந்து மடிகிறார்கள்.

வாழ்ந்தபோது நாட்டியப் பேரொளி பத்மினியின் அழகை வருணித்து ரசிக்காதவர்கள் இல்லை. ஏராளமான நாட்டியத்திறமை அதனால் ஈட்டப்பட்ட பெரும்பொருள் இருந்தும் ஒருநாள் தூங்கச் சென்றவர் எழவேயில்லை! மறுநாள் குளிரூட்டப்பட்ட பேழையினுள் நாட்டியப்பேரொளி! அதே கை கால்கள் ஆனால் செயல்படா சடலம். நேற்றுவரை இவை பத்மினியின் நாட்டியத்தை வெளிப்படுத்தியவை! நிறைபார்க்கும் இயந்திரத்தில் நிறுத்தால் நேற்றைக்கு பத்மினி உயிரோடு இருந்தபோது இருந்த எடைக்கும் உயிரற்ற பத்மினியின் சடலத்திற்கும் எடையில் மாறுபாடு இல்லை!

பின் எது பத்மினியிடமிருந்து விடைபெற்று விலகியதால் பத்மினியின் சடலத்தினால் நாட்டியத்தை அபிநயிக்க இயலாது வெளியே நீண்டநேரம் வைத்திருந்தால் அழுகக்கூடிய சடலமாக குளிர் பேழைக்குள் வைக்கும்படி ஆகிப்போனது?

இறைத்தன்மையான ஆத்மா, பத்மினி என்று பெயரிடப்பட்ட ஸ்தூலத்தைச்(உடலை) செலுத்திய சூட்சுமசக்தியான ஆத்மா ஸ்தூலத்தின் ப்ராரப்தம் முடிந்ததும் விலகி விடைபெற்றது!

(அனைவரும் அறிந்த நபர் என்பதால் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த பத்மினியை உதாரணமாகச் சுட்டி இருக்கிறேன்)

ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து ஒவ்வொருவரும் தினமும் ஒரு 5-10 நிமிடம் தன்னோடு பேசவேண்டும். தன் காலைச் சுற்றிய பாம்புகளாகிய பந்தங்களின் நினைவுகளை ஒதுக்கித் தனியாக அமர்ந்து தனக்குத் தன்னையே அறிமுகம் செய்து கொள்வதையே ஹிந்துமதம் தியானம் என்று அழைக்கிறது. ஹதயோகமாகி மெடிட்டேஷன் மற்றும் யோகா என்று இது உலகெங்கும் கமர்ஷியல் சிதைவுகளோடு பின்பற்றப்படுகிறது!

"இறைத்தன்மை என்ற ஆத்மா என்பது எலக்டிரிசிட்டி மாதிரி." ஸ்தூலம் (உடல்) என்பது சாதனங்கள்! மின்விசிறி, பல்பு, ரெப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் ஒவன், ஹீட்டர்,காலிங் பெல், டிவி இன்னபிற சாதனங்கள் என்று ஒவ்வொருவரும் அவரது குணாதிசயங்கள், சிந்தனை மற்றும் செயல்பாடு இவை காரணமாக ஒவ்வொரு வகையான சாதனங்கள்!

பல்பின் கடமை ஒளி தருவது. பல்பு ப்யூஸானால் ஒளியைத் தராது. குற்றம் பல்புடையதே அன்றி எலக்டிரிசிட்டியின் குற்றம் அல்ல!

"ஒரு பல்பானது தான் ஒளிதருவதைப் போன்று காலிங்பெல் ஒளிதரவில்லை என்று கவலைப்பட வேண்டியதில்லை."

"அம்மாதிரியே ஒரு ரெப்ரிஜிரேட்டர் என்மாதிரி ஓரிடத்தில் நின்று குளிர்ச்சியாக பொருளைப் பாதுகாக்காமல் மைக்ரோவேவ் ஏனில்லை என வருந்தவேண்டியதில்லை."

"மின்விசிறி ஓயாமல் சுற்றுகிறேன் நான் காலிங்பெல் ஓரிடத்திலேயே சுகமாக இருக்கிறதே என்று பொறாமை அடைய வேண்டியதில்லை..."

(ஆத்மாவின் All pervading effect ஐ எளிதான புரிதலுக்காக மின்சக்தியாக உதாரண உருவகம் செய்திருக்கிறேன்!)

ஆத்மா ஒன்றே! இறைத்தன்மை என்பது ஒன்றே!
அதன் வெளிப்பாடு ஸ்தூலத்தின் தன்மையைக் கொண்டு பல்வகையாக பிரதிபலிக்கப்படுகிறது! நம்மில் உறையும் ஆத்மா என்ற இறைத்தன்மையான சக்தியை/ ஒளியை ஆசை, பொறாமை, குரோதம், காமம் என்று கடினமான உறைகள் கொண்டு மூடியே வைத்திருக்கும் போது அது மங்கலாகக் கூட வெளிப்பட அனுமதிப்பதில்லை நாம்.

உணவு , காற்று,மனம், புத்தி, ஆனந்தம் என்ற ஐந்து உறைகளைத்தாண்டி இருக்கும் ஆத்மாவை உணரப் பஞ்சகோச (பஞ்ச = ஐந்து, கோசம்= உறைகள்) விவேகம் தேவை!

இறைத்தன்மையான ஆத்மா ஒளிர்ந்து நம்மில், நமது சிந்தனை, எண்ணம், பேச்சு, செயல் என இவைகளில் பிரதிபலித்து வெளிப்பட முதலில் செய்யவேண்டியது:

1. நம்மில் பகலவனாய் ஒளிரும் ஆத்மா இருக்கிறது என்று உணரவேண்டும்.

2. நமது ஆத்ம /தெய்வ சக்தியை எவை மூடிமறைக்கின்றன எனப் பகுத்தறியவேண்டும்.

3. ஆத்ம / தெய்வ ஒளியை மறைப்பனவற்றை நீக்கவேண்டிய அவசியம் உணரவேண்டும்.

4. இறைத்தன்மை/ஆத்மாவை மறைக்கும் பேச்சு/ சிந்தனை/ எண்ணம்/செயலை குறைத்தல்.

நமது ஆத்மாவை தரக்குறைவான சகதிச் சிந்தனை/செயல்/எண்ணம் இவைகளினின்று மீட்டெடுக்க மனச்சுத்திகரிப்பு மிக அவசியமாகிறது.

புறத்தூய்மை நீரால் அமையும். மனத்தூய்மை வாய்மையாக இருப்பதால் வரும்.

தியானம் / மெடிட்டேஷன் என்ற தன்னோடு பேசுதல் மிகவும் அவசியமானது. வேறு எவரிடமும் இவ்வளவு நம்பிக்கையாக உங்கள் குறைபாடுகளைப் பேசி விவாதிக்க இயலாது. இறைவனிடல் ஆலயங்களில் தொழும் போது உணர்ச்சி மேலிட்ட்டுப் பேசினால் கூட அருகாமையிலிருப்போர் கேட்டுவிட வாய்ப்புள்ளது!

தன்னோடு பேசுதலினால் தன்குறை அறியமுடியும். தன்குறை அறிந்தபின்பு அவற்றை அகற்றி மாற்றும் ஆக்கபூர்வ சிந்தனையை பக்தி யோக மார்க்கம் / ஞானயோக மார்க்கம் மற்றும் கர்மயோக மார்க்கத்தில் பயணப்பட்டு மேம்பாட்டை அடையலாம்.

எடுத்தவுடனே மனத்தை ஐந்து நிமிடத்திலெல்லாம் தன் வசப்படுத்திட முடியாது. மெடிட்டேஷன் எனும் ஆழ்நிலை தியானத்தினால் பரவசநிலை அடைவதும் நெடும்-கடும் பயிற்சிவேண்டும்.

ஆனால் இவ்வழிக்கு ஆரம்பநிலை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து பழகுவது என்பது. இதன் நோக்கம் தன்னை அறிவது / தன்னுள்ளிருக்கும் இறைத்தன்மையைச் செயல்களில் வெளிப்படுத்துவது என்பதால் இறைவனின் நாமத்தை ஜெபித்தபடி 10-20 நிமிடம் தன்னோடு பேசுவது.

இறைவனை ஜெபித்தபடி தன்னோடு பேசுவதால் கூடுதலாக வாய்மையோடு பேசுவீர்கள்! அகர்பத்திவாசம், தீப ஜோதி, இறைவனது படம்/உருவம் சூழலை வாய்மையாக இருத்தலுக்கு ஏற்றதாக்கும். மனம் இலக்கினின்று விலகி ஓடும் போது பூஜைமணிச் சத்தம் ஓடுகாலி மனதை மீண்டும் கட்டுக்குள் எடுத்துவரும்.

ஆரம்பத்தில் கதவை மூடித் தாழ் போட்டுக் கொண்டு ஓர் அறையில் (பூஜையறை) முயற்சிக்கவும். தொடர்ந்து தினசரி செய்யவும் காலையிலோ /மாலையிலோ எது வசதியோ அப்போது செய்யவும். ஆனால் அவசியம் செய்யவேண்டும்.

ஜெபத்தில் அமர்ந்திருக்கும் போது மனம் அமைதிப்படுவதால் சமாதானப்படுத்தப்பட்ட குழந்தைமாதிரி மனம் ஆகிறபடியால் தூக்கம் அமுக்கும். பூஜைமணியால் சத்தம் செய்துகொண்டும் / சத்தமாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி ஜெபிக்கவும்.

ஜெபம் முடிந்து வெளிவரும் போது வள் வள் என்று குழந்தைகள் மனைவி மீது எரிந்து விழலாம். இது தன்னோடு பேசியபோது வெளிப்பட்ட தனது முரண்பாடுகளான வாய்மைகுன்றிய தனது எண்ணம், சிந்தனைகளால் ஆதங்கப்படுவதால் வருவது. தொடர்ந்து செய்ய மென்மையான சாத்வீக குணம் மனதில் குடி புகும்.


யாருங்க நீங்க? பொதுவா இப்படிச் சவாலா கைநீட்டி எதிர்த் தரப்பு ஆட்களைக் சுட்டிக் கேட்கும் இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்! நான் யார்? என்று!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

வள்ளுவர் சொன்னதை நான் சொன்னதை தினசரி பின்பற்ற முயற்சிப்பதால் முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். இதைச்சொல்ல யாருங்க நீங்கன்னு கேட்டா... எனக்கு ஆக்கமாகத் தினசரி வாழ்வில் பயன் தருகிறது என்பதால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

துளசி கோபால் said...

எனக்கென்னவோ இந்த புறச் சத்தங்கள் இல்லாம அமைதியா இருந்தாத்தான்
'தியானம்' செய்ய மனம் ஒருங்குது. இப்பெல்லாம் காதுக்குள்ளெ இயர்ப்ளக்
வச்சுக்கிட்டு ரொம்ப அமைதியா உக்காந்துடறேன். உடம்புக்குள்ளே 'இதயம்'
அடிச்சுக்கறது கூட சத்தமா உணர முடியுது.
எல்லாம் மிஞ்சிப்போனா ஒரு அஞ்சாறு நிமிஷம்தான். அப்புறம் மனசு
சஞ்சாரம் ஆரம்பிச்சுரும்.

ஜயராமன் said...

மிக அற்புதமான பதிவு.

மிக ரசித்துப்படித்தேன்.

"நான் யார்"

இந்த கேள்விதான் எல்லா கேள்விகளுக்கும் மூலம்.

இதே கேள்விதான் எல்லா கேள்விகளுக்கும் விடை. இதன் விடையை உணர்ந்தவன் (அறிந்தவன் இல்லை) இவ்வுலகில் ஒரு மேதை. அவனை எதுவும் துக்கப்பட வைக்க முடியாது

நன்றி

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

//எனக்கென்னவோ இந்த புறச் சத்தங்கள் இல்லாம அமைதியா இருந்தாத்தான்
'தியானம்' செய்ய மனம் ஒருங்குது.//

தினசரி பழகினா காய்கறி மார்க்கெட் மாதிரி சத்தமான இடத்திலும் சாத்தியம்!

மனதை ஒரு விஷயத்தில் குவிப்பது தான் இந்தப் பயிற்சியின் பயன். கான்ஸண்ட்ரேஷன் கூடும் அடிச்சா சிக்ஸர்தான். செயல்பாடு சிறப்பாகவும் நேர்மையாகவும் இருக்கும்.

இளையத லைமுறையினருக்கு இந்தப் பயிற்சி மிக மிக அத்தியாவசியமானது!

Hariharan # 03985177737685368452 said...

ஜெயராமன் சார்,

//"நான் யார்"

இந்த கேள்விதான் எல்லா கேள்விகளுக்கும் மூலம். //

மிக முக்கியமான கேள்வி. பெரும்பாலோனோரால் கேட்டுக் கொள்ளப் படாத கேள்வி இது! சுயமாக கேட்டுக் கொண்டாலே பாதி பிரச்சினைகள் தீவீரம் குறைந்து தீர்வுகள் கிட்டும்.