Sunday, November 05, 2006

(46) நான் சென்ற திரைஅரங்க புனிதயாத்திரை

தமிழகத்துத் தமிழின் தமிழையும், அரசியலையும் விட்டுவிட்டு தமிழ் மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் காண நான் இதுவரை சென்ற திரையரங்கப் புனிதயாத்திரையை பதிவாக்கியிருக்கிறேன். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை படம் பார்க்கிறதுக்கு பதிலா படம் காட்டுன திரையரங்கங்களைப் பற்றி இது. படிச்சுட்டு ஒருவார்த்தை சொல்லிட்டுப்போங்க!

முதன் முதலாய் பெரியவர்களது பிளாக் கேட் பாதுகாப்பு இல்லாமல் வெளியூரில் பார்த்த படம் போடியினின்று 15கி.மியிலிருக்கும் தேனியில் வட்டார பள்ளிக்கூடங்கள் நடத்திய அறிவியல் எக்ஸிபிஷனில் அந்தரத்தில் தொடுப்பில்லாத குழாயினின்று தண்ணீர் கொட்டியதை வாயைத்திறந்தவாறே பார்த்துவிட்டுப் பின்பு சுந்தரம் தியேட்டரில் "பாடும் வானம்பாடி" பார்த்தது!

கோடை விடுமுறையில் கத்திரி வெய்யில் மதுரையில் பரமேஸ்வரி தியேட்டரில் பார்க்க வைக்கப்பட்ட அஞ்சலிதேவி ஜெமினி ப்ளேடு படங்கள் இன்று நினைத்தாலும் ஜெமினி மாதிரியே கல்லாய் சமைந்து போகவைக்கிறது. பின்னாளில் பார்த்திபனால் ஹவுஸ்ஃபுல்லான மதுரை தேவியில் பார்த்த இன்றுபோய் நாளை வாவினால் இன்று கிச்சுசிச்சுமூட்டும் டயலாக் "ஏக் காவ் மே எக் கிஸான் ரகுதாத்தா!" அன்று இங்கிலீஷ்படம் பார்க்கும்போது புரியாமல் சிரிக்க வேண்டும் என்ற தம்ப் ரூலை மாற்றி இந்த தமிழ்படத்தின் ஹிந்தி டயலாக் புரிய சில ஆண்டுகள் பொறுத்திருந்தேன்!

நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கு போன மதுரையில் அரசரடி மதி திரையரங்கத்தில் பார்த்த விக்ரம் திரைப்படம் ராக்கெட்மாதிரி ஞான ஒளிபுர நினைவுகளை சீறவைக்கிறது, அரவிந்த்தில் கண் பரிசோதித்து கண்ணாடியும் அமலாவும் சரியே என்ற அக்னிநட்சத்திரம் சினிப்பிரியாவில் பார்த்தது. சிறுவனாயிருந்த போதிலிருந்து நான் வேலைக்கு வரும்வரை மிகப்பொறுமையோடு பல ஆண்டுகள் கட்டப்பட்ட அரசரடி ராம்விக்டோரியாவில் ஐயம் சாரி படமே பார்த்ததில்லை!

திருச்சிக்குச் செல்லும் வழியில் மனதைப் பாறாங்கல்லாக கனக்கவைத்த முடிவுடன் வந்த "புன்னகை மன்னன்" பார்த்தது திண்டுக்கல் ஆர்த்தி திரையரங்கில்.
பின்பு கல்லூரிக்காலத்தில் ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும் போதும் திருச்சி பஸ் ஸ்டாண்டு அருகிலிருக்கும், இன்றும் இந்த ஹரிக்கு புரியாத "பிலஹரி"ராகம் பாடிய உன்னால் முடியும்தம்பி, பாண்டியநாட்டுக்காரனான என்னை வெறுப்படைய வைத்த மிஸ்டர் ராங். பாண்டியன் பார்த்ததுகலையரங்கம் தியேட்டரிலே மிகவும் பிடித்துப்போன வருஷம்16 பார்த்தது திருச்சி சோனாவிலே எல்லோருக்கும் நல்ல காலமுண்டு உலகிலே என்ற மறுபடியும் பார்த்தது மல்டிபிளக்ஸான ஏதோ ஒரு மாரீஸ் தியேட்டரில். சங்கீதம்பாட கேள்விஞானமது போதும் என்று அறிந்தத படம் நான் படித்த பெரம்பலூரின் கிருஷ்ணா தியேட்டரில் சகாதேவன் யார் மகாதேவன் யார் என்று அறிந்திடாதபடி இளைஞன் குரலையும் கிழட்டுக்குரலாக கொழகொழப்பும் ராம் தியேட்டர் சவுண்ட் சிஸ்டம், மற்றும் யூனிவர்சிட்டி எக்ஸாமன்று தனம் தியேட்டரில் படம் பார்த்ததில் ஆளப்பிறந்தவனல்ல என்ற தேர்வு முடிவு!


பார்த்த ஐ லவ் இந்தியாவை விட இடைவேளையில் உட்தள்ளிய பிரட்சன்னாவிடம் ஐ லவ் யூ சொன்ன கோவையின் கே.ஜி காம்ப்ளக்ஸ், திருவள்ளுவரில் இடம் கிடைக்காமல் கையில் பெட்டியோடு கிராமத்துத் தாய்மாமனாகிப் பார்த்த கவிதா திரையரங்கம் கோவையின் நினவுகளை கௌரிசங்கர் சாம்பாரில் மூழ்கடிக்கப்பட்ட இட்லி+வடை வாசத்துடன் எடுத்துவருகிறது!

எனக்குப் புதியபாதை காட்டிய சென்னைத் திருநகரில் பாதம் பதித்தபின் நங்கநல்லூர் ரங்காவில் பார்த்(த)திபனின் புதியபாதை! சென்னையில் அரங்கேறியபின்பு அரங்கேற்றவேளை பார்த்த பரங்கிமலை ஜோதியயைப்பற்றி என்னிடம் கேளடா கண்மணி ஜோதியில் அடிக்கடி அரங்கேறுவது பலானது என்றதும் ஜோதியினின்று அறிந்தொதுங்கினேன்.

சென்னை வாழ்வில் மகிழ்ச்சியை உதயமாக்கி சூரியன் சந்திரன் என்று ஒளிவீசச்செய்த உதயம் காம்ப்ளக்ஸ்க்கு இந்த சேரன் பாண்டியனது அஞ்சலி! ஒலிச்சிறப்பை வியந்த ஏ.வி.எம் ராஜேஸ்வரி, ஆழ்கடல் அதிசய ஆங்கில abyss மற்றும் இந்தப்பிதாமகன் பிறந்த போடியைக்காட்டிய பிதாமகன் பார்த்த இன்றும் சரியானபடி பராமரிக்கப்படும் சத்யம் காம்ப்ளக்ஸ், விட்டுப்போன பழைய இளையராஜா இசைப்படங்களை மீட்டெடுத்துப்பார்த்த கே.கேநகர் இந்திரா முதல் பட் ரோடு ஜயந்தி, பழனியப்பா திரையரங்கங்களுக்கு நன்றிகள்!

படத்தின் இடைவேளையில் டீ வேணுமா என நண்பன் கேட்க தீவானா படம் பார்த்த நாசிக் அர்ச்சனா? தியேட்டர், அஜ்மீரில் ராஜ்கபூரின் ஹீனா பார்த்த திரங்கா திரையரங்கம் திருஅனந்தபுரத்தில் சின்னமாப்ளே பார்த்த சென்ட்ரல்? சினிமா ஹைதராபாதின் பாலாநகரில் தெலுங்கு இந்திரடு சந்திரடு பார்த்த லாம்பா திரையரங்கம் இவை எனது வெளிமாநில நினைவுகளின் திறவுகோல்கள்!

குவைத்தில் பேச்சிலர் லைஃபில் வாராவாரம் ஹிந்தி திரைப்படங்களை எதிர்பாராமல் தமிழில் இந்தியன் /ஜீன்ஸ் கண்டுகளித்தஅல்-ஜலீப், கேதான்,பிர்தௌஸ் குவைத்சினிமா ஹால்கள்
பஹ்ரைனின் பிர்தூஸ்? திரையரங்கம், சமீபத்தில் மலேஷியாவில் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் பார்த்த கோலாலம்பூரின் ஓடியன் மணி இவை திரைகடல் ஓடித் திரைப்படங்கள் பார்த்த திரையரங்குகள்!

இன்னிக்குப் பதிவை ஒப்பேத்தியாச்சு!

அன்புடன்,

ஹரிஹரன்

10 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

Hariharan # 26491540 said...

சென்னையின் ஆனந்த், சபையர், கிருஷ்ணவேணி, நாகேஷ், காசி, சைதாப்பேட்டை நூர்ஜகான், ஜெயராஜ், சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம், கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா, தாம்பரம் நேஷனல், வித்யா, தஞ்சாவூர் ராஜராஜன், ஜெயங்கொண்டம் ரங்கா, சிதம்பரம் மாரியப்பா, வாடிப்பட்டி லாலா டாக்கீஸ், சோழவந்தான் பாலன், மதுரை வெள்ளைக்கண்ணு, நடராஜ், சேலம் சாந்தி, நெல்லை நேஷனல்? கும்பகோணம் வாசு மற்றும் பலப்பல தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி எங்களையெல்லாம் உங்க திரையரங்கப் புனித யாத்திரையில் சேர்க்காம விட்டுட்டீங்கன்னு கம்ப்ளைண்ட் பண்றாங்க !

இந்தப் பின்னூட்டம் எனவே கயமைத்தனமல்ல பிற்சேர்க்கைக் கடமையாகிறது!

bala said...

ஹரிஹரன் அய்யா,

சென்னை பெரம்பூர் வீனஸ் தியேட்டரையும் இந்த லிஸ்ட்லே சேத்துக்கலாமா?அதில் சினிமா பார்த்த அனுபவம் உண்டா?

பாலா

Hariharan # 26491540 said...

எனது யாத்திரையில் பெரம்பூர் அருகாமையில் அம்பத்தூர் ராக்கி, கோயம்பேடு ராகினி வரை வந்திருக்கிறேன் பெரம்பூர் வீனஸூக்கு விரைவில் வாய்ப்பு வரலாம்!

முத்துகுமரன் said...

//அரசரடி மது திரையரங்கத்தில் //

அது மதி திரையரங்கம் ஹரிஹரன்.

மது திரையரங்கம் இருப்பது வில்லாபுரத்தில். அங்க வாலிப வயோதிக அன்பர்களுக்கான பக்திப்படங்கள் :-) மட்டுமே திரையிடுவார்கள். இப்போது வெற்றி என்ற பெயர் மாற்றத்துடன் சராசரியான தமிழ்படங்களையும் திரையிடத் தொடங்கி இருக்கிறார்கள்.

Hariharan # 26491540 said...

வாங்க முத்துக்குமரன்,
//அரசரடி மது திரையரங்கத்தில் //

அது மதி திரையரங்கம்

//மது திரையரங்கம் இருப்பது வில்லாபுரத்தில். அங்க வாலிப வயோதிக அன்பர்களுக்கான பக்திப்படங்கள் :-) மட்டுமே திரையிடுவார்கள்.//

மை இமேஜ் டோட்டல் டாமேஜ் ஆக இருந்ததிலிருந்து காப்பாற்றியமைக்கு நன்றிகள்.

பதிவிலும் திருத்தியிருக்கிறேன்!

கீதா சாம்பசிவம் said...

அம்பத்தூர் ராக்கியிலே நான் இன்னும் ஒரு படமும் பார்த்ததில்லைங்கிற சாதனை படைக்கப் போகிறேன். நீங்க எங்கே இருந்தோ வந்து பார்த்துட்டுப் போயிருக்கீங்க, பரவாயில்லை.

Hariharan # 26491540 said...

எந்த ஒரு புதிய ஊரிலும் தியேட்டரில் படம் பார்த்தால் அது நல்ல படமோ குப்பையோ it creates a knot to memoir! ராக்கியிலே பார்த்தது சரண்,பரத்வாஜ், கார்த்திக் டீம்ல வந்த பூவேலி!

மஞ்சூர் ராசா said...

நீங்கள் சொல்லும் பழைய சினிமா தியேட்டர்களை விடுங்கள். இப்போதைய குவைத்தின் புதிய சினிமா தியேட்டர்களில் வாராவாரம் வரும் தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி படங்களை பார்த்த அனுபவம் ஒன்றும் காணோமே.

சென்னையின் ராக்சி, வெலிங்டன், மிட்லண்ட், கிரெளன், புவனேஸ்வரி முதலிய தியேட்டர்களில் படம் பார்க்கவில்லையா?

Hariharan # 26491540 said...

வாங்க மஞ்சூர் ராசா,

குவைத்தின் புதிய திரையரங்களுக்குப் போகவில்லை. இரு காரணங்கள்
1. குடும்பமாகப் போனால் பர்ஸ் எகிறுகிறது.
2.குழந்தைகள் தியேட்டரில்காட்டுற படம் படம்பார்க்க வந்தவர்களை சோதிக்கிற படியாலும் என்னை வாட்ச்மேனாக்கி விடுவதாலும்!

குவைத் தவிர்த்து வெளியூர் சூழலில்தான் ஃபாமிலி பிக்சர் சீயிங் தற்போது!

வடசென்னையின் திரையரங்குகளில் திருவொற்றியூர் ராகவேந்திரா மற்றும் மணலி ரயில்வே கேட் அருகே பெயர் மறந்துவிட்ட திரையரங்கில் ரோஜா படம் பார்த்திருக்கிறேன்.