Sunday, November 12, 2006

(53) நீங்களும் பொதுநலத்தில் டிரஸ்ட் ஏற்படுத்தலாம்

பெறுதல் மட்டுமே எல்லா நேரங்களிலும் இன்பம் தருவதாக நினைக்கிறோம். இதனாலேயே முறையற்ற நேர்மை குன்றிய கையூட்டுப் பெறுதல்கூட சமூகத்தில் கிம்பளம் என்று கௌரவிக்கப்படுகிறது. இன்பமாய் தோன்றினாலும் "உண்மையில் முறையற்ற, நேர்மையற்ற பெறுதல் பெரிய மாயை... மகிழ்ச்சியை மெல்லக்கொன்றிடும் மாயை அது"!

கொடையாக, உதவியாகக் கொடுத்தலில், தேவையுள்ளோருக்கு தேடிப்போய் உதவுவது என்பதான பொதுநலச் செயல்கள் கொடுத்தலினால் கிட்டும் சாத்வீக மகிழ்ச்சி இன்பம் நீடிப்பதோடல்லாமல் மன அழுக்கைக் கரைக்கும் சீரிய செயல்! பொருளுடையோரும் பொருள் தேவையுள்ளோரும் கூடி வாழ்தல் என்பதன் நற்ப் பொருளை உணர்த்தும்.

பொதுநல டிரஸ்ட் என்று பதிவு செய்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை. முதலில் தனி மனிதனாக / குடும்பமாக பொதுநலத்தின் மீது டிரஸ்ட் ஏற்படுதல் அவசியம்!

"சார். பொது நலத்திற்கு உதவத்தான் நினைக்கிறேன் ஆனால் சம்பாதிப்பது வாய்க்கும் வயிற்றுக்குமே போதவில்லை" என்று மத்தியதரக் குடும்ப தேசியகீதம் பாடுவீர்கள் எனில் சில வழிகள் உங்கள் பட்ஜெட்டுக்குள்ளேயே எப்படி பொதுநல டிரஸ்ட் நிதி ஏற்படுத்துவது என்று:


சாக்லெட்டில் 200 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அடிக்கடி சாக்லெட் உண்போர் பற்சிதைவு, பல்நோய்க்கு உள்ளாகி பின்னாளில் பல் வைத்த்தியத்துக்கு பெரும் பொருள் செலவிட வேண்டியிருக்கும். நீங்கள் /உங்கள் குடும்பத்தவர் சாக்லெட் உண்ணும் பழக்கம் கொண்டவர் எனில் அதைப் பாதியாகக் குறைக்கவும். இந்தப் பாதிக்குறைத்ததால் கிடைக்கும் பணத்தினால் உங்களது பொதுநல டிரஸ்டுக்கு மாதம் /ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை சேரும். நீங்கள் அறிந்த பொருளாதாரதேவையுள்ள குழந்தைக்கு கல்விக்கு பாடபுஸ்தகம் / யூனிபார்ம் வாங்கித்தாருங்கள் உங்கள் பிறந்தநாளன்று!

சிகரெட் பிடிப்பவர் எனில் கவலையே இல்லை தன்மும் 5 பில்டர் கிங்ஸ் அல்லது ஒருபாக்கட் சிசர்ஸ் அல்லது 2கட்டு காஜாபீடி / சொக்கலால்பீடி/கவ்னர்பீடி , சுருட்டு என்று ஏதாவது ஒன்றில் தீவிர ஈடுபாடு இருப்பின் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்! இதை அப்படியே நிறுத்துங்கள். நிறுத்தியபின் ஏதும் குடி முழுகாது! ஒருவருஷம் தினசரி இந்தப் புகைப்புக்காசை உண்டியலில் போட்டு புதுவருஷம், பிறந்தநாள், பண்டிகை அன்னிக்கு உண்டியலை உடைச்சுப/ திறந்து பாருங்க
ஒரு ஏழை மாணவனுக்குக் கல்லூரிப் படிப்புக்கு ஸ்பான்ஸர் செய்யுமளவுக்கு பணம் சேர்ந்திருக்கும். சிகரட் விட்டதாலே நிம்மதியாக மூச்சும் விடுவீங்க!

வாரவிடுமுறை, நட்பு என ஏதாவது காரணம் காட்டி அரசமீனவன்/ தங்கக்கழுகு பீரோ, ஓல்டுமாங்கை மாவிரன்நெப்போலியனாய் குவார்ட்டரோ /கட்டிங்கோ வாரம் தப்பாது உள்ளே விடும் ஆள் எனில் மாசத்துக்கு ஒருதரம் குவார்ட்டர் கோவிந்தனா அவதாரம் எடுங்க மீதி மூணுவாரத்துக்கும் நல்ல புள்ளயா கோந்துபோட்ட மாதிரி வீட்டுலயே நல்லதா புஸ்தகம் படிங்க! மாதத்தின் மீதி மூன்று வார இறுதிக்கான குவார்ட்டர் மற்றும் சைட் டிஷ் காசை உண்டியலில் சேமிங்க! சரிக்காசு தேறும் ஒரு ஆண்டு இறுதியில்! சேரியில இருக்குற புள்ளைங்களுக்கு படிப்பதற்கு உதவி செய்ங்க! கல்விக்கு உதவினாலே அவங்க மெள்ள தானா மேலேறி வந்துடுவாங்க!

பில்லுப் போடாம கடை வியாபாரம் செஞ்சி வரிகட்டலைன்னா பரிகாரமா அதில பாதிக்காசை ஏழைங்க ரெண்டு பேருக்கு தையல் மிஷினோ வேறு எதாவது அவசியமான சுயமா உழைச்சு முன்னேற உதவி ஸ்பான்சர் செய்யுங்க.

பைக் வைத்திருக்கும் நண்பர்கள் சாலைவிதிகளை மீறி அடிக்கடி பைன் /கப்பம் கட்டிப் பழகியவர்கள் கவனமாக பொறுமையோடு சாலைவிதிகளைப் பின்பற்றி அபராதமாகக் கட்டும் பணத்தை அவசியப்பட்ட ஏழை மாணவச்செல்வத்துக்குத் தேவையான உதவியாக மிதிவண்டி ஸ்பான்ஸர் செய்யலாம்.

கார் வைத்திருப்பவர்கள் குறிப்பாக வெளிநாட்டில் வேலைசெய்து வாழ்பவர்கள் அதிக வேகத்திற்காக பிடிக்காவிட்டாலும் ரேடார் ஸ்பீட் கேமராவில் அடிக்கடி க்ளிக்கப்படுபவர் எனில் கவனத்துடன் வேகவிதிகளுக்குட்பட்டு காரோட்டவும். ஆண்டு இறுதியில் இரண்டு மூன்றுமுறை ஸ்பீட் கேமராவில் மாட்டாததால் கைவசப்பட்ட டாலர் /திர்ஹாம்/தினார்/ரியால்களைக் கொண்டு ஏழைச்சிறுவனை ஸ்பீடாக கல்வியில் ஸ்பான்சர் செய்து முன்னேற்றலாம்!

இது எதுவுமே முடியவில்லை எனில் 20ரூபாய்க்கு ஐந்துகிலோ கொள்ளும் டப்பா வாங்குங்கள். ஒவ்வொருமுறை சோறு சமைக்கும் முன்பு ஒரு கைப்பிடி அரிசி டப்பாவில் போடுங்கள் மாதக்கடைசியில் ஐந்துகிலோ அளவுக்கு சேரும். அருகில் உள்ல முதியோர் / அநாதைக் குழந்தைகள் இல்லத்திற்குப் போய் நேரிடையாகக் கொடுங்கள்.


நேரடியாகத் தேவைப்படுவோருக்கு உதவுவதற்கு முன்னுரிமை தாருங்கள்! நேரடியாகத் தேவையுடையோர் தெரியாதபோது தொண்டுநிறுவனங்கள் மூலமாக யாரேனும் இயலாத முதியவர் / அநாதைக்கு ஓராண்டுச்செலவை ஸ்பான்சர் செய்யுங்கள்!.

நேரடியாகக் கொடுக்கவும் என்று வலியுறுத்துவது கொடுத்தல் என்ற அறச்செயல் தரும் நிறைவினை பெறுதல் என்பதை விட எவ்வளவுக்கு மேம்மட்ட மகிழ்ச்சியைத் தருகிறது என்று சுயமாக உணர்வதற்காகவே! அந்த நிறைவை வார்த்தைகளால் விளக்கமுடியாது அனுபவித்துப் பரவசப்படும் போது மன அழுக்கு மெல்லக் கரைய ஆரம்பிக்கும்!


கல்விக்கு பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற எல்லோரும் இல்லாமையால் உழலும் படிக்கின்ற மாணவர் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு உதவ முன் வர வேண்டும்.

கல்வி என்ற ஒளி ஒவ்வொரு குடும்பத்தின் உள் வந்தாலே சமூகத்தில் ஏழ்மை என்ற இருளும் அதன் பக்கவாத்தியங்களான பேதங்களும் விலகி ஓடிவிடும்!


நீ யாரு அட்வைஸ் ஆறுமுகமான்னு கேட்டா... இல்லீங்கோ இதெல்லாம் நான் பழகிக்கொண்டதால் எனது பொதுநலத்தின் மீதான டிரஸ்ட் ஏறுமுகமா இருப்பதாக உணர்வதாலேயே... யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதாலேயே இப்பதிவு!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

bala said...

ஹரிஹரன் அய்யா,

மிக நல்ல அறிவுரை. முடிந்த வரை நானும் செய்கிறேன்.

பாலா

துளசி கோபால் said...

முடிஞ்சதை பலவருஷமாக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

கொடுக்கறதுலே ஒரு தனி சந்தோஷம் இருக்குன்றது முற்றிலும் சரி.

Hariharan # 03985177737685368452 said...

பாலா அவசியம் செய்யுங்க. ஒரு ஏழைக்கு கல்விக்காக உதவுவது ஆயிரம் ஆலயங்கள் கட்டியதுக்கு சமமானது.

சில ஆயிரம் ஆலயங்கள் கட்டுங்கள் உங்கள் வாழ்நாளில்!

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

நல்ல விஷயத்துக்கு இன்னும் பல வருஷம் கொடுங்க. இன்னும் சந்தோஷமா இருங்க!

Hariharan # 03985177737685368452 said...

அபிராமம்,

புகைபிடிப்பவர் நீங்கள் எனில் இதுமாதிரி பிறருக்கு உதவுவதைக் காரணமாக்கி அதிலிருந்து முற்றிலும் மீண்டுவிடலாம்.

அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள் தனிப்பட்ட நாம் நினைத்துச் செய்தால் வேகமாக சமூகத்தை முன்னேற்றலாம்!

ரவி said...

நல்ல கருத்து...கொடுத்து இன்பம் அடைஞ்சிருப்பீங்க போல..அதனால் உங்களுக்கு அதில் உள்ள சுகம் தெரியுது...

உங்கள் டெக்னிக்கை கண்டிப்பாக அமல்படுத்துவேன்.

Hariharan # 03985177737685368452 said...

செந்தழல் ரவி,

//நல்ல கருத்து...கொடுத்து இன்பம் அடைஞ்சிருப்பீங்க போல..அதனால் உங்களுக்கு அதில் உள்ள சுகம் தெரியுது...//

//உங்கள் டெக்னிக்கை கண்டிப்பாக அமல்படுத்துவேன். //

மிக்க நன்றி. தாங்களும் கொடுத்துப் பேரின்பம் அடையவும்.