Saturday, November 04, 2006

(45) சிகரட்டை விட ஒரு சீக்ரெட்

சிகரட் இது பலருக்கு ஆறாவது விரல் மாதிரியாகிப் போனது. நிறையப் பேருக்கு சிந்தனை நியூரான்களை செயல்பட விடுவதே சிகரட்டுன்னும் நினைப்பு உண்டு! உண்மையில் சிந்தனை நியூரானுக்கும் சிகரட்டுக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது ! சுத்த நியூசன்ஸான சிந்தனை இது!

ஸ்டைல் என்று ஆரம்பித்து ஹாஸ்டலில் அப்பன் காசில் ஆரம்பிக்கும் அப்புறமா நண்பர்கள் முன்னாடி வீரத்தைக் காட்டுறேன்னோ இல்லை சும்மா ஹார்மோன் ஹார்மோனிய வாசிப்பு முகட்டுக்கு ஏறிய சமயத்தில அந்தப் பெண்ணிடம் போய் ஐ லவ்யூ சொன்னதுக்கு செருப்பைக் காட்டியதனாலேயோ / சாரி பிரதர் எனக்கு அந்த எண்ணம் இல்லைன்னு முறிஞ்சு போன "காவியக் காதலுக்காகவோ" ஒரு நவயுக இளைஞனிடம் ஆவரேஜா அவனது டீனேஜ் இறுதியிலோ ஆரம்ப 20வயதுகளிலோ அவனது "ஆபரேடிங் சிஸ்டத்தின்" பாஸ்வேர்ட் திருடிய ஸ்பை சாப்ட்வேர் மாதிரி உள் நுழைகிறது இந்த பாழாய்ப்போன சிகரெட் என்ற பொருள் / ஆரோக்கிய /கால / சிந்தனை விரய அரக்கன்!

22வயது வரையில் சிகரெட் பழக்கம் வரவில்லை எனில் அவன் வாழ்நாள் புகை மறுப்பாளன் ஆகிறான் என்கிறது ஆய்வு. நான் அந்த ஆய்வைப் பொய்யாக்கி 1992 ஜூனிலிருந்து 2004 ஏப்ரல் வரை ஒரு மாமாங்கத்திற்கு புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றுவதாகவும், தெளிந்த நீரோடைமாதிரி சிந்திக்க சிகரெட் உதவுவதாக எண்ணியும், அவாளாச்சே நீ சிகரெட் தப்பில்லியா? என்று கேட்டவரிடம் "புகையிலை இஸ் அ லீஃப் லைக் பாலக் ப்யூர் வெஜிடேரியன்" என்று தங்கிலீஷில் மிக இயல்பாக சயின்டிபிக் எக்பிளனேஸனாக ஃப்ரீயாக எக்ஸ்பிரஸ் பண்ணியவன், மேலும் தாய், தந்தை, மனைவி மற்றும் சகோதரன் என்று எவர் சொல்லியும் கன்வின்ஸ் ஆகதவன், காட்பாடி-ராணிப்பேட்டை ரூட்டில் ஒரு சுகர் பேக்டரியில் ஒரு எக்விப்மெண்ட் ப்ரேக்டவுன் சரி செய்ய முடியாமல் பட்டுக்கோட்டை அழகிரியில் திரும்பும் போது சுங்குவார்சத்திரத்தில் ஒரு ரோட்டோரஉணவகத்தின் பீடாக்கடையில் கோல்ட் ப்ளேக் கிங்ஸ் வாங்கி பார்வையாளர்களாக உடன் வந்த பயணிகள் சாட்சியோடு இழுப்புக்கு ரெண்டு இருமல் என்று இருமி இருமி தனியாக எவர் துணையின்றி புகைப்பழக்கத்தை அரங்கேற்றிக்கொண்டவன் என்ற தகுதியே இந்தப் பதிவை எழுதும் முழுமையான உரிமையை எனக்குத் தருகிறது.

இப்படி புலிவாலைப் பிடித்த மாதிரி சிகரெட்டை நான் பிடித்துக்கொண்டேன். குவைத் பேச்சிலர் லைஃபில் நடுராத்திரி 2மணிக்கு எழுந்து ஒருகையில் கோக்டின் மறுகையில் ரோத்மான்ஸ் சிகரெட். எல்லா பிராண்டு சிகரட்டுகளும் முயற்சித்து விட்டு ரோத்மான்ஸில் செட்டில் ஆனேன். சிகரட்டை முகர்ந்து பார்த்து புகையிலையின் வாசனை கொண்டே தரம் கண்டுபிடிக்கும் அளவுக்கு புகையிலை எக்ஸ்பர்டாகியிருந்தேன்.

கல்யாணம் ஆன பின்னாடி நானே சிகரெட்டால் நாறுவதாக மனைவியால் சுட்டப்பட்டேன். என் சட்டை துணிமணி நாறுவதாக புகார் வாசிக்கப்பட்டது. குழந்தைகள் பிறந்தவுடன் நாறிப்போன வாயோடு குழந்தை அருகே செல்லத் தடை. என்னதான் புகைப்பாளன் என்றாலும் என்னுடைய மற்றும் எவரது ரூமுக்குள்ளோ, வீட்டுக்குள்ளோ, ப்ளாட்டினுள்ளேயோ, காருக்குள்ளேயோ என்றுமே புகைத்ததில்லை. (புகைத்தால் இவ்விடங்கள் மிக கொடுமையாய் நாறும் என்பதால் ) குழந்தைகளால் ஒவ்வொருமுறை புகைத்தவுடன் கால்வாசி குளிப்பு நடத்தவேண்டியிருந்தது. குழந்தைகள் பேச ஆரம்பித்ததும் கீழே புகைக்கச் செல்லும்போது எங்கே போகிறாய் நானும் வருகிறேன் என்று அடம் பிடிக்க ஙேஙென்னு எதாவது சமாளிப்புகேஷன் செய்யவேண்டியிருந்தது.

இத்தனைக்கும் எனது தந்தையோ எந்தவிதமான கூடுதல் பழக்கங்கள் இல்லாதவர். வெற்றிலை பாக்கு கூட போடமாட்டார். நானும் கல்லூரியில் விடுதியில் இறுதிநாளன்று நண்பர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஒரே இழுப்பு புகைக்க மறுத்தவன்! ஆனால் தந்தைவழித் தாத்தா பன்னீர்ப்புகையிலை குதப்பும் பார்ட்டி!

ஒரு நிலையில் சிகரட்டை 9மாதம் நிறுத்தினேன். பின்பு மீண்டும் சிகரெட்டால் இழுக்கப்பட்டேன். இந்த 9 மாத இடைவெளியில் சிகரெட்டின் சுவை கசப்பாக மாறிவிட்டிருந்தது! இப்போது ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஒரு போலோ மிண்ட் அல்லது கோக் கூட்டணிசேர்வது தர்மமாகியிருந்ததில் உடல் ஆரோக்கியம் தர்மத்துக்கும் பாதிப்பைக் காட்ட ஆரம்பித்திருந்தது.

எங்கள் பரம்பரையே மிக இனிமையானவர்கள் என்பதால் இந்த உண்மை எனது உடலளவிலும் கூடுதல் இனிமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது! சிகரட்டும்,கோக்கும், போலோவும் கூட்டணியிலிருந்து கழுத்தறுத்தது தெரியவந்தது.

என்றாலும் சிகரெட் என்றாலே அப்பவே அஸின் ரசிகன் ரேஞ்சுக்குப் பிஸின் போட்டவனாக இருந்தேன்! புகைப்பழக்கத்தினின்று முழுதுமாய் எப்படி விடுபடுவது என்று யோசிக்கக் கூட முடியாதபடி சிகரெட் என்னைச முற்றிலும் சிறைபிடித்து இருப்பது புரிய வந்தது. மனைவி சொல்லை வள்ளுவரே கேக்காதேன்னு கான்டெக்ஸ்டை திரித்து மேலான மேல்சாவனிசம் காட்டினேன். தந்தை, தாயைப் பார்ப்பதே வருடத்துக்கு/ இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை என்று இருக்க்கும் சூழலில் / திருமணமாகித் தந்தையானவனாகிய என்னிடம் அவர்களும் அளவுக்கு மிஞ்சிக் கண்டிப்பைக்காட்டினால் திசைப்பக்கமே வரமாட்டேன் என்று சூளுரைப்பு குரைப்பு நடத்துவது மட்டுமே நிதர்சனமாகியிருந்தது.

என்ன செய்வது என்று உண்மையில் நான் சிகரெட்டை விட முழுமையாக விரும்பினேன். அப்போது பகவத்கீதை சொற்பொழிவுக்குப் போக சந்தர்ப்பம் கிட்டியது. உன்னால் முடியாதபோது பகவானை நினைத்து கிருஷ்ணா காப்பாற்று என்று சரணடைந்துவிடு. மீதி பகவான் பார்த்துக்கொள்வார் என்று கீதையுரை கேட்டேன்.

சிகரெட் விடுவது என முயற்சித்தால் அப்ரப்டாக அப்படியே அந்த தருணத்திலிருந்து விட்டுவிட வேண்டும். படிப்படியாக குறைப்பது எல்லாம் வேதாளம் மீண்டும் உக்கிரமாக முருங்கைமரம் ஏறவே வழி வகுக்கும். விட்டு விட்டபின்பு முதல் வாரம் வைராக்கியம் மிக மிக முக்கியம்.
நாட்டார் தெய்வமென எனது பாட்டனை முன்னோரை இவ்விஷயத்தில் வேண்டமுடியாது. தாத்தனுக்குத் தகுதிக்குறைவு பன்னீர்புகையிலைப் பார்ட்டிதானே அவர்!

கிருஷ்ணா காப்பாற்று என்று சிகரெட் பாசமாய் உந்தி அழைக்கும்போதெல்லாம் மானசீகமாகச் சொல்லிக் கொள்வேன். இதோ கிட்டத்தட்ட 20மாதகாலம் சிகரட் மீது அபிலாசை விட்டது!

சிகரெட்டை விட்டதால் பல நன்மைகளை மீண்டும் பெற்றிருக்கிறேன்.

1. மனைவியின் நச்சரிப்பு அறி(வற்ற) உரைகளிலிருந்து பெரிய விடுதலை!
2. குழந்தைகளோடு அந்நியோன்யமாக குற்ற உணர்வின்றி இருப்பது.
3. சராசரியாக 20சிகரெட் ஒருநாளைக்கு ஒருசிகரெட்டுக்கு 5 நிமிடம் என்று 100நிமிடம் சேமிக்கிறேன்!
4. ஒருபாக்கட் கிங்ஸ் 20 சிகரெட் + சிகரெட்டின் இயற்கையான கூட்டணி போலோ, மிண்ட், டயட்கோக் என்று ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 200ரூபாய் சேமிக்கிறேன்.
5. ஆரோக்கியத்தின் மீது டேமேஜ் கண்ட்ரோல் எக்ஸர்ஸைஸ் முடுக்கியிருக்கிறேன்!
6. முடியவே முடியாது என்று இருந்த ஒரு மாமாங்கப் பழைய பழக்கத்தின் மீது பிகேவியர் ரிகாபிளிட்டேஷன் சென்டர் வரை போகாமல், சித்தர்கள் சூரணம் சாப்பிடாமல் சுயமாய்ச் சரிசெய்ததில் தன்னம்பிக்கை கூடியிருக்கிறது.
7.சிகரெட் அடித்தபோதிருந்ததை விட சிந்தனை சீர்பட்டிருப்பதாக உணர்கிறேன்!

8. பகவத்கீதை மாதிரி நல்லவிழயத்துக்குள் போக கூடுதல் நேரம் கிட்டியிருக்கிறது.

9. பகவத்கீதையால் மனச் சுத்திகரிப்பு கூடுதலாகியிருக்கிறது.


ஆக எனது மனச்சுத்தகரிப்புக்கு, தவறான பழக்கத்தில் ஒன்றிக்கிடந்த மனதைச் சுத்தகரிக்க பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் சொன்னது பெரிய அளவில் உதவிகரமாக இருந்திருக்கிறது.

எனது பொருளாதார வளர்ச்சிக்கும் சிகரெட்புகைப்பதற்கும் என்று போட்டிருந்த செண்டிமெண்ட் கீதையின் உதவியால் உடைத்தெறிய முடிந்தது!

மனச்சுத்திகரிப்புக்கு கேஸ் ஸ்டடியாக உதாரணத்துடன் அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சென்ற பதிவில் சொன்னது இதை மனதில் வைத்துத்தான்!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

வடுவூர் குமார் said...

ஹரி
உங்களுக்கு நடந்தது போல் நான் பலரிடம் கேட்டுள்ளேன்.
விடுவது என்றால் "பட்" என்ரு விட்டுவிட வேண்டும்.
கொரியன் கம்பெனியில் வேலை பார்க்கும் போது அவர்கள் ஏர்கான் அலுவலகத்தில் விடும் புகையை என் உடுப்புகள் சுத்தமாக உரிஞ்சிருக்கும்.
நல்ல வேளை தப்பித்தீர்கள் அப்படியே கொஞ்சம் இடுப்பையும் பாத்துகுங்க!!??

கால்கரி சிவா said...

ஹரி, சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் சிகரட்டை கையில் பிடித்திருகிறோம். இந்த ஒரு வாக்கியம் நான் விட காரணமானது

Hariharan # 03985177737685368452 said...

வாங்க சிவா,

//சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் சிகரட்டை கையில் பிடித்திருகிறோம். இந்த ஒரு வாக்கியம் நான் விட காரணமானது //


முள்ளின் மேல் நடந்து அதைக் காலில் ஏற்றிக்கொண்டுவிட்டு முள்ளு குத்திருச்சுன்னு முள்ளைக் குற்றம்சாட்டுவது தானே நம் பழக்கம்.

நீங்கள் நான் முள்ளை ஏற்றிக்கொண்டுவிட்டேன் எனும் பக்குவத்துடன் இருந்து சிகரட்டை விட்டது மகிழ்ச்சி!

dondu(#11168674346665545885) said...

நான் கூட சிகரெட் பிடிப்பவன், 12 சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

வாங்க டோண்டு சார்,

//நான் கூட சிகரெட் பிடிப்பவன், 12 சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்கு.//

இது என்ன மாதிரி சீக்ரட் கணக்கு? விளக்கம் தேவைப்படுகிறது புரிதலுக்கு
:-)))

Geetha Sambasivam said...

Hats Off to your Self-control. Keep it Up.

Hariharan # 03985177737685368452 said...

கீதாஜி,

மந்தையிலிருந்து காணாமல்போன ஆடு திரும்பி வரும்போது வர்ற மகிழ்ச்சி மாதிரியானது இது!

எப்படி இருந்தேனோ அப்படியே திரும்ப கிருஷ்ணனது கடாட்சம் தேவைப்பட்டது!

//Hats Off to your Self-control. Keep it Up.//

நன்றிகள்!