Monday, December 11, 2006

(81) பகவத் கீதை கொலை செய்யத் தூண்டிய நூலா?

அப்பாவி அர்ஜுனனைத் தூண்டிவிட்டுக் கொலைகளைச் செய்ய கிருஷ்ணன் தூண்டினான். பகவத் கீதை என்பதே கொலை செய்யத் தூண்டுகின்ற கொலைகார நூல்! மிக மோசமான வழிகாட்டுதலைச் செய்கின்ற ஒரு கொலைநூல் பகவத்கீதை! உறவினர்களையே கொலைசெய்யத் தூண்டுகின்ற வழிகாட்டுதல்கள்தான் உண்மையான உளவியலா? என்பது கீதையின்மீது கடவுள் மறுப்பாளர்கள் வைக்கிற பிரதான குற்றச்சாட்டுகளில் முக்கியமான குற்றச்சாட்டு!

துரியோதனனின் தாழ்வுமனப்பான்மையே மஹாபாரத யுத்தத்திற்கு அடிநாதம். எல்லாமும் இருந்தும் இந்திரன் பொறாமைப்படும் பட்டாடைகள், அரண்மனை, சொன்னதைச் செய்ய காத்திருக்கும் ஆட்கள், அமைச்சர்கள், ஆட்சி செய்ய நாடு என அனைத்தும் இருந்தும் துரியோதனன் பாண்டவர்களிடம்தான் அனைத்தும் இருப்பதாக எண்ணிப் பொறாமைப்பட்டு தாழ்வுமனப்பான்மையிலேயே காலத்தைக்கழித்து கொடூரமான பாரதப்போருக்கு வித்திட்டவன்.

தாழ்வுமனப்பான்மையின் அழிக்கும் சக்தி அவ்வளவுக்கும் வீரியம் மிக்கது. தேசத்தின் தலைமை, ஆட்சியின் தலைமை பல ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புக்குச் சொத்துக்கள் வசதிகள் மத்தியில் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் என்று அனைத்தும் கிட்டியும் தாழ்வுமனப்பான்மைக் குவளையில் இருக்கும் தவளையாய் திருக்குவளையின் நலிந்த பிரிவினன் என்று பேசி கடமையைச் செவ்வனே!? ஆற்றுவதை ஆற்றாமையோடு காணக்கிடைக்கிறது இன்றைக்கும். ஆட்சி செய்ய அரியணை,சிம்மாசனமே கிடைத்தாலும் தாழ்வுமனப்பான்மை என்கிற நோய் அந்த அரியணையில் கம்பீரமாக அமர்ந்து நல்லாட்சி செய்ய விடாது! அரியணையில் கூட குத்தவைத்த நிலையில் அமர்ந்து ஆட்சி செய்வதில் என்ன பிரயோஜனம்?

துரியோதனன் அப்படியாக மனம் முழுக்க தாழ்வுமனப்பான்மையோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவன்! திறன் இருந்தும் தாழ்வுமனப்பான்மையால் காமம், மோகம்,குரோதம் எனத் தவறான வழி நடந்து தானும் அழிந்து தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் அழிந்து போக வைத்தவன்!

போரின் ஆரம்பத்தில் அர்ஜூனன் தேரை களத்தின் நடுவே சென்று எதிர் தரப்பிலிருக்கும் அனைவரையும் யார்யாரை போரிட்டு அழிக்கலாம் என்பதைப் பார்க்கும் படியாக நிறுத்தும்படி தனது சாரதியான கிருஷ்ணனைப் பணிக்கிறான்.

துரியோதனன் மிருகம் மாதிரியான மனோநிலை கொண்டவன் எனவே அவனுக்கு என்றுமே புத்தி வேலை செய்யவில்லை "இன்ஸ்டிங்ட்ஸ்" என்கிற உணர்வுகள் உந்தி வழிநடத்த நடப்பவன் எனவே துரியோதனனுக்குக் யாரோடு போரிடுகிறோம் யாரெல்லாம் போரிலே செத்து மடிவார்கள் என்கிற சிந்தனையுமில்லை எனவே துரியோதனனுக்குக் குழப்பமில்லை!

கிருஷ்ணன் பகவான் எந்தச்செயலோடும் தன்னை ஒட்டிக்கொண்டு அதனால் வருத்தப்படும் ஜீவனில்லை. தெய்வத்துக்கு எல்லாம் தெரிந்திருப்பதால் கிருஷ்ணனுக்கு எந்தக் குழப்பமுமில்லை!

அர்ஜுனன் மிருகமும் இல்லை, தெய்வமுமில்லை. இடைப்பட்ட நிலையான மனிதன். எனவே எதிரேநிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக்கண்டு குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும்? போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா? இல்லை எனவெ போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர்வேண்டாம் என்கிற "அஹிம்சை" பேசுகிறான்!

அர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம்! அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தாலும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள் இருந்ததால் போரிட "தான்" "எனது" என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநல "அஹிம்சை" பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்!

இன்றைக்கு பகுத்தறிவு நடுநிலைமை என்பது தனது கட்சிக்காரனுக்கு ஒரு நியதி அடுத்தவனுக்கு வேறு நியதி என்று பகுத்தறிவோடு நிர்ணயிக்கப்பட்ட மாதிரியானது அல்ல! செயலின் தன்மையை மட்டுமே பார்த்து நிலைப்பாடு எடுப்பது, செயலைச் செய்தவரை வைத்து எடுக்கப்படுவது நடுநிலைமை ஆகாது அது சார்புநிலை favoritism, Nepotism ஆகும்.

கிருஷ்ணன் பகுத்தறிவுக் கட்சி நடத்தவில்லை. நீதியை நிலைநாட்ட வந்ததால் நடுநிலைமையோடு இருந்தவன் பகவான் கிருஷ்ணன். துரியோதனனை மகிழ்விக்க துரியோதனது தரப்பிலிருந்த பீஷ்மர்தான் முதலில் சங்கை ஒலித்து சவாலை விடுத்தவர். பதிலுக்குச் சவாலை ஏற்று கிருஷ்ணனின் பாஞ்சன்யம் ஒலித்தது!

பகவானின் தெய்வ அனுக்கிரஹம் இருந்ததால் 7 அக்குரோனி (பட்டாலியன்) சேனைகளுடன் எண்ணிக்கையில் குறைந்த பாண்டவர்கள், 11 அக்குரோனி (பட்டாலியன்) எண்ணிக்கையில் கூடிய தாழ்வுமனப்பான்மை கொண்ட தலைமையான துரியோதனது கௌரவர்கள் போரிலே வெல்லமுடியாமல் தோற்றுப்போனார்கள்!

கிருஷ்ணன் பலமுறை நீதியை நிலைநாட்ட கௌரவர்களிடம் தூது போனபோது நியாயமாக நேர்மையாக நடுநிலைமையோடு துரியோதனன் நடந்திருந்தால் போரே நடந்திருக்காது!

ஆக கிருஷ்ணன் போர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத்தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டுமகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக்கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிகநல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை!

"எனவே பகவத்கீதையைக் கொலைநூல் என்கிற பகுத்தறிவுப்பார்வை நடுநிலமையோடு கடமையாற்றுதல் என்கின்ற உயரிய தத்துவத்தைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்!"

அன்புடன்,

ஹரிஹரன்

13 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

சாத்வீகன் said...

ஹரிஹரன் அவர்களே,


பாண்டவர்களின் சேனை 7 அக்ரோணியும், கெளரவ சேனை 11 அக்ரோணியுமாக மொத்தம் 18 அக்ரோணி படைகள் யுத்தத்தில் ஈடுபட்டன. தாங்கள் சொல்வது போல் துரியோதனுடையவை மட்டுமே 18 அக்ரோணி அல்ல.

பகவத் கீதையின் பெருமை பற்றி சொல்ல பலவும் இருக்க தாங்கள் திருக்குவளையை இடையே இழுத்திருக்க வேண்டாம். அது தாங்கள் சொல்ல வந்த கருத்தின் ஆழத்திலிருந்து விலகி நீர்த்துப்போக செய்கிறது. இது போன்ற தங்கள் கருத்துக்களை தனியாக வேண்டுமானால் பதியலாமே. மாற்று கருத்து சொல்வதாக இருந்தாலும் அங்கே வந்து சொல்ல இயலும். இங்கே இக்கருத்து பகவத் கீதைக்கு பெருமை சேர்ப்பதன்று.

பகவத் கீதை உரியவனுக்கு உரியநேரத்தில் உத்தமன் ஒருவனால் உபதேசிக்கப்பட்ட உயர்ந்த நூல் என்பதில் மாற்று கருத்து இல்லை.

நன்றிகளுடன்
சாத்வீகன்.

dondu(#4800161) said...

நீங்கள் கூறுவது சரியே. இருப்பினும் அருச்சுனன் குழப்பத்தில் கூட நியாயம் இருந்தது.

ராஜாஜி அவர்கள் தான் எழுதிய வியாசர் விருந்தில் இதை அந்த நூலின் கடைசி பகுதிகளில் இம்மாதிரி விவரிக்கிறார். இதை நான் நினைவிலிருந்து எழுதுகிறேன். வார்த்தைகள் சற்றே முன்னே பின்னே இருக்கலாம். ஆயினும் கருத்து இதுவே:

"யுத்தத்துக்கு பிறகு யுதிஷ்டிரனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சிறிது காலம் கழித்து திருதிராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி வனம் ஏகினர். அப்போதுதான் அருச்சுனன் யுத்த ஆரம்பத்தில் கண்ணனிடம் தெரிவித்த வார்த்தைகளின் உண்மை எல்லோருக்கும் உறைத்தது. அவ்வளவு யுத்தம் செய்து, உறவினர்கள் மாண்ட நிலையில் அரசை சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையில் பாண்டவர் இல்லை. ஏதோ கடனே என்றுதான் கடமைகளை நிறைவேற்றினர்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vajra said...

தன்னை நம்பாதவரை கத்திமுனையில் மதம் மாற்று இல்லை போட்டு தள்ளு என்று வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாகச் சொல்லும் நூல் தான் அமைதி மார்க்க நூல்.

மூளையை பயன் படுத்தி வேலையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே என்பது கொலை செய்யச் சொல்லும் terroist manual. இதுவே தமிழகத்தில் பகுத்தறிவு என்றும் rest of india வில் "secularism" என்றும் அறியப்படும் "உண்மை."

Hariharan # 26491540 said...

சாத்வீகன் அவர்களே,

சேனைகளின் எண்ணிக்கை பதிவில் சரிசெய்திருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்!

நாட்டு நடப்பையும் இந்துமத தத்துவங்களையும் ஒரே பதிவிலே ஆங்காங்கே சுட்டவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்!

முழுமையான ஆத்திகக் கருத்துக்கள் முழுமையற்ற கருத்துக்களுடன் தகுதி ஒப்பீடு என்று சிறிய அளவில் செய்யவேண்டியது அவசியமாகிறது.

தனித்துப் பதிவு போட்டால் கருத்து விவாதம் நிலைதடுமாறி வெற்றுக் கட்சிக்கூப்பாடாகத்தானே ஆகிறது!

ஜடாயு said...

ஹரிஹரன், நல்ல பதிவு.

அர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocricy) மற்றும் மனச்சோர்வு. இதை நன்றாகவே விளக்க முயற்சித்திருக்கிறீர்கள். "எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது?" என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான் - "குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே சமுபஸ்திதம்" !

மேலும், கீதை செய்யச் சொல்லும் யுத்தம் அகம், புறம் என்ற இரண்டு தளங்களிலும் நிகழ்வது. காந்திஜி இதை மனதில் நல்ல, தீய எண்ணங்களுக்கு இடையில் நடக்கும் போர் என்பதாக மட்டுமே பார்த்து, அதில் அகிம்சைத் தத்துவத்தைக் கண்டு தெளிந்தார். ஸ்ரீ அரவிந்தரும், விவேகானந்தரும் "மனதுக்குள் மட்டுமன்று, சமுதாயத்திலும் அதர்மத்தை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்ற செய்தியும் கீதையின் மையக் கருத்து என்பதை முன்வைத்தனர். கீதை சொல்ல வருவது, கொலை அல்ல, புரட்சி!

பகுத்தறிவு போதையில் இருப்பவனுக்கு பாதையே தெரியாதபோது கீதை எங்கே தெரியப் போகுது? முந்தியே சொன்ன மாதிரி, ப.அறிவு பார்ட்டிகளை ரொம்ப ஓவரா திட்டாம, அங்கங்க பொடி வெச்சு நீங்க பாட்டுக்கு உங்க நல்ல கருத்துக்களைச் சொல்லிக்கிட்டே இருங்க.

Hariharan # 26491540 said...

டோண்டுசார்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

//மூளையை பயன் படுத்தி வேலையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே என்பது கொலை செய்யச் சொல்லும் terroist manual. இதுவே தமிழகத்தில் பகுத்தறிவு என்றும் rest of india வில் "secularism" என்றும் அறியப்படும் "உண்மை." //

தமிழகத்தின் பகுத்தறிவு மூடர்கள் கீதையின் தளத்தினை அவர்கள் இருக்கும் சேற்றில் இழுத்துப் போட்டு கேவலப்படுத்தியிருக்கின்றார்கள்.

யோசிப்பில், விளங்கிக் கொள்வதில் "டவுன்ஸிண்ட்ரோம்" பாதிப்பு வந்த பகுத்தறிவுப் பார்ட்டிகளுக்குப் புரிகிற மாதிரி என்னால் இயன்ற வரையில் கீதையின் மெய்யான தளத்தினைச் சாமானியனின் ரேஞ்சில் விளக்கலாம் என்று இருக்கிறேன்.

வருகை தந்து ஊக்கப்படுத்தியதற்குத் நன்றி!

Hariharan # 26491540 said...

//அர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocricy) மற்றும் மனச்சோர்வு. இதை நன்றாகவே விளக்க முயற்சித்திருக்கிறீர்கள். "எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது?" என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான்//

ஜடாயு,

சென்னை பாசையில் "கஷ்மாலம்" என்கிற வசை கீதையின் பின்புலத்துடன் கூடியதாக இருக்கிறது :-)))

பகவத்கீதை அருமையான விஷயம். எல்லோரும் இளம் வயதில் அவசியம் அர்த்தத்துடன் கற்றுக்கொள்ள வேண்டிய நூல் பகவத் கீதை!

//பகுத்தறிவு போதையில் இருப்பவனுக்கு பாதையே தெரியாதபோது கீதை எங்கே தெரியப் போகுது?//

அதாலதான் பதிவுல தமிழ்மணத்துக்கு நடுவே தேவையான நறுமணமாக மணக்க பகவத் கீதையின் நல்ல கருத்துக்கள் தாங்கிய சில பதிவேற்றல்கள்!

பரபரப்பா எழுதினாப் படிப்பாங்க நடுவே நல்லதைச் சொன்னா ஓடிவிடுகிறார்கள்! எனது கடமை நல்லவைகளைச் சொல்லிச் செல்வதே!

Guruji said...

Dear Hariharan,

Whatever you said here is told by Osho. No one else has given. Even Hindus dont have this kind of clarity in Gita like him.

All the credit has to goto Osho for his discourse on Bhagavad gita.

எஸ்.கே said...

என்னிடம் கிருஷ்ணப்ரேமி அவர்களின் கீதை உபன்யாசம் டிவிடியில் உள்ளது. தேவையானால் offline-ல் தொடர்பு கொள்ளவும்.

எஸ்.கே
http://kichu.cyberbrahma.com/

Hariharan # 03985177737685368452 said...

//Whatever you said here is told by Osho. No one else has given. Even Hindus dont have this kind of clarity in Gita like him.

All the credit has to goto Osho for his discourse on Bhagavad gita. //


வாருங்கள் குருஜி,

சுவாமி சின்மயானந்தாவின் பகவத்கீதை விளக்க நூல் மிக அருமையானது.

ஓஷோவின் பார்வையும் அருமையானது.

இவர்கள் பார்வையை சுகிசிவம் போன்ற உபன்யாசகர்கள் தொகுத்துத் தருவது மிகவும் பலன் அளிக்கும்.

கிரடிட் யாருக்குத்தருவது என்றால் அது கீதையை அருளிய கண்ணனுக்குத்தான் தரவேண்டும்! கீதையை அருளி விளக்கிய முதல் ஆசிரியன் கிருஷ்ண பரமாத்மா தானே

Guruji said...

Hariharan # 03985177737685368452 said...
//Whatever you said here is told by Osho. No one else has given. Even Hindus dont have this kind of clarity in Gita like him.

All the credit has to goto Osho for his discourse on Bhagavad gita. //


வாருங்கள் குருஜி,

சுவாமி சின்மயானந்தாவின் பகவத்கீதை விளக்க நூல் மிக அருமையானது.

ஓஷோவின் பார்வையும் அருமையானது.

இவர்கள் பார்வையை சுகிசிவம் போன்ற உபன்யாசகர்கள் தொகுத்துத் தருவது மிகவும் பலன் அளிக்கும்.

கிரடிட் யாருக்குத்தருவது என்றால் அது கீதையை அருளிய கண்ணனுக்குத்தான் தரவேண்டும்! கீதையை அருளி விளக்கிய முதல் ஆசிரியன் கிருஷ்ண பரமாத்மா தானே

Dear Hariharan,

I haven't got a chance to read swami Chinamayananda's Bhagavad Gita till now. But i read Osho's. Hence, i commented like that. Do you have any idea is it available in net?.

Can you give me your email id, so that i can get some clarifications from you on Hinduism.

Thanks.