Tuesday, December 19, 2006

(87) மரணம் என்பதே பொய்யான கற்பனை

பாவத்தின் சம்பளம் மரணம். மரணம் நிச்சயமானது. தீர்ப்புநாள் என்று வரும். எனவே அதற்குள்ளாக சரி செய்துகொள்ளுங்கள் என்பது வணிக நோக்கம் கொண்ட மதங்களின் மரணம் பற்றிய பிரதான பார்வை. மனிதன் அவனது பாவச்செயல்களின் பயனாக மரணத்தினைச் சம்பளமாக ஈட்டுவதாகச் சொல்லி இட்டுச்செல்கின்றன!

கருவறையிலிருந்து உயிருள்ள உடலாக வெளிவந்ததிலிருந்து உயிர் பிரிந்து உடல் சவமாகும் வரையிலானது மனிதனின் வாழ்க்கை. சரியான, நெறியான, பிறர்க்கு உபகாரமாக வாழ்ந்த வாழ்க்கையின் சம்பளமாக மரணம் என்பது எப்படிச் சரியாகும்?

இந்துமதம் மரணம் பற்றி என்ன சொல்கிறது? மரணம் என்ற ஒன்றே கிடையாது என்கிறது இந்து மதம். மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இறைசக்தியாகிய எனர்ஜி என்பது இந்து தத்துவம். எனர்ஜி தியரி என்ன சொல்கிறது? எனர்ஜியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்குக் கிடையாது. "Energy can neither be created nor destroyed".

இந்துமதம் உடலியல் அறிவியலையும் தாண்டிச் சிந்திக்கிறது. கண் என்பது காட்சியைக் காண விழிக்கோளமும், மூளையோடு இணைக்கும் நரம்பு மண்டலமும் மட்டுமே காரணமல்ல. விழிக்கோளமும், நரம்புகளும் வெறும் கருவிகள். இறைசக்தி என்கிற எனர்ஜி ஆன்மாவாக கண்ணின் கண்ணாக இருக்கும் வரையே கண்ணினால் காணப்படும் காட்சி தெரியும்.

காதுமடலும், செவிப்பறையும் , இதை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மட்டுமே கேட்கும் திறனுக்கு முழுமையான காரணமல்ல. காதின் காதாக இருந்து செயல்படும் இறைசக்தி இருக்கும் வரையே கேட்பது என்பது சாத்தியமாகிறது.

நாக்கும், நரம்பு மண்டலமும் மூளையும் மட்டுமே பேச்சுத்திறனுக்குக் காரணம் இல்லை. நாக்கு அசைவதற்கும், பேச்சின் பேச்சாக இருக்கும் இறைசக்தி இருக்கும் வரையே பேச்சு என்பது சாத்தியமாகிறது.

இப்படி உடலின் எல்லா பாகங்களும் அதன் செயல்பாட்டைச் செவ்வனே செய்ய இறைசக்தி உடலினுள் இருந்து அதனை பிரதிபலிப்பது மிக முக்கிய காரணம்.

உயிர்களின் செயல்பாட்டுக்கு இறைசக்தி காரணம் இல்லை எனில் டாக்டர்களால் இறந்துவிட்டார் கிளினிக்கலி டெட் என்று அறிவிக்கப்பட்ட அந்த நபரினால் சற்றுமுன்பு வரை செயல்பட்ட அவயங்கள் எவையும் ஏன் அதன் செயல்களைச் செய்ய தற்போது இயலாமல் போனது?

அருமையான காட்சியில் வசமிழந்து லயித்திருக்கும் போதும், மெய்மறக்கவைக்கும் இசையில் மூழ்கியிருக்கும் போதும் உடல் செயல்பாட்டுக்கான ஆக்ஸிஜன் வரும் மூச்சு மனிதனின் தனிக்கட்டுப்பாட்டில் இல்லாது தானியங்குவதும் இறைசக்தியாலேயே!

எந்த உடலினால் இத்தகைய இறைசக்தியான ஆன்மாவை முற்றிலுமாகப் பிரதிபலிக்க இயலாமல் போகிறதோ அது சவம் எனப்படுகிறது.

ஆன்மா இனி அந்த உடலினின்று செயல்பட முடியாத நிலைக்கு உடல் பழுதடையும் போது பிரிந்து செல்லும் ஆன்மா மீண்டும் வேறு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து மீண்டும் வாழ்க்கைச் சுழற்சி நடக்கிறது.

எண்பது வயது முதியவர் இறந்ததற்கு அழுது அரற்றும் நபருக்கு வெகு சாதாரணமான உண்மை புலப்பட்டுத் தெரிந்தாலும் புரியமாட்டேன் என்கிறது!

குப்புறக் கவிழ்ந்து கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுடன் புகைப்படமாக இருக்கும் xxxxx இப்போது இல்லை? இனி அந்தத் தோற்றம் மீண்டும் வரச் சந்தர்ப்பம் கிடையவே கிடையாது! சில பல ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த குழந்தை Mr.xxxxx எனும் தோற்றம் இன்றைக்கு என்ன ஆனது?

நாடா டவுசர் சட்டையுடன் நாலங்கிளாஸ் படிக்கும் போது எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் Mr.xxxxx எனும் தோற்றம் என்ன ஆனது?

கல்லூரிப்படிப்புக் காலத்தில் ஒரு நல்ல மதியத்தில் போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலை 45ல் நட்ட நடு ரோட்டில் அமர்ந்தபடி அளும்பு செய்த வாலிபன் Mr.xxxxx எனும் தோற்றம் என்ன ஆனது?

கோடானு கோடி செல்கள் புதியதாய்த் தோன்றி இறந்து மீண்டும் தோன்றி எனக் குழந்தையாக தோற்றத்தில் இருந்ததில் இருந்து இன்று வரையிலான தோற்றம் வரை பல்வேறு தோற்றத்தினைப் பிரதிபலித்தபடி தனக்குள் இருக்கும் இறைசக்தியான ஆன்மா அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாவத்தின் சம்பளம் மரணம் எனில். மரணமே முடிவுநாளாகக் கணக்கில் எடுத்தால் கருவறையில் இருந்து பிறந்த கணத்திலிருந்து உடலில் செல்கள் சாக ஆரம்பிக்கின்றன். உடலில் செல்களின் செத்து செத்து விளையாடும் விளையாட்டு பிறந்த உடனே துவங்கிவிடுகிறதே!
தீர்ப்பு நாள் என்பதை எதை வைத்து எதன் மீது நிர்ணயிப்பது? செத்துப்போன உடலைவைத்தா?

இந்துமதத்தில் மரணம் என்பது forms and manifestations-க்கு மட்டுமே நிகழக்கூடியது. அதைச் செயல்பட உடலினுள் இருக்கும் இறை சக்திக்கு அந்த எனர்ஜிக்கு அழிவே கிடையாது. ஆன்மாவாகிய எனர்ஜி மீண்டும் வேறு வடிவில் மீண்டும் வேறொரு தோற்றத்தில் வெளிப்படும். சக்தியை அழிக்க மெட்டீரியல் உலக ஞானத்திலேயே வழியில்லை. மெய்ஞானத்தில் இது மீண்டும் மறுபிறப்பாக வெளிப்படுகிறது.

ஆன்மாவாகிய இறைசக்தியை வெளிப்படுத்த ஒரு வடிவம் வேண்டும். இந்த வடிவம் அவரவர் பாவ புண்ணியங்களுக்கேத்தமாதிரி புல்லாய், புழுவாய், பறவையாய், பாம்பாய், பல்மிருகமாகி, மனிதராய்..தேவராய் என்று வாழ்க்கைச் சுழற்சியினுள் சுழல்கிறது.

மரணம் என்பது xxxxx என்று பெயரிடப்பட்ட உடலுக்கு அதன் ப்ராரப்தத்தின்/விதிப் படி நடக்கும். உடலுக்குத்தான் xxxxx என்று பெயர். உடலைச் செயல்பட இயக்க சூட்சுமமாகிய ஆன்மா எனும் இறைசக்திக்கு xxxxx என்று பெயரில்லை!

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு... பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு..
அண்டம் என்பது நெருப்பு, நீர், நிலம், ஆகாயம்,காற்று என்கிர பஞ்சபூதங்களின் தொகுப்பு.

முதலில் மனித உடம்பு என்பது என்ன? இது எவைகளால் செய்யப்பட்டது?

மூலாக்னி, ஜடாராக்னி எனும் அக்கினி சக்தி மனித உடம்பை 98.4 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் வைக்கிறது.

இரத்தம் இதர திரவங்களாக உடலில் ஐந்து லிட்டர் அளவுக்கு நீர் இருக்கிறது.

மண்ணோடு மக்கும் மண்சக்தியாக மண்ணில் விளைந்ததை உண்டு உருவான சதை,எலும்புகள் நிலமாக இருக்கின்றன்.

கபாலத்திற்கும் மூளைக்கும் இடைப்பட்ட இடைவெளி, இதயத்தினூடே இருக்கும் சிதாகாச இடைவெளி, காது, நாசித்துவாரங்களில் இருக்கும் வெளியாக ஆகாசம் இருக்கிறது.

தொடர்ந்து நுரையீரலுக்குள் சென்று வரும் காற்று வாயுசக்தி இருக்கிறது.

ஆக மனித உடல் அதனால் ஆன்மாவை, இறைசக்தியைப் பிரதிபலிக்க இயலாத நிலையில் ஆன்மா விடுபட்டு இன்னொரு தகுதியான வேறு உடம்பினைத் தேர்ந்தெடுத்துத் தன்னைப் பிரதிபலிக்கிறது.

ஆன்மா நீங்கிய உடல் என்பது மீண்டும் அது உருவாகக் காரணமான அதே பஞ்சபூதங்களான நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம் மற்றும் காற்றோடு சங்கமித்துவிடுகிறது!

ஆக ஒருவித வடிவங்களாக வெளிப்படுத்தப்பட்டவை அவ்வடிவங்களுக்கான ஆயுள் முடிந்ததும் வேறு வடிவங்களாக உருமாற்றமடைகின்றதே அன்றி முற்றிலுமாக அழிவதில்லை!

Forms and Manifestations மாறுகின்றதே அன்றி முற்றிலும் அழிவதில்லை.

ஆன்மா என்பது இறைஎனர்ஜி "Energy can neither be created nor destroyed".

இந்துமத சித்தாந்தத்தின்படி மரணம் என்பதே பொய்யான கற்பனை! அசாத்தியமானது!

பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்திற்குப்பின் தீர்ப்புநாள் என்பவை எவ்விதமான அறிவியல் பார்வை இல்லாத வெறுமையான சித்தாந்தங்கள்.

இவை மரணத்தின் மீதான பொருள்சார் உலகில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கும் சுயநல் மனிதர்களின் குழப்பத்தினால் எழும் அச்சத்தினை அடித்தளமாக்கி உருவான சுயநல சித்தாந்தங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Krishna (#24094743) said...

ஹரி: ஹிந்துமத தத்துவங்கள் படிக்கப் படிக்க வியப்பூட்டுபவை. இவற்றை எளிய தமிழில் சகலரும் அறியும் வண்ணம், தாங்கள் விளக்கி வருவது சிறந்த பணி. தொடரட்டும் இந்த பணி. 'சதை'ப்பற்றாளர்கள் ஒரிருவராவது இதன் மூலம் உண்மையிலேயே பகுத்தறியும் தகுதி பெறுவர் என நம்புகிறேன். இத்தனையும் வேத காலத்திலேயே அறிந்து, ஆராய்ந்து எழுதி வைத்த ஜனங்கள், இன்றைய குஞ்சுகளின் விளக்கல் படி, 'வந்தேறிகள்', 'பன்னாடைகள்'. நாடு நலம் பெற இப் பதிவிலுள்ள கருத்துக்கள் பரவி பலம் பெற வேண்டும்.

ரியோ said...

பாவத்தின் சம்பளம் மரணம் என்பதன் அர்த்தம், பாவம் செய்ததால்தான் மனிதன் இறக்கிறான், அல்லது மனிதனுக்கு மரணம் கிடையாது என்பதுதான். தன்னைத்தானே புதுப்புத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள செல் உள்ள மனிதன் மரிப்பது ஏன்?

Hariharan # 03985177737685368452 said...

//தன்னைத்தானே புதுப்புத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள செல் உள்ள மனிதன் மரிப்பது ஏன்? //



மனிதன் என்பது வெறும் உடல் மட்டுமே அல்லவே. உடலும் உடலுள் உறையும் இறைசக்தியும் இணைந்ததே மனிதன்.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலை மனித உடலில் உள்ள செல்லுக்குத் தருகின்ற ஆற்றல் இறைசக்தி. இது இல்லாமல் செல் என்ன எந்த உறுப்பும் தனியாக எதுவுமே செய்ய முடியாது.

மரணம் என்பதனால் மனித உடல் என்கிற Matter மட்டுமே அழிகிறது.

Hariharan # 03985177737685368452 said...

கிருஷ்ணா,

தங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி!

இந்தியப் பாரம்பரிய இந்துமத வாழ்வியல் நெறி என்பதன் அருமை, அறிவியல் தன்மை என்பது பெரிய பொக்கிஷமானது.

உடலளவில் வாழ்கின்ற வாழ்க்கை என்பது மட்டுமே பரி பூரணமானது என்கிற நபர்கள் உடல் செயல்படக் காரணமான இறைசக்தியின் நீக்கமற நிறைந்திருக்கும் உண்மையை உணர்ந்து தெய்வநம்பிக்கையோடு படித்தால் மட்டுமே இந்த உயரிய தத்துவங்கள் என்ன சொல்கிறது என்பதை அறிய முடியும்.

அறிந்தது, தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டால் இந்துமத வாழ்வியல் நெறியின் பன்முக, அறிவியல்தன்மை கூடுதலாகச் சிலர் பார்வையில் பட வைக்கும் ஒரு சிறு முயற்சி. சாதாரணமான நடை தத்துவம் என்றாலே ஓட்டம் பிடிக்காமல் இருக்க உதவும்! :-))