Tuesday, December 19, 2006

(86) இளையராஜாவின் பயணங்கள் முடிவதில்லை

மூளை எனும் சாஃப்டான மெமரி ஹார்டுவேரில் பதியப்பட்ட நினைவுகளைத் திறக்க வாசனை, ஒலி இவை இரண்டும் மிக முக்கியமான திறவு கோலாக இருக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து நேற்றைக்குக் கேட்ட 1981-82ல் வந்த பயணங்கள் முடிவதில்லையின் சாலையோரம் சோலை ஒன்று... பாடல் ... நான் ஏழாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின் போது ஊட்டியில் இருந்த உறவினர் வீட்டுக்குச் செல்ல கோவை காந்திபுரம்பேருந்து நிலையத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடையிலிருந்தோ, உதகமண்டலம் நோக்கிச் செல்லும் சோரம் போன சேரன் பேருந்தில் ஏறக் காத்திருக்கையில் அப்போதைய சூப்பர் ஹிட்டான பயணங்கள் முடிவதில்லையின் இந்தப் பாடல் ஒலிக்க வந்த மேட்டுப்பாளையம் செல்லும் இளையராஜவின் இசையை இசைத்தபடி அசைந்து நகர்ந்த அழகுரதமான ஒரு தனியார் பேருந்தில் ஏறத்துடித்து தந்தையினால் கடிந்து கொள்ளப்பட்டது நினவுக்கு வந்தது.

தோகை இளமயில் ஆடிவருகுது... பாடல் முணுமுணுத்தபடியே ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸின் குடியிருப்புகளின் உள்ளிடை பரந்த பசுமைப் புல்வெளிகள், உயர்ந்த ஊசியிலை மரங்கள், சில்லென்ற குளிரோடு காற்றில் வரும் யூகலிப்டஸ் இலை மணம், நெடிதுயர்ந்த யூகலிப்டஸ் (நீலகிரித் தைல)மரத்தினைப் பார்த்தவாறே நீலகிரித்தைலத் தயாரிப்பாகப் பாடத்தில் படித்ததில், இலை பறிக்க யூகலிப்டஸ் மரமேறுவோர் மர உயரம் காரணமாக இறங்கி ஏறாமல் அப்படியே மரத்துக்கு மரம் தாவுவார்கள் என்கிற தகவல் நினவில் வர கிலியோடு யூகலிப்டஸ் உயரம் பார்த்தபடியே, தந்தியடிக்கும் பற்கள்,பேசும்போது கிளம்பும் பனிப்புகை, குளிரில் நடுங்கும் உடல், அலை அலையாய் மலைகள், மிக மிக அமைதியான சாலை, டிஜிடல் எஃபக்டில் பறவைகளின் ஒலி, பல கிலோமீட்டர்கள் தள்ளி வரும் சேரனின் ஹாரன் ஒலி, மழையில் ஈரமான மிகவும் தடிமனான அடிப்பாகத்துடம் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தாலும் உச்சி தெரியாத நெடிதுயர்ந்த காட்டுமரங்கள், படிக்கட்டு விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட செவ்வண்ணக் குவியல்களாய் பிடுங்கிக் குவிக்கப்பட்ட காரட்டுகள், முட்டைக்கோசு, உருளைக்கிழங்குகள் எனப் பார்த்தபடியே, குளிர்சீதோஷ்ணத்தின் தொந்தரவில், இயற்கை உபாதையினின்று இயற்கையை மாசுபண்ணியபடி விடுதலை செய்துகொள்ளும் போது , அது எழுப்பும் பனிப்புகை கண்டு கூடுதல் குதூகல ஆச்சர்யத்துடன் குதித்து, நடந்து, இறக்கங்களில் ஓடியபடியே அருகாமை தலக்குந்தாவுக்கு சிறுவனாய்ச் சென்ற மாலை நடை நினைவில் இன்னும் பசுமையாய் இருக்கிறது.

கல்லூரிப் படிப்பின்போது "ராக தீபம் ஏற்றும் நல்ல நேரம் இது... என்கிற பாடலை கேட்கச் சகிக்காத குரலில் அறைத்தோழன் ஜெயங்கொண்டத்து சதக்கத்துல்லா பாட நாங்கள் எல்லோரும் சிதறி ஓட... பாட்டின் முன்பாக படத்தில் புயல் மழை காரணமாக தெருமுனைக் கச்சேரி கேட்க உட்கார்ந்திருப்போர் எழுந்து போகும் போது அய்யா போகாதீங்க அம்மா போகாதீங்க.. நான் நல்லாப் பாடுவேன் என்கிற டயலாக்கை டாபிகலாக நண்பன் சதக்கத்துல்லா சொல்லியபடியே முழுவதுமாகப் பாடி சாதகம் செய்து தீர்த்தது நினைவுக்கு வருகிறது!

1982ல் வெளியானாலும் நான் பார்க்காத பயணங்கள் முடிவதில்லை படத்தினை படிப்பெல்லாம் முடித்து வேலைக்கு வந்த பின்பாக பேச்சிலர் எனும் துர்பாக்கிய நிலையின் காரணமாக எனது அப்போதைய சம்பளப்படி சில ஆண்டுகள் சம்பளத்தை வாடகை முன்பணமாகக் கேட்டு கிர்ர்ர்ரடிக்கவைத்த சென்னையின் வீட்டு ஓனர்களால் வாழ்வின் விளிம்புக்குத் துரத்தப்பட்ட நிலையில் மேற்குமாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவில் ஒரு அரிசிமூட்டை வைக்கிற இடத்தில் ஒண்டிக் குடித்தன வளாகத்தில் ஒண்டிக்கொள்ள சில மாத வாடகை முன்பணம் தந்து தங்கியிருந்த காலத்தில் அப்போது அதிக "அமர்க்களம்" இல்லாத மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கில் 1991ல் இரண்டாவது ஆட்டம் பார்த்து கிட்டத்தட்ட மோகன் மாதிரியே இருமியபடியே சாலையோரம் சோலை பாடியபடி, நள்ளிரவில் மனிதனை விட தெருவில் அதிகமாக நடமாடும் தெருநாய்களுக்கு உள்ளே பயந்தாலும் வெளியே வீரனாக வெற்றிநடை போட்டபடி "வைகறையில் கூவக்கரையில்" பாடியபடியே ஒண்டிக்குடித்தன ஓட்டு வீட்டு ஜாகையில் அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி குனிந்து நுழைந்து சுகமாய் சுருண்டு தூங்கிய நினைவு நீள்சுருளாய் விரிந்து நீள்கிறது!

சென்னையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தியாகராய நகரின் உஸ்மான் சாலையில் ஒரு ம்யூஸிக் ரெக்கார்டிங் சென்டரில் தரமான சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிக்கும் இளையராஜாவின் பாடல் ஒலித்தால் நின்று சில நிமிடம் இருந்து கேட்டுவிட்டுச் செல்வதும் வழக்கமாகி இருந்தது. மகுடிக்கு பாம்பு மயங்குவது மாதிரி மயக்கும் தன்மையுடையது இளையராஜாவின் இசை!

இசை என்றால் எனக்கு இன்றைக்கும் முதலில் இளையராஜா மட்டுமே நினைவுக்கு வருவார்.
இளையராஜாவின் ஊரான பண்ணைப்புரமும் நான் பிறந்து வளர்ந்த போடிநாயக்கனூரும் 20கி.மீ தூரம் அருகாமை என்கிற மண்வாசனையுடன் ஆரம்பித்துப் பயணித்து இன்றும் தொடர்கின்ற உணர்வு உறவு இது.

தாய் எனக்குப் பாடிய தாலாட்டு நினைவில் இல்லை. எனக்கு நினவு தெரிந்த நாள் முதல் மிகப்பிடித்தமான இசை இளையராஜாவின் இசை. இளையராஜாவின் பாடல்களை வெளிநாடு என்று எங்கு சென்றாலும் கங்காரு மாதிரி வாக்மேனோடு எடுத்துச்சென்று இளையராஜா காதில் தாலாட்ட நிறைய நிம்மதியாக உறங்கி இருக்கிறேன்.

எனது இருபது வயதுகளில் ஹார்மோன்களின் ஹார்மோனியத்தினால் விளைந்த "க்ரஷ்" காரணமாக என்னைக் கவர்ந்த பெண்கள் இளையராஜாவின் இசையைப் பின்ணணியாக்கியதில் அவர்கள் தேவதைகளாக சிறகு முளைத்துப் பறந்து பறந்தே போனார்கள்:-)))
இளையராஜா இசையாக என்னுடனேயே இருந்து என்னை இன்னும் மகிழ்விக்கிறார்!

1980கள் முழுவதும் இளையராஜா இசை அரசாண்ட காலத்தின் மிக அருமையான காலகட்டம்.
நான் பள்ளிநாட்களிலேயே எனக்கு அனுமதிக்கப்பட்ட மாதம் ஒரு சினிமா கோட்டாவின் படி ஒரு சினிமாப்படம் பார்க்கும் முன்பாக போஸ்டர் ஆராய்ச்சியில் பொதுவாக ஒளிப்பதிவு, டைரக்ஷன், இசை, எடிட்டிங், என்று டெக்னீஷியன்கள் பார்த்துத்தான் போவேன். இளையராஜாவுக்காக மட்டுமே சில பாடாவதியான படங்கள் உ.ம் தாயம் ஒண்ணு, சொல்லத் துடிக்குது மனசு போன்ற படுதிராவையான இவைகளைக்கூட பார்த்து தொலைத்திருக்கிறேன்.

ஆர் சுந்தர்ராஜன், கோவைத்தம்பி-ரெங்கராஜ்-மோகன் போன்ற கூட்டணியில் வந்த படங்களில் இளையராஜாவின் மயக்கும் இசைக்கு இன்றும் பெரிய ரசிகன். இளையராஜா இசையமைத்த படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்ணணி இசை என்பது அடுத்த நுண்ணியமான விஷயம்.


1994 வீரா படத்துக்கப்புறம் டிரண்டு மாறி ரஹ்மான், தேவா என மக்கள் அணி மாறிப்போக இளையராஜா "பூமணி"யில் எம்பாட்டு எம்பாட்டு...உனக்கோ பொழுது போகணும் எனக்கோ பொழப்பு நடக்கணும் பாட்டுப் போடவைத்தது. இளையராஜா இஸ் அ பாஸ்ட் ஹிஸ்டரி... டீஸண்டா ஆட்டத்திலிருந்து கழண்டுக்குறது நல்லது எனும் பேச்சும் இளையராஜா இன்னிங்க்ஸ் முடிஞ்சுபோச்சு என்று கொக்கரிப்பைக் கேட்கும் போதெல்லாம் கோபம் வரும். அப்படிச் சட்டென்று முடிகிற இசைத் தொட்டி அல்ல இளையராஜா... என்றும் ஊற்றெடுக்கும் இசை ஊற்று என்று எனக்குக் கத்தத் தோணும்.

இளையராஜாவே பாடிய தாயைப் பற்றிய பாடல்கள், கலாய்க்கிற ஜாலியான பாடல்கள், நேர்த்தியான ரெக்கார்டிங் ஆர்க்கஸ்ட்ரைசேஷனுக்காகவும், இசையில் விளையாடும் வயலின், புல்லாங்குழல், பாடலிடையே நேர்த்தியான விநாடி மௌனம் என்று இளையராஜாவின் இசையை நிறைய அனுபவித்து ரசித்து வளர்ந்திருக்கிறேன்.

டவுசர் போட்ட சிறுவனாயிருந்த போதிலிருந்து இன்று வரை கால்நூற்றாண்டு காலத்திற்கு வெகு அந்நியோன்னியமாய் என்னுடனேயே இருப்பது இளையராஜாவின் இசை!

பாரதியின் வரிகளை இளையராஜாவினால் மட்டுமே பாரதி படத்தில் அப்படி ஒரு நேர்த்தியாகக் கையாள முடியும். இசை சத்தமாகி வரிகளை நசுக்காமல் இளையராஜாவால் மட்டுமே இன்றைய சமகாலத்தில் முடிகிறது.


இருபத்தைந்தாண்டுகள் கழிந்தும், இன்றும் நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் போது இளையராஜாவின் இசை ரெக்கார்டிங் துல்லியமாக நேர்த்தியாக செய்யப்பட்டதை உணரமுடிகிறது.

சேது, பிதாமகன் என்று பாடல்களுடன் தன் பின்ணணி இசை கம்பீரமாகத் தூக்கிநிறுத்தி இளையராஜாவின் இன்னிங்ஸ் இன்னும் வெற்றியோடு தொடர்கிறது!

இளையராஜாவின் இசைப் பயணங்கள் முடிவதில்லை!

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

வடுவூர் குமார் said...

ஹார்மோன் - கிரஷ்- அங்கேயும் அப்படித்தானா?
பாட வந்த காலத்தில் மறைமுகமாக "எருமை மாடு மாதிரியான குரல்" என்றார்கள்.
போகப்போக
"ஜனனி ஜனனி" பாடலை கேட்டுப்பார்த்தால் முதலில் சொன்னது எவ்வளவு அபத்தம் என்று தெரிந்திருக்கும்.

Hariharan # 03985177737685368452 said...

குமார்,


//ஹார்மோன் - கிரஷ்- அங்கேயும் அப்படித்தானா?//

ஹார்மோன் -கிரஷ் பண்ணாத ஆளே பெரும்பாலும் இருக்க முடியாதுதானே!
என்ன சுத்தமா நசுங்கிப் போயிடாம கவனமா இருந்தா நல்லது:-))

பூந்தோட்டம் படத்தில் வரும் "வானத்து தாரகையோ" கேட்டு இருக்கின்றீர்களா?

இளையராஜாவின் இசை இசைக்கடவுளின் கொடை.

இளையராஜாவின் குரல் இனிமை முற்றிலுமான தன் முயற்சி!