(84) மெய்யான பகுத்தறிவு விடுதலை செய்யும் உண்மை!
ஒரு உண்மையை யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி யோசித்தால் முழுமையாய் எதையும் அனுபவிக்க முடியாதோ என்கிற கவலை வந்துவிடுவதால் எட்டிக்காய் மாதிரியே படுகிறது. மெய்யான பகுத்தறிவினைக் கொண்டு உண்மைகளை உணர்ந்து விடுதலை ஆக விரும்புவதில்லை நாம்.
மிருகங்கள் வாழ்கின்ற மோசமான காடு, இந்தக் கொடிய காட்டை அடுத்து ஒரு பாலம், பாலத்தினைத் தாண்டினால் மகிழ்ச்சி நிரம்பிய பகுதி, மிருகங்களின் அச்சுறுத்தல்கள் இல்லாத மிக நல்ல இடம்.
மனிதனின் நிலை இந்த இடைப்பட்ட பாலம் போன்றதே! பாலத்திலேயே வீடுகட்டிக் குடியிருந்துவிடவும் முடியாது. கீழிறங்கிக் காட்டுக்குள் போய் மிருகம் போல் முழுமையாக வாழவும் முடியாது. பாலத்திலிருந்து முன்னேறி நிரந்தர மகிழ்ச்சி நிரம்பிய இறையுலகினை நேர்த்தியான செயல்களைச் செய்வதன் மூலம், நேர்த்தியான செயல்களைச் செய்யவைக்கிற சக்தியை இறைவனை போற்றியபடியே மனதில் நினைத்தபடியே முன்னேற வேண்டும்!
சாதாரண வாழ்க்கையில் உணர்வுக் கொந்தளிப்பில் மனிதனுள் இருக்கும் மிருகம் கோபமான நேரத்தில் வெளிப்பட்டுக் கேவலமான செயல்கள், கொலை வரைக்கும் இட்டுச்சென்று விடுகிறது!
மிருகமாய் மாறிவிட வெகு எளிதில் முடியும். பெரிய முயற்சி ஏதும் தேவையில்லை!
வீட்டிலே ஒரு சிறு பொருளை உடைத்ததற்காக குழந்தையின் மீது சிலநேரம் மிருகத்தனத்தைப் பெற்றோர்கள் அடி பின்னியெடுப்பதன் மூலம் வெளிப்படுத்திவிடுகிறார்கள்.
ஆன்மீகமாக இருப்பதாக வேடம் போடுவோரும் மிருகமாக எளிதில் மாறிவிட வாய்ப்பிருக்கிறது! கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மனிதனாக இருந்துகொண்டு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை குடித்துவிட்டு குப்பையோடு குப்பையாக குப்பைத்தொட்டியினருகே வீழ்ந்து கிடக்கும் மிருக மனிதர்களையும் காணலாம்.
மனிதனுக்குள் இருக்கும் மிருக குணாதிசயங்களின் இழுவைசக்தி எப்போதும் மிக அதிகம் காணப்படும். இந்த இழுவைக்கு இரையாவது மிக எளிது! ஒத்த எண்ணங்கள் உடையோருடன் குழுமம் அமைத்திருக்கிறோம் என்பதை விட எந்தமாதிரியான எண்ணங்கள் உடையோருடன் குழுமமாக இருக்கின்றீர்கள் என்பது முக்கியம்!
குழுமமாகக் கூடி நமீதாவுக்கு கட் அவுட் வைப்பதும், விஜய் தலை அஜீத் சீயான் விக்ரமின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய ஒத்த எண்ணங்களுடன் இருப்பது எந்த வகையில் மேம்படுத்தும்? லாரியில் குவார்ட்டருக்காவும், பிரியாணி பொட்டலத்துக்காகவும், பேட்டாக் காசுக்காகவும், இன்னின்ன தலைவன் வாழ்க வாழ்க... இன்னின்ன தலைவர்கள் ஒழிக..ஒழிக என்று மந்தையாய்க் கூடி அரிய ஆற்றலைச் செலவிடுவதுதான் அவர்தம் மனிதப்பிறப்பின் நோக்கமா?
நாலு பெண்களைப் பெறக் காரணாமாயிருந்த போது ஒருவனுக்கு வராத சன்னியாச யோகம் படிப்பு, கல்யாணம் எனும் கடமையைச் செய்ய மாட்டாமல் எஸ்கேப்பிஸ ரூட்டாக கபட சன்னியாசியாக மாறுவது இறை தேடுதல் இல்லை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
இறைவனை நினைத்தவாறே தினசரி கர்மாக்களான கடமைகளைச் செய்தவாறே செயல்கள் மீது மட்டுமே தீவிரத்தைச் செலுத்தி செயலின் பயன் மீது பற்று வைக்காதபடி மனத்தினைப் பக்குவப்படுத்துவதே மனிதன் தனது பாலம் மாதிரியான இடைப்பட்ட நிலையினின்று மேம்பட உதவும்.
ஈகோ எனும் ஆணவம் தலை தூக்காமல் மனதைப் பண்படுத்த இறை தேடுதல் தேவை! எவருமே உதவவில்லை என வருந்தாமல் எப்போதும் இறைவன் துணை இருக்கிறான் என்று எப்போதும் தனக்கு அளப்பரிய சக்தி துணைபுரிகிறது என்று கூடுதல் உற்சாகத்துடன் ஆற்றலோடு ஆக்கமாக உழைத்து மேலே எழும்பிவர முறையாக வாழ இறைவன் மீதான பற்றுதல் உதவுகிறது!
மிருகங்களுக்கு இம்மாதிரியான குழப்பங்கள் இல்லை. மிருக உலகில் உடல் வலிமைதான் பிரதானம். Might is always right என்கிற ஒரே கோட்பாடுதான்! இறைவனை நம்புகிற போது
மிகவும் பாஸிடிவாக சிந்திக்க முடிகிறது. அதிகார மமதை, அகங்காரத்தினை அவற்றின் எதிர்மறை விளைவுகளை இறைபக்தியால் உணர்ந்து தன்னை சுயமாக மெல்லத் திருந்த முடிகிறது!
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். காலம் என்பது கடவுளைத்தவிர வேறேதும் இல்லை! முழுமுதல் ஆரம்பம் கடவுளே. அதனாலேயே எத்தனை நவீன அறிவியல் கருவி கொண்டு அளக்கப்பட்ட குறைவான கால அளவீடெனினும் அது 0.00001 Micro Secondதான். இதற்கும் முந்தைய First என்பது கடவுளே!
சிந்தனை மேம்பட்டே ஆகவேண்டும். சிந்திக்காமல் காட்டுமிராண்டியாக, மிருகமாகவேதான் வாழ்வேன் என்பதும் மிருக காட்டுமிராண்டிச் சிந்தனையில் இருந்து வெளிவந்து மனிதனாகச் சிந்தித்து தன்னுள் இருக்கும் இறைசக்தி,எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறைசக்தியை உணர்ந்து, கண்டு, கலப்பது என்பதே மனிதனாகப் பிறந்தவன் செய்ய வேண்டியது!
பொருளை எப்படியாயினும் சம்பாதித்து / கொள்ளையடித்து ஸ்விஸ் பேங்கில் சீக்ரெட் அக்கவுண்ட் வைக்கும்படி இந்தியப் பாரம்பரிய வேத நெறி மெய்ஞானம் கூறுவதில்லை. செல்வமாகிய மகாலட்சுமியை தேக்கிவைக்கக் கூடாது என்பது வழக்கில் இருப்பது. தேவைப்படுவோர்க்கு செல்வம் தானமாகத் தரப்படவேண்டும். க்ராஸ் வெண்டிலேஷன் இருந்தால் காற்று சரளமாக வருவது மாதிரியான அருமையான அறிவியல் தத்துவம்!
எல்லாம் ஒழுங்காக நடக்கிற வரையில் மனிதனின் அறிவு பெரிது எனும் கர்வம் வருகிறது. சில டிகிரி வெய்யில் ஏறினால் ஃபாரஸ்ட் பயர் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் , பிரான்ஸ் என்று பஞ்சபூத அக்கினி கொஞ்சம் கோபப்பட்டால் மனித அறிவியல் ஓட்டமாக இயற்கையைக் கெடுத்த க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் காரணம் என்கிறது!
ஒரு நிமிடதிற்கும் குறைவாக பஞ்சபூத நிலத்தட்டு சற்று உராய்ந்ததில் இன்னொரு பஞ்சபூதமான கடல் நீர் பூதாகரமான சுனாமி அலைகளை உருவாக்கிவிடுகிறது. கடல் நீர் ஒரு டிகிரி சூடேறியதால் ஆவியாதல் கூடுதலாகி இன்னொரு பஞ்சபூதமான ஆகாயத்திற்கு மேலேறி அங்கு தங்க இடமில்லாததால் கீழே இறங்கி பம்பாயில் ஒரே நாளில் 980 மி.மீ மழை பெய்து வெள்ளம், அமெரிக்காவை இன்னொரு பஞ்கபூதமான காற்றினால் ஐவன் தி டெரிபிள், கேத்தரீன் ஹரிக்கேன்கள் சின்னா பின்னப்படுத்திகின்றன!
இறைசக்தியான இறைவனது சில செயல்கள் எத்தனை அறிவியலில் முன்னேறியிருந்தாலும் நொடியில் மனிதனை மண்டியிட வைத்துவிடுகிறது! ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றினை இயற்கை ஒரே நொடியில் மாற்றிவிடுகிறது!
இந்தியப் பாரம்பரியம் இதனாலேயே இயற்கையை இறைவடிவங்களாக்கி அவற்றை ஆராதிக்க, அனுசரிக்க, கட்டுப்பாட்டுடன் இருக்க வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது! இன்றைக்கு மனிதன் அறிவியலாளன் என்றாகியதில் சென்னையின் பஞ்சபூதக்காற்றின்மீது கரி பூசியிருக்கிறான்! அஞ்சு நிமிஷம் வெளியே போய் வந்தால் மூஞ்சியெல்லாம் கரிப்பூச்சு! ஆஸ்துமா சென்னை வாழ்க்கை தரும் பரிசு!
சுற்றுச்சூழல் மாசு என்பது மனிதனின் கடுமையான சுயநலம்! இது தானாக வரவில்லை சென்னைக்கு! சுயநலமாக அவனுக்கு இருக்கிறது எனக்கும் வேண்டும் என்கிற ஈகோ, நடந்து போனால் என்னோட கௌரவம் என்னாகிறது, சைக்கிளில் காட்டான் மாதிரி 2கிலோ மீட்டர் மிதிக்க என்ன தலைஎழுத்தா எனக்கு? இதுமாதிரியான உடல் சுகம் என்கிற சுயநல எண்ணம் நிறைந்த எண்ணங்கள் இவைகளே!
இதிலே என்னை மாதிரி 2 கிமீ தூரத்தினை நடந்தால் என்ன என்கிற நபர்கள் பாவி, கஞ்சன், பிசினாரி என்று தூற்றப்படுவது வெகு இயற்கை. குப்பை கட்டி எறியும் டிராஷ் பேக் பயன்பாட்டில் பிளாஸ்டிக் கேட்டால் சிக்கனமாக இருக்க அறிவுறுத்தும்போது கஞ்சன் பிசினாரி என்பது தாண்டி "அற்பன்" என்று தூற்றப்படும் நிலையை எய்தவேண்டிய அவலம். :-)))
மனிதன் பாலமான நிலையினைத் தாண்டியே ஆக வேண்டும். தன்னால் கேடு கூடுதல் ஆகாமல் பொறுப்போடு இருந்தே தீரவேண்டும். எல்லாமே இறைசக்தி என்கிற உணர்வு பொறுப்புணர்வைக் கூட்டுகிறது.
தனிமனிதர்கள் போடும் பலவகைக் குப்பைகள் என்பது எப்போதுமே சவாலான சிக்கல்கள்.
கார்பேஜ் டிஸ்போசல் என்பது பொறுப்புடன் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை எவருமே உணர்வதில்லை! தன் வீட்டை விட்டு தெருவில் எறிந்து விட்டால் முடிந்தது என்று எண்ணுகிற மனோபாவமே இன்று பிரதானமானது! அடுத்த தலைமுறை குப்பைக்கு நடுவேதான் வாழவேண்டியிருக்கும் என்கிற சூழலை ஏற்படுத்துகிறோம் என்கிற எண்ணம் வருவதில்லை பெரும்பாலானோர்க்கு!
மென்று துப்பிய முருங்கைக்காய் சக்கையும், தூர எறிந்த மீன் முள்ளும், முட்டையின் ஓடும் இயற்கையே ஏற்றுக்கொண்டு மறுசுழற்சி செய்யும். மனிதன் அறிவியலால் கண்டுபிடித்த பிளாஸ்டிக் நூறாண்டுக்கும் மேல் வாழும்!
அதே மாதிரிதான் மனக் குப்பையாகிய சுயநலம், நய வஞ்சகம், தெரிந்தே ஏமாற்றுதல், பொறாமை, அதிகார போதை, தனக்காக ஊரே அழிந்தாலும் சரி எணும் பாங்கு இவைகள் மனிதச் செயல்களில் தொடர்ந்து வெளிக்காட்டப்படும் போது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது!
கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை எனும் காட்டுமிராண்டிக் கொள்கை மனிதனை மிருகமாக மட்டுமே மாற்றும். மனிதப் பிறப்பு என்பதே ஒரு பாலம் இதைக் கடந்து சென்று இறைவனை மீண்டும் அடைவதே முழுமையான பயணம்!
மனக்குப்பைகளை மனதிலேயே மறுசுழற்சி செய்து தரமான எண்ணங்களாக்க மெய்ஞானமாகிய பகுத்தறிவுக்கு மட்டுமே வலிமை உண்டு! அரசியல் பகுத்தறிவினால் சிலை சிக்கல்களை மட்டுமே உருவாக்கி மனக்குப்பைகளைக் கூடுதலாக்கி இக்கொள்கை தாங்கும் மனிதர்களை நடமாடும் குப்பைத்தொட்டிகளாக்கிய பெருமை மட்டுமே அரசியல் நாத்திகப் பகுத்தறிவினால் "சாதி"க்க முடியும்!
பாலத்தில் இருக்கிறோம் மனிதர்களே! இதைக்கடந்து மேன்மையான நிரந்தரமான மகிழ்ச்சி தரும் இறையோடு இணைய அர்ப்பணிப்போடு கடமைகளைச் செய்வதே உன்னதமானது! மீண்டும் காட்டுக்குள்ளே மிருகமாகிவிடுவதில் பலனில்லை!
அன்புடன்,
ஹரிஹரன்.
5 comments:
டெஸ்ட் மெசேஜ்! :-)))
//பாலத்தில் இருக்கிறோம் மனிதர்களே! இதைக்கடந்து மேன்மையான நிரந்தரமான மகிழ்ச்சி தரும் இறையோடு இணைய அர்ப்பணிப்போடு கடமைகளைச் செய்வதே உன்னதமானது! மீண்டும் காட்டுக்குள்ளே மிருகமாகிவிடுவதில் பலனில்லை!//
உண்மையான, உன்னதமான கருத்துக்கள்.
அருமையான செய்தி கொண்ட பதிவு.
வணக்கத்துடன்
நன்மனம்,
இறைவனே இல்லை என்று எண்ண நேர்கின்ற போது முறையற்ற ஆசையின் காரணமாக மனதில் எழும் மிருகத்தின் மூர்க்கத்தோடு கூடிய குப்பையான எண்ணங்களை ஆக்கபூர்வமாக தெய்வீகம் எனும் மனப்பயிற்சி முறை எனும் மறுசுழற்சியில் ஆட்படுத்தி மேம்படும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகிறது!
ஆன்மீகம் தவிர்த்த வாழ்வு முழுமையற்றது. இம்முறையில் வாழும்போது பாலத்தில் இருக்கும் மனிதன் மிருகமாகிவிட கூடுதலாக வாய்ப்புகள் அதிகம்!
பாராட்டுக்கு நன்றிகள்!
"இதிலே என்னை மாதிரி 2 கிமீ தூரத்தினை நடந்தால் என்ன என்கிற நபர்கள் பாவி, கஞ்சன், பிசினாரி என்று தூற்றப்படுவது வெகு இயற்கை."
சில கிலோமீட்டர்கள் சைக்கிள் விட்டால் காட்டான் (வனமானுஷ்) என்னும் பெயர்! :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
மெய்யான பொறுப்புணர்வோடு செயல்பட்டால் தூறலாக தூற்றல்கள் அருகிலிருந்துதான் கிளம்பும்!
பலனை எதிர்பார்க்காமல் எனக்கான கடமையைச் செய்கிறேன்! :-))
Post a Comment